பிடிஆர் Vs அண்ணாமலை: இவர்களின் மோதல் முக்கிய பிரச்னைகளை திசை திருப்புகிறதா?

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

பட மூலாதாரம், TWITTER/@PTRMADURAI

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே ட்விட்டரில் நடக்கும் சொற்போர் அரசியல் நாகரிகத்தை அதள பாதாளத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக விமர்சனங்கள் எழுகின்றன.

இறந்த தியாகியின் உடலை வைத்து விளம்பரம் தேடியதாலும், தேசியக் கொடியோடு சென்ற கார் மீது செருப்பு வீச ஏற்பாடு செய்ததாலும், பொய் சொல்வதாலும், உணர்வுகளைத் தூண்டுவதாலும் அவர் இழி பிறவி என்றும், தமிழ்நாட்டுக்கும், பாஜகவுக்கும் சாபக்கேடு என்றும் அண்ணாமலை பெயரைக் குறிப்பிடாமல், ஆடு படம்போட்டு பதிவிட்டிருந்தார் தியாகராஜன்.

இதற்குப் பதில் அளித்துப் பதிவிட்ட அண்ணாமலை, மூதாதையரின் பெருமையில் வாழும் தியாகராஜனால், தானாக உருவாகிய ஒரு விவசாயியின் மகனை மனிதாகக் கூட ஏற்கமுடியவில்லை என்றும், அவராக சொந்தமாக செய்தது ஒன்றுமில்லை என்றும் அரசியலுக்கும் மாநிலத்துக்கும் சாபக்கேடு என்றும் குறிப்பிட்டதுடன் ஒரு படி மேலே சென்று பிடிஆர் தியாகராஜன் தனது செருப்புக்குக்கூட சமமில்லை என்று குறிப்பிட்டார்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு
அண்ணாமலை

இத்தகைய கசப்பான விவாதங்கள் தியாகராஜன் - அண்ணாமலை இடையே மட்டும் நடக்கவில்லை. வேறு பல அமைச்சர்களுடனும் அண்ணாமலை கசப்பான விவாதங்களில் ஈடுபடுகிறார்.

இத்தகைய விவாதங்கள் தமிழ்நாட்டின் அடிப்படைப் பிரச்சனைகள், உரிமைகள் மீதான காத்திரமான கொள்கை மோதல்கள் என்றும், இல்லையில்லை இவை உண்மையான பிரச்சனைகளில் இருந்து திசை திருப்புகிறவை என்றும் மாறுபட்ட கருத்துகள் வெவ்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றன.

"இருவரையும் சமமாக நிறுத்துவதே சரியல்ல"

இந்த விவாதம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளரும் கருணாநிதி வாழ்க்கை வரலாற்று நூலின் ஆசிரியருமான, ஏ.எஸ்.பன்னீர்செல்வம் பிபிசி தமிழிடம் பேசுகையில், "தேசியளவில் ஆளும் கட்சியின் மாநில தலைவர் என்பதைத் தாண்டி அண்ணாமலைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் அல்ல. கட்சிக்கே புதிதாக வந்தவர்தான். ஆனால், பிடிஆர் தொடர்ந்து இருமுறை எம்எல்ஏ ஆனவர். அதிகாரம் உள்ள ஒருவரையும் அதிகாரம் இல்லாத ஒருவரையும் சமமாக வைத்துப் பார்ப்பதே சரியல்ல. மாநில உரிமைகளை முன்னிறுத்தும் ஒரு மொழியாகத்தான் பிடிஆரின் மொழியை பார்க்கிறேன்.

பாஜக தலைவர்கள் சொல்வதற்கு திமுக தலைவர்கள் எதிர்வினையாற்றவில்லை என்றால் அவர்கள் சொல்வதுதான் சட்டம் என்றாகிவிடும். மாநிலத்தின் அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது என்பதில் தெளிவாக இருப்பது நல்லது. 10 ஆண்டுகள் அதிமுக அரசில் மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்ததில் எதுவும் நடக்கவில்லை. இது ஏட்டிக்குப் போட்டி என்ற விஷயம் இல்லை" என்றார்.

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN

ஆனால், இத்தகைய சர்ச்சை பேச்சுகள் முதன்மை பிரச்னைகளிலிருந்து விலகிச் செல்வதாகாதா என்ற கேள்விக்கு, "நடப்பவை அனைத்தும் முதன்மையான பிரச்னைகள்தான். எனக்கான கல்வி என்னிடம் இருக்க வேண்டும் என்பது முதன்மை பிரச்னைதான். முதன்மை பிரச்னைகளை சர்ச்சைக்குரிய ஒன்றாக மாற்றுவதே சிக்கலானது.

என்னுடைய நலன் தொடர்பான திட்டங்களை 'ஃப்ரீபி' என்று மாற்றுவது அவர்களின் பிரச்னை. இவையனைத்தும் முக்கியமான அரசியல் பிரச்னைகள்தான்.

நுண்ணிய ஊடக சூழலில், தற்போது முதன்மை பிரச்னைகளிலிருந்து விலகுவது போன்ற பார்வை வருகிறதே தவிர, முக்கியமான பிரச்சனை மாநில உரிமைகளுக்கும் அவற்றை மையப்படுத்தும் போக்குக்கும் இடையே நடப்பதுதான். இரு கட்சிகளும் நேரெதிர் தளத்தில் இயங்கும்போது விவாதங்கள் காரசாரமாகத்தான் இருக்கும்" என்றார்.

ஊடகங்கள் உருவாக்கும் எந்த சர்ச்சைகளையும் மக்கள் நம்புவதில்லை எனவும், அவர்கள் தெளிவாக புரிந்துகொண்டுள்ளதாகவும் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் தெரிவித்தார்.

பாஜகவின் இத்தகைய அணுகுமுறை குறித்துப் பேசிய அவர், "2014ல் ஆட்சிக்கு வந்தபின்னர் பாஜக சொன்ன எதையும் நிறைவேற்றவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் கருப்புப் பணம் ஒழிந்துவிடும் என்பது உட்பட எதுவும் நிறைவேறவில்லை. அந்த சமயத்தில் சர்ச்சையாகவே வைத்துக்கொண்டால்தான் அவர்களால் இயங்க முடியும். அன்றன்றைக்கான தலைப்புச் செய்தியை நிர்வகிப்பதுதான் அவர்களின் வேலை. இதற்கு ஒரு நாளைக்கு அண்ணாமலையை பயன்படுத்தினால் மறுநாள் வேறோருவரை பயன்படுத்துவார்கள்" என்றார்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

"பிரச்னை அல்லாத பிரச்னைகள்"

ஒன்றுமே இல்லாத, பிரச்னை அல்லாத பிரச்னைகளை குறித்துப் பேசுவதுதான் சமீப காலமாக தமிழ்நாடு அரசியலில் நடந்துவருகிறது எனவும் இது திமுக அரசில் மட்டும் நடைபெறவில்லை எனவும், மூத்த பத்திரிகையாளர் லஷ்மி சுப்பிரமணியன் தெரிவித்தார்.

"பாஜக மாநில தலைவராக இருந்தபோது தமிழிசை சௌந்தரராஜன் இத்தகைய சொற்களை எங்கும் பயன்படுத்தியதில்லை. இத்தனைக்கும் அவருக்கு எதிராக எத்தனையோ 'ட்ரோல்கள்', மீம்கள் வெளியிடப்படும். கருத்தியல் ரீதியாகத்தான் பேசியிருக்கிறார்.

ஆனால், அண்ணாமலை எந்தவிதமான நாகரிகத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என நினைக்கிறேன். ஆனால், அதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. பெரும்பாலான மாநிலங்களில் பாஜக செய்வதைத்தான் இங்கேயும் செய்கிறது. அடிமட்ட அரசியலில் இருந்து அவர் வரவில்லை. இந்தியாவின் நிதிநிலைமை, மத்திய அரசு செய்யக்கூடிய தவறுகளை மிகவும் தெளிவாக பேசி எளிதாக மக்களிடம் கொண்டு சேர்ப்பவராக உள்ளார் பிடிஆர். அதனால்தான் அவருக்கு இத்தகைய ரீதியில் விமர்சனம் செய்கின்றனர்" என தெரிவித்தார்.

பாஜகவின் விமர்சனங்களுக்கு திமுகவின் எதிர்வினை குறித்துப் பேசிய பத்திரிகையாளர் லஷ்மி, "திமுக எத்தனையோ மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றனர். சில திமுக எம்.பிக்கள் ட்விட்டரில் மட்டுமே இருக்கின்றனர். சமூக வலைதளத்தில் மட்டுமே கட்சியும் ஆட்சியும் நடத்த முடியாது.

எல்லோருக்கும் நேரடியாக பதில் சொல்லக்கூடிய ஒருவர் என்பதால் பிடிஆர் இதில் பேசியிருக்கிறார். ஆனால், அமைச்சர் குறித்து பாஜக விமர்சிப்பதற்கு திமுக தொழில்நுட்ப அணியும் எதிர்வினையாற்ற வேண்டும். திமுக எவ்வளவு வேகமாகவும் வீரியமாகவும் செயல்படக்கூடியதோ, அந்த வீரியம் இப்போது இல்லை. திமுகவின் எதிர்வினை எல்லாவற்றிலும் குறைவாகத்தான் இருக்கிறது, அவர்கள் பயப்படுகிறார்களா அல்லது வேண்டுமென்றே செய்கிறார்களா என்பது தெரியவில்லை" என தெரிவித்தார்.

காணொளிக் குறிப்பு, அண்ணாமலை Vs பிடிஆர்: வார்த்தை போரில் ஈடுபடும் தலைவர்கள் - மீண்டும் சர்ச்சை
சிவப்புக் கோடு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: