கோவை கார் வெடிப்பு: என்ஐஏ டிஐஜி, எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் வருகை - இன்று நடந்தது என்ன?

கோவை கார் வெடிப்பு
படக்குறிப்பு, சைலேந்திர பாபு, தலைமை இயக்குநர் - தமிழ்நாடு காவல்துறை

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரிக்க இந்திய உள்துறை உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கில் என்ஐஏ விசாரணைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்த ஒரு நாள் கழித்து இந்திய உள்துறை அமைச்சகத்தின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடும்போக்குவாத தடுப்புப் பிரிவு (சிடிசிஆர்) என்ஐஏவுக்கு இந்த உத்தரவை பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து என்ஐஏ டிஐஜி வந்தனா, காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஜித் உள்ளிட்ட அதிகாரிகள் குழு கோவையில் முகாமிட்டுள்ளனர். இந்த குழுவினர் நாளை தங்களுடைய கள விசாரணையை முறைப்படி தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஐஜி வந்தனா 2004ஆம் ஆண்டு ராஜஸ்தான் பிரிவைச் சேர்ந்த இந்திய காவல் பணி அதிகாரி. தீவிரவாத எதிர்ப்பு மற்றும் உளவு சேகரிப்பு நடவடிக்கையில் நிபுணத்துவம் பெற்றவராக அறியப்படுபவர் டிஐஜி வந்தனா. வடக்கு கரோலினாவில் உள்ள அமெரிக்க உளவுப்பயிற்சிக்கல்லூரியில் தீவிரவாத எதிர்ப்பு பயிற்சியை முடித்த ஒரு ஐபிஎஸ் அதிகாரிகளில் வந்தனாவும் ஒருவர்.

இந்த விவகாரத்தில் நீடித்து வரும் தீவிரத்தை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள என்ஐஏ புலனாய்வுக்குழுவினர் ஏற்கெனவே கோவையில் முகாமிட்டு ஆரம்பநிலை தகவல்களை சேகரித்து வருகின்றனர். அத்துடன் வெடிமருந்துகள் ஆய்வில் நிபுணத்துவம் பெற்ற மத்திய ரிசர்வ் காவல் படையின் குழுவினரும் என்ஐஏ குழுவினரின் பணிக்கு உதவியாக கோவையில் உள்ளனர்.

கோவை சம்பவத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இன்று அந்த நகருக்கு இன்று வந்து பாதுகாப்பு நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்க மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. இன்று என்ஐஏ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. தமிழக காவல்துறை சார்பில் என்ஐஏ புலனாய்வுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இன்னும் சில கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு என்ஐஏ விசாரணையை முழுவதுமாக எடுத்துக் கொள்ளும். அதுவரை காவல்துறையின் விசாரணை தொடரும். தற்போதைய நிலையில் வேறு எந்த தகவலையும் கூற முடியாது" என்றார்.

இந்த சம்பவத்தை இதுநாள்வரை தமிழ்நாடு காவல்துறையின் கோவை மாநகர காவல்துறையைச் சேர்ந்த தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.என்ஐஏ முறைப்படி வழக்கு விசாரணையை ஏற்கும்வரை இந்த தனிப்படை விசாரணையை மேற்கொள்ளும். ஏற்கெனவே ஐந்து பேரை தமிழ்நாடு காவல்துறை கைது செய்திருந்த நிலையில், மேலும் ஒருவர் இன்று காலையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கைதான நபரின் பெயர் அப்சர் கான். இவர் சம்பவத்தில் உயிரிழந்த ஜமீசா முபினின் உறவினர். இவருடைய இல்லத்தில் இருந்து லேப்டாப் ஒன்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை உயரதிகாரிகளுடன் தமிழக மின்துறை அமைச்சரும் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், காவல்துறை மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

"அண்ணாமலையைத்தான் விசாரிக்க வேண்டும்"

கார் வெடிப்பு சம்பவத்துக்கு பிந்தைய சட்டம்-ஒழுங்கு நிலைமை, பாதுகாப்பு நிலவரம் மத நல்லிணக்கத்தைப் பேணும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தியதாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

கோவையில் செந்தில் பாலாஜி தலைமையில் நடந்த கூட்டம்
படக்குறிப்பு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி

மேலும் அவர், "காவல்துறையினர் விரைவாக செயல்பட்டு தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளனர். உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர். முதலமைச்சர் உயர் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அனுப்பி மாலைக்குள்ளாகவே இயல்பு நிலை திரும்பியுள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சிலர் கோவையில் நடந்த சம்பவத்தை வைத்து தமிழ்நாடு முழுவதும் பதற்றத்தை உருவாக்கும் நோக்கில் குறுகிய மனநிலையோடு செயல்பட்டு வருகின்றனர்," என்றார்.

"கோவை அமைதியாக உள்ள நிலையில் இங்கே பதற்றம் இருப்பதாக தவறாக சித்திரிக்க வேண்டாம். காவல்துறை வெளிப்படையாக செயல்படுகிறது. முறையான விசாரணை அடிப்படையில் தான் வழக்கை என்.ஐ.ஏக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்தோடு சிலர் சொல்லும் செய்திகளை பெரிதாக்கி மக்களிடம் கொண்டு சொல்ல வேண்டாம்.

பாஜகவினர் மதுரையில் ராணுவ வீரர் உயிரிழந்ததை எவ்வாறு அரசியல் ஆக்க முயன்றார்கள் என்பதை நாம் பார்த்தோம். காவல்துறை விசாரணைக்கு முன்பே தனக்கு எல்லாம் தெரியும் என்பதை போல அண்ணாமலை கருத்து தெரிவித்து வருகிறார். உண்மையில் என்ஐஏ அண்ணாமலையை தான் முதலில் விசாரிக்க வேண்டும். ஒரு அரசியல் கட்சி தலைவர் எப்படி விசாரணை தகவல்களை வெளியிட முடியும்?" என்கிறார் செந்தில் பாலாஜி.

"பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி"

"நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து சட்டம் ஒழுங்கு சிக்கலை உருவாக்க சிலர் முயல்கிறார்கள். சமூக ஊடகங்களில் 1998இல் நடந்த சம்பவத்தையும் தற்போதைய சம்பவத்தையும் ஒப்பிட்டு பதற்றத்தை உருவாக்குகிறார்கள். அப்படி யாராவது செய்தி பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். பாரதிய ஜனதா கட்சியை தவிர வேறு எந்த அரசியல் கட்சியோ, இயக்கங்கமோ இதில் அரசியல் செய்யவில்லை" என்கிறார் செந்தில் பாலாஜி.

அரசியல் கட்சிகள் எதிர்வினை

கோவைசம்பவம்
படக்குறிப்பு, டாக்டர் கிருஷ்ணசாமி, தலைவர் - புதிய தமிழகம் கட்சி

இந்த நிலையில்,கோவை சம்பவம் தொடர்பாக சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எதிர்வினையாற்றியிருக்கின்றனர்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "தமிழக காவல்துறை விரைவாக செயல்பட்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தது பாராட்டுக்குரியது. இந்த வழக்கை என்.ஐ.ஏக்கு மாற்றினாலும் தமிழகத்தின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு தான் உள்ளது. கோவையை மையமாக வைத்து 24 மணி நேரமும் செயல்படும் "பயங்கரவாத எதிர்ப்பு படை'யின் நிரந்தர மையம் ஒன்றை விரைவாக கோவையில் நிறுவ வேண்டும். தமிழக முதல்வர் கோவைக்கு வருகை புரிந்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்டவும் தீவிரவாதத்தை எதிர்த்து தன்னுடைய அரசு தீவிரமாக செயல்படும் என்பதையும் மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்," என்றும் கூறினார்.

இந்தியகம்யூநிஸ்ட் கட்சி
படக்குறிப்பு, கே. பாலகிருஷ்ணன், மாநில செயலாளர் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழக உளவுப்பிரிவின் செயல்தன்மையை விமர்சித்தார்

"தமிழக அரசு உளவுத்துறையின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய வேண்டும். உளவுத்துறையை மேலும் பலப்படுத்த வேண்டும். என்.ஐ.ஏ புலனாய்வு செய்ததிலும் குறைபாடு உள்ளதை கருத்தில் கொள்ள வேண்டும். என்.ஐ.ஏ கூட கைது செய்யப்பட்டவர்களை முன் கூட்டியே கண்காணிக்காதது கேள்விக்குரியதாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி அமைதியை நிலை நாட்ட வேண்டும். யாரோ சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களையும் குற்றம் சுமத்த முடியாது" என்றார் பாலகிருஷ்ணன்.

இதேவேளை, கோவை வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைக்கும் தமிழக அரசின் முடிவு தவறானது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

'1998' சம்பவம் நடக்கக் கூடாது

இந்த நிலையில், கோவையில் 1998இல் நடந்த சம்பவம் போல மீண்டும் ஒரு அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.

எஸ்.பி. வேலுமணி
படக்குறிப்பு, எஸ்.பி. வேலுமணி, தமிழக சட்டப்பேரவை அதிமுக கொறடா

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கோயம்புத்தூரில் தற்போது மோசமான சூழ்நிலை நிலவுகிறது. மக்கள் அனைவரும் அச்சத்துடன் உள்ளனர். 1998இல் நடந்த குண்டுவெடிப்பால் வளர்ச்சியில் நாம் இருபது ஆண்டுகள் பின்தங்கி விட்டோம். தற்போதைய அரசியல் உளவுத்துறை வேலை செய்வதே இல்லை," என்று கூறினார்.

"தமிழ்நாடு உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் முதலமைச்சருக்கு பிஏவாக தான் வேலை செய்கிறார். உளவுத்துறை சரியாக வேலை செய்யாமல் தோல்வியுற்றதன் விளைவு தான் இது. காவல்துறையினர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்கு போட்டு பழி வாங்குவதில் மட்டுமே குறியாக உள்ளனர். கோவையில் மத பிரச்னை என ஏதுமில்லை. நாங்கள் அனைவரும் சகோதரர்களாக இருக்கிறோம். குற்றம் செய்தவர்களை மதம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். 1998இல் நடந்தது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்து விடக்கூடாது," என்று வேலுமணி கேட்டுக் கொண்டார்.

விரிவடையும் விசாரணை

இந்த நிலையில், இந்திய உள்துறையின் உத்தரவுக்கு ஏற்ப கோவை சம்பவம் மீதான முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணை ஆவணங்களை தமிழக காவல்துறையிடம் இருந்து பெறும் நடவடிக்கைகளை என்ஐஏ தொடங்கியிருக்கிறது.

நடந்த சம்பவத்தில் உயிரிழந்த நபருக்கு ஏற்கெனவே இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழு மீது அனுதாபிகளாக அறியப்படும் சிலருடன் தொடர்பு இருந்ததாக என்ஐஏ நடத்திய ஆரம்பநிலை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய இந்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகள், "உயிரிழந்த ஜமேசா முபினின் வாட்ஸ்ப் உரையாடல்கள் சிலவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அவருடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தனர் என்ற விவரம் சேகரிக்கப்பட்டிருக்கிறது. முபின் தனது வீட்டில் எந்த நோக்கத்துக்காக வெடிமருந்தை வாங்கி பதுக்கி இருந்தார், அதை எங்கே கொண்டு செல்ல திட்டமிட்டார? போன்ற விவரங்களை என்ஐஏ அதிகாரிகள் விசாரிப்பர். வழக்கின் விசாரணையை முறைப்படி என்ஐஏ ஏற்றுக் கொண்ட பிறகு இந்த சம்பவத்துக்கும் வெளிநாடுகளில் உள்ள தீவிரவாத சக்திகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்த புலனாய்வு முடுக்கி விடப்படும்," என்று தெரிவித்தனர்.

காணொளிக் குறிப்பு, கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பில் ஒருவர் பலி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: