பில்கிஸ் பானு வழக்கு: கைதிகளின் முன்விடுதலைக்கு பாஜக அரசு கொடுத்த ஒப்புதல் - புதிய தகவல்

- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி நியூஸ், டெல்லி

(எச்சரிக்கை: இந்த செய்தியில் இடம்பெறும் சில தகவல்கள் வாசகர்களுக்கு சங்கடத்தைத் தரலாம்)

கர்ப்பிணி முஸ்லிம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, மூன்று வயது மகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரைக் கொன்ற வழக்கில் 11 பேர் குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்டனர். இவர்கள் கடந்த சுதந்திர தினத்தன்று முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட நிலையில், அந்த விடுதலைக்கு பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது, அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு தாக்கல் செய்துள்ள ஆவணம் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த குற்றவாளிகள், கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தின்போது, பில்கிஸ் பானு மற்றும் அவரது குடும்பத்தைத் தாக்கிய இந்து கும்பலைச் சேர்ந்தவர்கள்.
பாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது மற்றும் அவர்களுக்கு மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்ட சம்பவம், உலக அளவில் கடும் விமர்சனத்திற்குள்ளானது.
பெண்களை மதிக்க வேண்டும் என்று பிரதமர் ஆற்றிய சுதந்திர தின உரைக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இணையத்தில் வைரலான ஒரு காணொளியில் கோத்ரா சிறைக்கு வெளியே உறவினர்கள் அவர்களுக்கு இனிப்புகள் வழங்குவதையும், கால்களைத் தொட்டுக் கும்பிடுவதையும் பார்க்க முடிந்தது.


சிறையில் 14 ஆண்டுகள் கழித்தது, வயது மற்றும் சிறை நன்னடத்தை உட்பட பலவற்றைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய அவர்களது கோரிக்கைக்கு அரசு ஒப்புதல் அளித்ததாக அந்த நேரத்தில் மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், கடந்த திங்களன்று குஜராத் அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில், இதற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டதாகவும், அந்த ஒப்புதலை அமித்ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகம் ஜூன் மாதம் வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள சில மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
அவர்கள் விடுதலை செய்யப்பட்ட சில தினங்கள் கழித்து அறிக்கை வெளியிட்ட பில்கிஸ் பானு, இந்த முடிவு அநியாயமானது என்றும் நீதித்துறை மீது தனக்கு இருக்கும் நம்பிக்கையை அசைத்துப் பார்ப்பதாகவும் கூறினார்.
"என் குடும்பத்தையும், வாழ்க்கையையும் நாசமாக்கியவர்கள் விடுதலை செய்யப்பட்ட செய்தி அறிந்ததும், என்னிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை. தற்போதும் உணர்ச்சியற்று இருக்கிறேன்" என்றார் பில்கிஸ் பானு.
"ஒரு பெண்ணுக்கான நீதி எப்படி இவ்வாறு முடிவடையலாம். நம் நாட்டில் இருக்கும் உயர்ந்த நீதிமன்றங்களையும் இந்த அமைப்பையும் நான் நம்பினேன். எனக்கு இழைக்கப்பட்ட அநீதியுடன் வாழ மெதுவாக பழகிக்கொண்டேன். குற்றவாளிகளின் இந்த விடுதலை என்னுடைய அமைதியையும், நீதித்துறை மீதான நம்பிக்கையையும் பறித்துவிட்டது" எனக் குறிப்பிட்டுள்ள அவர், அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கான உரிமையை எனக்குத் திரும்பக் கொடுங்கள் என குஜராத் அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக்குற்றத்தில் ஈடுபடும் நபர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்ற மாநில மற்றும் மத்திய அரசின் விதிகளுக்கு எதிராக இந்த விடுதலை இருப்பதாக பலர் சுட்டிக்காட்டுகின்றனர். பொதுவாக, இந்தியாவில் இத்தகைய குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது.
பில்கிஸ் பானு குடும்பத்துக்கு பின்னடைவு
மாநில அரசின் இந்த முடிவு பில்கிஸ் பானு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிகப்பெரும் பின்னடைவாக அமைந்தது.
நீதிக்கான அவர்களது நீண்டகால போராட்டத்தைக் கருத்தில் எடுத்துக்கொண்டால், அந்தக் குடும்பத்தின் கோபத்தையும் விரக்தியையும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

பட மூலாதாரம், Getty Images
பில்கிஸ் பானு மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான தாக்குதல் கலவரத்தின் போது நடந்த மிகக் கொடூரமான சம்பவங்களில் ஒன்றாகும். கோத்ரா நகரில் பயணிகள் ரயிலில் இருந்த 60 இந்து யாத்ரீகர்கள் தீயில் கருகி உயிரிழந்ததை அடுத்து, இந்தக் கலவரம் வெடித்தது.
தீ வைப்பு சம்பவத்தில் முஸ்லிம்கள் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி, இந்து கும்பல்கள் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதலில் ஈடுபட்டனர். மூன்று நாட்கள் நடந்த இந்த கலவரத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதில், பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.
இந்தப் படுகொலையைத் தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என குஜராத்தின் அப்போதைய முதல்வராக இருந்த நரேந்திர மோதி மீது விமர்சனம் எழுந்தது. இத்தகைய குற்றச்செயல்களை எப்போதும் எதிர்க்கும் அவர், இந்தக் கலவரத்திற்காக மன்னிப்பு கேட்கவில்லை.
இந்த கலவரம் தொடர்பாக நரேந்திர மோதி மீது வழக்குத் தொடர போதிய ஆதாரங்கள் இல்லையென கடந்த 2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், அவரது பார்வையிலேயே இந்தக் கலவரம் நடந்ததாக விமர்சகர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர்.
கலவரத்தில் ஈடுபட்ட பலர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாலும், சில உயர்மட்ட குற்றவாளிகள் ஜாமீன் பெற்றனர் அல்லது உயர்நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டனர்.
இதில் விசாரணை நீதிமன்றத்தால் 'கலவரங்களின் அரசன்' என்று குறிப்பிடப்பட்ட முன்னாள் அமைச்சரும், மோதியின் உதவியாளருமான மாயா கோட்னானியும் அடங்குவார்.
தற்போது பில்கிஸ் பானுவிடம் தவறாக நடந்துகொண்டவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பில்கிஸ் பானுவின் வழக்கில் 11 பேரின் ஆயுள் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்த சில நாட்களுக்குப் பிறகு, டெல்லியில் அவரை நான் சந்தித்தேன்.
அந்தத் தாக்குதலின் கொடூரங்களைப் பில்கிஸ் பானு கண்ணீருடன் விவரித்தார்.

பட மூலாதாரம், Getty Images
அப்போது பில்கிஸ் பானுவிற்கு 19 வயது. இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த அவர், தனது மூன்று வயது மகளுடன் கோத்ராவிற்கு அருகேயுள்ள ரந்திக்பூர் என்ற கிராமத்தில் தனது பெற்றோரைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார்.
"நான் சமையலறையில் மதிய உணவு செய்துகொண்டிருந்தேன். என்னுடைய அத்தையும் அவருடைய குழந்தையும் ஓடிவந்து அவர்களுடைய வீட்டுற்குத் தீ வைக்கப்பட்டதாகவும், நாம் இங்கிருந்து உடனடியாகக் கிளம்ப வேண்டும் என்றனர். நாங்கள் உடுத்தியிருந்த உடையுடன் கிளம்பினோம். எங்களுக்கு செருப்பு அணியக்கூட நேரமில்லை" என பில்கிஸ் பானு என்னிடம் தெரிவித்தார்.


பில்கிஸ் பானு அவரது மகள், தாய், ஒரு கர்ப்பிணி உறவினர், இளைய உடன்பிறப்புகள், இரண்டு வயது வந்த ஆண்கள் உட்பட 17 முஸ்லிம்கள் இருந்த குழுவில் இருந்தனர்.
அடுத்த சில நாட்களுக்கு, பள்ளிவாசல்களில் அடைக்கலம் தேடி அவர்கள் கிராமம் கிராமமாகச் சென்றனர்.
மார்ச் 3ஆம் தேதி காலை தாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்று நம்பிய ஒரு கிராமத்திற்கு அவர்கள் செல்ல தயாராக இருந்தபோது, ஒரு கும்பல் தடுத்து நிறுத்தியது.
"அவர்கள் எங்களை வாள் மற்றும் தடிகளால் தாக்கினார்கள். அதில் ஒருவர் எனது மகளை என் மடியில் இருந்து பறித்து தரையில் வீசினார். பின் அவள் தலையை ஒரு பாறையில் மோதச் செய்தார்" என்றார் பில்கிஸ் பானு.
அவரைத் தாக்கியவர்கள் அவருடைய வீட்டின் அருகே வசிப்பவர்கள். அவர்களை தினமும் அவர் பார்த்திருக்கிறார். பில்கிஸ் பானுவின் உடையை அவர்கள் கிழித்துள்ளனர். பின்னர், அதில் சிலர் அவரைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். தன்னை விட்டுவிடும்படி அவர் கெஞ்சியதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.
அவர்கள் ஊர் ஊராகச் சென்றுகொண்டிருந்த சமயத்தில் அதில் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்தப் பெண்ணையும் அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்தனர். மேலும், பிறந்து இரண்டு நாட்களேயான அவரது குழந்தையும் கொல்லப்பட்டது.
அந்தத் தாக்குதலின்போது பில்கிஸ் பானு மயக்கமடைந்துவிட்டதால் அவர் இறந்துவிட்டதாக நினைத்து அந்தக் கும்பல் கிளம்பிவிட்டது. அவரைத் தவிர்த்து, இரண்டு மற்றும் நான்கு வயதுடைய இரு சிறுவர்கள் மட்டுமே அந்தத் தாக்குதலில் உயிர்பிழைத்தனர்.

பட மூலாதாரம், Getty Images
பில்கிஸ் பானுவின் நீதிக்கான போராட்டம் மிக நீண்டது மற்றும் கொடுங்கனவுகள் நிறைந்தது. சில காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் அவரை மிரட்ட முயன்றுள்ளனர், சாட்சியங்கள் அழிக்கப்பட்டன, இறந்தவர்கள் பிரேத பரிசோதனையின்றி புதைக்கப்பட்டனர், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர். கொலை மிரட்டல்களும் அவருக்கு வந்துள்ளன.
உச்சநீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்த பிறகே, முதல் கைது 2004ஆம் ஆண்டு நடந்தது. மேலும், பில்கிஸ் பானுவிற்கு குஜராத் நீதிமன்றம் நீதி வழங்கவில்லை என்று கூறி இந்த வழக்கை மும்பைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிக்கான அவரது போராட்டம் அவருடைய குடும்பத்திற்கும் இடையூறாக இருந்தது. அதன் காரணமாக அவர்கள் பலமுறை வீடு மாற வேண்டியிருந்தது.
"எங்களால் இன்னும் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. ஏனென்றால் எங்களுக்கு பயமாக உள்ளது. காவல்துறை மற்றும் மாநில அதிகாரிகள் எங்களைத் தாக்கியவர்களுக்கு எப்போதும் உதவியுள்ளனர். நாங்கள் குஜராத்தில் இருந்தால் எங்களுடைய முகத்தை மூடியிருப்போம். எங்களுடைய வீட்டு முகவரியையும் வெளியே கொடுக்கமாட்டோம்" என்று பில்கிஸ் பானுவின் கணவர் என்னிடம் கூறினார்.
இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோது, பில்கிஸ் பானுவைத் தாக்கியவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் உட்பட பலரும் முன்வைத்தனர்.
ஆனால், மும்பை நீதிமன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தபோது, தனக்கு பழிவாங்குவதில் விருப்பமில்லை என்றும், தாங்கள் என்ன செய்தோம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டால் போதும் என்றும் பில்கிஸ் பானு என்னிடம் தெரிவித்தார்.
"சிறு குழந்தைகளை எப்படிக் கொன்றார்கள், பெண்களை எப்படி பாலியல் பலாத்காரம் செய்தார்கள் என்பதை அவர்கள் ஒரு நாள் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்" என்றும் அவர் கூறினார்.
ஆனால், அந்தக் குற்றவாளிகள் மீதமுள்ள வாழ்நாட்களை சிறையிலேயே கழிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் கூறினார்.
அவர்கள் விடுதலையான பிறகு, தன்னுடைய மனைவி கலக்கத்திலும் மனச்சோர்விலும் இருப்பதாக பில்கிஸ் பானுவின் கணவர் ரசூல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறினார்.
"எங்களுடைய இத்தனை வருடப் போராட்டம் ஒரே தருணத்தில் முடிவுக்கு வந்துவிட்டது" என்றும் ரசூல் கூறினார்.
"இந்தச் செய்தி குறித்து யோசிக்க எங்களுக்கு நேரமில்லை. அந்தக் குற்றவாளிகள் வீட்டிற்கு சென்றுவிட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்" என்றும் அப்போது அவர் தெரிவித்திருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













