டேவிட் அட்டன்பரோ: இன்ஸ்டாகிராமில் `சாதித்த' 94 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் - யார் இவர்?

அட்டன்பரோ

பட மூலாதாரம், Getty Images

கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அன்னிஸ்டோன், இளவரசர் ஹாரி மற்றும் போப் பிரான்சிஸ் இடையே பொதுவாக இருக்கும் விஷயம் என்ன தெரியுமா?

மிகக் குறுகிய காலத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பேர் அவர்களை பின்தொடர ஆரம்பித்தனர். இப்போது அவர்கள் எல்லோரையும் மிஞ்சிவிட்டார் சர் டேவிட் அட்டன்பரோ.

பிரிட்டன் தொலைக்காட்சி நட்சத்திரமும், இயற்கை ஆர்வலருமான அவர் வனவிலங்குகள் குறித்த ஆவணப்படங்களுக்காகவும், இனிய குரல் வர்ணனைக்கும் பிரிட்டனில் அறியப்பட்டவர். 94 வயதான அவர், கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி இந்த சமூக தளத்தில் பதிவிட்ட பிறகு 4 மணி நேரத்துக்கும் சற்று கூடுதலான நேரத்தில் முதன்முறையாக இந்த மந்திர எண்ணை (ஒரு மில்லியன்) தொட்டார்.

சிவப்புக் கம்பளங்கள் மீது நடப்பதை வழக்கமாகக் கொண்டிராத, தொழில்முறை கால்பந்து வீரராக இல்லாத அல்லது கத்தோலிக்க தேவாலயங்கள் மீது அதிகாரம் கொண்டவராக இல்லாத நிலையிலும், இளவயதினர் அதிகம் உள்ள ஒரு தளத்தில் செல்வாக்கு மிக்கவராக அட்டன்பரோ உருவாகியுள்ளார். Life on Earth என்ற தலைப்பில் வனவிலங்கு தொலைக்காட்சித் தொடரில் 1979ல் அவருடைய முதலாவது நிகழ்ச்சி பிரிட்டனில் பிபிசியில் ஒளிபரப்பான போது, இப்போதைய இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோரில் பலர் பிறந்திருக்கவே மாட்டார்கள்.

வனவிலங்குகள் மீது அக்கறை காட்டுவது பேஷன் என்ற நிலைக்கு முந்தைய காலத்தில் இளைஞர்களுக்கு அதில் ஆர்வத்தை ஏற்படுத்தினார்.

அட்டன்பரோ

பட மூலாதாரம், Getty Images

கடந்த சில ஆண்டுகளில், பருவநிலை மாற்றம் குறித்த தனது நிகழ்ச்சிகள் மூலம், இளவயது ரசிகர்களை நோக்கி தனது கவனத்தை சர் டேவிட் அட்டன்பரோ திருப்பினார்.

ஜென் Z என குறிப்பிடப்படும் 1997க்குப் பிறகு பிறந்தவர்கள் நமது காலத்தில் பருவநிலை மாற்றம் தான் மிக முக்கியமான விஷயமாக கருதிகின்றனர் என வாக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.

``இது அவர்களின் உலகம், அவர்களின் எதிர்காலம். நான் அங்கே இருக்கப் போவதில்லை. அவர்கள் இருக்கப் போகிறார்கள்'' என்று பிபிசியிடம் அட்டன்பரோ கூறினார்.

``இந்த விஷயங்கள் குறித்து இளவயதினர் அக்கறை கொள்வது தான் முக்கியம். அப்படி ஆர்வம் காட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது'' என்று அவர் குறிப்பிட்டார்.

``என்னைப் போன்ற பழங்காலத்து ஆட்கள் என்ன சொல்கிறோம் என்பதை அவர்கள் கேட்கிறார்கள் என்பது பெருமைக்குரியதாக இருக்கிறது'' என்கிறார் அவர்.

கடந்த 4 தசாப்த காலமாக அட்டன்பரோவின் ஆவணப்படங்கள் உலகம் முழுக்க ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. A Life on Our Planet என்ற அவருடைய புதிய ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் (Netflix) மூலம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மனிதனைப் பற்றிய விஷயங்களில் இதில் அதிக கவனம் செலுத்தப் பட்டுள்ளது.

ஆனால் கடந்த கால விஷயங்களை நினைவுபடுத்துவதற்கும் மேலாக இது இருக்கிறது:

இந்த எண்ணம் ஏற்கெனவே டிரெய்லரில் தெரிய வருகிறது:

``நமது பூமி பேரழிவை நோக்கிச் செல்கிறது. இயற்கைக்கு முரண்பட்டு வாழ்வதைக் காட்டிலும், அதனுடன் இயைந்து வாழ்வதற்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டும்'' என்று அவர் எச்சரிக்கிறார்.

ஆஸ்கர் விருது பெற்ற புகழ்மிக்க சகோதரர்

அட்டன்பரோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அட்டன்பரோ மற்றும் அவரின் சகோதரர்

டேவிட் அட்டன்பரோ கிரேட்டர் லண்டனில் ஐசில்வொர்த்தில் 1926 மே 8 ஆம் தேதி பிறந்தார். பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசெபத் பிறந்த 17 நாட்கள் கழித்து இவர் பிறந்துள்ளார். ஒளிபரப்புத் துறையில் ஆற்றிய சேவைக்காக, மன்னர்களின் பாராட்டுக்குரிய வகையில் ஏறத்தாழ 60 ஆண்டுகள் கழித்து டேவிட் அட்டன்பரோவுக்கு `சர்` பட்டம் வழங்கப்பட்டது.

மூன்று பிள்ளைகளில் நடுவில் பிறந்தவர் டேவிட். அவருடைய மூத்த சகோதரர் ரிச்சர்ட் அட்டன்பரோ நடிகர் மற்றும் இயக்குநராக இருந்தார். 1993ல் ஜுராசிக் பார்க் திரைப்படத்தில், இயற்கைக்கு முரண்பட்ட பெரும் கோடீஸ்வரர் பாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். 1983ல் காந்தி திரைப்படத்திற்காக அவருக்கு சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

இவர்களின் இளைய சகோதரர் ஜான், கார் தொழிற்சாலையில் அதிகாரியாக வேலை பார்த்தார். நிதி ஆலோசகராகவும் இருந்தார். சிறுவயதில் இருந்தே இயற்கை வாழ்க்கை தொடர்பாக எது கிடைத்தாலும் சேகரித்து வைப்பதை டேவிட் வழக்கமாகக் கொண்டிருந்தார். படிமங்கள் மற்றும் வாழும் உயிரினங்களையும் அவர் சேகரித்தார். அவருடைய தந்தை பிரடெரிக் முதல்வராக இருந்த லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறைக்கு, தீயில் வாழும் பல்லிகளை அவர் ஒரு முறை விற்றிருக்கிறார்.

ஆனால், அட்டன்பரோ வாழ்க்கையில் எதிர்காலத்துக்கான திருப்புமுனை 1936ல் ஏற்பட்டது. உலகின் ஆரம்பகால வன உயிரின ஆர்வலர்களில் ஒருவரான கிரே ஆவ்ல் உரை ஒன்றை இவரும், ரிச்சர்டும் கேட்டபோது அது நிகழ்ந்தது.

உண்மையில் ஆர்ச்சிபால்டு பெலானே என்ற வெள்ளையரான அவர், கனடாவை பூர்விகமாகக் கொண்டவர் என்று கூறியது பின்னர் தெரிய வந்தது. சுற்றுச்சூழல் குறித்த அவருடைய கருத்துகள் நியாயமானவையாக இருந்தன. டேவிட்டின் மனநிலைக்கு ஒத்துப்போவதாக இருந்தன.

அட்டன்பரோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அட்டன்பரோ

``இயற்கையின் வளங்களை மனிதர்கள் கட்டுப்பாடின்றி கொள்ளையடிப்பதால் மனிதகுலம் இயற்கைக்கு பேராபத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பது அந்த காலக்கட்டத்தில் கேள்விப்படாத விஷயமாக இருந்தது. ஆனால் இன்றைய நாள் வரையில் டேவிட்டின் முக்கிய கருத்தாக அதுதான் இருந்து வருகிறது'' என்று பெலானே குறித்த ஆவணப்படம் குறித்து 2000வது ஆண்டில் அளித்த நேர்காணலில் ரிச்சர்ட் கூறியுள்ளார்.

பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை அறிவியல்கள் துறையில் சர் டேவிட் அட்டன்பரோ பட்டம் பெற்று, 1952ல் பிபிசியில் சேர்ந்தார்.

விலங்குகளை மையமாகக் கொண்ட அவருடைய நிகழ்ச்சிகள் 1950களின் தொடக்கத்திலேயே ஆரம்பமாகிவிட்டன என்றாலும், Life on Earth நிகழ்ச்சி மூலமாகத்தான் அவருக்கு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது.

1979 ஆம் ஆண்டில் 13 பாகங்களைக் கொண்ட தொடராக ஒலிபரப்பான அந்த நிகழ்ச்சி தொழில்நுட்ப அளவில் புரட்சிகரமானதாகக் கருதப்பட்டது. உலகெங்கும் 500 மில்லியன் பேர் அதைப் பார்த்ததாகக் கணக்கிடப்பட்டது. சமூக வலைதளங்கள் இல்லாத அந்தக் காலத்திலேயே அந்தத் தொடர்கள் ``வைரலாகப் பேசப்பட்டன.'' எடுத்துக்காட்டாக ருவாண்டாவில் மலைப்பகுதி கொரில்லாக்களுடன் அட்டன்பரோவின் அனுபவம் போன்ற நிகழ்ச்சிகளை சொல்லலாம்.

அட்டன்பரோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அட்டன்பரோ

1999ல் நடந்த 100 மகத்தான டி.வி. தருணங்கள் வாக்கெடுப்பில் இந்த நிகழ்ச்சி 12வது இடத்தைப் பிடித்தது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மகுடம் சூட்டும் நிகழ்ச்சியைவிட முன்னதாக இடம் பிடித்தது.

பருவநிலை மாற்றம் பிரச்சனைக்கு குரல் கொடுக்கும்படி அவர் `மாற்றப்பட்டார்'

காலம் போகப் போக, அட்டன்பரோவின் நிகழ்ச்சிகள் அதிக அளவில் சூழலியலை மையமாகக் கொண்டிருந்தன. பருவநிலை மாற்றத்துக்கு அவர் குரல் கொடுக்க தாமதமாகத்தான் வந்தார் என்று சொல்ல முடியும். மனிதர்களால் உருவாக்கப்படும் பருவநிலை மாற்றம் குறித்து 1970களிலேயே விஞ்ஞானிகள் எச்சரிக்கைகள் விடுத்த நிலையில், இதில் தமக்கு ``எந்தவித சந்தேகமும் இல்லை'' என்று 2005 ஆம் ஆண்டில் தான் அட்டன்பரோ வெளிப்படையாக அறிவித்தார்.

பருவநிலை மாற்றம் குறித்த மிகவும் மரியாதைக்குரிய நிபுணர்களில் ஒருவரான- காலஞ்சென்ற அமெரிக்க விஞ்ஞானி ரால்ப் சிசெரோன் தான் அவரிடம் இந்த மாற்றத்தை ஏற்படுத்தினார்.

2004 ஆம் ஆண்டில் சிசெரோன் சொற்பொழிவைக் கேட்ட பிறகு அவரிடம் இந்த மாற்றம் ஏற்பட்டது.

``மக்கள் தொகை பெருக்கம் மற்றும் தொழில்மயமாதல் பெருக்கம் ஆகியவற்றுடன், சுற்றுச்சூழலில் கரியமில வாயு அதிகரிப்பு மற்றும் வெப்ப நிலை உயர்வு தொடர்புடையதாக உள்ளன என்று காட்டும் வரைபடங்களை அவர் பார்த்து மாற்றத்துக்கு ஆளானேன்'' என்று The Independent என்ற பிரிட்டன் பத்திரிகைக்கு 2005 ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரையில் அட்டன்பரோ தெரிவித்துள்ளார்.

அட்டன்பரோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அட்டன்பரோ

இந்த எண்ணத்தின் வெளிப்பாடு காரணமாக, இந்த இயற்கை ஆர்வலர், பருவநிலை மாற்றம் குறித்து 2 தொலைக்காட்சி ஆவணப்படங்களை எடுத்தார். அவை 2006ல் ஒளிபரப்பாயின. பிறகு அவர் அப்படியே முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறார்.

``அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகு, பூமியில் மக்கள் தொகை மிகவும் அதிகரித்துள்ளது. நாம் எந்த அளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறோம் என்பதை அறிந்து வருத்தமாக உள்ளது'' என்று பிபிசியிடம் அவர் கூறினார்.

``நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு சுவாசமும், சாப்பிடும் ஒவ்வொரு கைப்பிடி உணவும், பூமியின் இயற்கையிடம் இருந்து வருகிறது. அதை நாம் சேதப்படுத்தினால், நம்மை நாமே சேதப்படுத்திக் கொள்வதாக அர்த்தம்'' என்று அவர் குறிப்பிட்டார்.

டைனாசோருக்கும் அவர் பெயரிடப்பட்டது

இயற்கை உலகின் மீது அவர் காட்டிய அர்ப்பணிப்பு காரணமாக நிறைய பாராட்டுதல்கள் குவிந்தன. நிறைய அரசுகள் மற்றும் நிறுவனங்கள் அவருக்கு விருதுகள் அளித்தன, உலகெங்கும் உள்ள பல பல்கலைக்கழகங்கள் அவருக்கு கௌரவ பட்டங்கள் வழங்கியுள்ளன. 20க்கும் மேற்பட்ட உயிரினங்களுக்கு அட்டன்பரோ பெயரிடப்பட்டுள்ளது. களைகள், பூச்சிகள், பாலூட்டிகள் மற்றும் ஒரு டைனாசோருக்கும்கூட அவருடைய பெயரிடப் பட்டுள்ளது.

பால் மெக்கர்ட்னே மற்றும் மிக் ஜாக்கர் போன்ற வயதில் மூத்த இசைக் கலைஞர்கள் இன்றும் இளம் ரசிகர்களை ஈர்த்திருப்பதைப் போல, இந்த இயற்கை ஆர்வலரும் ``ராக் ஸ்டார் போன்ற'' ஈர்ப்பைக் கொண்டிருக்கிறார்: கடந்த ஆண்டு கிளாஸ்டன்பரி திருவிழாவில் திடீரென இவர் கலந்து கொண்டார். உலகின் மிகவும் புகழ்பெற்ற இசைநிகழ்ச்சிகளில் ஒன்றான அதில் அவர் திடீரென தோன்றிய போது, ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.

பூமியைக் காக்க உதவ நடவடிக்கை எடுக்க அழைப்பு

சுவிட்சர்லாந்து டாவோஸ் நகரில் வருடாந்திர உலக பொருளாதார சம்மேளனத்தின் கூட்டத்தில் உலகத் தலைவர்கள் முன்பு உணர்ச்சிபூர்வமாக உரையாற்றிய சில மாதங்களில் அது நடந்தது. வி.ஐ.பி. தலைவர்கள் மத்தியில் அவர் உணர்ச்சிபூர்வமாக ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.

``குற்ற உணர்ச்சி அல்லது குற்றம் சொல்லும் நிலையைக் கடந்து, நடைமுறையில் நாம் என்ன செய்ய வேண்டும் என சிந்திக்க வேண்டும்'' என்று அவர் கூறினார்.

``இப்போது மற்றும் அடுத்த சில ஆண்டுகளில் நாம் செய்யக் கூடிய விஷயங்கள் அடுத்த சில ஆயிரம் ஆண்டுகளுக்கு உறுதியான தாக்கத்தை ஏற்படுத்தும்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் 17 வயதான கிரேட்டா துன்பெர்க் மற்றும் அழிவுநிலைக்கு எதிரான எழுச்சி போன்ற இயக்கங்கள் தீவிரமாக செயல்படும் காலமாக இது உள்ளது.

இடையூறு ஏற்படுத்தும் வகையிலான போராட்டங்கள் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்திவிடுமா என்று அட்டன்பரோவிடம் கேட்டபோது, இதுபோன்ற பிரசாரங்களில் ஈடுபடுபவர்கள் மீது தாம் அனுதாபம் கொள்வதாக பதில் அளித்தார்.

``அவர்கள் சொல்ல வரும் விஷயத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். மற்றவர்கள் உங்களுக்கு ஆதரவாக வருவதற்கு அவை எந்த அளவுக்கு அர்த்தம் உள்ளதாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது'' என்று அவர் கூறினார்.

``ஆனால் எதுவுமே செய்யாமல் இருப்பதற்கு, இதை குறைகூறக் கூடாது'' என்றார் அவர்.

கிரேட்டா தன்பெர்க் - அட்டன்பரோ இடையில் பரஸ்பர மரியாதை

கடந்த டிசம்பரில் அட்டன்பரோவும், ஸ்வீடனைச் சேர்ந்த கிரேட்டா தன்பெர்க்கும் சந்தித்தனர். பிபிசி வானொலி 4-ன் நிகழ்ச்சிகளை கௌரவ எடிட்டராக கிரேட்டா இருந்தபோது சந்தித்தனர்.

பயணத்தால் சுற்றுச்சூழல் பாதிப்புக்கான கரியமில வாயு உற்பத்தி அதிகரிப்பதைக் குறைக்கும் நோக்கில் ஸ்கைப் மூலம் சந்திக்க அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

அட்டன்பரோ மற்றும் க்ரேட்டா
படக்குறிப்பு, அட்டன்பரோ மற்றும் க்ரேட்டா

``சுமார் 20 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் செய்யத் தவறியதை நீங்கள் சாதித்து விட்டீர்கள்'' என்று தன்பெர்க்கை அப்போது அட்டன்பரோ பாராட்டினார்.

``உங்களுக்கு மிகவும் நன்றி தெரிவிக்கிறேன். நாம் எல்லோரும் சேர்ந்து இதைச் செய்திருக்கிறோம்'' என்று தன்பெர்க் கூறினார்.

``உந்துதல் தரக் கூடியவராக'' இப்பதற்காக அட்டன்பரோவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

``நீங்கள் எவ்வளவு வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறீர்கள் என்பதை புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இதற்காக உங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டதற்கு நன்றி'' என்று கிரேட்டா கூறினார்.

``நான் இளவயதில் இருந்தபோது, இயற்கை குறித்த ஆவணப்படங்கள், என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய படங்கள் தான் இதுபோன்ற விஷயங்களில் முடிவெடுக்க காரணமாக இருந்தன'' என்று அட்டன்பரோ தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: