கோவை கார் வெடிப்பு: கைதான ஐவர் மீது பாய்ந்த யுஏபிஏ சட்டம் - முழு விவரம்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு
    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் மீது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட சட்டப் பிரிவுகளுடன் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படும் நபர்கள் மீது புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தும் சட்டமாகும். இந்த சட்டம் சொல்வது என்ன? இந்த வழக்கில் அடுத்து என்ன நடக்கலாம்?

இவ்விவகாரத்தில், உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது அசாருதீன், முகமது தல்கா மற்றும் ஜி.எம் நகர் பகுதியைச் சேர்ந்த ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் முகமது ரியாஸ் ஆகிய 5 சந்தேக நபர்களை கோவை மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஐவர் மீதும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) பயன்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று (அக். 25) கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக, கைதானவர்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 174 மற்றும் வெடி மருந்துகள் சட்டப்பிரிவு 3ஏ ஆகியவற்றின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கைதான ஐவர் மீதும் குற்றச்சதிக்கான 120பி, இரு வேறு குழுக்கள் இடையே பகைமையை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் சட்டப்பிரிவு 153ஏ ஆகியவை சேர்க்கப்பட்டிருந்தன.

இலங்கை
இலங்கை

"குற்றத்தை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு இல்லை"

யுஏபிஏ பிரிவு சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இனி இந்த வழக்கின் விசாரணை எந்த கோணத்தில் செல்லும்? இதில் மாநில காவல்துறைக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளன? என்பது குறித்து சட்ட நிபுணர்கள் சிலரிடம் பேசினோம்.

பிபிசி தமிழிடம் பேசிய வழக்குரைஞர் தமிழ்மணி, "யுஏபிஏ சட்டத்தில் கடுமையான பிரிவுகள் உள்ளன. யுஏபிஏ அல்லாத மற்ற வழக்குகளில், எவர் மீது மாநில காவல்துறை அல்லது மத்திய புலனாய்வு அமைப்பு குற்றம்சாட்டுகிறதோ, அந்த அமைப்புதான் ஒருவர் குறிப்பிட்ட குற்றத்தை செய்ததாக நிரூபிக்க வேண்டும்," என்கிறார்.

சிசிடிவி காட்சி

பட மூலாதாரம், SCREENGRAB

"சாட்சியங்களை கண்டறிந்து குற்றம்சாட்டப்பட்டவர் மீதான குற்றத்தை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அந்த அமைப்புக்குத்தான் உள்ளது. ஆனால், யுஏபிஏ பிரிவு 44-ன்படி, ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டால் அந்த குற்றச்சாட்டிலிருந்து அந்த நபர் வெளியில் வரவேண்டிய பொறுப்பு அந்த நபருக்குத்தான் உண்டு, அவர்தான் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும். புலனாய்வு அமைப்பு குற்றச்சாட்டை முன்வைத்தால் மட்டும் போதும்" என்கிறார்.

ஆனால், இந்த வழக்கில் யுஏபிஏ பிரிவு சேர்க்கப்பட்டிருப்பது சரியா, தவறா என்பதை இந்த ஆரம்பகட்ட சூழலில் யாராலும் சொல்ல முடியாது எனவும் தமிழ்மணி தெரிவித்தார்.

ஜாமீன் கிடையாது

பொதுவாக 'உபா' என அறியப்படும் இச்சட்டம், நாட்டுக்கு அல்லது சமுதாயத்திற்கு அல்லது சமுதாயத்தின் ஒரு பிரிவின் பாதுகாப்புக்கு ஆபத்து நேரும் என கருதினால், இந்திய தண்டனைச் சட்டத்திற்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது. இப்பிரிவில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுவது கிடையாது.

இது குறித்துப் பேசிய வழக்குரைஞர் வெற்றிச்செல்வன், "யுஏபிஏ-வில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுவது கிடையாது. பெரும்பாலும் சிறையிலேயே விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலைதான் ஏற்படும். காவலில் இருக்கும்போது கைதான நபர் கொடுக்கும் வாக்குமூலம், நீதிமன்றத்தில் அவருக்கே எதிராக திரும்பும் நிலையும் ஏற்படலாம்" என தெரிவித்தார்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு

பட மூலாதாரம், ANI

1998ஆம் ஆண்டில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதான முஸ்லிம்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியவர் வழக்குரைஞர் ஞானபாரதி. யுஏபிஏ சட்டம் குறித்து அவரிடம் பிபிசி தமிழ் பேசியது.

"உபா சட்டத்தைப் பொறுத்தவரையில் விசாரணை இல்லாமல் எத்தனை காலம் வேண்டுமானாலும் ஒருவரை சிறையில் வைத்திருக்கலாம். மற்ற வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும், குற்ற வழக்குகளில் 90 நாட்களுக்குள் தாக்கல் செய்திருக்க வேண்டும். போதைப்பொருட்கள் சம்பந்தமான வழக்குகளில் 180 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், யுஏபிஏவில் எத்தனை ஆண்டுகளானாலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் கூட குற்றம்சாட்டப்பட்டவரை சிறையில் வைத்திருக்க முடியும்" என்கிறார் ஞானபாரதி.

மேலும், "யுஏபிஏவில் கைது செய்திருப்பதாலேயே சதி நடந்திருப்பதாக காவல்துறை கூறலாம். அதனடிப்படையில் இன்னும் சில முஸ்லிம்களை சிறையிலடைப்பது உள்ளிட்டவை நடக்கலாம். மேலும், முன்கூட்டி விடுதலை கோரும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு இதனை காரணம் காட்டியே அந்த வாய்ப்பு மறுக்கப்படலாம்" என்கிறார் ஞானபாரதி.

பீமா கொரேகான் வழக்கில் மூன்றாண்டுகள் கழித்து கவிஞர் வரவர ராவுக்கு ஜாமீன் கிடைத்தது, எழுத்தாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்காதது, ஸ்டேன் சுவாமி சிறையிலிருந்து வெளியில் வராமலேயே உயிரிழந்தது உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி, யுஏபிஏ எவ்வளவு கடுமையான சட்டம் என்பது குறித்து ஞானபாரதி பேசினார்.

ஏற்கெனவே பெரியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த கோவை மாவட்டத்தில் ஏன் இன்னும் வெடிகுண்டு நிபுணர்களை கொண்ட அமைப்பை உருவாக்காதது குறித்தும் கேள்வி எழுப்புகிறார் ஞானபாரதி.

யுஏபிஏ பிரிவை உடனே பயன்படுத்தியது அவசியமில்லை எனக்கூறும் ஞானபாரதி, எனினும், பல பின்னணி தகவல்கள் வெளியாகாத நிலையில் அது குறித்த கருத்துகளை கூற இயலாது என்றும் கூறினார்.

சிவப்புக் கோடு
காணொளிக் குறிப்பு, கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பில் ஒருவர் பலி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: