தமிழ்நாடு நீட் விலக்கு மசோதா: ஆளுநர் அளித்த விளக்கத்துக்கு திமுக எம்.பி. வில்சன் சொல்லும் பதில் என்ன?

பட மூலாதாரம், M.K.Stalin
- எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட மசோதாக்கள் குறித்து தமிழ்நாடு ஆளுநர் தரப்பு விளக்கம் அளித்துள்ள நிலையில், திமுக தரப்பு கருத்தை எம்.பியும் மூத்த வழக்குரைஞருமான பி.வில்சன் முன் வைத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா, கூட்டுறவு சங்க திருத்த மசோதா, பாரதியார் பல்கலைக்கழக திருத்த மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் பரிசீலனைக்கும் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் அனுப்பி வைக்காமல் தொடர்ந்து தாமதிப்பதாக ஆளும் திமுக குற்றம்சாட்டி வருகிறது. இதைக் காரணம் காட்டி ஆளுநரைத் திரும்ப பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக வலியுறுத்தியுள்ளது.
ஆளுநர் தரப்பு விளக்கம் என்ன ?
நீட் விலக்கு உள்ளிட்ட 3 மசோதாக்கள் நிலை குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தரப்பு தெரிவித்த தகவல்களை பிபிசி தமிழ் அண்மையில் பிரத்யேகமாக வெளியிட்டது.
இதில், "அரசியலமைப்பு ஆளுநருக்கு வழங்கிய அதிகாரங்களின்படி பண மசோதா நீங்கலாக, வேறு எந்தவொரு மசோதாவாக இருந்தாலும், அது சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவாக இருந்தாலும், கூட அதன் மீது ஆளுநருக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே அதை குடியரசு தலைவருக்கு அவர் அனுப்பி வைப்பார்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மசோதா அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற அழுத்தம் ஆளுநருக்கு இல்லை," என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், "தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு முறை சந்தித்தபோதும், மசோதா தொடர்பான நிலை, சட்டபூர்வ சிக்கல்கள் மற்றும் அரசியலமைப்பின்படி அரசு செயல்பட வேண்டிய அவசியம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. " என்கிறார் ஆளுநர் ரவி.
கூட்டுறவு மற்றும் பாரதியார் பல்கலை. திருத்த மசோதாக்கள்
இதேபோல், கூட்டுறவு சங்க திருத்த மசோதாவைப் பொருத்தவரை, ''அரசு ஊழியர்களான கூட்டுறவு சங்க பதிவாளர்கள், விதிகளை மீறி செயல்படுவதாக கூறப்படும் சங்கங்களின் செயல்பாட்டை இடைநிறுத்தி வைக்கவும் விசாரணையின்றி கலைக்கவும் உத்தரவிடும் அதிகாரத்தை அவர்களுக்கு திருத்த மசோதா வழங்குகிறது.
இந்த அம்சத்தை ஆளுநர் ஆட்சேபித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் கடிதம் அனுப்பியபோதும் மாநில அரசிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை.'' என்கிறது ஆளுநர் தரப்பு.
இதே போல், பாரதியார் பல்கலைக்கழக திருத்த மசோதாவில், பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழுவில் போதுமான தகுதியோ அனுபவமோ இல்லாதவர்கள் சேரும் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறி, ஆளுநர் ஆட்சேபித்துள்ளார். இது குறித்து கேள்வி எழுப்பி மாநில அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்கிறது ஆளுநர் தரப்பு.
இந்த இரண்டு மசோதாக்கள் மீதும் உரிய பதில்கள் கிடைத்தால் மட்டுமே அவை குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அவரது தரப்பு தெரிவிக்கிறது.
திமுக என்ன சொல்கிறது ?

இந்நிலையில், ஆளுநர் தரப்பு விளக்கம் குறித்து திமுகவைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான வில்சனிட்ம் பிபிசி தமிழ் பேசியது.
அப்போது அவர் கூறுகையில், ''ஆளுநரின் விளக்கத்தைப் பார்த்தேன். ஒரு சட்டப்பேரவை ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால், ஆளுநர் எப்படி செயல்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் விதி 200ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டியல் 3ல் உள்ள மசோதாவாக இருந்தால், குடியரசுத் தலைவருக்குத்தான் அனுப்பி வைக்க வேண்டும்.
ஆனால், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள தனது கடமைமையை செய்ய ஆளுநர் தவறி விட்டார். குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை ஆளுநர் தன் கையில் எடுத்துக் கொண்டு, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார்.
அதில், சம்மந்தமே இல்லாத கேள்விகளைக் கேட்டுள்ளார். குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை ஆளுநர் எடுத்துக் கொண்டது சரியல்ல .'' என்கிறார் வில்சன்.
கடமையை செய்ய தவறிவிட்டார்
ஆனால், ''அதே அரசியலமைப்பில் விதி 168இல் மாநில பேரவையின் ஒருங்கிணைந்த அங்கம்தான் ஆளுநர் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. பண மசோதா மட்டுமே ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டிய மசோதா.
ஏனைய அனைத்து மசோதாக்களும் ஆளுநரின் பரிசீலனைக்கு உட்பட்டவையே, அந்த அதிகாரத்துக்கு உள்பட்டு தமிழ்நாடு அரசிடம் கேட்டுள்ள விளக்கத்துக்கு பதில்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்று ஆளுநர் தரப்பு விளக்கம் குறித்து வில்சனிடம் கேட்டதற்கு,
''ஆளுநருக்கு வானாளாவிய அதிகாரம் இல்லை. என்ன கடமை, பொறுப்பு, அதிகாரம் என்று அரசியல் சாசன அமர்வும் தெளிவாக எடுத்துரைத்துள்ளது. இதையெல்லாம் சட்ட நிபுணர்களிடம் கேட்டு ஆளுநர் செயலாற்ற வேண்டும்.

ஆனால், நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் ஆளுநர் கடமையை செய்யத் தவறியுள்ளார். மசோதாவை திருப்பி அனுப்பியது, அவரது பொறுப்பற்ற செயல். அவர் ஒரு அஜண்டாவுடன் செயல்படுகிறார்.
தயவு செய்து மக்கள் பிரச்னையை உணர்ந்து, திறந்தமனதுடன் செயல்பட வேண்டும். அரசமைப்புச் சட்டம் விதி 163யின் படி செயலாற்ற வேண்டும். 2014ம் ஆண்டு நபம் ரபியா வழக்கின் விபரங்களை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். அதில், ஆளுநர் அதிகார எல்லை குறித்து விரிவாக குறிப்பிடப்படப்பட்டுள்ளது.''என்கிறார்.
மக்கள் எண்ணத்தின் வெளிப்பாடாகத்தான் மசோதாக்கள்
தொடர்ந்து வில்சன் கூறுகையில், ''இது பட்டியல் 3ல் உள்ள பொருள். இதில் ஆளுநர் தலையிட முடியாது. நீட் விலக்கு மசோதா மட்டுமல்ல கூட்டுறவு சங்க திருத்த மசோதா, பாரதியார் பல்கலைக்கழக திருத்த மசோதா குறித்தும் அவர் கேள்வி எழுப்ப முடியாது.
குறிப்பாக மக்களுடைய எண்ணத்தின் வெளிப்பாடுதான் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள். அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளித்து நிறைவேற்றி, கொண்டு வரும் போது, ஏன் ? எதற்காக இதைக் கொண்டு வந்தீர்கள் என்று கேட்க கூடாது.
அதைக் கொண்டு வர அதிகாரம் உள்ளதா? என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். அதைப்பார்த்து விட்டு, அனுப்பி வைக்க வேண்டும். இதையும் நபம் ரபீயா வழக்கில் சொல்லியுள்ளனர்.'' என்கிறார்.
ஆளுநர் மீது தனிப்பட்ட கோபமா?
ஆளுநரைத் திரும்ப பெறச் சொல்லும் அளவிற்கு எதிர்ப்பு ஏன் ? என்று வில்சனிடம் கேட்டதற்கு, ''பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுடன் ஒத்துப் போகிறார்கள். ஆனால், பா.ஜ.க அல்லாத மாநிலங்களில் இவர் போன்ற ஆளுநர்களை அனுப்பி வைத்து, மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட வைக்கிறார்கள்.
அவர்களுக்கு உரிய கடமை, பொறுப்பை உணராமல், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள். ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. முதலமைச்சருக்கு இணையானவராக பார்க்க கூடாது. மாநிலத்தின் பிரிதிநிதியாக செய்யப்படும் நியமனம் என்பதை உணர வேண்டும். என்றார்.
செயல்படாததால் எதிர்ப்பு
மேலும், ''அவர் மீது எங்களுக்கு தனிப்பட்ட வெறுப்பு எதுவுமில்லை. தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநருக்கு எதிராகத்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஒரு அதிகாரி செயல்படவில்லை என்றால், கேள்வி கேட்பதைப் போலத்தான் ஆளுநரிடம் கேட்கிறோம்.
இந்த அரசு செயல்படக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஆளுநர் செயல்படுவது போல் உள்ளது. எந்த மசோதாவிற்கும் ஒப்புதல் கொடுக்கவில்லை. இது குறித்து புகார் தெரிவித்தும் அவர் மாறவில்லை.
ஆகையால்தான் சரியாக செயல்படாத ஆளுநரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், அரசமைப்புச் சட்டத்தை செயல்படுத்தாத நிலையை உருவாக்கிறார். அவருடைய அதிகாரத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம்.'' என்கிறார் வில்சன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













