பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கு: 11 குற்றவாளிகளை விடுவிக்க சட்டம் வளைக்கப்பட்டதா?

பில்கிஸ் பானு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பில்கிஸ் பானு
    • எழுதியவர், ராகவேந்திர ராவ்
    • பதவி, பிபிசி நியூஸ், டெல்லி

"இந்த முடிவு சட்டத்தையே வன்புணர்வு செய்வது போன்றது"

"முறையாக அமல்படுத்தப்படாத சட்டம், அந்தச் சட்டத்தை ஏளனம் செய்யும் போலி வடிவம்"

"இந்த முடிவு மனசாட்சிப்படி எடுக்கப்படவில்லை"

"இதில் மனிதாபிமான அடிப்படையில் முடிவு எடுக்கப்பட வேண்டும்"

"பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய அபாயங்களை இந்த தீர்ப்பு உருவாக்கியுள்ளது"

இந்த வாசகங்களெல்லாம், பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் 11 பேரும் தண்டனை குறைக்கப்பட்டு, வெளியில் வந்த சம்பவம் குறித்து, இந்திய முன்னாள் நீதிபதிகள் வெளியிட்ட கருத்துகள்.

கடந்த ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று, பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட வழக்கில், 11 குற்றவாளிகளும் கோத்ரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு விருந்து வைத்து இனிப்பு வழங்கியது போன்ற பல புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதையடுத்து நாடு முழுக்க இந்த முடிவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல்வேறு பதிவுகள் பரவி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக அரசியல் களத்தில் வாத, பிரதிவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

பில்கிஸ் பானு வழக்கில் நடந்தது என்ன?

2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரையும் கொன்ற வழக்கில் இந்த 11 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் பம்பாய் உயர் நீதிமன்றமும் அவர்களின் தண்டனையை உறுதி செய்தது. அவர்கள், கோத்ரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர்.

இந்த நிலையில், குஜராத் அரசால் அமைக்கப்பட்ட ஒரு குழு, குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட இந்த 11 பேரின் தண்டனையை குறைக்க ஒருமனதாக முடிவு செய்தது.

குஜராத் அரசின் தண்டனை குறைப்புக் கொள்கை, 1992இன் படி, எந்த வகை குற்றவாளிகளுக்கும் தண்டனையை குறைப்பதற்கு எந்த தடையும் இல்லை. அதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த 1992 தண்டனைக் குறைப்புக் கொள்கையைப் பயன்படுத்தக் காரணம், பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டபோது அந்தக் கொள்கைதான் நடைமுறையில் இருந்தது.

இருப்பினும், குஜராத் அரசு 2014 ஆம் ஆண்டில் ஒரு புதிய கொள்கையை உருவாக்கியது, இதில், பல பிரிவுகளின் குற்றவாளிகளுக்கு தண்டனைக் குறைப்பை தடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த புதிய கொள்கையின்படி கொலை, பாலியல் வல்லுறவு வழக்குகளில் தண்டனை பெற்றவர்களின் தண்டனையை குறைக்க முடியாது. ஒருவேளை ஒருவழக்கை சிபிஐ விசாரித்திருந்தால், அந்த நபரின் தண்டனையை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசு குறைக்க முடியாது என்றும் இந்தக் கொள்கை கூறுகிறது.

எனில், பில்கிஸ் பானு வழக்கில் 2014ஆம் ஆண்டின் கொள்கை அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டிருந்தால், அவர்களின் தண்டனையை மாற்றியிருக்க முடியாது என்பது தெளிவாகிறது. எனவே, இந்த வழக்கில் 2014 ஆம் ஆண்டின் கொள்கைக்குப் பதிலாக 1992ஆம் ஆண்டின் தண்டனைக் குறைப்புக் கொள்கையை பயன்படுத்தியது முறையா என்று கேட்பது பொருத்தமானது.

ராதேஷ்யாம் பகவான்தாஸ் ஷா

பட மூலாதாரம், Hindustan Times

படக்குறிப்பு, ராதேஷ்யாம் பகவான்தாஸ் ஷா

குழுவில் இருந்தவர்கள் யார்?

இந்த குழுவின் சார்பற்ற தன்மை குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. இந்த 11 பேரின் தண்டனைக் குறைப்புக் குழுவில் இருந்தவர்களில் இருவர் பாஜகவின் எம்எல்ஏக்கள், ஒரு உறுப்பினர் பாஜக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர், மற்றொருவர் பாஜக மகளிர் அணி உறுப்பினர் எனத் தெரியவந்துள்ளது.

குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட பிறகு, கோத்ரா தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ.வான சி.கே. ரவுல் ஜி, குற்றவாளிகள் குறித்து பேசியபோது, "தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பிராமணர்கள். அவர்கள் நல்ல கலாசாரம் கொண்டவர்கள். அவர்கள், 'தவறான நோக்கங்களால்' கூட தண்டனை பெற்றிருக்கலாம்" என்று கூறினார்.

தொடர்ந்து, தண்டனை குறைப்பு பற்றி பிபிசி குஜராத்தியின் தேஜஸ் வைத்யாவிடம் பேசிய சி.கே. ரவுல் ஜி, "முடிவெடுக்கும் குழுவில் இருந்த யாரும் இந்த முடிவில் வேறுபடவில்லை. 11 பேரின் தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்று அனைவரும் ஒருமனதாகக் கருதினர்" என்றார்.

மேலும், "குற்றவாளிகள் அனைவரும் நன்னடத்தை கொண்டவர்களாகவும் இருந்தனர். இந்த ஆதரவற்ற குற்றவாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை அப்படியே அனுபவித்தனர். அதுபோக, அவர்கள் மீது எந்த குற்றப் பதிவும் இல்லை" என்றும் தெரிவித்தார்.

அப்படியானால், பில்கிஸ் பானு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டதா? ஓய்வு பெற்ற நீதிபதிகள் பலருடன் இதுகுறித்து பிபிசி பேசியது. அவர்களின் பார்வை இந்த முடிவின் மீது எப்படி இருக்கிறது?

'இது சட்டத்தையே வன்புணர்வு செய்வதைப் போன்றது'

"இந்த விவகாரத்தில் தண்டனையைக் குறைக்கும் முடிவு என்பது சட்டத்தையே வன்புணர்வு செய்வது போன்றது" என்கிறார் ஜம்மு காஷ்மீர் மாநில உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, பஷீர் அகமது.

அவரைப் பொறுத்தவரை இந்த முடிவு 'தீங்கானது, தவறானது, உள்நோக்கம் கொண்டது, ஒருசார்புடையது', அத்துடன் நீதியின் எல்லா அம்சங்களுக்கும் முரணானது.

நீதிபதி பஷீர் அகமது கூறுகையில், "இந்த முடிவு தவறான நோக்கத்துடன் எடுக்கப்பட்டது. ஒரே ஒரு கட்சியைச் சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக கொண்டு, அந்தக் கட்சி ஆளுங்கட்சியாக இருந்த சமயத்தில் பணியாற்றிய அதிகாரிகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட குழுவால் எடுக்கப்பட்ட, ஒருதலைப்பட்சமான முடிவு இது" என்கிறார்.

1992ஆம் ஆண்டின் கொள்கையின் அடிப்படையில் குற்றவாளிகளின் தண்டனை குறைக்கப்பட்டதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

"நீங்கள் ஒரு சட்ட விதியை பல வழிகளில் விளக்கலாம். குற்றம் நடந்தபோது நடைமுறையில் இருந்தது 1992ஆம் ஆண்டு கொள்கைதான் என்று ஒருவர் வாதிடலாம். மற்றொரு வாதம் என்னவென்றால், மன்னிப்புக்கான முடிவு அந்த முடிவு விவாதிக்கப்படும்போது, நடைமுறையில் இருக்கும் கொள்கையின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும். ஆனால், என் பார்வையில், இது வெறும் நுட்பமான அறிவை மட்டும் கொண்டு முடிவு செய்யப்பட வேண்டிய வழக்கு அல்ல. இது ஒரு மனிதாபிமான விவகாரம். இந்த முடிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர்களை எப்படி பாதுகாக்க முடியும் என்பதே கேள்வி" என்கிறார் நீதிபதி பஷீர் அகமது.

பாரபட்சமற்ற குழுவை குஜராத் அரசு அமைத்திருக்க வேண்டும் என்று நீதிபதி பஷீர் அகமது கூறுகிறார். "இது ஒரு அதிர்ச்சியளிக்கும் முடிவு. இந்த முடிவு 1992 இன் கொள்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று யாராவது வாதிட்டால், என் பார்வையில் அது ஒரு அர்த்தமற்ற வாதம்தான்"

​​"நிர்பயா வழக்குக்குப் பிறகு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. எப்படியாயினும் 11 பேரையும் வெளியில் விட்டது சரியான முடிவு அல்ல. அத்துடன், இது மனித விழுமியங்களை பூர்த்தி செய்யும் வகையிலும் இல்லை"

"தண்டனையை மாற்றும் போது, ​​​​அத்தகைய முடிவுகளால் பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்க முடியுமா என்று குழு பரிசீலித்திருக்க வேண்டும். ஆனால், இந்த முடிவு பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய பாதிப்புகளை ஏற்படுத்தும் விதமான, தீங்கிழைக்கக்கூடிய பாரபட்சமான முடிவாகும். இதுபோன்ற முடிவை எடுப்பதற்கு முன் பாதிக்கப்பட்டவர்களின் கருத்தையும் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்றார்.

பில்கிஸ் பானு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பில்கிஸ் பானு

நீதியை நிலைநாட்டும் விதமாக இந்த முடிவு எடுக்கப்படவில்லை என்கிறார் நீதிபதி பஷீர் அகமது. "சட்டத்தை விட நீதி எப்போதும் வலிமையானது. நல்லெண்ணம் இன்னும் மீதமிருந்தால், மத்திய அரசு இதில் தலையிட்டு இந்த முடிவை ரத்து செய்யப்பட வேண்டும்,'' என்றார்.

எல்லா பாலியல் குற்றவாளிகளும் இனி மன்னிப்புக்கு தகுதி பெறுவார்களா?

"இந்த தண்டனையை மாற்றும் போது கருத்தில் கொள்ளப்பட்ட அம்சம் என்ன என்பதுதான் என் கேள்வி" என்கிறார் டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி, ஆர்.எஸ். சோதி.

அவர் தெரிவித்ததாவது, "ஒரு குற்றவாளி 14 ஆண்டுகள் சிறையில் இருந்திருந்தால், அவர் தனது தண்டனையை மாற்றுவதற்கு விண்ணப்பிக்க அவருக்கு உரிமை உண்டு. ஆனால், விடுவிக்கப்பட அவருக்கு எந்த உரிமையும் இல்லை. ஒரு தண்டனையை தன்னிச்சையாக மாற்றவே முடியாது."

"ஆனால் தற்போதைய இந்த முடிவின்படி, பாலியல் வழக்குகளில் தண்டனை பெற்ற அனைவரும் விடுதலை செய்யப்படுவதற்கு தகுதியுடையவர்களா? நீதி சரியாக வழங்கப்படாவிட்டால், அது கேலிக்கூத்தாக அமையும்" என்று முன்னாள் நீதிபதி சோதி தெரிவிக்கிறார்.

"இந்த விவகாரத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது" என்றும் நீதிபதி சோதி சுட்டிக்காட்டினார். மேலும் "இந்த முடிவு முற்றிலும் தன்னிச்சையானது என்பதுடன் 'மனம்' இதில் பயன்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது. அவர்கள் குறைந்தபட்சம் தங்கள் மனதைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். பாலியல் குற்றவாளிகளின் தண்டனையை குறைக்கக் கூடாது என்ற கொள்கையே இருக்கும்போது, ​பாலியல் குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்" என்றும் தெரிவிக்கிறார் முன்னாள் நீதிபதி சோதி.

பில்கிஸ் பானு

பட மூலாதாரம், Hindustan Times

படக்குறிப்பு, பில்கிஸ் பானு

1992 அல்லது 2014: எந்தக் கொள்கையை கருத்தில் கொள்ள வேண்டும்?

குற்றவாளிகளின் தண்டனைக் குறைப்பைக் கருத்தில் கொள்ளும்போது 1992 இன் கொள்கை அல்லது 2014 இன் கொள்கையில் எதை பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பது இந்த விவகாரத்தில் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.என். திங்ரா இது குறித்து பேசும்போது, "நடப்புக் கொள்கை எதுவோ அதுதான் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும்" என்று கூறுகிறார். அத்துடன், "நடப்பில் இருக்கும்கொள்கை எதுவென்று பார்க்க மாட்டார்களா?" என்றும் கேள்வி எழுப்புகிறார்.

"ஒரு தண்டனையை குறைக்கும் முடிவை நீங்கள் மேற்கொள்கிறீர்கள் என்றால், 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த, தற்போது ரத்து செய்யப்பட்ட கொள்கையின் அடிப்படையில் அந்த முடிவை எடுக்க மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். நடப்பு கொள்கைதான் பொருந்தும் என்பதே என் கருத்து" என்கிறார் அவர்.

அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, கிரிதர் மால்வியா, " சமீபத்திய கொள்கைகள் பின்பற்றப்படுவதும், பழைய கொள்கைகள் பயன்படுத்தப்படாது என்பதும்தான் நடைமுறை" என்கிறார்.

இந்த வழக்கில், ஒரு முடிவெடுக்கும்போது, அந்த சமயத்தில் என்ன கொள்கை நடைமுறையில் இருக்கிறதோ அதுதான் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அதாவது, 2014ஆம் ஆண்டின் கொள்கைதான் பொருந்தும்" என்கிறார் கிரிதர் மால்வியா.

11 பேர் தரப்பு சொல்வது என்ன?

ராதேஷ்யாம் பகவான்தாஸ் ஷா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராதேஷ்யாம் பகவான்தாஸ் ஷா

நிறுவப்பட்ட சட்டத்தின்படி, 1992ஆம் ஆண்டின் கொள்கையை பயன்படுத்துவது சரியானது.

11 குற்றவாளிகளில் ஒருவரான ராதேஷ்யாம் பகவான்தாஸ் ஷா, தன் தண்டனையை குறைக்கும்படி உச்சநீதிமன்றத்தை அனுகினார். அவரது வழக்கறிஞர், ரிஷி மல்ஹோத்ராவுடன் பிபிசி பேசியது.

அவர் தெரிவித்ததாவது, " 2008ஆம் ஆண்டு இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டபோது, 2014ஆம் ஆண்டின் கொள்கை உருவாக்கப்படவேயில்லை." அதேபோல, தண்டனை குறைப்பு குறித்த முடிவுகளின்போது, விசாரணை நீதிமன்றங்களில் குற்றம் உறுதிசெய்யப்பட்ட சமயத்தில் இருந்த கொள்கையின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கலாம் என்று 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஏராளமான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புகள் வழங்கியுள்ளது. இதை உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பில் மீண்டும் உறுதி செய்துள்ளது" என்று தெரிவித்தார்.

மேலும், குழுவின் உறுப்பினர்கள் குறித்த விமர்சனத்துக்கும் அவர் பதிலளித்தார். " இது ஒரு அர்த்தமற்ற விஷயம். சிறை ஆலோசனைக் குழுவில் ஒரு மாவட்ட மாஜிஸ்திரேட், ஒரு அமர்வு நீதிமன்ற நீதிபதி, மூன்று சமூக சேவகர்கள், இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள்) மற்றும் ஒரு சிறைக் கண்காணிப்பாளர் உட்பட 10 பேர் இருந்தனர். இந்த உறுப்பினர்கள் இணைந்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதில் இரண்டு கமிட்டி உறுப்பினர்கள் பா.ஜ.க.வின் உறுப்பினர்கள் என்று சொன்னால் மட்டும் போதாது, ஏனெனில் கமிட்டியில் நீதிபதிகளும் இருந்தனர். அவர்களது அறிவையும் நம்பகத் தன்மையை நாம் சந்தேகிக்கிறோமா?" என்றும் தெரிவித்தார் வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா.

காணொளிக் குறிப்பு, குஜராத் பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகளை கருணை அடிப்படையில் விடுவித்த குஜராத் அரசு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: