அமலா பால் புகார்: முன்னாள் நண்பர் விழுப்புரத்தில் கைது - என்ன நடந்தது?

பட மூலாதாரம், AMALA PAUL INSTAGRAM
நடிகை அமலா பாலுக்கு மன உளைச்சலைக் கொடுத்து பல நாட்களாக அவரது தூக்கத்தைக் கெடுத்ததாக புகாருக்குள்ளான வட மாநில இளைஞரை விழுப்புரம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
அமலா பாலுடன் ஒன்றாக இருந்த புகைப்படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுத்ததுடன், தொழில் தொடங்கலாம் எனக்கூறி பண மோசடி செய்ததாக அந்த நபர் மீது அமலா பால் விழுப்புரம் காவல்துறையின் குற்றப்பிரில் புகார் அளித்திருந்தார். பவ்நிந்தர் சிங் தத் என்ற அந்த நபர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
ஆரம்பத்தில் பவ்நிந்தர் சிங் தத்துடன் அமலா பால் நண்பராக இருந்துள்ளார். 2018இல் பவ்நிந்தர் சிங் தத் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து (6T) பூவி திரைப்பட நிறுவனத்தை அமலா பால் தொடங்கியுள்ளார். இதற்காக விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகில் உள்ள பெரிய முதலியார் சாவடியில் வீடு ஒன்றை வாடகைக்கு இவர்கள் எடுத்துள்ளனர். அங்கு தங்கியிருந்தபடி திரைப்பட தயாரிப்புப் பணிகளை செய்துள்ளனர்.
அப்போது அமலாபாலும் பவ்நிந்தர் சிங் தத்தும் திருமணம் செய்து கொள்வதாக கூறப்பட்டாலும், நாளடைவில் கருத்து வேறுபாடு இருவரும் பிரிந்துள்ளனர்.
இதன் பிறகு அமலா பாலுடன் ஒன்றாக இருந்த நேரத்தில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிடப் போவதாக பவ்நிந்தர் சிங் தத் மிரட்டல் விடுத்து வருவதாக அமலா பால் புகாரில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பவ்நிந்தர் சிங் தன்னிடம் பண மோசடி செய்ததாகவும் பொருளாதார ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் மன உளைச்சலை ஏற்படுத்தி தமது தூக்கத்தை கெடுத்ததாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரநாதாவிடம் அமலா பால் ஆகஸ்ட் 26ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.


16 பிரிவுகளின் கீழ் வழக்கு

பட மூலாதாரம், BAVNINDER SINGH
அந்த புகாரின் பேரில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் பவ்நிந்தர் சிங் தத்தை கைது செய்துள்ளனர். அவர் மீது 16 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமலா பால் தயாரித்து நடித்த 'கடாவர்' என்ற திரைப்படம் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை அமலாபால், பவ்நிந்தர் சிங் தத் ஆகிய இருவரும் ஒன்றாக இணைந்து தயாரித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இதில் அமலாபால் அதிக முதலீடு செய்துள்ள நிலையில், அந்த படத்தைத் தான் தயாரித்ததாகப் போலி ஆவணங்கள் ஜோடித்து தனது பெயர் உள்ள இடத்தில் பவ்நிந்தர் சிங் தத் என மாற்றி மோசடி செய்ததாக அமலா பால் கூறியுள்ளார்.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவை தொடர்பு கொண்டு கேட்ட போது, "நடிகை அமலாபால் , பவ்நிந்தர் சிங் தத் ஒன்றாக இருந்த போது இருவருக்கும் இடையே தொழில் ரீதியாக நிறைய பணம் கொடுக்கல், வாங்கல் இருந்துள்ளது. அந்த நேரத்தில் ஒன்றாக இணைந்து இருவரும் திரைப்படம் தயாரித்துள்ளனர். அப்போது அமலாபாலிடம் இருந்து நிறைய பணம் வாங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் தற்சமயம் அந்த பணத்தை திருப்பித் தர மறுக்கிறார். அது மட்டுமின்றி அமலா பால் படத்தின் உரிமை தனக்கு வேண்டும் என்றும் அவர் மிரட்டுவதாக கூறப்பட்டது. மேலும் சில ஆவணங்களை பவ்நிந்தர் சிங் தத் போலியாக தயார் செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது," என்றார்.
இந்த விவகாரத்தில் அமலா பால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆனானதாக புகாரில் தெரிவித்துள்ளாரா என்று காவல் கண்காணிப்பாளரிடம் கேட்டோம்.
"பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக அமலா பால் புகாரில் ஏதும் சொல்லவில்லை. இது முழுக்க இருவருக்கும் இடையிலான தொழில் ரீதியிலான விவகாரமாக தெரிகிறது. பவ்நிந்தர் சிங்கின் அழுத்தம் அதிகரித்ததால் அவருக்கு எதிராக அமலா பால் போலீஸில் புகார் அளித்துள்ளார்,," என்று ஸ்ரீநாதா தெரிவித்தார்.
அமலா பால் அளித்த புகாரில் தொடர்புடையதாக மேலும் 11 பேரை போலீஸார் தற்போது தேடி வருகின்றனர்.
நீதிமன்றத்திலும் அமலா பால் வழக்கு
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பவ்நிந்தர் சிங் தத் நிச்சதார்த்தம் செய்து கொண்டதாக கூறப்படும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலா பால் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் அமலாபாலுடனஅ நெருக்கமாக இருப்பது போன்ற படங்களை ஆன்லைனில் பகிரக்கூடாது என்று பவ்நிந்தர் சிங்குக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













