நீட்: தமிழ்நாட்டில் 51.28% மாணவர்களே தேர்ச்சி; முதல் 10 இடங்களில் யாரும் இல்லாததற்கு காரணம் என்ன?

நீட் தேர்வு

பட மூலாதாரம், ARUN SANKAR

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

2022-23 கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் தமிழ்நாட்டில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 8,800 பேர் இந்த ஆண்டு கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். எனினும், கடந்த ஆண்டை விட சுமார் 43 ஆயிரம் மாணவர்கள், கூடுதலாக நீட் தேர்வு எழுதியும் 51.28 சதவீத மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் நீட் தேர்ச்சி விகிதம் குறைந்தது எதை உணர்த்துகிறது?

Presentational grey line

நீட் தேர்வு 2022: சில எண்களில்...

  • 9.93 லட்சம் பேர்: இந்தியா முழுவதும் தேர்ச்சி பெற்றுள்ளனர்
  • 67,787 பேர்: தமிழ்நாட்டில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • 10 இடங்கள்: இதில் ஒருவர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை.
  • அகில இந்திய அளவில்பொதுப்பிரிவினருக்கு கடந்த ஆண்டு 138 மதிப்பெண்கள் கட்-ஆஃப் இருந்தது, இந்தாண்டு 117 ஆக குறைந்துள்ளது.
  • ஓபிசி/எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 108 ஆக இருந்தது, இந்த ஆண்டு 93 ஆக குறைந்துள்ளது.
Presentational grey line

இந்த ஆண்டு நிலை என்ன?

முதலில் இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் குறித்த சில தகவல்களை பார்க்கலாம்.

2022ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு இந்தியா முழுவதும் 18,72,343 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 17,64,571 பேர் நீட் தேர்வு எழுதினர்.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற்றது.

இந்த தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ஆம் தேதி இரவு வெளியாயின. அதில் இந்தியா முழுவதும் சுமார் 9 லட்சத்து 93 ஆயிரம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு 15.44 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதியதில், 8.70 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். எனவே, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சுமார் 1 லட்சத்து 23 ஆயிரம் பேர் இந்த ஆண்டு அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த தேர்வில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தனிஷ்கா என்ற மாணவி முதலிடத்தையும் (715 மதிப்பெண்கள்) டெல்லியின் வத்சா ஆசிஷ் பத்ரா இரண்டாம் இடத்தையும் கர்நாடகாவை சேர்ந்த ரிஷிகேஷ் நக்பூஷன் கங்குலி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

முதல் 50 இடங்களை பிடித்தவர்களுள் 32 பேர் மாணவர்கள், 18 பேர் மாணவிகள்.

Presentational grey line
Presentational grey line

தமிழ்நாட்டின் நிலை என்ன?

தமிழ்நாட்டில் இந்தாண்டு 1,42,894 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களுள் 1,32,167 பேர் இத்தேர்வை எழுதினர். இவர்களுள் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 51.28 சதவீதமாக உள்ளது. 2021ல் தமிழ்நாட்டில் நீட் தேர்ச்சி விகிதம் 54.39 சதவீதமாக (58,922 பேர்) இருந்தது.

இந்தாண்டு அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுள் ஒருவர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த திரிதேவ் விநாயகா என்ற மாணவர் 705 மதிப்பெண்களுடன் அகில இந்திய அளவில் 30வது இடத்தையும் எம். ஹரிணி என்ற மாணவி 702 மதிப்பெண்களுடன் 43வது இடத்தையும் பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் முதல் 50 இடங்களுள் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் இரண்டு பேர் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.

தேர்ச்சி விகிதம் குறைந்தது ஏன்?

Banner

தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இந்தாண்டு தேர்ச்சி விகிதம் குறைந்தது ஏன் என்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கல்வியாளர் ஜெ.பி. காந்தி, "கடந்தாண்டை விட கேள்வித்தாள் இந்தாண்டு சற்று சவாலாகவே இருந்தது. பெரும்பாலும் என்சிஇஆர்டி பாடத்திட்டம் அடிப்படையில் தான் கேள்விகள் கேட்கப்பட்டன.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. தேர்ச்சி விகிதம் சற்று குறைந்துள்ளது.

நீட் தேர்வு

பட மூலாதாரம், ARUN SANKAR / Getty Images

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஒரு மாணவர் விரும்பி படிப்பதற்கும் கட்டாயப்படுத்தி படிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. கட்டாயத்தின்பேரில் நீட் தேர்வுக்கு படிப்பதால் மாணவர்களின் செயல்திறன் குறைந்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்களிடையே தேர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது. அவர்களால் கொரோனா காலத்தில் 11ஆம் வகுப்பு பாட திட்டத்தைப் படிக்க முடியவில்லை. 12ஆம் வகுப்பு படிக்கும்போதுதான் வழக்கமான வகுப்புகள் தொடங்கின. வழக்கமாக பள்ளிக்கு சென்று படித்தாலே புரிந்துகொள்ள முடியாத பாடத்திட்டங்களை எப்படி ஆன்லைன் வகுப்புகளில் புரிந்துகொள்ள முடியும்?

நீட் தேர்வுக்கு 12ஆம் வகுப்பு பாட திட்டங்கள் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு 11 ஆம் வகுப்பு பாட திட்டமும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 50 சதவீத பாட திட்டத்தைப் படிக்க முடியாமல், 12ஆம் வகுப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டுதான் பெரும்பாலான மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர்.

நீட் தேர்வு

பட மூலாதாரம், ARUN SANKAR / Getty Images

முதல்முறை எழுதும் மாணவர்கள் 12ஆம் வகுப்பை அடிப்படையாக வைத்து எழுதியுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களில் மீண்டும் மீண்டும் நீட் தேர்வு எழுதுவது ஒப்பீட்டளவில் குறைவு.

முதல் முறையாக தேர்வு எழுதுவோர், 11ஆம் வகுப்பு பாட திட்டத்தை முழுமையாக படிக்காவிட்டால் அவர்களால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என நிலை உள்ளது.

அரசு ஆன்லைன் மூலமாக நீட் பயிற்சி அளித்தனர். எனினும், அது அவ்வளவாக வெற்றிகரமாக இல்லை. தமிழ்நாட்டில் நீட் பயிற்சியில் போதாமை, நீட் ரத்து விவகாரத்தில் உள்ள குழப்பங்கள் மாணவர்களை பாதித்திருக்குமா என்றால் அது மிக குறைவான சதவீதம்தான். நீட் ரத்து என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் வரை நீட் தேர்வு எழுத வேண்டும் என்பதில் மாணவர்கள் தெளிவாக உள்ளனர்" என தெரிவித்தார்.

Banner

தமிழ்நாட்டில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் என்னவாக இருக்கும் என்பது குறித்தும் விளக்கினார் ஜெ.பி.காந்தி.

"அகில இந்திய அளவில் பொது பிரிவினருக்கு கடந்த ஆண்டு 138 மதிப்பெண்கள் கட்-ஆஃப் இருந்தது, இந்த ஆண்டு அது 117 ஆக குறைந்துள்ளது. ஓபிசி/எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு முன்பு கட் ஆஃப் மதிப்பெண் 108 ஆக இருந்தது, இந்த ஆண்டு அது 93 ஆக குறைந்துள்ளது.

அகில இந்திய அளவில் நீட் தேர்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைந்திருப்பது நிர்வாக ஒதுக்கீட்டில் கல்லூரியில் இடம் பெறுவதற்கான போட்டியை அதிகரிக்கும்.

Presentational grey line
Presentational grey line

அகில இந்திய அளவில் கட் ஆஃப் குறைந்தாலும் தமிழ்நாட்டு அளவில் பெரிய மாறுதல்கள் இருக்காது. பொது பிரிவினராக இருந்தால் 582-590 என்ற அளவிலும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 535-545 என்ற அளவிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 505-515 என்ற அளவிலும் பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம்களுக்கு 515-522 என்ற அளவிலும், எஸ்சி பிரிவினருக்கு 426-435 என்ற அளவிலும் எஸ்டி பிரிவினருக்கு 315-325 என்ற அளவிலும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன" என அவர் தெரிவித்தார்.

இந்திய அளவில் 612 மருத்துவ கல்லூரிகளில் 91,927 எம்பிபிஎஸ் இடங்களும் 317 பல் மருத்துவ கல்லூரிகளில் 27,698 பல் மருத்துவ இடங்களும் உள்ளதாக தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் கடந்தாண்டு இருந்த இடங்களில் எவ்வித மாற்றங்களும் இருக்காது என தெரிவித்தார்.

தொடரும் தற்கொலைகள் - எப்படி தடுப்பது?

தற்கொலை தடுப்பு

பட மூலாதாரம், Getty Images

இதனிடையே, சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபிலிப்பைன்ஸில் இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பு படித்து வந்த அவர், இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேரும் எண்ணத்துடன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்கொலை எண்ணம் வந்தால் அழைக்க வேண்டிய தொலைபேசி உதவி எண் '104'.

அப்படிப்பட்ட எண்ணம் வரும்போது, மருத்துவரைத்தான் பார்க்க வேண்டும் என்றில்லை. உங்கள் மீது அக்கறை வைத்துள்ள யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம்.

பள்ளிகளில் ஆசிரியர்கள் சிலர் அக்கறையுடன் இருப்பார்கள். வளரிளம் சிறார்கள் மத்தியில் இதனைக் கையாள்வதில் சிக்கல் இருக்கலாம். இதற்காக '104' என்ற உதவி எண் உள்ளது. அதனைத் தொடர்பு கொண்டால் உரிய வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.

இதன் அடுத்தகட்டமாக, `மருத்துவரைப் பார்க்க வேண்டிய தருணம் இதுதானா?' என்பது தெரியவரும். இந்த விவகாரத்தில் மனநல மருத்துவரைத்தான் சென்று பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் குடும்ப மருத்துவரை முதலில் சென்று பாருங்கள். அதன்பிறகு தேவைப்பட்டால் மனநல மருத்துவரிடம் செல்லலாம். அப்போதும் உடனடியாக மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை.

`இதனை வெளியில் சொன்னால் அவமானம்' என நினைப்பதைவிட `உயிர் முக்கியம்' என நினைக்க வேண்டும். `தற்கொலை முடிவு என்பது எவ்வளவு தவறானது' என்பதை அவர்கள் உணர வேண்டிய நிலையை உருவாக்க வேண்டும்.

காணொளிக் குறிப்பு, சென்னை மாணவர் கண்டுபிடித்த ரோபோட் மன்னிப்பு கேட்கச் சொன்னது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: