குலாம் நபி ஆசாத் காங்கிரசில் இருந்து விலகல்: ராகுல் காந்தி பற்றி கடுமையாகத் தாக்கி கடிதம் - முழு விவரம்

குலாம் நபி ஆசாத்

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விலகினார்.

நீண்ட விலகல் கடிதத்தை எழுதி கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பிவைத்துள்ளார் அவர்.

அந்த நீண்ட கடிதத்தில் அவர் கூறியுள்ள சில முக்கிய விஷயங்கள்:

1. அரசியல் பார்வை குறைபாட்டால் ஷேக் அப்துல்லா, 1953 ஆகஸ்ட் 9-ம் தேதி கைது செய்யப்பட்டதை அடுத்து காங்கிரசில் சேர்வதே ஒவ்வாத செயலாக காஷ்மீரில் பார்க்கப்பட்ட நிலையில் 1970களின் நடுப்பகுதியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரசில் சேர்ந்தேன். மாணவப் பருவத்தில் இருந்தே மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, சர்தார் பட்டேல், மௌலானா அபுல்கலாம் ஆசாத், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற முன்னோடி விடுதலை வீரர்களாலும், சஞ்சய் காந்தி தனிப்பட்டமுறையில் வலியுறுத்தியதாலும் 1975-76ல் ஜம்மு காஷ்மீர் இளைஞர் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்க ஒப்புக்கொண்டேன். முன்பே கட்சியில் ஒன்றியச் செயலாளராக செயல்பட்டுவந்தேன். இந்திரா காந்தி கைதை கண்டித்து நடத்திய போராட்டத்துக்காக சிறைவாசம் அனுபவித்தேன். சஞ்சய் இறந்த பிறகு உங்கள் கணவர் ராஜீவை இளைஞர் காங்கிரஸ் தேசிய கவுன்சிலில் சேர்த்தேன். இந்திரா, ராஜீவ், நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோர் ஆட்சிகளில் ஒன்றிய அமைச்சராக பணிபுரிந்தேன். 1980கள் முதல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலும் இருந்தேன். தொடர்ந்து 40 ஆண்டுகள் காங்கிரஸ் காரிய கமிட்டியிலும் இருந்தேன். தலைவராக நீங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டு முறை ஆட்சியமைக்க காரணமாக இருந்தீர்கள். மூத்த தலைவர்களின் ஆலோசனைகளைக் கேட்டும் அவர்களுக்கு பொறுப்புகளை ஒப்படைத்தும் நீங்கள் செயல்பட்டதே வெற்றிக்கு காரணம்.

2. ஆனால், ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பிறகு, குறிப்பாக 2013ல் அவரை துணைத் தலைவராக நீங்கள் நியமித்த பிறகு கலந்தாலோசித்து முடிவெடுக்கும் அந்த முறையை அவர் முற்றாக சீரழித்தார். அனுபவம் மிக்க மூத்த தலைவர்கள் ஓரம்கட்டப்பட்டு, முகத்துதி செய்யும் அனுபவமற்ற கும்பல் கட்சி விவகாரங்களை நடத்தத் தொடங்கியது. அவசரச் சட்டம் ஒன்றை ஊடகங்கள் முன்னிலையில் ராகுல் காந்தி கிழித்தது அந்த அனுபவமின்மையின் முக்கிய எடுத்துக்காட்டாக அமைந்தது. காங்கிரஸ் உச்சநிலைக் குழுவில் உருவாக்கப்பட்டு, பிரதமர் தலைமையிலான அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் ஏற்கப்பட்ட அவசரச்சட்டம் அது. இந்த குழந்தைத் தனமான செயல் பிரதமர் அதிகாரத்தின், இந்திய அரசின் மாண்மைக் குலைத்தது. மற்ற எதையும்விட இந்த ஒரு செயல் 2014ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது. அந்த நேரத்தில்தான் வலதுசாரி சக்திகள், சில கார்ப்பரேட் நலன்கள் கூட்டாக மேற்கொண்ட தந்திரமான தாக்குதலுக்கு காங்கிரஸ் இலக்காகி இருந்தது.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராகுல் காந்தி (கோப்புப்படம்).

3. சீத்தாராம் கேசரி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு நீங்கள் தலைவர் பதவியை ஏற்ற பிறகு 1998 முதல் 2013 வரை மூன்று முறை காங்கிரஸ் தலைவர்களின் தீவிர ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன. இந்தக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் எப்போதும் முறையாக அமல்படுத்தப்படவில்லை. குறிப்பாக, 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கட்சிக்குப் புத்துயிர் ஊட்டுவதற்கான விரிவான செயல்திட்டத்தை மற்ற காங்கிரஸ் காரியக்கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனையோடு உருவாக்கி 2013ல் ஜெய்ப்பூரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பரிந்துரையாக அளித்தேன். காங்கிரஸ் காரியக்கமிட்டியால் ஏற்கப்பட்ட பரிந்துரை இது. 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக முறையாக, படிப்படியாக செயல்படுத்தியிருக்கவேண்டிய திட்டம் அது. ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக இந்தப் பரிந்துரை காங்கிரசின் பண்டக அறையில் கிடக்கிறது. உங்களிடமும் ராகுல்காந்தியிடமும் இவற்றை செயல்படுத்தும்படி பலமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். ஆனால், இவற்றைப் பரிசீலிக்கக்கூட முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.

4. உங்கள் தலைமையின்கீழும், பிறகு ராகுல் தலைமையின் கீழும் தொடர்ந்து இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அவமானகரமான தோல்வியை சந்தித்தது. 1914 முதல் 2022 வரை நடந்த 49 சட்டமன்றத் தேர்தல்களில் 39ல் கட்சி தோல்வி அடைந்துள்ளது. 4 தேர்தல்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. 6 முறை கூட்டணி முறையில் ஆட்சியில் பங்கேற்றது. துரதிருஷ்டவசமாக இப்போது காங்கிரஸ் 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்கிறது. இன்னும் இரண்டு மாநிலங்களில் ஆளும் கட்சிகளின் சிறிய கூட்டாளியாக உள்ளது. 2019க்கு பிறகு நிலைமை மிகவும் மோசமானது. விரிவாக்கப்பட்ட காரியக்கமிட்டியில் கட்சிக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த மூத்த தலைவர்களை அவமதித்துவிட்டு தனது தலைவர் பதவியில் இருந்து அவசரகதியில் விலகினார் ராகுல் காந்தி. இந்தக் கூட்டத்தில்தான் நீங்கள் தற்காலிகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். இன்றும் அந்தப் பொறுப்பில் தொடர்கிறீர்கள்.

ராகுல் காந்தி

5. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அமைப்பு சார்ந்த உறுதியை சீரழித்த ரிமோட் கண்ட்ரோல் மாடல், தற்போது காங்கிரஸ் கட்சியில் செயல்படுத்தப்படுகிறது. ராகுல் காந்தியாலும், அவரது பாதுகாவலர்களாலும், அவரது உதவியாளர்களாலும் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளுக்கு நீங்கள் ஒரு முகமாக இருக்கிறீர்கள்.

6. 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நானும் முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள், முதல்வர்கள் உள்ளிட்ட 22 மூத்த தலைவர்களும் கட்சி அதள பாதாளத்துக்கு சென்று கொண்டிருப்பது குறித்து கடிதம் எழுதி கவனப்படுத்த முயற்சி செய்தபோது, கட்சியை கட்டுப்படுத்தும் கும்பல் கொடூரமான முறையில் எங்களைத் தாக்கியது, அவமதித்தது, அவதூறு செய்தது. அந்த கும்பலின் வழிகாட்டுதலின்படி ஜம்முவில் என்னுடைய மாதிரி இறுதிச் சடங்கு நடத்தப்படுகிறது. இந்த ஒழுக்கக்கேட்டை நடத்தியவர்கள் டெல்லியில் கட்சியின் பொதுச் செயலாளர்களாலும், ராகுல் காந்தியாலும் பாராட்டப்படுகிறார்கள். உங்களுக்கும், உங்கள் உறவினர்களுக்கும் எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளில் உங்களுக்காக வாதாடிக்கொண்டிருக்கும், முன்னாள் அமைச்சரவை சகாவான கபில் சிபல் வீட்டின் மீது குண்டர்களை ஏவி தாக்குதல் தொடுத்தது கட்சியை கட்டுப்படுத்தும் அந்த கும்பல்.

ராகுல் சோனியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராகுல் - சோனியா

7. கட்சி மீது உள்ள அக்கறையால் உங்களுக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்களும் செய்த தவறு என்பது, கட்சியின் பலவீனத்துக்கான காரணத்தையும், தீர்வையும் சுட்டிக்காட்டியதுதான். அந்த கருத்துகளை ஆக்கபூர்வமாக, ஒருங்கிணைந்த முறையில் ஆலோசனைக்கு எடுத்துக்கொள்வதற்கு பதில் நாங்கள் வசைபாடப்பட்டோம். அவமதிக்கப்பட்டோம், அவதூறுக்கு உள்ளானோம். மீளமுடியாத இடத்துக்கு காங்கிரஸ் சென்றிருப்பதற்கா காரணம், மற்றவர்களின் முகமூடிகளாக செயல்படுவோர் கட்சித் தலைமைக்கு உயர்த்தப்பட்டதே காரணம். இந்த சோதனை வெற்றி பெறாது. காரணம், கட்சி பெரிய அளவில் சீரழிந்துவிட்டது. மீட்க முடியாத அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது. இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்படுகிற ஒருவர் நூலால் இயக்கப்படும் பொம்மையைப் போலவே இருக்க முடியும். தேசிய அளவில் நமக்கான அரசியல் வெளியை பாஜகவுக்கும் மாநில அளவில் வட்டாரக் கட்சிகளுக்கும் விட்டுக்கொடுத்துவிட்டோம். சீரியசாக இல்லாத தனிநபர் ஒருவர் கையில் கட்சியின் தலைமை கடந்த 8 ஆண்டுகளாக ஒப்படைக்கப்பட்டதுதான் இதற்குக் காரணம்.

8. கட்சித் தேர்தல் மொத்தமும் கேலிக்கூத்தாகிவிட்டது. கட்சியின் எந்த நிலையிலும், நாட்டின் எந்தப் பகுதியிலும் தேர்தல் நடக்கவில்லை. டெல்லியில் உட்கார்ந்துகொண்டு கட்சியைக் கட்டுப்படுத்தும் சிறு கும்பல் தயாரிக்கும் பட்டியல்களில் சில அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களிடம் நெருக்குதல் செய்து கையெழுத்து பெறுகிறார்கள்.

9. ஒரு காலத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தை நடத்திய இயக்கமான காங்கிரசின் சிதைந்த சில பகுதிகளை யார் கட்டுப்படுத்துவது என்பதில் கட்சியை வைத்து மோசடி நடக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையே இதற்குப் பொறுப்பு. இந்திய விடுதலையின் 75வது ஆண்டு விழாவில் இந்த நிலைமை காங்கிரஸ் கட்சிக்குத் தேவையா என்ற கேள்வியை கட்சித் தலைமை கேட்டுக்கொள்ளவேண்டும்.

10. இந்திரா காந்தி காலம் தொடங்கி, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி காலங்களின் ஊடாக உங்கள் குடும்பத்தோடு நெருக்கமான தனிப்பட்ட உறவு உள்ளவன் நான். அந்த அடிப்படையில் உங்கள் தனிப்பட்ட துன்ப துயரங்களில் தனிப்பட்ட முறையில் அக்கறை உள்ளவன். அது எப்போதும் தொடரும். நானும் என்னுடன் கட்சியில் பணியாற்றிய சிலரும், எந்த லட்சியங்களுக்காக எங்கள் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டோமா அவற்றுக்காக காங்கிரஸ் கட்சிக்கு வெளியே பாடுபடுவோம். இந்தியாவை இணைப்போம் யாத்திரையை மேற்கொள்வதற்கு முன்பாக கட்சித் தலைமை, காங்கிரஸை இணைப்போம் யாத்திரையை மேற்கொண்டிருக்கவேண்டும். கணத்த இதயத்தோடு காங்கிரஸ் கட்சியுடனான 50 ஆண்டு பந்தத்தை முடித்துக்கொள்கிறேன். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட எல்லா பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.

இப்படி அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார் குலாம் நபி ஆசாத். இது அந்தக் கடிதத்தின் சுருக்கமான வடிவம்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: