ஹாத்ரஸ் பாலியல் வல்லுறவு சம்பவம்: மாவட்ட எஸ்.பி, டிஎஸ்பி, ஆய்வாளர் உட்பட 5 பேர் பணி இடைநீக்கம்

ஹாத்ரஸ்

பட மூலாதாரம், Getty Images

உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் 19 வயது பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக கூறப்பட்ட விவகாரத்தில் அந்த வழக்கை விசாரித்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்பட 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் மாநில அரசு நியமித்துள்ள சிறப்பு புலனாய்வுக்குழு அளித்த முதல் கட்ட அறிக்கை அடிப்படையில், மாவட்ட கண்காணிப்பாளர் பணியில் இருந்து இடை நீக்கம் செய்ய மாநில உள்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இது தொடர்பாக உத்தர பிரதேச உள்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர், துணை காவல் கண்காணிப்பாளர் ராம் ஷ்ப்த், ஆய்வாளர் தினேஷ் குமார் வர்மா, உதவி ஆய்வாளர் ஜக்வீர் சிங், தலைமை காவலர் மகேஷ் பால் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

ஹாத்ரஸ் பெண் உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு இதுவரை இல்லாத வகையில் கடுமையான தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை மாலையில் கூறியிருந்தார்.

இதற்கிடையே, ஹாத்ரஸ் மாவட்டத்தில் தொடர்ந்து 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் போட்டுள்ளது. அங்கு தொடர்ந்து வெளி நபர்கள் எவரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

ஹாத்ரஸ் பெண் உயிரிழந்தது பற்றி விசாரித்து அறிக்கை அளிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு 7 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவினரின் ஆரம்பநிலை விசாரணை முடிவடைந்த நிலையில், சம்பவம் நடந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள், காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் வழக்கில் தொடர்புடையதாக தாங்கள் சந்தேகிக்கும் நபர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து 2வது நாளாக எம்.பி.க்களுடன் தள்ளுமுள்ளு

முன்னதாக, வெள்ளிக்கிழமை நண்பகலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் டெரக் ஓ ப்ரெய்ன், பிரதிமா மொண்டல், முன்னாள் எம்.பி மமதா தாக்கூர் ஆகியோர், அந்த மாவட்ட எல்லையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஹாத்ரஸ்

பட மூலாதாரம், Getty Images

அங்கு பணியில் இருந்த மாவட்ட இணை ஆட்சியர் பிரேம் பிரகாஷ் மீனா தலைமையில் காவல்துறையினர் மூன்று பேரும் மேற்கொண்டு முன்னேற விடாமல் தடுத்தனர்.

ஹாத்ரஸ்

பட மூலாதாரம், Getty Images

அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் டெரக் ஓ. ப்ரெய்ன் கீழே விழுந்தார். அங்கு தமது கட்சி பெண் தலைவர்களை ஆண் காவலர்கள் தோளைப்பிடித்து தள்ளுவதாக டெரக் ஓ ப்ரெய்ன் குற்றம்சாட்டினார். இருப்பினும், காவல்துறையினர் அவர்கள் மேலும் முன்னேறிச் செல்ல அனுமதி மறுத்தனர்.

இதனால் சுமார் அரை மணி நேரம் அங்கு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பிறகு டெல்லி திரும்பினர்.

இதேபோல, வியாழக்கிழமை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா வாத்ரா ஆகியோர் ஹாத்ரஸ் நோக்கி புறப்பட்டபோது கிரேட்டர் நொய்டா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது சில அதிகாரிகள் தடுக்க முற்பட்டபோது ஏற்பட்ட துள்ளுமுள்ளுவில் ராகுல் காந்தி கிழே விழுந்தார்.

இதையடுத்து சுமார் ஒன்றரை மணி நேரம் ராகுல் காந்தியும், பிரியங்கா வாத்ராவும் தடுத்து வைக்கப்பட்டனர். பிறகு அருகே உள்ள விருந்தினர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவர்கள் ஒன்றை மணி நேரம் கழித்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே, ராகுல், பிரியங்கா தடுத்து வைக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்திக் கலைத்தனர். இது தொடர்பான காட்சிகள் ஊடகங்களில் ஒளிபரப்பாகின.

ஹாத்ரஸ்

பட மூலாதாரம், Getty Images

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்று தடுப்பு விதிகளை மீறியதாக ராகுல், பிரியங்கா உட்பட சுமார் 200 காங்கிரஸார் மீது உத்தர பிரதேச காவல்துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.

இதற்கிடையே, ஹாத்ரஸ் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசிடம் விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னெள கிளையும் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்று மாநில அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில், முதல் கட்ட நடவடிக்கையாக ஹாத்ரஸ் மாவட்ட எஸ்பி, டிஎஸ்பி, ஆய்வாளர் உட்பட ஐந்து பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: