கொரோனா வைரஸ்: இந்தியாவில் 1 லட்சம் மரணங்கள்: பாதிக்கப்பட்ட பணக்கார மாநிலங்கள்

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அபர்ணா அல்லூரி மற்றும் ஷதாப் நஸ்மி
    • பதவி, பிபிசி நியூஸ், டெல்லி

இந்தியாவில் கொரோனா வைரஸ் மரணங்கள் ஒரு லட்சத்தை எட்டவுள்ளது. உலகளவில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு பிறகு கொரோனா மரணங்களில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

அக்டோபர் 3ஆம் தேதி காலை நிலவரப்படி இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் பேர் கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர் என அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் காட்டுகின்றன.

செப்டம்பர் மாதம்தான் மிகவும் மோசமானதாக இருந்தது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 1,100 இந்தியர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர்.

ஒரு சில மாநிலங்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க, இந்தியா முழுக்க கொரோனாவின் வீரியம் குறையவில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் மகாராஷ்டிரா

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பணக்கார மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 36,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆரம்ப கட்டத்திலேயே மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் மிக வேகமாக இருந்தது. செப்டம்பரில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 300ல் இருந்து 500 பேர் தினமும் கொரோனாவால் அங்கு உயிரிழந்தனர்.

மோசமாக பாதிக்கப்பட்ட மற்ற மாநிலங்களில் இது 100க்கும் குறைவாக இருந்தது.

கொரோனா வைரஸ்

மகாராஷ்ராவில் பாதிக்கப்பட்டிருப்பது அதன் முக்கிய நகரமான மும்பை மட்டுமல்ல. இதுவரை அதிகம் பேர் உயிரிழந்தது மும்பையில்தான் என்றாலும் கூட, புறநகர் பகுதியான புனே இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு கொரோனாவால் இதுவரை 5,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் அதிக கொரோனா உயிரிழப்புகள் பதிவான முதல் 10 மாவட்டங்களில், மும்பை மற்றும் புனே உள்ளிட்ட 5 மாவட்டங்கள் மகாராஷ்டிராவில்தான் இருக்கின்றன.

மகாராஷ்டிரா மோசமாக பாதிக்கப்பட்டதற்கு காரணம் மும்பை என்கிறார் மருத்துவர் ஒளர்னாப் கோஷ். புனே மக்களிடையே ஆண்டிபாடிக்கள் சோதனை நடத்திய குழுவில் இவரும் ஒருவர்.

நகரின் ஒரு சில பகுதிகளில் வசிக்கும் பாதி மக்களுக்கு கோவிட் எதிர்ப்பு திறன் ஏற்பட்டுவிட்டதாக அரசாங்க கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது.

மும்பையில் ஓரளவிற்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்திய பிறகு, நகர்ப்புற மற்றும் புனேவின் கிராமப்புறங்களிடையே இருந்த மக்கள் நடமாட்டம்தான் புணே மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிகளவில் கொரோனா பரவ காரணமாக இருந்ததாக மருத்துவர் கோஷ் கூறுகிறார்.

சுகாதார அமைப்பாலும் இதனை தாக்குபிடிக்க முடியவில்லை என்பதால், உயிரிழப்புகள் அதிகமாகின.

மோசமாகிக் கொண்டிருக்கும் பஞ்சாப்

பஞ்சாபில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 3%ஆக இருக்கிறது. இது இந்தியாவின் சராசரியைவிட இருமடங்கு அதிகமாகும்.

அம்மாநிலத்தில் பல மாவட்டங்களில் உயிரிழப்பு விகிதம் 4 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறது.

"பஞ்சாபின் நிலை கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது. நாட்டிலேயே பஞ்சாபின் உயிரிழப்பு விகிதம்தான் அதிகம். அதோடு இது அதிகரித்துக்கொண்டே போகிறது" என்கிறார் இந்த பெருந்தொற்று பரவலை கண்காணிக்கும் ப்ரூகின்ஸ் நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர் ஷமிகா ரவி.

இதனை ஆபத்தான சூழல் எனக் குறிப்பிடும் அவர் இது உலகம் மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளோடு முரண்படுகிறது என்று கூறுகிறார்.

மோசமாகிக் கொண்டிருக்கும் பஞ்சாப்

பட மூலாதாரம், Getty Images

மற்ற இடங்களில் பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டு, சிகிச்சை முறைகள் கண்டறியப்பட்டு உயிரிழப்பு விகிதங்கள் குறைக்க முயற்சிக்கப்படுவதாக ஷமிகா குறிப்பிட்டுகிறார்.

மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களிலுமே குறைந்தளவு பரிசோதனை செய்யப்பட்டு, பாதிப்பு விகிதம் அதிகம் இருக்கிறது. குறைந்தளவு பரிசோதனை, குறைந்த உயிரிழப்பு விகிதத்தை தரலாம். ஆனால் அதிகாரிகள் காலம் தாழ்ந்தே தொற்று இருப்பதை கண்டறிவதாக மருத்துவர் ஷமிகா ரவி தெரிவிக்கிறார்.

கொரோனா பரிசோதனை செய்வது பிரச்சனையாக இருக்கிறதா?

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 6.2%ஆக இருக்கிறது. இது மகாராஷ்டிராவை (24%) விட குறைவு. ஆனால் பிஹார் (2.5%) அல்லது ஜார்கண்ட் (3.7%) ஆகிய மாநிலங்களை விட அதிகம்.

பஞ்சாபை போல இந்த மாநிலங்களும் அதே அளவிலான கொரோனா பரிசோதனைகளைதான் மேற்கொள்கின்றன. அதாவது 10 லட்சத்தில் 60,000 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு விகிதம் பிகாரிலும், ஜார்கண்டிலும் குறைவாக இருக்கிறது.

"நீங்கள் குறைவான பரிசோதனை செய்தும், பாதிப்பு விகிதம் அதிகமாக இருந்தால், அது நாம் செயல்படுவதைவிட வைரஸ் மிக வேகமாக பரவுகிறது என்று அர்த்தம்" என்று மருத்துவர் ஷமிதா ரவி கூறுகிறார்.

இதற்கு அவர் மகாராஷ்டிரா மாநிலத்தை உதாரணமாக கூறுகிறார்.

அங்கு கொரோனா பாதிப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது, உயிரிழப்புகள் அதிகமாக இருக்கிறது ஆனால், அங்கு பரிசோதனை அதிகப்படுப்படவில்லை என்று அவர் கூறுகிறார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

"நீங்கள் போதிய பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்றால், நீங்கள் பல தொற்று பாதிக்கப்பட்டோரைஇ இன்னும் கண்டறியவில்லை என்று அர்த்தம். ஆனால், எதனால் உயிரிழப்புகள் அதிகமாகிறது என்பதை கூறுவது கடினம்" என்கிறார் தொற்று நோய் மாதிரிகளின் ஆய்வாளரும் பேராசியருமான மருத்துவர் கௌதம் மேனன்.

பரிசோதனை செய்வதற்கான போதிய விழிப்புணர்வும் திறனும் குறைவாக இருப்பது, தாமதமாக மருத்துவமனையில் வந்து சேர்வதற்கான காரணமாக இருக்கலாம். இதனால் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என்கிறார் மருத்துவர் மேனன்.

ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், ஒரு கொரோனா நோயாளி மருத்துவமனையில் சேர்வதில் இருந்து உயிரிழப்பு வரையிலான இடைவெளி சராசரியாக 13 நாட்கள் இருக்கிறது.

இந்த இரு மாநிலங்களிலும் "கணிசமான விகித நோயாளிகளுக்கு" கொரோனா தொற்று இருப்பது தாமதமாக கண்டறியப்படுகிறது என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வருகின்றனர்.

இருந்தும் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை விகிதம் அதிமாக இருக்கிறது. உயிரிழப்பு விகிதம் குறைவாக இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் தமிழகத்தில் கொரோனாவால் 9,000 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. ஆனால், ஜூலை மாதம் முதல் தினசரி உயிரிழப்புகள் குறைந்து வருகின்றன.

நகர்ப்புற மாவட்டங்களில் பதிவாகும் அதிக உயிரிழப்புகள்

இந்தியாவின் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட 10 மாவட்டங்களும், நகர்ப்புற மாவட்டங்கள்தான்.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த சுமார் 80 சதவீதத்தினர் நகர்ப்புற மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இதில் பல்லேறு மாவட்டங்களின் சராசரி உயிரிழப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது.

இது ஆச்சரியமளிக்கக்கூடிய விஷயமல்ல. அடர்த்தியான மக்கள் தொகை இருந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பது என்பது கடினமாக இருக்கும் இடங்களில் வைரஸ் வேகமாக பரவும்.

மேலும், மகாராஷ்டிரா அல்லது பஞ்சாப் போன்ற பணக்கார மாநிலங்களில் இருக்கும் மாவட்டங்கள் ஏன் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் இதனால் தெளிவாகிறது.

நகர்ப்புற மாவட்டங்களில் பதிவாகும் அதிக உயிரிழப்புகள்

பட மூலாதாரம், Getty Images

இந்த மாநிலங்கள் மிகவும் நகரமயாமாகப்பட்டுள்ளதோடு, வெளி மாவட்டங்களில் இருக்கும் பெரும் நகரங்களிலும் அதிக மக்கள் தொகை இருக்கிறது.

நகர்ப்புற மாவட்டங்களில் அதிக உயிரிழப்புகள் பதிவாகும் காரணங்களில் ஒன்று, அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து அங்கு சிகிச்சைக்காக பலரும் வருவது என சில வல்லுநர்கள் நம்புகின்றனர்.

"புனேவில் அதிக உயிரிழப்புகள் பதிவாகி இருப்பதற்கு காரணம் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருப்பவர்களும் அங்கு சிகிச்சைக்காக வருகின்றனர்" என மருத்துவர் மேனன் கூறுகிறார்.

மேலும் கிராமப்புற மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு பிற நோய்கள் இருப்பது குறைவாக இருப்பதால், அவர்கள் கொரோனாவால் உயிரிழப்பதற்கான ஆபத்தும் குறைவாக இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

குறைந்த உயிரிழப்புகள் பதிவாகும் ஏழை மாநிலங்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டால் மிகவும் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று கருதப்பட்ட இந்தியாவின் ஏழை மாநிலங்களில் கொரோனா குறித்த தரவுகள் வெளியிடுவது குறைவாக இருப்பதால், குறைந்த உயிரிழப்புகள் பதிவாக அது காரணமாக இருக்கலாம்.

ஆனால், நாம் பெருந்தொற்று காலத்தின் முடிவுக்கு இன்னும் வரவில்லை என்று எச்சரிக்கும் மருத்துவர் கோஷ், "மகாராஷ்டிரா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள் மோசமான நாட்களை கடந்திருக்கலாம். ஆனால், மற்ற மாநிலங்கள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருக்கிறது" என்றார்.

"பெருந்தொற்றை பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலமும் வித்தியாசமானது. அதிஷ்டவசமாக மகாராஷ்டிரா போன்ற பணக்கார மாநிலங்களில் இருந்து இது தொடங்கியது. பிகார் போன்ற ஒரு மாநிலத்தில் இது தொடங்கியிருந்தால் பேரழிவு ஆகியிருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

.