குஜராத் கலவர வழக்குகளின் சாட்சிகள் நிலை என்ன? "எங்களுக்கு பயமாக இருக்கிறது"

குஜராத் கலவரம் - சாட்சியங்கள்
    • எழுதியவர், ராக்ஸி காக்டேகர் சாரா
    • பதவி, பிபிசி நிருபர், அகமதாபாத்

நரோதா பாட்டியா வழக்கில் சலீம் ஷேக் என்பவர் முக்கிய சாட்சி. அவரது சாட்சியத்தின் உதவியுடன், அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் அப்போதைய பாஜக எம்எல்ஏ மாயா கோட்னானிக்கும், மற்ற நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. அடையாள அணிவகுப்பில் நீதிமன்றத்தில் ஷேக், கோட்னானியை அடையாளம் காட்டினார்.

இந்த வழக்கில் முந்நூறுக்கும் மேற்பட்ட சாட்சிகள் இருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. பெரும்பாலான சாட்சிகள் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கலவரத்தில் உறவுகளை இழந்தவர்கள். இவர்களில் சிலர் புகார்தாரர்களாகவும் இருந்தனர்.

இந்த சாட்சிகளில் சிலரிடம் பேச பிபிசி முயன்றது. பலர் பேச மறுத்தனர், சிலர் பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசினர்.

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட பிறகு, பில்கிஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அது அவருக்கும், அவரது குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து அவர் கொண்டுள்ள கவலையை வெளிப்படுத்தியது.

அவரது குடும்பம் நீண்ட காலமாக ஒரே இடத்தில் தங்குவதில்லை என்றும், கடந்த பத்து ஆண்டுகளாக அவர் வீடு மாறி வருவதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். பில்கிஸ் தமது அறிக்கையில், 11 குற்றவாளிகளையும் மீண்டும் சிறைக்கு அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'சில நேரங்களில் வருத்தம் ஏற்படுகிறது'

2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி, ஷேக் தனது குடும்பத்தில் சிலரை இழந்தார். அன்று கோட்னானியை தூரத்திலிருந்து பார்த்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோட்னானி கலவரக்காரர்களுடன் பேசுவதைக் கண்டதாகவும், அவர்கள் அப்பகுதியிலிருந்து தப்பிச் செல்வதற்குப் பதிலாக முஸ்லீம் வீடுகளைத் தாக்கத் தொடங்கியதாகவும் கூறினார்.

சலீம் ஷேக்
படக்குறிப்பு, சலீம் ஷேக்

"அடையாள அணிவகுப்பில் அவரையும் (கோட்னானி) அவரது ஆதரவாளர்கள் நால்வரையும் அடையாளம் கண்டேன். எனது வாக்குமூலத்தை அடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது," என்று அவர் கூறினார்.

ஷேக் ஆட்டோ ஓட்டுகிறார், அவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். அவரது மூன்று மகள்களுக்கு திருமணமாகி, ஒரு மகன் கல்லூரியில் படிக்கிறார், ஒரு மகன் வேலையில்லாமல் இருக்கிறார்.

இப்போது அவர் தனது குடும்பத்தைப் பற்றி கவலைப்படுவதாகக் கூறுகிறார். அவர், ​​"பலம் வாய்ந்தவர்களுக்கு எதிராக நான் முன் வந்து சாட்சியளித்தேன். அவர்களால் எதையும் செய்ய முடியும். தற்போது எனது மகன்களில் ஒருவரை வேறு மாநிலத்திற்கு அனுப்பியுள்ளேன். அவனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நினைக்கிறேன். சில சமயங்களில் நரோதா பாட்டியா வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்ததற்காக வருத்தப்படுகிறேன்" என்றார்.

என்ன பயம் என்று கேட்டால், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் இந்தப் பகுதியில் வசிப்பதாகவும், நேருக்கு நேர் வரும்போதெல்லாம் அவர்களின் சைகைகள் பயமுறுத்துவதாகவும் கூறுகிறார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர்களைப் பற்றி அவர் பேசுகிறார்.

ஏதாவது தவறான வழக்கில் சிக்கிவிடுவோமோ என்று பயப்படுவதாக அவர் கூறுகிறார். இவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்து இப்போது பாஜகவில் வேலை செய்கிறார்கள் என்று ஷேக் கூறுகிறார்.

பிபிசி குஜராத்தி, பாஜக செய்தித் தொடர்பாளர் யக்னேஷ் தவேவிடம் பேச முயன்றது, ஆனால் அவர் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். "நான் எதுவும் பேச விரும்பவில்லை," என்று அவர் கூறினார்.

சாட்சியங்களுக்குப் பிறகு சிறைக்கு அனுப்பப்பட்ட குற்றவாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ஆதரவளிப்பதாக பஷீர் கான் கூறுகிறார். "இவர்களுக்கு அதிக ஆதரவு கிடைப்பது எல்லோருக்கும் தெரிந்ததே, முன்பு இப்படி இல்லை. சாட்சியாக மட்டுமல்ல, புகார் அளித்தவராக இருப்பதால் பயமாக இருக்கிறது."

2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதியன்று, அவரது பகுதியில் கலவரம் வெடித்தபோது, ​​கான் அங்கு இருந்தார். "அதற்குப் பிறகு சட்டரீதியாகப் போராட முடிவு செய்தேன். புகார் அளித்து, சாட்சியாகி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சிறையில் இருந்து வெளியே வந்ததால், நீதிக்காக நீதிமன்றத்திற்குச் சென்றுகொண்டே இருந்தேன்." என்கிறார் அவர்.

பஷீர் கான்
படக்குறிப்பு, பஷீர் கான்

மூதாதையர் வீட்டுக்குப் போகமுடியவில்லை

தன்னிடம் பணம் இல்லை என்றும், சாலையோர உணவுக் கடை அமைக்க பலமுறை முயற்சித்ததாகவும், ஆனால், ஒரு பெரிய கட்சித் தலைவரைச் சிறைக்கு அனுப்பியதால், உள்ளூர் காவல்துறை தன்னை மிகவும் துன்புறுத்தியதாகவும் பஷீர்கான் கூறுகிறார். கான் இப்போது ஆன்லைன் உணவு விநியோக தொழிலைத் தொடங்கியுள்ளார்.

இருப்பினும், உள்ளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.வி.வியாஸ், பிபிசியிடம் பேசுகையில், இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், போலீசார் யாரையும் துன்புறுத்துவதில்லை என்றும் கூறினார்.

குல்பர்க் வழக்கின் சாட்சிகளிடமும் பேசினோம். தனக்கும் இதுபோன்ற மிரட்டல்கள் வருவதாக அவர் கூறுகிறார். பெயரை வெளியிட விரும்பாத ஒரு சாட்சி, டீஸ்டா செதல்வாத் கைது தொடர்பாக உள்ளூர் காவல்துறையினர் பலரை ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டனர்.

பயமாக இருக்கிறது, இந்த விஷயத்தில் எதுவும் சொல்லாமல் இருப்பது நல்லது என்கிறார்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

கலவர வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவரால் தவறான வழக்கில் சிக்கியதாக மற்றொரு சாட்சி கூறினார். பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர், "நான் சாட்சியம் அளித்ததால்தான் அவர் சிறைக்குப் போனார், அவர் என்னுடன் எந்த காரணமும் இல்லாமல் சண்டையிடுகிறார். உள்ளூர் போலீசாரை நாங்கள் நம்பவில்லை, எனவே நாங்கள் அவர்களிடம் செல்வதில்லை." என்கிறார்.

நரோதா காம் வழக்கில் இம்ரான் குரேஷி ஒரு சாட்சி. இந்த வழக்கில் சாட்சியாக ஆன பிறகு, தன் மூதாதையர் வீட்டுக்குச் செல்லவே இல்லை என்கிறார். அவர் கூறுகிறார், "எனது பகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்க சிலருக்கு எதிராக நான் சாட்சியம் அளித்தேன், 2002 இல் நான் உயிர் பிழைத்தேன், ஆனால் என்னால் மீண்டும் தப்பிக்க முடியாது என்று நினைக்கிறேன். அதனால் நரோதா காமுக்கு வெளியே வேறு எங்காவது வாழ முடிவு செய்தேன்." என்றார்.

குஜராத் கலவரம் - சாட்சியங்கள்

கேள்விக்குறியாகும் சாட்சியங்களின் பாதுகாப்பு

பல கலவரங்களின் சாட்சிகளைப் போலவே பஷீர் கானுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் பல சாட்சிகளுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. தனது பாதுகாப்பில் எப்போதுமே யாரவது இருப்பதில்லை என்பதால், காவல்துறையின் பாதுகாப்பு தனக்கு அதிகம் உதவாது என்று கான் குற்றம் சாட்டுகிறார்.

"மாதம் ஒரு முறை என்னைப் பார்க்க வருவார், மாதம் ஒருமுறை அல்லது இரண்டு முறை என்னைக் கூப்பிடுவார். மீதி நேரங்களில் என்னுடன் அல்லாமல் வேறு எங்காவது தங்குவார்" என்கிறார்.

இது குறித்து அகமதாபாத் நகர போலீஸ் கமிஷனரிடம் பிபிசி பேசியது. இது ஒரு தீவிரமான பிரச்சினை எனவும், இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தனக்கு தெரியாது எனவும், இந்த முறைப்பாடுகள் தொடர்பாக எவரும் தன்னை நாடி வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்களை சேகரிப்பதாகவும், தவறு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் மூத்த வழக்கறிஞர், பெயர் வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வேலை செய்யும் இடத்திலோ அல்லது வேறு இடங்களிலோ காவல்துறையின் முன்னிலையில் அசௌகரியமாக உணர்கிறார்கள், காவல்துறை தங்களுடன் வருவதை அவர்களே விரும்பவில்லை என்று கூறினார்.

சாட்சிகளைப் பாதுகாக்கும் திட்டத்தை விவரிக்கும் வழக்கறிஞர் சம்சாத் பதான், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழக்குத் தொடர்ந்தவர், வெவ்வேறு வழக்குகளில் சாட்சிகளுக்கு வெவ்வேறு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

முந்தைய கலவர வழக்குகளைப் போலவே, சிஐஎஸ் (CISF) பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து குஜராத் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விதிகளின்படி, ஒரு சாட்சி எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டும்.

YouTube பதிவை கடந்து செல்ல, 2
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: