பிகார் விஷ்ணு கோவிலுக்குள் முஸ்லிம் அமைச்சர்: வழக்கு போட்ட பாஜக ஆதரவாளர்

நிதிஷ் குமார்

பட மூலாதாரம், Getty Images

(இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று(26/08/2022) வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து அளிக்கிறோம்.)

பிகாரில் புத்த கயா என்ற இடத்திலுள்ள விஷ்ணு பாதம் என்ற கோயிலுக்கு நிதிஷ் குமாருடன் வந்திருந்த அமைச்சர் முகம்மது இஸ்ரேல் மன்சூரி, கோயில் கருவறை வரை வந்ததாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாஜக கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் விலகி மீண்டும் முதல்வரான பிறகு கடந்த திங்கட்கிழமை விஷ்ணு பாதம் கோயிலுக்கு சென்றார். அப்போது அவருடைய அமைச்சரவை சகாவும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவருமான முகம்மது இஸ்ரேல் மன்சூரியும் முதல்வருடன் இருந்தார்.

இந்தக் கோயிலில் இந்துக்கள் தவிர மற்ற மதத்தினர் அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கான அறிவிப்புப் பலகையும் கோயிலின் வெளியே வைக்கப்பட்டுள்ளது. இதைப் பொருட்படுத்தாமல் அமைச்சர் மன்சூரி கோயிலின் கருவறை வரை வந்ததாகக் கோயில் நிர்வாகத்தினர் அதிருப்தி அடைந்தனர். பிறகு கருவறையைப் புனிதப்படுத்துவதாகக் கூறி சுத்தம் செய்தனர்.

இந்நிலையில் அமைச்சர் மன்சூரி மீது அருகிலுள்ள முசாஃபர்பூரை சேர்ந்த பாஜக ஆதரவாளர் சந்திர கிஷோர் பராசர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், இந்தப் புகார் பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து அமைச்சர் மன்சூரி மீது புகார் பதிவு செய்யக் கோரி நீதிமன்றத்தை சந்திர கிஷோர் அணுகியுள்ளார். இவருடைய மனுவை ஏற்றுக்கொண்ட முசஃபர்பூர் மாவட்ட நீதிமன்றம் இந்த மனுவை செப்டம்பர் 2 அன்று விசாரிக்கவுள்ளது.

சந்திர கிஷோர் தனது மனுவில் அமைச்சர் மன்சூரி, கோயிலில் நுழைந்து இந்து மதத்தை அவமதித்துவிட்டதாகவும் இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

படையில் சேர்க்கப்படும் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான விக்ராந்த் முறைப்படி செப்டம்பர் 2ஆம் தேதியன்று படையில் சேர்க்கப்படுவதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில், இந்திய கடற்படைக்கு விமானம் தாங்கி போர்க்கப்பல் கட்டுவதற்கு கொச்சி கப்பல் கட்டும் தளத்துடன் கடந்த 2007ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்தது. இதன் தொடர்ச்சியாக 2009-ம் ஆண்டில் பணிகள் தொடங்கப்பட்டன. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த கட்டுமானப் பணிகள் முடிந்ததும் கடந்த ஆண்டு முதல் வெள்ளோட்டம் நடந்து வந்தது.

இதைத் தொடர்ந்து வருகிற 2ஆம் தேதியன்று விக்ரந்த் போர்க் கப்பலை பிரதமர் மோதி முறைப்படி படையில் சேர்த்து வைக்கிறார்," என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம் மற்றும் 59 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த விமானந்தாங்கி போர்க்கப்பலுக்கான கட்டுமான செலவு 19,341 கோடி. இந்தக் கப்பலில் பெண் அதிகாரிகள், பெண் அக்னி வீரர்களுக்கான தனித்தனி அறைகள் உட்பட 2,200 அறைகள் உள்ளன. அதிகாரிகள், ஊழியர்கள் என 1,700-க்கும் மேற்பட்டோர் இந்தக் கப்பலில் பணியாற்றவுள்ளனர்.

விக்ராந்த் போர்க்கப்பல் முறைப்படி படையில் சேர்ப்பதற்குத் தயாராக இருப்பதன் மூலம், 40 ஆயிரம் டன்களுக்கு மேல் எடை கொண்ட விமானந்தாங்கி போர்க்கப்பல்களை வடிவமைத்து தயாரிக்கும் திறன் கொண்ட அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகளின் குழுவில் இந்தியாவும் இணைந்துள்ளதாக கடற்படை துணைத்தளபதி எஸ்.என்.கோர்மடே தெரிவித்தார்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

16 ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பொது மன்னிப்பு

திமுக நிறுவனரும் மறைந்த முன்னாள் முதல்வருமான சி.என்.அண்ணாதுரையின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு 16 ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வேலூர் மற்றும் கடலூரிலுள்ள மத்திய சிறைச்சாலைகளில் இருந்த 16 ஆயுள் தண்டனை கைதிகள் இந்தத் திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்டனர். அவர்க்ளில், வேலூர் சிறைச்சாலையில் இருந்து 7 பேரும் கடலூர் சிறைச்சாலையில் இருந்து 9 பேரும் அடங்குவர்.

மேலும், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ், தங்கள் தண்டனைக் காலத்தில் 60% அனுபவித்திருந்த 19 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 15 அன்று வேலூர் மத்திய சிறைச்சாலை 5 கைதிகளை விடுவித்தது.

ஆகஸ்ட் 15 அன்று, வேலூர் மத்திய சிறைச்சாலையில் 5 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

திமுகவை நிறுவிய அண்ணாதுரையின் அடையாளத்தைக் குறிக்கும் வகையிலான பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் 700 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில சட்டமன்றத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து, அரசு வகுத்துள்ள வழிகாட்டுதலின்படி அவர்கள் முன்கூட்டிய விடுதலைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 25 அன்று மேலும் 7 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

"பகுதிவாரியாக, அரசின் உத்தரவைப் பொறுத்து கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்," என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா மேற்கோள் காட்டியுள்ளது.

சிவப்புக் கோடு
காணொளிக் குறிப்பு, இரண்டு வயதில் இருந்து கற்றுக்கொண்ட கலை: உணவுகளை தத்ரூபமாக வரையும் வருணா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :