பிடிஆர் சொல்லும் தமிழக நிதி பற்றிய புள்ளிவிவரங்கள் எந்த அளவுக்கு சரி?

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், இலவசங்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் சமூக ஊடகத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. அதில் அவர் அளித்த தகவல்கள் உண்மையா என்றும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஒரு #FactCheck.

அந்தத் தொலைக்காட்சி விவாதத்தில் பதிலளிக்கும்போது பின்வரும் தகவல்களை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

1. பி.டி.ஆர். சொல்வது: எல்லா மாநிலங்களோடும் ஒப்பிடுகையில் ஜிஎஸ்டிபி, மனிதவள மேம்பாட்டுக் குறியீடு, சமூக மேம்பாட்டுக் குறியீடு, உயர்கல்வியில் சேர்வோர் விகிதம், 1,000 பேருக்கு எத்தனை மருத்துவர் என்ற விகிதம் ஆகியவற்றில் முன்னணியில் இருக்கிறோம்.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது 2022 - 23ல் 24,84,807 கோடி ரூபாயாக இருக்குமெனக் கணிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அளிக்கும் தகவல்களின்படி, இந்தியாவில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை் பொறுத்தவரை மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு.

மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளைப் பொறுத்தவரை, உயர்ந்த மனிதவளக் குறியீடுகளைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் இருக்கிறது தமிழ்நாடு. தேசிய அளவில் 11வது இடத்தில் இருந்தாலும், அந்தப் பட்டியலில் தமிழ்நாட்டைவிட மேம்பட்ட நிலையில் இருக்கும் பெரிய மாநிலங்கள் இமாச்சலப் பிரதேசமும் பஞ்சாபும்தான். நிலைத்துநிற்கக்கூடிய வளர்ச்சிக் குறியீடுகளைப் பொறுத்தவரை, நிடி ஆயோக் (NITI Aayog) வெளியிட்டிருக்கும் 2020 -21ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாடு கேரளாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.

உயர் கல்வியில் சேர்வோர் விகிதத்தைப் - GER - பொறுத்தவரை ஆல் இந்தியா சர்வே ஆன் ஹையர் எஜுகேஷன் அளிக்கும் புள்ளிவிவரங்களின்படி அகில இந்திய விகிதமானது 2019-20ல் 27.1 சதவீதமாக இருந்தது. அதாவது, 12ஆம் வகுப்பை முடிக்கும் மாணவர்களில் எவ்வளவு பேர் கல்லூரியில் சேர்கிறார்கள் என்ற விகிதம் இது. தமிழ்நாட்டில் இந்த விகிதம் 51.8 சதவீதமாக இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக விகிதம் இதுதான் (சிக்கிம் தவிர்த்து).

மருத்துவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. உலக சுகாதார அமைப்பானது ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகிறது. ஆனால், தமிழ்நாட்டில் 253 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் மருத்துவர்கள் உள்ளனர். இது உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்ததைவிட நான்கு மடங்கு அதிகம். ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுமார் எட்டாயிரம் பேருக்கு ஒரு மருத்துவரும் உத்தரப்பிரதேசத்தில் 3,700 பேருக்கு ஒரு மருத்துவரும் உள்ளனர்.

உயர்கல்வி

பட மூலாதாரம், Mayur Kakade / Getty Images

2.பி.டி.ஆர். சொல்வது: மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை 3.5 சதவீதம். இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை 7 சதவீதம்

தமிழ்நாட்டின் நிதி நிலை அறிக்கையின்படி, இந்த நிதியாண்டில் (2022-23) மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறையானது 90,114 கோடி ரூபாயாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இது மாநிலத்தின் ஒட்டுமொத்த வரி வருவாயில் 3.63 சதவீதம். கடந்த ஆண்டில் இது 3.8 சதவீதமாக இருந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருந்தது, இந்த நிதியாண்டில் 6.4 சதவீதமாக இருக்குமென இந்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

3. பி.டி.ஆர். சொல்வது: தமிழ்நாட்டின் தனி நபர் வருவாய் இந்தியாவின் தனி நபர் வருவாயைப் போல இரண்டு மடங்கு.

தமிழ்நாட்டின் தனிநபர் வருவாய் என்பது 2020-21ல் 2,49,517 ரூபாயாக இருந்தது. இது முந்தைய ஆண்டைவிட 5.4 சதவீதம் அதிகம். இந்தியாவின் தனிநபர் வருவாய் 2020 -21ல் 1,46,087 ரூபாயாக இருந்தது. இது பி.டி.ஆர். சொல்வதைப்போல இரு மடங்கு இல்லை என்றாலும், இந்திய தனி நபர் வருவாயைவிட பல மடங்கு அதிகம்.

4. பி.டி.ஆர். சொல்வது: தமிழ்நாட்டில் பணவீக்க விகிதம் தேசிய பணவீக்க விகிதத்தைவிட இரண்டரை சதவீதம் குறைவு.

இந்திய அரசின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டின் பணவீக்க விகிதம் 4.78 சதவீதம். ஆனால், இந்திய அளவில் பணவீக்கம் என்பது 6.71 சதவீதமாக இருக்கிறது. பி.டி.ஆர். தமிழ்நாட்டில் இந்தியாவைவிட இரண்டரை சதவீதம் குறைவு என்கிறார். ஆனால், அகில இந்திய அளவைவிட தமிழ்நாட்டில் இரண்டு சதவீதம் பணவீக்க விகிதம் குறைவு என்பது உண்மைதான். அகில இந்திய அளவில், தில்லி, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக பணவீக்கம் விகிதம் தமிழ்நாட்டில்தான் குறைவு.

5. பி.டி.ஆர். சொல்வது: ஒரு ரூபாய் அளித்தால், எங்களுக்கு 35 பைசா திரும்பி வருகிறது.

14வது நிதிக் குழுவின் அறிக்கையின்படி, தமிழ்நாடு மத்திய அரசுக்குச் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 40 பைசா திரும்ப வருகிறது. ஆனால் பிஹாருக்கு 96 பைசாவும் உத்தரப்பிரதேசத்திற்கு ஒரு ரூபாய் 79 பைசாவும் திரும்பக் கிடைக்கிறது.

காணொளிக் குறிப்பு, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்: எதிர்கொண்ட சர்ச்சைகளும் பதில்களும்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: