"திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை ரஜினிகாந்த் மீட்பார்" - தமிழருவி மணியன்

ரஜினி காந்த்

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி: "திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை ரஜினிகாந்த் மீட்பார்" - தமிழருவி மணியன்

திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை ரஜினிகாந்த் மீட்பார் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், "தமிழக அரசியல் களத்தில் மாற்று அரசியலை காந்திய மக்கள் இயக்கம்தான் அறிமுகப்படுத்தியது. 2014-ல் இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கூட்டணியை உருவாக்கி 75 லட்சம் வாக்குகளைப் பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்தோம். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மாற்று அரசியலை முன் நிறுத்துவோம். ஊழல் மலிந்த இரண்டு திராவிட கட்சிகளிடமிருந்து தமிழகத்தை விடுவிக்க, ரஜினிகாந்தால் மட்டுமே, அந்த சரித்திர சாதனையை நிகழ்த்திக்காட்ட முடியும்.

காந்தி பிறந்தநாளில், காமராஜர் மறைந்தநாளில் இந்த இருவர் தம் கனவுகளை நனவாக்க அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் ரஜினிகாந்த் முயற்சிக்கு உறுதுணையாக நிற்போம்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தினமணி: "ரௌடிகளை ஒடுக்க புதிய சட்டம்: தமிழக அரசு தகவல்"

ரௌடி

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க ரௌடிகளை ஒடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக உயா் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையில் இருவேறு ரௌடிகளுக்கு இடையே நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், "ரெளடிகள், அரசியல்வாதிகள் ஆகியோரிடமும் சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பது தெரிய வருகிறது. தமிழகத்தில் காவல்துறையினர் தாக்கப்படும் சூழல் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

இந்த நிலை நீடித்தால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என உணரத் தோன்றும். ரெளடி கும்பல்களைக் கட்டுப்படுத்த, மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பது போன்று தனிச்சட்டம் இயற்ற வேண்டும். இதுதொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்து.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், தமிழகத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், ரௌடிகளை ஒழிக்கவும் புதிய சட்ட வரைவு மசோதா, உருவாக்கப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் புதிய சட்ட வரைவு மசோதா, பேரவையில் எப்போது முன்வைக்கப்பட உள்ளது என்பது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்தனர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தமிழ் இந்து திசை: "இந்தியாவில் திறக்கப்படுகிறது உலகின் மிக நீளமான குகைப் பாதை"

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

இமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான 'அடல்' குகைப் பாதையை பிரதமர் நரேந்திர மோதி நாளை (சனிக்கிழமை) திறந்து வைக்க உள்ளதாக தமிழ் இந்து திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"இமாச்சல பிரதேசத்தின் மணாலி - லே பகுதியில் உள்ள லாஹாவ்-ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பகுதியை இணைக்கும் வகையில் 9.02 கி.மீ. தொலைவுக்கு குகைப் பாதை அமைக்க கடந்த 2010 ஜூன் 28-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. ஆறு ஆண்டுகளில் குகைப் பாதையை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் மலையை குடைந்து குகைப் பாதை அமைக்கப்பட்டதால் சாலை பணி நிறைவடைய 10 ஆண்டுகளாகி உள்ளது. இது உலகின் மிக நீளமான குகைப் பாதையாகும்.

இந்த குகைப் பாதைக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயின் நினைவாக 'அடல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் தெற்கு முனை மணாலியில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும் வடக்கு முனை லாஹாவ் பள்ளத்தாக்கின் சிஸ்ஸு பகுதி, டெலிங் கிராமம் அருகேயும் அமைந்துள்ளன.

கடல் மட்டத்தில் இருந்து 10,000 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள 'அடல்' குகைப் பாதை மூலம் இமாச்சல பிரதேசத்தின் மணாலி - லடாக்கின் லே நகருக்கு இடையேயான பயண நேரம், 4 மணி நேரம் வரை குறையும். `இமாச்சல பிரதேசம், லடாக் பகுதிகள் சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளன. எனவே `அடல்' குகைப் பாதை ராணுவரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த பாதையில் தினமும் 3,000 கார்கள், 1,500 லாரிகள் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.

'அடல்' குகைப் பாதையை பிரதமர் நரேந்திர மோதி நாளை நேரில் திறந்து வைக்கிறார்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: