தலைவர் தேர்தல் எப்படி நடக்கும்? காங்கிரஸ் - நீண்ட நடைமுறை; பாஜக - ஆர்.எஸ்.எஸ். அங்கீகாரம்

சோனியா காந்தி - ராகுல் காந்தி.

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், சரோஜ் சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? இந்த கேள்விக்கான விடை அக்டோபரில் கிடைத்துவிடும் என்றாலும் அதற்கு முன்னதாகவே இத்தேர்தல் நடைமுறை குறித்த சலசலப்பு பரவிவருகிறது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து இதுவரை பாஜகவினர் மட்டுமே கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் இந்த முறை காங்கிரஸுக்குள் இருந்தே இது குறித்த கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

முதல் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ஆனந்த் சர்மா இது குறித்து கேள்வி எழுப்பினார்.

புதன்கிழமை, மற்றொரு மூத்த தலைவர் மனீஷ் திவாரி ஆனந்த் சர்மாவின் கருத்தையே எதிரொலிக்கும் வண்ணம் பேசியுள்ளார்.

உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த வேண்டும் என்ற காங்கிரஸ் தலைவரின் கூற்று குறித்து கேள்வி எழுப்பிய அவர், தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மதுசூதன் மிஸ்திரியை ட்விட்டரில் டேக் செய்துள்ள மனீஷ் திவாரி, கட்சியின் வாக்காளர் பட்டியல் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படாத நிலையில், இந்தத் தேர்தல் எப்படி நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்கும்? என்பது கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

தற்போது, காங்கிரஸ் கட்சியில் தேர்தல் நடத்தும் பணியின் தலைவராக மதுசூதன் மிஸ்திரி உள்ளார்.

நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தலுக்கு, காங்கிரஸ் இணையதளத்தில் வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் வெளிப்படைத் தன்மையுடன் வெளியிடப்படுவது அவசியம் என்று திவாரி கூறியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், வாக்காளர் பட்டியலைப் பெற விரும்பும் எந்த உறுப்பினரும் மாநில காங்கிரஸ் கமிட்டியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று மதுசூதன் மிஸ்திரி கூறியுள்ளார். தலைவர் பதவிக்கு யார் வேட்புமனு தாக்கல் செய்தாலும், அந்தப் பட்டியலும் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுசூதன் மிஸ்திரி
படக்குறிப்பு, மதுசூதன் மிஸ்திரி

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான நடைமுறையைப் புரிந்து கொள்ள மதுசூதன் மிஸ்திரியைத் தொடர்பு கொண்டது பிபிசி. ஆனால் அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.

இத்தகைய சூழ்நிலையில், காங்கிரஸில் தலைவர் பதவிக்கான தேர்தல் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை அறிவது முக்கியமாகிறது. இதற்கான பதில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் சாசனத்தில் உள்ளது.

காங்கிரஸ் கட்டமைப்பு

காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பல்வேறு குழுக்களால் ஆனது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி)

காங்கிரஸ் செயற்குழு (CWC)

பிரதேச காங்கிரஸ் கமிட்டி (PCC)

மாவட்ட மற்றும் தொகுதி காங்கிரஸ் கமிட்டி

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் சுமார் 1500 உறுப்பினர்கள் உள்ளனர், அவர்கள் காங்கிரஸ் செயற்குழுவின் (CWC) 24 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்தியா முழுவதும் மொத்தம் 30 பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் உள்ளன. 5 யூனியன் பிரதேசங்களில், 9000-க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டிகள் உள்ளன.

தலைவர் தேர்தல் பொறுப்பு

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள சட்ட விதிகளின்படி, தலைவர் தேர்தலுக்கு முதலில் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டியின் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

மூன்று முதல் ஐந்து உறுப்பினர்களை கொண்ட இந்தக் குழுவை காங்கிரஸ் காரியக் கமிட்டி அமைக்கிறது. இந்த உறுப்பினர்களில் ஒருவர் அதன் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

காங்கிரஸ் தலைவர்கள்.

பட மூலாதாரம், ANI

தற்போது அதன் தலைவராக காங்கிரஸ் தலைவர் மதுசூதன் மிஸ்திரி உள்ளார்.

தேர்தல் நடைபெறும் வரை தேர்தல் கமிட்டியின் உறுப்பினர்கள் அந்த அமைப்பில் எந்த பதவியையும் வகிக்க முடியாது. இந்த கமிட்டியின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள்.

இந்தத் தேர்தல் கமிட்டி பல்வேறு மாநிலங்களின் கட்சித் தேர்தல் கமிட்டியை உருவாக்குகிறது. அந்த கமிட்டி, மாவட்டம் மற்றும் தொகுதியில் தேர்தல் கமிட்டியை உருவாக்குகிறது.

2022 தலைவர் தேர்தலுக்கான முக்கியத் தேதிகள்

பல ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேர்தலுக்கான அறிவிப்பு செப்டம்பர் 22-ம் தேதி வெளியிடப்படும்.

செப்டம்பர் 24 முதல் செப்டம்பர் 30 வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

அனைத்து வேட்பு மனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு, அக்டோபர் 1-ம் தேதி முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான தேதி அக்டோபர் 8 பிற்பகல் 3 மணி வரை.

தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.

அக்டோபர் 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தேர்தல் நடைமுறை

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மாநில காங்கிரஸ் கமிட்டியின் 10 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற, கட்சியின் எந்த உறுப்பினரும் போட்டியிடலாம்.

காங்கிரஸ் சட்ட விதிகளின் படி, தலைவர் தேர்தலுக்கு முதலில் தேர்தல் நடத்தும் அதிகாரி நியமிக்கப்படுகிறார். கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டியின் தலைவர் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.

சோனியா காந்தி - ராகுல் காந்தி.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சோனியா காந்தி - ராகுல் காந்தி.

மாநில காங்கிரஸ் கமிட்டியில் உள்ள 10 பேர் சேர்ந்து, தலைவர் பதவிக்கு எந்த காங்கிரஸ் தலைவரின் பெயரையும் முன்மொழியலாம்.

அத்தகைய பெயர்கள் அனைத்தும் உரிய தேதியில் தேர்தல் அதிகாரி முன் வைக்கப்படும்.

அவர்களில் ஒருவர் ஏழு நாட்களுக்குள் தனது பெயரை திரும்பப் பெறலாம்.

வேட்புமனுவை வாபஸ் பெற்ற பிறகு, தலைவர் பதவிக்கு ஒரே ஒரு வேட்பாளர் இருந்தால், அவர் தலைவராக அறிவிக்கப்படுவார்.

எனவே இம்முறை காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் ஒருவரின் பெயர் மட்டுமே நீடித்தால், அக்டோபர் 8ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரின் பெயரையும் அறிவிக்க வாய்ப்புண்டு.

ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர் இருந்தால்…

ஆனால் இரண்டு பேருக்கு மேல் இருந்தால், தேர்தல் நடத்தும் அதிகாரி அந்தப் பெயர்களை பிரதேச காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்புகிறார்.

வாக்களிக்கும் நாளில், பிரதேச காங்கிரஸ் கமிட்டி (பிசிசி) உறுப்பினர்கள் அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள். பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைமையகத்தில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது.

தலைவர் பதவிக்கு இருவர் போட்டியிட்டால் - வாக்காளர்கள் யாராவது ஒருவருடைய பெயரை எழுதி வாக்குப்பெட்டியில் போட வேண்டும்.

தலைவர் பதவிக்கான போட்டியில் இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இருந்தால் - வாக்காளர் தனது முதல் இரண்டு விருப்பங்களை (விருப்பங்கள்) 1, 2 என்று குறிப்பிடவேண்டும்.

இரண்டு விருப்பங்களுக்கு குறைவாக எழுதுபவர்களின் வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்படும். இருப்பினும், வாக்காளர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட விருப்பங்களை வழங்கலாம்.

பிசிசியில் டெபாசிட் செய்யப்பட்ட வாக்குப் பெட்டி பின்னர் ஏஐசிசி அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.

வாக்கு எண்ணிக்கை

காங்கிரஸ்

பட மூலாதாரம், ANI

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு வாக்குப்பெட்டி வந்தவுடன் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

முதலில் முதல் விருப்ப வாக்குகளின் எண்ணிக்கை நடத்தப்படுகின்றது.

50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெறும் வேட்பாளர் தலைவராக அறிவிக்கப்படுவார்.

ஒருவருக்கு முதல் விருப்பு வாக்குகளில் 50 சதவீத வாக்குகள் கிடைக்காவிட்டால் - முதல் விருப்பத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.

இப்படியாகத் தலைவர் தேர்தல் 'எலிமினேஷன்' முறையில் நடைபெறுகிறது.

இறுதியில், அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் தலைவராக அறிவிக்கப்படுவார்.

சமீபமாக காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது எப்போது?

ராகுல் காந்தி - சோனியா காந்தி

பட மூலாதாரம், PTI

காங்கிரஸின் வரலாற்றில் மிக அரிதாகவே தலைவர் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களாக காங்கிரஸ் அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர் ரஷித் கித்வாய் கூறுகையில், "பிசிசி பிரதிநிதிகள் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. பல்வேறு மாநில காங்கிரஸ் கமிட்டிகளின் பட்டியல்கள் ஒரு குறிப்பிட்ட தலைவருக்குப் பட்டியலை வழங்காது. தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தால், அவர் மாநில காங்கிரஸ் கமிட்டியிடம் சென்று பட்டியலைப் பெற வேண்டும்." என்கிறார்.

இதற்கு ரஷீத் இங்கே ஒரு உதாரணம் தருகிறார்.

2000-ம் ஆண்டு தலைவர் தேர்தலில் சோனியா காந்தியை எதிர்த்து ஜிதேந்திர பிரசாத் போட்டியிட்டபோது, பிரச்சாரத்தின் போது, போபாலில் காங்கிரஸ் அலுவலகத்திலேயே அவருக்கு எதிர்ப்பு எழுந்தது. பல இடங்களில் அவருக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது. பிசிசி பிரதிநிதிகள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் 1997ல் சீதாராம் கேசரிக்கு எதிராக சரத்பவாரும்,ராஜேஷ் பைலட்டும் போட்டியிட்டபோது கொஞ்சம் செல்வாக்கு பெற்றனர். பல இடங்களில் பிரசாரம் செய்தார்கள். இருப்பினும் சீதாராம் கேசரி கிட்டத்தட்ட 70 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்."

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி, இந்தியாவில் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலை வெளிப்படையாக நடத்திய, நடத்திக்கொண்டிருக்கும், நடத்தப்போகும் ஒரே கட்சி காங்கிரஸ் தான் என்று கூறியிருந்தார்.

பாஜகவில் கட்சித் தலைவர் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

ஜே.பி.நட்டா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜே.பி.நட்டா

பா.ஜ.க-வின் சட்ட விதிகளின், குறைந்தபட்சம், 15 ஆண்டுகள் உறுப்பினராக இருப்பவர், கட்சியின் தேசியத் தலைவராக இருக்க முடியும்.

பா.ஜ.,வில், தேசிய தலைவர் தேர்வு, தேசிய கவுன்சில் மற்றும் மாநில கவுன்சில் உறுப்பினர்களை உள்ளடக்கிய தேர்தல் கமிட்டியால் நடத்தப்படுகிறது.

தேசிய தலைவர் பதவிக்கு தேர்தலில் போட்டியிடும் நபரின் பெயரை தேர்தல் கமிட்டியில் உள்ள இருபது உறுப்பினர்களும் கூட்டாக முன்மொழியலாம் என்றும் பாஜகவின் விதிகள் கூறுகின்றன.

தேசிய கவுன்சிலுக்கான தேர்தல்கள் முடிந்துவிட்ட குறைந்தபட்சம் ஐந்து மாநிலங்களில் இருந்து இந்தக் கூட்டு முன்மொழிவு வர வேண்டும். மேலும், வேட்புமனுவில் வேட்பாளரின் ஒப்புதல் அவசியமாக இருக்க வேண்டும்.

எவ்வாறாயினும், பாஜவில் தலைவர் பதவிக்கான தேர்தலை ஒருமித்த கருத்துடன் நடத்துவதாக, பா.ஜ.,வில்,தலைவர் பதவிக்கான தேர்தலை நெருக்கமாக பதிவு செய்யும் பல பத்திரிகையாளர்கள் நம்புகின்றனர். இதில் ஆர்எஸ்எஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. பாஜக தலைவர்கள் முடிவு செய்யும் பெயரை இறுதியாக ஆர்எஸ்எஸ் அங்கீகரிக்கிறது.

சிவப்புக் கோடு
காணொளிக் குறிப்பு, "மஞ்சள் பற்களால் என் கனவு சிதைந்துவிட்டது"

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :