குஜராத் முஸ்லிம்கள் பில்கிஸ் பானுவின் கிராமத்தை விட்டு வெளியேறுவது ஏன்? - பிபிசி கள ஆய்வு

அமினா பானு

பட மூலாதாரம், PAVAN JAISWAL

படக்குறிப்பு, அமினா பானு
    • எழுதியவர், தேஜஸ் வைத்யா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

"அச்ச உணர்வு ஏற்கனவே இருந்தது என்றபோதும், குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு பிறகு அந்த பயம் அதிகரித்திருக்கிறது. ஏறக்குறைய 500 முஸ்லிம்கள் ரந்திக்பூர் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர்." பில்கிஸ் பானுவின் உறவினரும் ரந்திக்பூர் கிராமவாசியுமான இம்ரானின் வார்த்தைகள் இவை.

பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள் 11 பேரும் விடுவிக்கப்பட்ட பிறகு, அங்கிருந்து முஸ்லிம் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். இதுகுறித்து பிபிசி மேற்கொண்ட கள ஆய்வில் ஆதங்கம், அவநம்பிக்கை, அச்சம் என மக்கள் வெளிப்படுத்திய உணர்ச்சிகளைப் பதிவு செய்வதோடு பட்டாசு, இனிப்புகள், வரவேற்பு என கொண்டாடிய மக்களின் மனநிலையையும் பதிவு செய்கிறது இந்தக் கட்டுரை.

Banner

பட மூலாதாரம், AFP

கட்டுரையிலிருந்து...

  • பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் 11 பேரும் விடுதலை செய்யப்பட்ட பிறகு, ஏறக்குறைய 500 முஸ்லிம் குடும்பங்கள் ரந்திக்பூர் கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
  • 11 பேரில் பெரும்பாலானோர் சிங்வாட் கிராமத்தில்தான் வசிக்கின்றனர். அது ரந்திக்பூர் கிராமத்துக்கு அருகிலுள்ளது.
  • ஆகஸ்ட் 22ஆம் தேதி நம் பிபிசி செய்திக்குழு அங்கு சென்றபோது, பெரும்பாலான வீடுகள் பூட்டப்பட்டிருந்தன. வீடுதோறும் மூவர்ணக்கொடி என்ற சுதந்திர தின பிரசாரத்துக்காக ஏற்றப்பட்ட தேசியக்கொடிகள் மட்டுமே மீதமிருந்தன.
  • 2002ஆம் ஆண்டிலிருந்தே இந்த கிராமத்தில் பெரிய நிகழ்ச்சிகள் ஏதும் நடக்கவில்லை. ஆனால், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் அவநம்பிக்கை தொடந்து வந்தது.
  • "2002 கலவரத்தில் எனது மகன் கொல்லப்பட்டான். நாங்கள் பசியோடும் தாகத்தோடும் காடுகளில் அலைந்தோம். இப்போது மீண்டும் பயமாக இருக்கிறது. மறுபடியும் கலவரம் ஏற்பட்டால் என்ன செய்வது?" - கிராமவாசி.
  • "அவர்களில் சிலர் நிரபராதிகளாக இருந்தனர். அவர்களை வரவேற்பதில் எந்தத் தவறும் இல்லை" - கிராமவாசி.
Banner

குஜராத் மாநிலம் கோத்ராவிலிருந்து 50கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ரந்திக்பூர் கிராமம். 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்டு கலவரம் நடந்தபோது ரந்திக்பூரில் இருந்தார் பில்கிஸ் பானு.

கலவரத்தால், பில்கிஸ் பானுவின் குடும்பம் ஊரைவிட்டு வெளியேறியபோது, சப்பர்வாட் கிராமத்தில் உள்ள பனிவெலா பகுதி மலைக்கு அருகில் இடைமறிக்கப்பட்டு கூட்டுப்பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். அத்துடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் 14 பேரும் கொலை செய்யப்பட்டது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள், குஜராத அரசால் தண்டைக்குறைப்பு செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டநிலையில், அதுகுறித்து பேச இந்த கிராமத்தில் யாரும் தயாராக இல்லை. சில முஸ்லிம் மக்கள் பேசினர். ஆனால், அவர்களும் சிறுபான்மையினர் தான்.

பில்கிஸ் பானு 'மோதியின் மகள்' இல்லையா?

பில்கிஸ் பானுவின் தந்தை வீடு இருக்கும் ரந்திக்பூரின் சுண்டிலால் சாலையில் உள்ள வீதிக்கு சென்றோம். "இந்த நாட்டின் மகள்கள் எல்லாம் என் மகள்கள் போல என்று மோதிஜி சொல்கிறார். எனில், பில்கிஸ் அவரது மகள் இல்லையா? அவளுக்கு நீதி கொடுக்க அவரால் முடியாதா? விடுவிக்கப்பட்ட 11 குற்றவாளிகளும் ஏதோ சிறிய குற்றம் இழைத்தவர்கள் அல்ல. அது ஒரு கொடுங்குற்றம். இப்படி ஒரு தண்டனைக்குறைப்பை இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்கிறதா " என்று கேள்வி எழுப்புகிறார் பில்கிஸ் பானுவின் தந்தை வீடு இருக்கும் தெருவில் வசிக்கும் இக்பால் முகமது.

சுண்டடிலால் சாலை மட்டுமன்றி முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கும் இன்னொரு பகுதி, பில்வால் ஃபலியா. 11 பேர் விடுவிப்புக்குப் பிறகு, மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறத் தொடங்கினர்.

ஆகஸ்ட் 22ஆம் தேதி, பிபிசி செய்திக்குழு அங்கு சென்று சேர்ந்தபோது, பல வீடுகள் பூட்டப்பட்டிருந்தன. பல வீடுகளில் மூட்டை முடிச்சுகள் தயாராகிக்கொண்டிருந்தன. இந்த பகுதி காவல்நிலையத்துக்கு பின்புறம்தான் இருக்கிறது என்றபோதும், மக்கள் இங்கிருந்து காலி செய்துகொண்டிருந்தனர்.

Bilkis Banu

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பில்கிஸ் பானு

2002 கலவரத்துக்குப் பிறகு 2ஆவது முறையாக இப்படி மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுகின்றனர்.

ஆகஸ்ட் 23ஆம் தேதி, ரந்திக்பூர் கிராமத்துக்கு சென்றபோது, பூட்டப்படாத வீடுகளைக் காண்பது அரிதாக இருந்தது. தெருநாய்கள், ஆடுகளின் ஒலிதான் கேட்க முடிந்தது.

சில இளைஞர்கள் இருந்தனர். அத்துடன் பில்கிஸ் பானுவின் உறவினர்கள் இருவர் இருந்தனர். அவர்களும் இன்னும் ஓரிரு தினங்களில் ஊரைவிட்டு செல்வதாக கூறினர்.

மூவர்ணக்கொடி மட்டும் இன்னும் இருக்கிறது

நாங்கள் பில்வால் ஃபாலியாவில் உள்ள அமினா பானுவின் வீட்டை அடைந்தபோது, ​​​​அவர் தனது பெரும்பாலான பொருட்களைக் கட்டி தயாராக வைத்திருந்தார். 'ஹர் கர் திரங்கா' (வீடுதோறும் மூவர்ணம்) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்றப்பட்ட மூவர்ணக் கொடி மட்டும் அப்படியே இருந்தது.

மூவண்ணக்கொடி
படக்குறிப்பு, மூவண்ணக்கொடி

பிபிசியிடம் பேசிய அவர், "இந்த 11 பேரின் விடுதலை எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2002 கலவரத்தில் எனது மகன் கொல்லப்பட்டான். நாங்கள் பசியோடும் தாகத்தோடும் காடுகளில் அலைந்தோம். இப்போது மீண்டும் பயமாக இருக்கிறது. மறுபடியும் கலவரம் ஏற்பட்டால் என்ன செய்வது?" என்கிறார்.

அவரது பக்கத்து வீட்டு மதீனா பானுவும் பொருட்களை தயார் செய்து கிள்ம்ப ஆயத்தமாகியிருந்தார். "எல்லோரும் அக்கம்பக்கத்தை விட்டு வெளியேறினால் நாங்கள் மட்டும் எப்படி வாழ முடியும்? எனக்கு இளம் பெண் குழந்தைகள் உள்ளனர். ஆறு பேர் கொண்ட எங்கள் குடும்பமும் ரந்திக்பூரை விட்டுவிட்டு தேவ்கத்பரியாவுக்குச் செல்கிறது" என்றார்.

பூட்டப்பட்ட வீடுகளும் சாலையோர ஆடுகளும் மட்டுமே பெரும்பாலும் காணப்படுகின்றன.

பட மூலாதாரம், TEJAS VAIDYA

படக்குறிப்பு, பூட்டப்பட்ட வீடுகளும் சாலையோர ஆடுகளும் மட்டுமே பெரும்பாலும் காணப்படுகின்றன.

'யாரை நம்புவது?'

ரந்திக்பூர் முஸ்லிம்கள் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் ஒன்றை அளித்துள்ளனர். இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய தாஹோட் மாவட்ட ஆட்சியர் ஹர்ஷித் கோசாவி, "ஆம், அவர்களின் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. பயப்பட ஒன்றுமில்லை என்று அவர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். நான் அவர்களிடம், 'உங்களுக்கு ஏதாவது மிரட்டல் வந்ததா?' என்று கேட்டால், மிரட்டல் ஏதும் வரவில்லை. ஆனால், பயத்தில் உள்ளனர். யாரேனும் மிரட்டினால், நடவடிக்கை எடுப்போம், மாவட்ட எஸ்.பி.யிடம் ஏற்கனவே பேசியுள்ளோம்,'' என்றார்.

"இங்கு இரவு நேரத்தில் காவல்துறை இருக்கிறது என்பது தெரியும், ஆனால் 2002ல், போலீசார் இருந்த போதும், எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன. எனவே யாரை நம்புவது?" என்று கேட்கிறார் அயூப்பாய்.

குற்றவாளிகளுக்கு விடுவிக்கப்பட்டதற்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் இக்பால் முகமது, "75 ஆண்டுகால சுதந்திரத்தின் 'அமிர்த விழாவை' நாடு கொண்டாடியபோது, ​​​​பாலியல் வல்லுறவு போன்ற கொடூரமான குற்றங்களின் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்." என்கிறார்.

மேலும், "சிறையில் இருந்து வெளியே வந்ததும் கிராமத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இது எங்கள் அச்சத்தை அதிகமாக்கியுள்ளது. நம் நாட்டில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த கைதிகள் 20-30 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அப்படியிருக்க, இந்த வழக்கில் மட்டும் எப்படி மன்னிப்பு வழங்கினர்? அதுவும் அரிதான அரிதான இந்த வழக்கில்'?" என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அயூப் பாய்
படக்குறிப்பு, அயூப் பாய்

'இந்த வழக்கு மற்றும் நிவாரணத்தைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்?' என்று அறிந்துகொள்ள ரந்திக்பூரில் உள்ள ஒரு மருந்தக நிர்வாகியிடம் கேட்டபோது, ​​"நான் இந்த கடையில் வேலைக்காரன். நீங்கள் உரிமையாளரிடம் கேளுங்கள். இந்த வழக்கு பற்றி எனக்கு எதுவும் தெரியாது" என்று சொல்லிவிட்டார்.

அதேபோல, மெயின் பஜாரில் பான் பீடா கடை நடத்தி வரும் ஒருவரிடம் கேட்டபோது, "2002ல் நான் மிகவும் இளமையாக இருந்தேன். எனக்குத் தெரியாது." என்று பதிலளித்தார்.

2002ல் ரந்திக்பூர் கிராமத்தில் நடந்த கலவரத்திற்குப் பிறகு, இரு சமூகத்தினரும் அருகருகே வாழ்ந்தாலும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அவர்கள் ஒருவருக்கொருவர் வியாபாரம் செய்கிறார்கள், ஆனால் அவர்களது உறவில் பிணைப்பைக் காண முடியவில்லை. வெறும் சம்பிரதாயமாக மட்டுமே அந்த உறவு உள்ளது.

காணொளிக் குறிப்பு, குஷ்புவின் பில்கிஸ் பானு ஆதரவு ட்வீட்டும் நெட்டிசன்களின் விமர்சனமும்

வரவேற்பதில் என்ன தவறு?

நீதிமன்றம் அவர்களை குற்றவாளிகள் என்று சொல்லியிருந்தாலும் அவர்களில் சிலர் நிரபராதி என்று நம்பும் ஒரு பிரிவினர் ரந்திக்பூர் மற்றும் சிங்வாட்டில் உள்ளனர்.

இந்த குற்றவாளிகளை வரவேற்பது எப்படி நியாயம் என்று நாங்கள் கேட்டபோது, ​​"வரவேற்பதில் என்ன தவறு? அவர்கள் நிரபராதிகள்" என்கிறார் டினாபஹேன் தர்ஜி.

அதேபோல, "அவர்களில் சிலர் நிரபராதிகளாக இருந்தனர். அவர்களை வரவேற்பதில் எந்தத் தவறும் இல்லை" என்று ரந்திக்பூரின் புறநகரில் உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ஒரு இளைஞன் கூறினார். அத்துடன் "உண்மையில் நிரபராதிகளான சிலரது பெயர்கள் பொய்யாக இணைக்கப்பட்டுள்ளன" என்றும் அந்த இளைஞர் கூறினார்.

ரந்திக்பூர் கிராமத்தின் பெண் சர்பஞ்ச்சை (பஞ்சாயத்து தலைவர்) தொடர்பு கொண்டபோது, ​"​இது குறித்து எதுவும் கூற தயாராக இல்லை. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ரந்திக்பூரின் மக்கள் தொகை 3177. அது இப்போது அதிகரித்திருக்கலாம். ஆனால் கிராமம் மிகவும் சிறியதாகத் தெரிகிறது" என்று மட்டும் பதிலளித்தார்.

ரந்திக்பூர் மற்றும் சிங்வாட் பகுதிகளில் முக்கியமாக பழங்குடியினர், கோலி மற்றும் முஸ்லிம் சமூகங்கள் வசிக்கின்றன. மக்கள் விவசாயம் மற்றும் விவசாய வேலைகள் மற்றும் கடைகள் அல்லது சிறு வணிகங்களில் ஈடுபட்டுள்ளனர்.

விடுவிக்கப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள்?

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சில குற்றவாளிகளை நாங்கள் தொடர்பு கொள்ள முயற்சித்தோம், ஆனால் அவர்கள் பேச மறுத்துவிட்டனர். உள்ளூர் பத்திரிக்கையாளர் உதவியுடன் ராதேஷ்யாம் ஷாவிடம் போனில் பேசினோம், ஆனால் அவர், "இந்த வழக்கைப் பற்றி இப்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை. இப்போது நான் ராஜஸ்தானில் இருக்கிறேன், இங்குதான் இருக்க விரும்புகிறேன்" என்றார்.

ஷா மேலும் கூறினார், "நான் என் வாழ்நாளில் பனிவேலா பகுதியில் (பில்கிஸ்பானோ கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட மலைப்பகுதிக்கு) சென்றதில்லை, நான் நிரபராதி"

ராதேஷ்யாம் பகவான்தாஸ் ஷா

பட மூலாதாரம், HINDUSTAN TIMES

படக்குறிப்பு, ராதேஷ்யாம் பகவான்தாஸ் ஷா

மற்றொரு குற்றவாளியான கோவிந்த் ராவலின் வீட்டை அடைந்தபோது, ​​'அவர் வீட்டில் இல்லை' என்ற பதில் கிடைத்தது. அவரது ஆசை நிறைவேறியதால், பல்வேறு கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்,'' என, குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். ஆனால், அந்த குடும்ப உறுப்பினர் இந்த வழக்கின் மன்னிப்பு குறித்தோ அல்லது இந்த வழக்கு குறித்தோ எதுவும் பேச மறுத்துவிட்டார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: