அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே கடிதம்: “பேரியக்கத்தில் விளைந்த கட்சிக்கு இது அழகா?”

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று(31/08/2022) வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து அளிக்கிறோம்.)
"உங்கள் வார்த்தைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் சம்பந்தமே இல்லையே" என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை விமர்சித்து மூத்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லி அரசியலில் அன்றாடம் சிபிஐ ரெய்டு, விசாரணைகள், எம்.எல்.ஏ-க்கள் கூட்டம், நம்பிக்கை வாக்கெடுப்பு என்று பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்போது முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "நீங்கள் முதல்வரான பிறகு நான் உங்களுக்கு முதல்முறையாகக் கடிதம் எழுதுகிறேன். அதற்குக் காரணம் அண்மையில் வெளியான டெல்லி மதுபானக் கொள்கை பற்றிய செய்திகள். நீங்கள் உங்களுடைய ஸ்வராஜ் என்ற நூலில் மதுபானக் கொள்கை பற்றி சில மகத்தான பரிந்துரைகளைச் சொல்லியிருந்தீர்கள். அந்த நூலுக்கு நான் முன்னுரை எழுதிக் கொடுத்தேன். நீங்கள் அதில், மக்களின் சம்மதம் இல்லாமல் அந்தப் பகுதியில் மதுபானக் கடைகளே திறக்கக்கூடாது எனக் கூறியிருந்தீர்கள். ஆனால், முதல்வரான பிறகு அதையெல்லாம் மறந்துவிட்டீர்கள் போலும்!
டெல்லி அரசிடமிருந்து நான் இப்படியொரு கொள்கையை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் முதல்வரான பிறகு, லோக்பால், லோக் ஆயுக்தாவை முழுவதுமாக மறந்துவிட்டீர்கள். சட்டப்பேரவையில் ஒருமுறை கூட லோக் ஆயுக்தாவை கொண்டு வர நீங்கள் முயலவில்லை. இப்போது உங்கள் அரசு மக்களின் வாழ்வை, பெண்களை பாதிக்கும் ஒரு கொள்கையைக் கொண்டு வந்துள்ளது. இது ஒன்றே போதும் உங்கள் வார்த்தைகளும் செயல்பாடுகளும் வெவ்வேறு என்பதைக் காட்ட.


மகாராஷ்டிராவில் மதுபானக் கொள்கைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக மது விற்பனைக்கு எதிராக கிராமப்புற பெண்கள் குரல் கொடுக்கும் அதிகாரம் கிடைத்தது. ஆனால், இன்று டெல்லி அரசு மதுபானக் கொள்கையை அமல்படுத்த முயன்று அதன் நிமித்தமான ஊழலில் சிக்கியுள்ளது. டெல்லியில் மூலைமுடுக்கெல்லாம் மதுபானக் கடைகள் வந்துவிட்டன. ஒரு பேரியக்கத்தில் விளைந்த கட்சிக்கு இது அழகா? நீங்கள் அதிகார போதையில் இருக்கிறீர்கள்" என்று அன்னா ஹசாரே குறிப்பிட்டுள்ளார்.
ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி மறுப்பு
முஸ்லிம்கள் பெருநாள் தொழுகையை நடத்தும் பெங்களூரு ஈத்கா மைதானத்தில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடத்த அனுமதியளிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதுகுறித்துப் பேசியுள்ள கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா, நீதிமன்ற உத்தரவை அரசு ஏற்கும் என்றாலும், பெங்களூரிலுள்ள சாமராஜ்பேட் ஈத்கா மைதானம் "பொதுச் சொத்து" என்றும் அதன் உரிமை தொடர்பான சட்டப் போராட்டம் நீதிமன்றத்தில் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
"சாமராஜ்பேட் மற்றும் பெங்களூரு மக்கள் மைதானத்தில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட ஆர்வமாக இருந்தனர். ஆனால், உச்சநீதிமன்றம் இதுவரையுள்ள நிலையே நீடிக்கும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்காக வரும் நாட்களில் நீதிமன்றத்தில் சட்டபூர்வமாகப் போராடுவோம்" என்று அசோகா தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
மேலும் அதுகுறித்த செய்தியில், "பெங்களூரு சாமராஜ்பேட்டை பகுதியிலுள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடத்த கர்நாடக உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 26ஆம் தேதி அரசுக்கு அனுமதியளித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக வக்ஃபு வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, 'அந்த இடத்தில் முந்தைய நிலையே தொடரும். இதை இரு தரப்பினரும் பின்பற்ற வேண்டும்' எனத் தெரிவித்தது.
சாம்ராஜ்பேட் ஈத்கா மைதான பிரச்னை காரணமாக, இந்து-முஸ்லிம் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் முயற்சிகளை அனுமதிக்காத உச்சநீதிமன்ற உத்தரவு வரவேற்கத்தக்கது என்று கர்நாடக மாநில அவுகாஃப் வாரிய தலைவர் மௌலானா ஷாபி சாதி டெல்லியில் தெரிவித்துள்ளார்," என்று கூறப்பட்டுள்ளது.
அவர் பேசியபோது, "1991ஆம் ஆண்டின் வழிபாட்டு தலங்கள் சட்டத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்து, தற்போதுள்ள நிலைக்கு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக முஸ்லிம்கள் விநாயகர் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு எதிரானவர்கள் இல்லை. மற்ற மத பழக்கவழக்கங்களை எதிர்த்து இஸ்லாம் போதிக்கவில்லை என்பதை இந்து சகோதரர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார். ஈத்கா என்பது முஸ்லிம்கள் 200 ஆண்டுகளாக தொழுகை நடத்தும் வக்ஃப் சொத்து.
இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்த நிலையில், சாம்ராஜ்பேட்டில் உள்ள ஈத்கா மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டனர்.
மணிஷ் சிசோடியா வங்கி லாக்கரை திறந்து சிபிஐ சோதனை
தில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் அவருடைய மனைவி முன்னிலையில் அவர்களுடைய வங்கி லாக்கரை சிபிஐ அதிகாரிகள் திறந்து சோதனை செய்ததாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த செய்தியில், "டெல்லி அரசு மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
மணிஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 19ஆம் தேதி சோதனை நடத்தினர். இந்நிலையில், டெல்லி புறநகரான காசியாபாத்தில் செக்டார் 4 வசுந்தரா பகுதியில் அமைந்துள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் மணிஷ் சிசோடியாவின் லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மணிஷ் சிசோடியா மற்றும் அவருடைய மனைவி முன்னிலையில் அவர்களது வங்கி லாக்கரை சிபிஐ அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழுவினர் திறந்து பார்த்தனர். சுமார் 2 மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. இந்த சோதனையில் என்ன சிக்கியது என்பது பற்றி சிபிஐ தரப்பில் தகவல் இல்லை," எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்த சோதனை முடிந்தவுடன் மணிஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது, "சிபிஐ அதிகாரிகளுக்கு அழுத்தம் வந்து, அதன் அடிப்படையில் செயல்படுகின்றனர்.
இன்றைய சோதனைக்குப் பிறகு நான் குற்றமற்றவன் என்று சிபிஐ கூறிவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். அவர்கள் என் வங்கி லாக்கரிலோ வீட்டிலோ குற்றச்சாட்டு தொடர்பான எதையும் கண்டறியவில்லை," என்று கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்















