ஹாத்ரஸ் வழக்கு: உண்மையில் நடந்தது என்ன? முரண்படும் தகவல்கள் #BBCGroundReport

பாதிக்கப்பட்ட பெண் எரிக்கப்பட்ட இடம்
படக்குறிப்பு, பாதிக்கப்பட்ட பெண் எரிக்கப்பட்ட இடம்
    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, ஹாத்ரஸ், உ.பியில் இருந்து

உத்தர பிரதேசம் ஹாத்ரஸில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் இரண்டு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர்.

ஒருவர் பூச்சிக்கொல்லி தெளிப்பானை வைத்திருந்தார். மற்றொருவர் தனது விவசாய நிலத்திற்கு போவதற்கு பதிலாக இங்கே வந்திருந்தார்.

இந்த இரு தலித் இளைஞர்களும் கோபத்துடன் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு பாதிக்கப்பட்ட பெண் யார் என்று தெரியாது.

அவர்களிடம் பாலியல் வல்லுறவு சம்பவம் குறித்து கேட்டபோது, "எங்கள் சகோதரிக்கு நடந்ததை கேட்கும்போது எங்கள் ரத்தம் கொதிக்கிறது. அப்பெண்ணுக்கு நடந்தவற்றை சமூக ஊடகங்களில் படித்ததில் இருந்து என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறோம். நாங்கள் இனியும் இதுபோன்ற சம்பவங்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம். தேர்தல்கள் வரும் போகும்" என்று தெரிவித்தனர்.

விவசாய நிலங்களில் தினை பயிரிட்டிருக்கிறார்கள். ஓர் ஆள் உயரத்திற்கு அவை வளர்ந்து நிற்கின்றன.

தினை பயிரிடப்பட்டிருக்கும் இடத்தில்தான் இந்த பாலியல் வல்லுறவு நடந்ததாக கூறப்படுகிறது. இங்கிருந்து 100 மீட்டர் தூரத்தில்தான் இந்த கிராமத்தை மெயின் சாலையுடன் இணைக்கும் சாலை இருக்கிறது.

இங்கு பல செய்தியாளர்கள் வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

Presentational grey line --
Presentational grey line --

"இவ்வளவு பெரிதாக்கப்பட்ட அளவிற்கான சம்பவம் இங்கு நடக்கவில்லை. உண்மை வேறாக இருக்கலாம்" என சில உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

உண்மை வேறு என்றால் அதனை ஏன் வெளியிடவில்லை என நான் அவர்களிடம் கேட்டேன்.

அதற்கு அவர்கள், "இந்த சம்பவம் தொடர்பாக பல உணர்ச்சிகரமான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. நாங்கள் ஏதாவது சொல்லி எங்களுக்கே அது ஆபத்தாக முடிந்தால் என்ன செய்வது?" என்று கேட்டனர்.

எனினும், அவர்கள் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

மருத்துவ அறிக்கை அந்தப் பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆனாக்கப்பட்டதை உறுதிபடுத்தவில்லை என ஹத்ராஸ் காவல் கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர் கூறுகிறார்.

தடயவியல் விசாரணை இறுதி அறிக்கை இன்னும் வரவில்லை. வந்தால் மட்டுமே தெளிவாக எதையும் கூறமுடியும்.

பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டும் அப்பெண்ணின் குடும்பத்தாருக்கும், இன்னும் அந்த மருத்துவ அறிக்கை கிடைக்கப்பெறவில்லை.

ஹாத்ரஸ் பாலியல் வழக்கு: உண்மையில் நடந்தது என்ன? முரண்படும் தகவல்கள் #BBCGroundReport

அவரை டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கும்போது கூட, அவர்களிடம் முந்தைய மருத்துவமனையின் மருத்துவ அறிக்கை இருக்கவில்லை.

"காவல்துறையினர் எங்களிடம் எந்த ஆவணங்களையும் கொடுக்கவில்லை. என் சகோதரியின் மருத்துவ அறிக்கையும் எங்களுக்கு தரவில்லை" என்கிறார் உயிரிழந்த பெண்ணின் சகோதரர்.

இது குறித்து எஸ்பி. விக்ராந்த் வீரிடம் கேட்கும் போது, "அந்தத் தகவல்கள் விசாரணையின் ஒரு பகுதி. அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

"இந்த சம்பவம் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து வருகிறோம். தடயவியல் ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்.

ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை போல, பாதிக்கப்பட்ட பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லை என அவர் மீண்டும், மீண்டும் அழுத்தமாகக் கூறுகிறார்.

"அப்பெண்ணின் நாக்கு அறுக்கப்படவில்லை. முதுகெலும்பு உடைக்கப்படவில்லை. தொண்டை பகுதியை அழுத்தியதால் அவருடைய கழுத்து உடைந்திருக்கிறது. இதனால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டது" என்றும் அவர் கூறுகிறார்.

சம்பவம் நிகழ்ந்த ஒரு சில மணி நேரத்தில் கொடுத்த வாக்குமூலத்தில், பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வல்லுறவு குறித்து ஏதும் பேசவில்லை. அதில் முக்கிய குற்றவாளியின் பெயரை குறிப்பிட்டுள்ள அவர், தன்னை எப்படி அவர் கொலை செய்ய முயன்றார் என்பதை பற்றி பேசியிருக்கிறார்.

உயிரிழந்த பெண்ணின் வீடு
படக்குறிப்பு, உயிரிழந்த பெண்ணின் வீடு

எனினும், மருத்துவமனையில் அந்தப்பெண் வாக்குமூலம் கொடுத்த வீடியோ பதிவில், தனக்கு நடந்த பாலியல் வல்லுறவு குறித்து அவர் பேசியிருக்கிறார். போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்திலும் அது குறித்துப் பேசியிருக்கிறார்.

அதில், இதற்கு முன்பும் அந்த முக்கிய குற்றவாளி தன்னை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாக அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் நடந்த தினத்தன்று என்ன நடந்தது என்பது குறித்து பேசிய அவர், "இரண்டு பேர் என்னை பாலியல் வல்லுறவு செய்தனர். பிறர் என் தாயின் குரலை கேட்டு ஓடிவிட்டனர்" என்று தெரிவித்தார்.

சம்பவம் நடந்த தினத்தன்று என்ன நடந்தது என்பதை அந்தப்பெண்ணின் தாய் நினைவு கூர்கிறார்.

அவர் கூறுகையில், "நான் என் மகளை புற்களை சேகரிக்க அனுப்பியிருந்தேன். அவளும் அதை செய்து கொண்டிருந்தால். பின்னர் அவளை எங்கும் காணாத போது, அங்கு தேட ஆரம்பித்தேன். சுமார் ஒரு மணி நேரம் தேடிக் கொண்டிருந்தேன். அவள் வீட்டிற்கு போயிருக்க மாட்டாள் என்று தெரியும். அந்த இடத்தை 2 முறை சுற்றி வந்துவிட்டேன். பின்னர் அவள் விவசாய நிலம் அருகே ஆடுகள் இருந்த இடத்தில் படுத்திருப்பதை பார்த்தேன். அவளது கழுத்துப்பகுதியை துணியால் சுற்றி இழுத்துள்ளனர். அவரது உடைகள் களைந்து, மயக்கத்தில் இருந்தார்" என்றார்.

"அவளது முதுகெலும்பு உடைந்து, நாக்கு வெட்டப்பட்டிருந்தது. கொலை செய்யப்பட்டது போல படுத்துக் கிடந்தாள்" என்று அவரது தாய் கூறினார்.

பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண் முதலில் கொடுத்த வாக்குமூலத்தில், ஒருவருடைய பேரை மட்டுமே குறிப்பிட்டிருந்தார்.

அது குறித்து அவரது தாயிடம் கேட்டதற்கு, "நாங்கள் அவளை கண்டெடுத்த போது அவள் அரை மயக்கத்தில் இருந்தார். அப்போது ஒருவரது பெயரை சொன்னார். ஒரு மணி நேரம் கழித்து அவள் மயங்கிவிட்டாள். நான்கு நாட்களுக்கு பிறகுதான் நடந்த முழுவதையும் அவள் கூறினாள். மொத்தம் 4 ஆண்கள் இருந்ததாக அப்போது அவள் குறிப்பிட்டாள்" என்றார்.

ஹாத்ரஸ் பாலியல் வழக்கு: உண்மையில் நடந்தது என்ன? முரண்படும் தகவல்கள் #BBCGroundReport

அந்தப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக, அவரது குடும்பத்தார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் காவல்நிலையம் இருக்கிறது.

"போகும் வழியெல்லாம் அவள் ரத்த வாந்தி எடுத்தாள். அவளது நாக்கு நிறம் மாறத் தொடங்கிவிட்டது. அவளிடம் ஏதாவது சொல் என்றேன். அவள் கழுத்து இறுக்கப்பட்டதாக கூறினாள். வேறு ஏதும் சொல்ல முடியாது என்றாள். பின்னர் அவள் தனது உணர்ச்சியை இழந்துவிட்டாள்" என பெண்ணின் தாய் தெரிவிக்கிறார்.

இந்நிலையில், சஃப்தர்ஜங் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறிக்கையில், "கழுத்தின் அருகே முதுகுத்தண்டு பகுதியில் ஏற்பட்ட ஆழமான காயங்கள் மற்றும் பிற காயங்களால் அப்பெண் உயிரிழந்துள்ளார். மேலும் கழுத்துப் பகுதியில் குத்தியதற்கான தடயமும் இருக்கிறது" என கூறப்பட்டுள்ளது.

ஆனால் இது மட்டுமே உயிரிழப்புக்கான காரணம் இல்லை என்றும் உடலின் உள்உறுப்புகளை ஆய்வு செய்ததன் அறிக்கை வந்தால்தான், சரியான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததையடுத்து பேசிய சஃப்தர்ஜங் மருத்துவமனையின் செய்தித்தொடர்பாளர், "20 வயதான அப்பெண்ணுக்கு செப்டம்பர் 28ஆம் தேதி அன்று பிற்பகல் 3.30 மணியளவில் நரம்பியல் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஜவாஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் பரிந்துரையின் பேரிலேயே அவர் இங்கு சேர்க்கப்பட்டார். இங்கு அனுமதிக்கப்படும் போதே அவர் மோசமான நிலையில் இருந்தார். சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 29ஆம் தேதி மாலை 6.25 மணிக்கு உயிரிழந்தார்" என தெரிவித்தார்.

செப்டம்பர் 14ஆம் தேதி நடந்ததாக கூறப்பட்டும் பாலியல் வன்முறை சம்பவத்திற்கு பிறகு, போலீஸார் 3 முறை முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்டிருந்த சட்டப்பிரிவுகளை மாற்றியுள்ளனர்.

முதலில் கொலை முயற்சி வழக்காக இது பதிவு செய்யப்பட்டது. பின்னர் பாலியல் வல்லுறவுக்கான சட்டப்பிரிவுகளும் சேர்க்கப்பட்டனர். பின்னர் அந்தப் பெண் உயிரிழந்த பிறகு, கொலை வழக்கையும் இதில் சேர்த்துள்ளனர்.

ஹாத்ரஸ் பாலியல் வழக்கு: உண்மையில் நடந்தது என்ன? முரண்படும் தகவல்கள் #BBCGroundReport

சம்பவம் நடந்த 5 நாட்களுக்கு பிறகே முதல் கைது நிகழ்ந்தது. போலீஸ் விசாரணையில் தாமதம் இருந்ததா என்று கேட்டதற்கு பதிலளித்த எஸ்.பி விக்ராந்த், "செப்டம்பர் 14 காலை 9.30 மணிக்கு பாதிக்கப்பட்ட பெண், அவரது தாய் மற்றும் சகோதரருடன் காவல் நிலையத்திற்கு வந்தனர். யாரோ அவரை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றதாக பெண்ணின் சகோதரர் தெரிவித்தார். 10:30 மணிக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து அலிகர் மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைக்கப்பட்டார். சிகிச்சை உடனடியாக தொடங்கப்பட்டது. 307 பிரிவின் கீழும் எஸ்சி எஸ்டி சட்டத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் தான் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக விசாரணை அதிகாரியிடம் அப்பெண் வாக்குமூலம் அளித்தார். அதனையடுத்து, மற்றொரு குற்றவாளியின் பெயரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டது" என்று தெரிவித்தார்.

பின்னர் 22ஆம் தேதிதான், தன்னை நான்கு பேர் பாலியல் வல்லுறவு செய்ததாக அந்தப்பெண் கூறினார். இதனை ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை என்று கேட்டதற்கு, தான் கூறும் நிலையில், முழு சுயநினைவுடன் இருக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். பின்னர் கூட்டு பாலியல் வல்லுறவு வழக்காக இது மாற்றப்பட்டது. மீதமிருந்த 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்று எஸ்.பி விக்ராந்த் கூறினார்.

மருத்துவ அறிக்கையில் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதற்கான ஆதாரம் இருக்கிறதா என அவரிடம் கேட்டோம்.

அதற்கு பதிலளித்த எஸ்.பி விக்ராந்த், "கூட்டுப்பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக தற்போது கிடைக்கப்பெற்றுள்ள மருத்துவ அறிக்கை கூறவில்லை. தடயவியல் இறுதி அறிக்கைகாக காத்திருக்கிறோம். அதனை பார்த்த பிறகே எதையும் சொல்ல முடியும். பாதிக்கப்பட்ட பெண்ணின் பிறப்புறுப்புகளில் காயம் இருந்ததாக மருத்துவ அறிக்கை குறிப்பிடவில்லை. இந்த அறிக்கையும் வழக்கின் ஒரு அங்கமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

இரவோடு இரவாக எரிக்கப்பட்ட சடலம்

கடந்த செவ்வாய்க்கிழமை நடு இரவில் போலீஸார் அப்பெண்ணின் சடலத்தை எரித்தனர். தங்களை இறுதி சடங்குகள் செய்யக்கூட அனுமதிக்கவில்லை என அப்பெண்ணின் குடும்பத்தார் குற்றஞ்சாட்டி உள்ளனர். எனினும், குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையிலேயே இறுதி சடங்குகள் நடத்தப்பட்டதாக போலீஸார் கூறுகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகுதான் அப்பெண்ணின் குடும்பம் மற்றும் தலித் சமூகத்தின் கோபம் மேலும் அதிகரித்தது.

இரண்டாவது முறையாக அப்பெண் 'வல்லுறவு செய்யப்பட்டார்' என சிலர் இந்த எரிப்பு சம்பவத்தை விவரிக்கின்றனர்.

போலீஸார் ஆதாரத்தை அழிக்கவே இவ்வாறு செய்ததாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இரவோடு இரவாக எரிக்கப்பட்ட சடலம்

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய அப்பெண்ணின் சகோதரர், "எங்கள் உறவினர்கள் தாக்கப்பட்டனர். அவர்களே சடலத்தை எரித்துவிட்டனர். யாருடைய உடலை போலீஸார் எரித்தனர் என்பது கூட எங்களுக்கு தெரியாது. கடைசியாக ஒரு முறை கூட அவள் முகத்தை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை. இவ்வளவு அவசர அவசரமாக போலீஸார் ஏன் இப்படி செய்ய வேண்டும்?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

இதைப்பற்றி விளக்குமாறு எஸ்.பி. விக்ராந்திடம் கேட்டோம்.

"அப்பெண் இறந்து பல மணி நேரம் ஆகிவிட்டது. பிரேத பரிசோதனை எல்லாம் முடிந்து இரவு 12 மணி ஆகிவிட்டது. ஒருசில காரணங்களால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை உடனடியாக கொண்டு வர முடியவில்லை. தந்தையும், சகோதரரும் சடலத்துடன் வந்தனர். இரவில் இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்பது அவரது குடும்பத்தாரின் முடிவாக இருந்தது. மரக்கட்டைகளை சேகரிக்கவும், பிற விஷயங்களிலும் காவல்துறையினர் உதவினார்கள். அவர்களது குடும்பம்தான் இறுதிச்சடங்கை நடத்தியது" என்றார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களின் குடும்பங்கள் கூறுவது என்ன?

பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சற்று அருகில்தான் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வீடும் இருக்கிறது.

குற்றம்சாட்டப்பட்ட 3 பேரின் குடும்பங்களும் பெரும் கூட்டுக்குடும்பமாக இருந்தனர்.

நான் அங்கு சென்றபோது, அந்த வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்தனர்.

தங்களின் பிள்ளைகள் தவறாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கு 32 வயது. அவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன. மற்றொருவருக்கு 28 வயது, இரண்டு குழந்தைகள். மீதமுள்ள இருவருக்கு சுமார் 20 வயது இருக்கும். திருமணம் ஆகவில்லை.

இவர்களின் தாயார்களிடம் இந்த சம்பவம் குறித்து கேட்டபோது, "இது பழைய பகை. இப்படி செய்வதுதான் அவர்கள் (பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தார்) வேலை. தவறான குற்றச்சாட்டுகளை வைப்பார்கள். பின்னர் பணம் கேட்பார்கள். மக்களிடமும் இருந்தும், அரசாங்கத்திடம் இருந்து இழப்பீட்டுத் தொகை பெற்றுக்கொள்வார்கள்" என்று கூறினர்.

அவர்களிடம் பேசும்போது தொடர்ச்சியாக அவர்கள் பெரிய இடம் என்பதையும், பாதிக்கப்பட்டவர்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் அடிக்கடி பதிவு செய்தனர்.

குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் தாய் கூறுகையில், "நாங்கள் தாக்கூர். அவர்கள் ஹரிஜன். அவர்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்மந்தம். அவர்கள் வழியில் வந்தால் நாங்கள் தூரமாக சென்று விடுவோம். எங்கள் பிள்ளைகள் ஏன் அவர்கள் இடத்திற்கு சென்று பெண்ணை தொடுவார்கள்?" என்று கேட்டார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

விசாரணைக்குழு

இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க மூன்று நபர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உத்தர பிரதேச அரசு அமைத்திருக்கிறது.

தற்போது அந்த கிராமத்தின் எல்லைக்குள் நுழைய ஊடகங்கள் உள்பட வெளி நபர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஒரு வாரத்தில் இந்தக்குழு விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும். அதன் பிறகு தான் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரிய வரும்.

போலீசாரின் பங்கு குறித்து எழும் கேள்விகள்

இந்த சம்பவத்திற்கு பிறகு, இதுகுறித்து போலீஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணை தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

சம்பவம் நடந்த பிறகு போலீசார் ஏன் அந்தப் பகுதியை முடக்கவில்லை? உடனடியாக ஏன் ஆதாரத்தை சேகரிக்கவில்லை?

ஏன் கட்டாயமாக நடு இரவில் சென்று சடலத்தை எரித்தனர்?

மருத்துவ அறிக்கையை பெண்ணின் குடும்பத்தாரிடம் இன்னும் ஏன் கொடுக்கவில்லை?

இந்த கேள்விகள் குறித்து பதிலளித்த காவல் கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர், "போலீசார் தங்களது வேலையை முறையாக செய்துள்ளனர். அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டன. பாரபட்சம் இல்லாமல் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். யாரும் தவறாக தண்டிக்கப்பட மாட்டார்கள்" என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: