பாபர் மசூதி இடிப்பு: உச்ச நீதிமன்றத்துடன் முரண்படுகிறதா சிபிஐ நீதிமன்ற தீர்ப்பு? வல்லுநர்கள் பார்வை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சல்மான் ராவி
- பதவி, பிபிசி செய்தியாளர்
டிசம்பர் 6, 1992 அன்று, அயோத்தி பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்றவியல் வழக்கின் தீர்ப்பை 28ஆண்டுகள் கழித்து லக்னெள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2020, செப்டம்பர் 30ஆம் தேதி வெளியிட்டது. அதில் வழக்கில் முன்னாள் துணை பிரதமர் லால் கிருஷ்ண அத்வானி உட்பட குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில வழக்கில் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த நிலையில், இந்தத் தீர்ப்பு குறித்து பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
உச்சநீதிமன்றத்தின் ஐந்து பேர் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, தனது தீர்ப்பில் பாபர் மசூதி இடிப்பு 'ஒரு சட்டவிரோத செயல்' என்று கூறியிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் விசாரணை அமைப்பான சிபிஐ-யின் செயல்பாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
ஏனெனில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை முன்வைக்க சிபிஐ தவறியது என்று விசாரணை நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.
ஆனால், அந்த குற்றச்சாட்டுகளை பாரதிய ஜனதா கட்சி நிராகரிக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜாபர் இஸ்லாம், சிபிஐயின் சுதந்திரமான செயல்பாடு குறித்து எழும் கேள்விகள் தவறானவை. அதன் விசாரணையில் பாஜக தலையிடவில்லை என்று பிபிசியிடம் கூறினார்.
"சிபிஐ ஒரு சுயாதீன விசாரணை அமைப்பு என்றும் காங்கிரஸ் அரசுகளின்போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலேயே அது செயல்பட்டது" என்றும் அவர் கூறினார்.
ஆனால், ஹைதராபாத்தில் உள்ள நால்சார் சட்ட பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஃபைஸான் முஸ்தஃபா, பிபிசி நிருபர் தீப்தி பாத்தினியுடன் பேசும்போது, "சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்டார், இது இந்தியாவின் குற்றவியல் நீதி முறைக்கு ஏற்பட்ட பின்னடைவு" என்று அவர் கூறினார்.


"இந்த தீர்ப்பில் மிகப் பெரிய ஓட்டை என்னவென்றால், இந்த வழக்கில் முக்கிய குற்றச்சாட்டுகள் 153 ஏ மற்றும் 153 பி ஆகியவற்றின்கீழ் சுமத்தப்பட்டிருந்தன.
சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசும்போது 153ஏ, 153 பி ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்.
ஒருவரின் பேச்சிலிருந்து அவருடைய நோக்கத்தை எளிதாக அறிய முடியும். குற்றத்துக்கான சதித் திட்டம் வெளிப்படையாகத் தீட்டப்படுவதில்லை. அது ரகசியமாகவே செய்யப்படுகிறது.
குற்றவியல் சதி வழக்குகளில் சூழ்நிலை ஆதாரங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ளது.
கல்யாண் சிங், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் அறிக்கைகளைப் பாருங்கள். சதித்திட்டத்திற்குத் தேவையான சூழ்நிலை ஆதாரங்கள் அந்த உரைகள். அங்கு இருந்த ஆயுதங்கள், சூழ்ச்சியை உறுதிப்படுத்துகின்றன. அவர்களைக் குற்றவாளிகள் என்று நிரூபிக்க அனைத்து ஆதாரங்களும் இருந்தன.
இதுபோன்ற குற்றத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டிருப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. இது 'ஜெசிகாவை யாரும் கொல்லவில்லை' என்பது போல் பாபர் மசூதியை யாரும் இடிக்கவில்லை என்பதாக ஆகிவிட்டது." என்று கூறுகிறார் ஃபைஸான் முஸ்தஃபா.
ஆனால் பாரதிய ஜனதாவுக்கு இதில் எந்த குறையும் தெரியவில்லை.
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஸ்வினி உபாத்யாய, "இவர்கள் எந்தச் சதித் திட்டத்திலும் ஈடுபடவில்லை என்றும் அங்கு நடந்த நிகழ்வு முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
வெறுப்பை பரப்புவதற்காக அவர்கள் அங்கு செல்லவில்லை என்பதையும் அவர்கள் அமைதியை நிலைநாட்ட முயன்றதாகவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது" என்று பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு 28 ஆண்டுகளாக நடந்து வருவதாகவும், பல முறை சாட்சிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அஷ்வினி உபாத்யாய கூறினார்.
"இறுதி அறிக்கை ஏற்கனவே சிபிஐக்கு வழங்கப்பட்டது. சிபிஐ விரும்பினால் இதற்கு மேல் முறையீடு செய்யலாம். ஆனால் சிபிஐ அதிகாரிகள் தங்கள் ஆற்றலை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அவர்கள் இந்த விஷயத்தில் மீண்டும் தங்கள் ஆற்றலை வீணடிக்கக்கூடாது" என்று அவர் கூறினார்."
அவர்களுக்கு ஆயிரக்கணக்கான வழக்குகள் உள்ளன, அவர்கள் தங்கள் சக்தியை அவற்றில் செலுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்." என்று அவர் கூறுகிறார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
850 சாட்சியங்கள்; எதுவும் நிரூபிக்கப்படவில்லை
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் மொத்தம் 850 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரிய வழக்கறிஞர் ஜஃபர்யாப் ஜிலானி, இந்தத் தீர்ப்பை வழங்குவதற்கு முன், 1992 டிசம்பர் 6 சம்பவம் தொடர்பான செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் அல்லது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை நீதிமன்றம் பார்க்கவில்லை என்றும் அவை அனைத்தும் பொது வெளியில் கிடைக்கின்றன" என்று கூறினார்.
ஆனால், பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வினி உபாத்யாய், "மின்னணு ஊடகங்களின் புகைப்படங்களும் காட்சிகளும் பரிசீலிக்கப்பட்டன, வெளிநாட்டிலிருந்து கூட சாட்சியங்கள் வரவழைக்கப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இனி செய்ய எதுவும் இல்லை" என்று கூறுகிறார்.
ஆனால் ஜிலானி, "அந்த வீடியோக்கள் இன்னும் இணையத்தில் கிடைக்கின்றன, இதில் பாரதிய ஜனதா கட்சி, விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பிற இந்து அமைப்புகளின் தலைவர்கள் மசூதியை இடிக்க கரசேவகர்களைத் தூண்டுவதைக் காணலாம். சில தலைவர்கள் மைக்கில், இன்னும் ஒரு அடி எடுங்கள், பாபர் மசூதியை இடியுங்கள் என்று மைக்கில் அறிவிப்பதைத் தெளிவாகக் காணலாம்.


ஒரு நீதிமன்றம் எவ்வாறு பொது வெளியில் உள்ள ஆதாரங்களைப் புறக்கணிக்க முடியும் என்பது குறித்து ஜிலானி தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.
நீதிமன்ற பதிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள சாட்சி வழங்கியவர் அப்போது அயோத்தியாவில் ஒரு மூத்த காவல் துறை மற்றும் நிர்வாக அதிகாரியாக இருந்தவர் என்றும் தவிர, அந்த நேரத்தில் இந்த முழு விவகாரத்தையும் செய்தி சேகரித்து ஒலி ஒளிபரப்பிய ஊடகவியலாளர்களும் சாட்சியங்களாவார்கள் என்பது அவரது வாதம்.
"இந்த சாட்சிகளின் அறிக்கைகளை நீதிமன்றம் நம்பவில்லை. நீதிமன்றம் சாட்சிகளின் கருத்துகளை விரும்பவில்லை என்பதையே இந்தத் தீர்ப்பு காட்டுகிறது. அப்படியானால், இந்த சாட்சிகள் அனைவரும் பொய் சொன்னார்களா? அப்படியானால் நீதிமன்றம் அவர்கள் அனைவருக்கும் எதிராக ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது? " என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
"பாஜக மற்றும் சிவசேனை தலைவர்களின் அந்தக் கால உரைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அப்போது நடைபெற்ற மத கூட்டத்தில் எழுப்பப்பட்ட கோஷங்களைக் காணலாம். அன்று வந்த கர சேவகர்கள், கோடரி, மண்வெட்டி மற்றும் கயிறுகளுடன் வந்தனர். இதிலிருந்தே இது ஒரு சதி என்று தெளிவாகத் தெரிகிறது." என்று ஃபைஸான் முஸ்தஃபா கூறுகிறார்.

பட மூலாதாரம், PRAVEENJAIN/BBC
தூண்டும் முழக்கங்கள், ஆயுதங்களுடன் சேவகர்கள்
இவ்வளவு பெரிய குற்றத்திற்கு யாரையும் குற்றவாளிகளாகக் கண்டறியாமல் இருப்பது நாட்டின் சட்ட அமைப்புக்கு நல்லதல்ல என்று பேராசிரியர் முஸ்தஃபா கூறுகிறார்.
"சிபிஐ தனது வேலையை சரியாகச் செய்ய முடியவில்லை என்று தெரிகிறது, ஏனெனில் 350 க்கும் மேற்பட்ட நேரில் கண்ட சாட்சிகளின் ஆடியோ, வீடியோ சான்றுகள் மற்றும் அறிக்கைகள் இருந்தபோதிலும், உறுதியான ஆதாரங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை" என்று அவர் அதிருப்தி தெரிவித்தார்.
பேராசிரியர் முஸ்தஃபாவின் கூற்றுப்படி, விசாரணை நிறுவனமும் வழக்கு விசாரணையும் தனித்தனியாகவும் தன்னாட்சி பெற்றதாகவும் இருக்க வேண்டும். மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான நீலஞ்சன் முகோபாத்யாய் 1992 டிசம்பர் 6 சம்பவம் மற்றும் அந்த நேரத்தில் உருவாக்கப்பட்ட சூழ்நிலை குறித்து அவர் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
ஆனால் பாஜக செய்தித் தொடர்பாளர் ஜாஃபர் இஸ்லாம் கருத்துப்படி, நீதிமன்றத்தில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் உண்மை வெளிவந்தது, இதற்கு முன்னர் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் அரசாங்கத்தின் போது பாஜக தலைவர்களைச் சிக்க வைப்பதற்காக இப்படி ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது.
திடீரென்று இடிக்கப்படவில்லை பாபர் மசூதி
அரசு தரப்பு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மக்களைத் தூண்டும் விதமாக உரையாற்றியதற்கும் வன்முறையைத் தூண்டியதற்கும் ஆதாரங்கள் இல்லை என்று சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.
1992 டிசம்பர் 6 ஆம் தேதி பிற்பகலில், கரசேவகர்கள் திடீரென கட்டுப்பாடின்றி, தடையை உடைத்து, பாபர் மசூதியின் மீது ஏறினார்கள் என்றும் அவர்களை விஸ்வ இந்து பரிஷத்தின் அசோக் சிங்கால் தடுக்க முயன்றதாகவும் சிறப்பு நீதிமன்றம் கூறியுள்ளது.
கர சேவகர்களிடையே சில சமூக விரோதிகளும் இருந்ததாகவும் அவர்களே இந்தச் செயலைச் செய்ததாகவும் நீதிமன்றம் நம்புகிறது. ஏனெனில் அவர்கள் ராம் பக்தர்களாக இருந்தால், அந்தச் சர்ச்சைக்குரிய இடத்தில் சிலைகள் இருப்பதாக மீண்டும் மீண்டும் சொல்லும் அசோக் சிங்காலின் பேச்சை அவர்கள் கேட்டிருப்பார்கள் என்பது நீதிமன்றத்தின் கருத்து.
மூத்த ஊடகவியலாளர் ராம்தத் திரிபாதி, "சட்டப்படி, ஒரு சதித்திட்டத்தை நிரூபிப்பது எளிதானது அல்ல. இது சூழ்நிலை ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்ததாக உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது. அஞ்சு குப்தா என்ற ஐபிஎஸ் அதிகாரி மற்றும் பலரின் சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவர்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்ப முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது" என்று கூறுகிறார்.
"இன்னொரு விஷயம், எங்காவது ஒரு கூட்டம் கூடி, அங்கு ஒரு சட்டவிரோதச் செயல் செய்யப்பட்டால், ஐபிசியின் பிரிவு 149 இன் படி, கூட்டத்தில் உள்ள மக்களின் செயல்களுக்கு ஒருவருக்கொருவர் பொறுப்பாவார்கள். பாபர் மசூதி ஒன்று இருந்தது. அது இடிக்கப்பட்டது என்பது உண்மை. அத்தகைய சூழ்நிலையில் சட்டத்தின் படி, அங்கு கூடியிருந்த மக்களே இதற்குப் பொறுப்பு," என்கிறார் அவர்.

பட மூலாதாரம், SANJAY SHARMA / HINDUSTAN TIMES VIA GETTY IMAGES
முரண் என்ன?
அப்போதைய இந்திய பிரதமர் நரசிம்மராவ் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எஸ்.லிபரஹான் அவர்கள் தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தார். அந்த கமிஷன், 17 ஆண்டுகள் கழித்து 2009ஆம் ஆண்டு தனது அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்தது.
மொத்தம் 100 சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவுசெய்த ஆணையத்தின் அறிக்கையில், பாபர் மசூதி கலவரம் மற்றும் இடிப்பில் லால் கிருஷ்ண அத்வானி, கல்ராஜ் மிஸ்ரா, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 68 பேர் ஆற்றிய முக்கிய பங்கு குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆணையத்தின் விசாரணையில் பாபர் மசூதி இடிப்பில் தொடர்புடையவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன என்று கமிஷனின் தலைவர் நீதிபதி எம் எஸ் லிபரஹான், பிபிசி நிருபர் அரவிந்த் சாப்ராவிடம் தெரிவித்தார்.
தனது ஆணையம் அளித்த அறிக்கைக்கும் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கும் நிறைய முரண்பாடுகள் இருப்பதாக நீதிபதி லிபரஹானே கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












