நீட் விலக்கு: தமிழ்நாடு ஆளுநர் ரவி 3 முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராதது ஏன்? அவரது ஆட்சேபங்கள் என்ன? - சிறப்புச் செய்தி

- எழுதியவர், பரணிதரன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா, பாரதியார் பல்கலைக்கழக திருத்த மசோதா ஆகிய மூன்று முக்கிய மசோதாக்களுக்கு மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் இருப்பதற்கான காரணங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.
கூட்டுறவு சங்க திருத்த மசோதா, பாரதியார் பல்கலைக்கழக திருத்த மசோதா உள்பட ஏழு மசோதாக்கள் தமிழ்நாடு சட்டப்பேரையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் பரிசீலனைக்கும் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் நீட் விலக்கு மசோதா, தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் முதல் முறையாகவும் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாவது முறையாகவும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மாநில ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இவற்றில் நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு மாநில ஆளுநர் அனுப்பி வைக்காமல் தொடர்ந்து தாமதிப்பதாக ஆளும் திமுக குற்றம்சாட்டி வருகிறது. மற்ற இரண்டு மசோதாக்கள் தொடர்பாக அதிகம் வெளியே பேசப்படுவதில்லை.
இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தரப்பிடம் பிபிசி தமிழ் விசாரித்தபோது பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
நிலுவை மசோதாக்கள் நிலவரம்
கூட்டுறவு சங்க திருத்த மசோதாவைப் பொருத்தவரை, அரசு ஊழியர்களான கூட்டுறவு சங்க பதிவாளர்கள், விதிகளை மீறி செயல்படுவதாக கூறப்படும் சங்கங்களின் செயல்பாட்டை இடைநிறுத்தி வைக்கவும் விசாரணையின்றி கலைக்கவும் உத்தரவிடும் அதிகாரத்தை அவர்களுக்கு திருத்த மசோதா வழங்குகிறது.
இந்த அம்சத்தை ஆளுநர் ஆட்சேபித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் கடிதம் அனுப்பியபோதும் மாநில அரசிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை என்கிறது ஆளுநர் தரப்பு.
அடுத்ததாக பாரதியார் பல்கலைக்கழக திருத்த மசோதாவில், பல்கலைக்கழக சிண்டிகேட் நிர்வாகக் குழுவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க ஏதுவாக வகை செய்யப்பட்டுள்ளது. அந்த குழுவில் தனியார் மற்றும் சுயநிதி சுயநிதி கல்லூரிகளின் பிரதிநிதிகளையும் உறுப்பினராக்கும் வகையில் மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. போதுமான தகுதியோ அனுபவமோ இல்லாதவர்கள் இதன் மூலம் சிண்டிகேட் குழுவில் இடம்பெற வாய்ப்புள்ளதால் அது குறித்தும் ஆளுநர் ஆட்சேபித்துள்ளார். போதுமான தகுதியோ அனுபவமோ இல்லாத ஒருவரை பல்கலைக்கழக நிர்வாகக் குழுவில் எப்படி சேர்க்க முடியும் என கேள்வி எழுப்பி மாநில அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்கிறது ஆளுநர் தரப்பு.
இந்த இரண்டு மசோதாக்கள் மீதும் உரிய பதில்கள் கிடைத்தால் மட்டுமே அவை குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அவரது தரப்பு தெரிவிக்கிறது.
நீட் விலக்கு மசோதா: தாமதம் ஏன்?

பட மூலாதாரம், PMO
இந்த விளக்கங்களைத் தொடர்ந்து, நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பாமல் தவிர்ப்பது குறித்து பிபிசி தமிழ் கேட்டது.
"அரசியலமைப்பு ஆளுநருக்கு வழங்கிய அதிகாரங்களின்படி பண மசோதா நீங்கலாக, வேறு எந்தவொரு மசோதாவாக இருந்தாலும், அது சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவாக இருந்தாலும், கூட அதன் மீது ஆளுநருக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே அதை குடியரசு தலைவருக்கு அவர் அனுப்பி வைப்பார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மசோதா அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற அழுத்தம் ஆளுநருக்கு இல்லை," என்கிறது அவரது தரப்பு.
"தமிழக முதல்வர் உங்களை சந்தித்தபோது அவரிடம் சரியான முறையில் உங்களுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினீர்களா?" என்று கேட்டோம்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
"தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு முறை என்னை சந்தித்தபோதும், மசோதா தொடர்பான நிலை, சட்டபூர்வ சிக்கல்கள் மற்றும் அரசியலமைப்பின்படி அரசு செயல்பட வேண்டிய அவசியம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. முதல்வர் என்னை சந்தித்தபோது அவருடன் தலைமைச் செயலாளரும் இருந்துள்ளார். அவர் நிச்சயம் எனது நிலைப்பாட்டை முதல்வருக்கு புரிய வைத்திருப்பார் என்று நம்புகிறேன்," என்கிறார் ஆளுநர் ரவி.
இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கப்பட்ட மசோதா மீது தொடர்ந்து தாமதம் செய்வதாக உங்கள் மீது தொடர்ச்சியாக குற்றம்சுமத்தப்படுவது தெரியுமா என கேட்டபோது, "மசோதா மீது மேல் நடவடிக்கை எடுக்கும் முன்பாக அதன் ஒவ்வொரு அம்சத்தையும் ஆழமாகவும் நுணுக்கமாகவும் ஆராய்ந்து வருகிறேன்," என்று அவர் பதிலளித்தார்.
மக்களவையில் எதிர்ப்புக்குரல்கள்

பட மூலாதாரம், SANSAD TV
இதற்கிடையே, மக்களவையில் திமுகவினர் எழுப்பி வரும் 'ஆளுநர் எதிர்ப்பு குரல்கள்' தொடர்பாக மாநில ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பிபிசி தமிழ் கேட்டது.
"எனது பொறுப்பை நான் கவனித்து வருகிறேன். அவர்கள் (திமுகவினர்) அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள். அவர்களின் அரசியலுக்குள் நான் நுழைய விரும்பவில்லை," என்று பதிலளித்தார்.
நாடாளுமன்றத்தில் திமுக அளித்துள்ள நோட்டீஸில், "தமிழ்நாடு ஆளுநர் தமது கடமைகளையும் பொறுப்புகளையும் அரசியலமைப்பின் 200ஆவது பிரிவின்படி ஆற்றாமல் அரசியலமைப்பு முறைகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தி வருகிறார். அவர், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமலும் ஒத்திசைவுப் பட்டியல் மூன்றின் கீழ் வரும் மசோதாக்களை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்காமலும் இருக்கிறார்," என்று கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், T.R.BAALU
இது குறித்து ஆளுநர் ரவியிடம் கேட்டபோது, "அரசியலமைப்பின் 200ஆவது விதி பற்றி ஆளும் கட்சி தரப்பில் பேசப்படுகிறது. அதே அரசியலமைப்பில் விதி 168இல் மாநில பேரவையின் 'ஒருங்கிணைந்த அங்கம்தான் ஆளுநர்' என்று வரையறுக்கப்பட்டுள்ளது," என்று பதிலளித்தார்.
"பண மசோதா மட்டுமே ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டிய மசோதா. ஏனைய அனைத்து மசோதாக்களும் ஆளுநரின் பரிசீலனைக்கு உட்பட்டவையே, அந்த அதிகாரத்துக்கு உள்பட்டு தமிழக அரசிடம் கேட்டுள்ள விளக்கத்துக்கு பதில்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்று ஆளுநர் ரவி தெரிவித்தார்.
மக்களவையில் ஒலித்த ஆளுநர் எதிர்ப்புக் குரல்கள்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெறக் கோரி இந்திய நாடாளுமன்ற மக்களவையில் ஏப்ரல் 4ஆம் தேதி திமுக எம்.பிக்கள் விடாமல் குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தால் இரு முறை திமுக மற்றும் அதன் கூட்டணி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
மக்களவை இன்று காலையில் அதன் சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா தலைமையில் தொடங்கியதும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெறுவது தொடர்பாக பேச அனுமதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஆனால், அவையில் காலை 11 மணிக்கு வழக்கமாக நடைபெறும் கேள்வி நேரத்தின்போது இந்த பிரச்னையை எழுப்ப சபாநாயகர் அனுமதி மறுத்தார்.
இதேவேளை விலைவாசி உயர்வு விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் குரல் எழுப்பின. இந்த நிலையில், திமுக எம்.பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதைத்தொடர்ந்து கேள்வி நேரம் முடிந்ததும் முக்கிய பிரச்னைகளை எழுப்பும் நேரத்தில் மீண்டும் ஆளுநர் விவகாரத்தை எழுப்ப திமுக எம்.பிக்கள் முற்பட்டனர். அப்போது மக்களவையை மூத்த உறுப்பினர் ராஜேந்திர அகர்வால் வழிநடத்திக் கொண்டிருந்தார்.
இரண்டாவது முறையாக வெளிநடப்பு

பட மூலாதாரம், LOK SABHA TV
முன்னதாக, திங்கட்கிழமையன்று மக்களவையில் திமுக உறுப்பினர்கள், "திரும்பப் பெறு, திரும்பப் பெறு, ஆளுநரை திரும்பப் பெறு," என்று தமிழிலும் அதே வரிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் முழக்கமிட்டனர். சுமார் 15 நிமிடங்கள் வரை அவர்கள் குரல் கொடுத்தபோதும் இந்த விவகாரத்தை எழுப்ப அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து திமுக உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலுவிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களை மத்திய அரசுக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது அரசியலமைப்புக்கு எதிரானது. மாநில நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் அவரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை. அதை தொடர்ந்து எழுப்புவோம்," என்று கூறினார்.
இன்று மக்களவையில் பிரச்னை எழுப்பியபோது தங்களுடைய கோரிக்கைக்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததாக டி.ஆர். பாலு குறிப்பிட்டார்.
இதேவேளை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், "மக்களவையில் விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் கொடுத்தோம். கூட்டணி கட்சி என்ற முறையில் திமுக எழுப்பிய ஆளுநர் விவகாரத்துக்கு எங்களுடைய ஆதரவு உண்டு," என்று தெரிவித்தார்.
ஆளுநருக்கு எதிராக மக்களவையில் பேச முடியுமா?
இதற்கிடையே, ஆளுநர் தொடர்பான பிரச்னையை எழுப்புவது மாநில விவகாரம் என்பதால், அது குறித்து விவாதிக்க மக்களவை சபாநாயகரின் அனுமதியை உறுப்பினர்கள் பெற வேண்டும். அந்த வகையில், டி.ஆர். பாலு அளித்துள்ள நோட்டீஸை சபாநாயகர் ஏற்றால் மட்டுமே, அவர் பேசும் கருத்துக்கள் அவையில் பதிவாகும்.
மக்களவை விதிகளின்படி நேரமில்லா நேரம் எனப்படும் பூஜ்ஜிய நேரத்தில் ஒருமுறை பதிவு செய்யப்பட்ட ஒரு பிரச்னையை மீண்டும் அதே கூட்டத்தொடர் அமர்வில் அவசர தேவை எழுந்தால் ஒழிய பதிவு செய்ய அனுமதிக்கப்படாது. அந்த வகையில், ஆளுநர் ரவிக்கு எதிரான கோரிக்கையை குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய போதே டி.ஆர். பாலு பதிவு செய்து விட்டார்.
இந்த நிலையில், மக்களவையில் தமிழ்நாடு ஆளுநர் பற்றி பிரச்னை எழுப்ப திமுக அளித்துள்ள நோட்டீஸ் மீது சபாநாயகர் அனுமதி கொடுக்காவிட்டாலும் கூட, ஆளுநரின் செயல்பாடு குறித்து அவையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் குரல் கொடுப்போம் என்று திமுக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
திமுக Vs ஆளுநர்:மோதல் என்ன?
தமிழ்நாட்டில் ஆளும் திமுகவுக்கும் மாநில ஆளுநர் ஆர். என் ரவிக்கும் இடையிலான பனிப்போர் போன்ற கருத்து மோதல், நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது முதலே தீவிரம் அடைந்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றியபோதும், அதை மீண்டும் சபாநாயகருக்கே ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதையடுத்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்த தமிழக அரசு மீண்டும் சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி கூட்டப்பட்டது. அதே மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும்படி ஆளுநரை தமிழக அரசு கேட்டுக் கொண்டது.
இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி இரண்டாவது முறையாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் மசோதாவை ஆளுநர் தமது அலுவலகத்திலேயே நிறுத்திவைக்க முடியாது என்றும் அதை அவர் குடியரசுத் தலைவருக்கே அனுப்பி வைக்க வேண்டும் என்றும் விதிகள் கூறுவதாக சட்ட நிபுணர்களை மேற்கோள்காட்டி திமுக தலைவர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில், இரண்டாவது முறையாக அனுப்பி வைத்த மசோதாவையும் ஆளுநர் தன்வசமே வைத்துள்ளதால், அவரது செயல்பாடுகளை விமர்சித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் திமுக பல தளங்களில் குரல் கொடுத்து வருகிறது. சமீபத்தில் டெல்லி வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தபோது அவரிடம் அளித்த மனுவிலும் ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













