பி.டி.ஆர். தியாகராஜன் - அண்ணாமலை ட்விட்டரில் சொற்போர்: தமிழ்நாட்டின் சாபக்கேடு VS செருப்புக்குக்கூட சமமில்லை

பட மூலாதாரம், TWITTER/@ptrmadurai
தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையும் ட்விட்டரில் தொடர்ந்து மோதி வருகின்றனர். இந்நிலையில், நேற்று நிதியமைச்சர் தனது செருப்புக்குக்கூட சமமானவரில்லை என அண்ணாமலை பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையிலான சொற்போர் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று மாலை ஐந்தேகால் மணியளவில் ஆங்கிலத்தில் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
பிடிஆர் தியாகராஜன் பதிவு
அந்தப் பதிவில், "நான் ஏன் ஆட்டை (ஆட்டின் படம்) பெயர் சொல்லிக்கூட அழைப்பதில்லை?
1) இறந்த தியாகியின் உடலை வைத்து விளம்பரம் தேடியது.
2) தேசியக் கொடியுடன் கூடிய கார் மீது செருப்பு வீச ஏற்பாடு செய்தது.
3) பொய் சொல்வது.
4) உணர்வுகளைத் தூண்டும்வகையில் பேசிக்கொண்டே இருப்பது.
ஆடு (ஆட்டின் படம்) மற்றும் மனநிலை குறித்து உயர் நீதிமன்றத்தால் கேள்விக்குள்ளாக்கப்பட்டவர்கள் போன்ற இழி பிறவிகள், தமிழ் சமுதாயத்தின் சாபங்கள்
பா.ஜ.கவுக்கும் (சாபம்தான்)" என்று குறிப்பிட்டிருந்தார்.
அண்ணாமலை பதில்
பி.டி.ஆரின் இந்தப் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் கே. அண்ணாமலை ட்விட்டரில் தொடர் பதிவுகளை வெளியிட்டார். அதில் நிதியமைச்சர் தனது செருப்புக்குக்கூட தகுதியானவரில்லை என கூறியிருந்ததுதான் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.
"திரு. பி.டி.ஆர். உங்களுடைய பிரச்சனை இதுதான்:
மூதாதையர்களின் பெருமிதத்தில் வாழும் நீங்களும் உங்கள் கூட்டமும் தானாக தன்னை உருவக்கிக்கொண்ட ஒரு விவசாயியின் மகனை மனிதனாக ஏற்க முடியவில்லை.

ஒரு மிகப் பெரிய பாரம்பரியத்தில் பிறந்தவர் என்பதைத் தவிர இந்த வாழ்க்கையில் நீங்கள் எதையாவது சாதித்தது உண்டா?
அரசியலுக்கும் இந்த மாநிலத்திற்கு நீங்கள் ஒரு சாபக் கேடு!

மிகப் பெரிய விமானங்களில் பயணம் செய்யாத, வங்கிகளை மூடாத, நிதானமான மூளையும் வாழ்க்கையும் கொண்ட எங்களைப் போன்ற ஆட்களும் உண்டு என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இறுதியாக, நீங்கள் எனது செருப்புக்குக்கூட தகுதியானவரில்லை.
அந்த அளவுக்கு நான் கீழே இறங்கிவர மாட்டேன். கவலைப்படாதீர்கள்!" என்று அந்த ட்வீட்டில் கே. அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தை வைத்து, பா.ஜ.கவின் தகவல் தொழில்நுட்ப அணியினரும் தி.மு.கவின் சமூக வலைதள அணியினரும் ட்விட்டரில் மோதிவருகின்றனர்.
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கும் அண்ணாமலைக்கும் இடையிலான மோதல், நீண்ட காலமாகவே இருந்து வருகிறது என்றாலும் மதுரையில் நடந்த செருப்பு வீசும் சம்பவத்திற்குப் பிறகு இது உச்சகட்டத்தை எட்டியது.
கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி, உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்துவது தொடர்பாக எழுந்த பிரச்சனையில், நிதியமைச்சர் சென்ற வாகனத்தின் மீது செருப்பு வீசப்பட்டது. இதையடுத்து மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. செயலர் சரவணன் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறினார். செருப்பு வீசியவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இதற்குப் பிறகு, மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சுசீந்திரனும் அண்ணாமலையும் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியானது. அது செருப்பு வீசுவது குறித்து திட்டமிடுவது போன்ற தொனியில் அந்த ஆடியோ இருந்தது. ஆனால், பா.ஜ.க. தரப்பு அந்த ஆடியோ போலியானது என மறுத்துவந்தது. இந்த மோதல்தான் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

பார்வை:முரளிதரன், மூத்த செய்தியாளர் பிபிசி தமிழ்
தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் எதிர்கட்சிகளையும் எதிர்கட்சித் தலைவர்களையும் ஆபாசமாகவோ, தரக்குறைவாகவோ பேசுவது புதிதல்ல. ஆனால், கட்சியின் தலைவர்களே அவ்வாறு பேசும்போது அது மிகப் பெரிய சர்ச்சையாகி விடுகிறது. அல்லது, பெரிய தலைவர்கள் அமர்ந்திருக்கும் மேடைகளில் அப்படி பேசும்போது, அந்தத் தலைவர்களும் அந்தப் பேச்சுக்கு பதில் சொல்லும் கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.
அந்த வகையில் பார்க்கும்போது அண்ணாமலையின் பேச்சு புதிதல்ல. இதற்கு முன்பாக காங்கிரசின் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் நரேந்திர மோதி குறித்தும் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்தும் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
2011 தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆ. ராசா குறித்து ஜெயலலிதா தெரிவித்த கருத்துகளும் சர்ச்சையை உருவாக்கின. சமீபத்திய சட்டமன்ற தேர்தலின்போது, ஆ. ராசா, கள்ள உறவில் பிறந்த குழந்தை எனக் குறிப்பிட்டது மிகப் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி, அதற்கு தி.மு.க. தலைவர் எதிர்வினை ஆற்றும் அளவுக்குச் சென்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமானின் பேச்சுகள் பலமுறை இதுபோல சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்றன.
பா.ஜ.கவைப் பொறுத்தவரை இதுபோல சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது புதிதல்ல. இதற்கு முன்பு அக்கட்சியின் தேசியத் தலைவராக இருந்த எச். ராஜா, சென்னை உயர் நீதிமன்றம் குறித்து தெரிவித்த கருத்துகள் தொடர்பாக வழக்கே பதிவுசெய்யப்பட்டது. முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான கே. அண்ணாமலை, இதற்கு முன்பும் இதுபோல சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.
தேர்தல் பிரசாரத்தின்போது, செந்தில் பாலாஜியை பற்றி பேசும்போது, "அடித்து பல்லையெல்லாம் நொறுக்கிவிடுவேன்" என்று பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின.
ஆனால், இதுபோல பேசுவதை தொண்டர்கள் கைதட்டி ரசித்தாலும், பொதுமக்களிடம் இது மாதிரியான பேச்சுகள் முகச் சுளிப்புகளையே ஏற்படுத்துகின்றன என்பதை சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்கள் உணர்வதில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்















