முத்தலாக் தடைக்குப் பிறகு முஸ்லிம் பெண்களின் நிலை 5 ஆண்டுகளில் முன்னேறியுள்ளதா?

முஸ்லிம் பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முஸ்லிம் பெண்கள் - கோப்புப்படம்
    • எழுதியவர், நியாஸ் ஃபரூக்கி
    • பதவி, பிபிசி, புது டெல்லி

2017 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உடனடி முத்தலாக், அரசியலமைப்புக்கு எதிரானது என்று அறிவித்தது. அந்த ​​​​வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான அஃப்ரீன் ரெஹ்மான்,இந்த தீர்ப்பால் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அவரது வாழ்க்கை நிலையில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. அவருக்கு முத்தலாக் கொடுத்திருந்த கணவர் அவருடன் சமாதானம் செய்ய மறுத்து விட்டார். ஐந்து வருடங்கள் கடந்து விட்டன. எனினும், தனது திருமணம் இப்போது செல்லுபடியாகுமா அல்லது தான் ஒரு விவாகரத்து செய்யப்பட்டவரா என்பது அவருக்கே தெரியவில்லை.

இந்தியாவில் இதுபோன்ற நிலையை எதிர்கொண்டுள்ள முஸ்லிம் பெண் அஃப்ரீன் ரஹ்மான் மட்டும் அல்ல. முத்தலாக் வழக்கின் ஐந்து மனுதாரர்களும் இதே நிலையில்தான் இருப்பதாக மகளிர் உரிமை ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

அதுமட்டுமன்றி, முத்தலாக் இல்லாமல் ( அதாவது விவாகரத்து செய்யாமல்) ஆண்கள் தங்கள் மனைவிகளை விட்டுச் செல்லும் நிகழ்வுகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாகவும் இந்த ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

என்ன நடக்கிறது?

ஹைதராபாத்தில் ஷாஹீன் மகளிர் வளம் மற்றும் நலச்சங்கத்தை நடத்தி வரும் ஜமீலா நிஷாத், முத்தலாக் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து நகரத்தில் உள்ள 20 குடிசைப்பகுதிகளில் தனது அமைப்பினர் நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களைக் கண்டறிந்ததாக கூறுகிறார்.

"நாங்கள் ஆய்வு செய்த 2106 வீடுகளுள் 683 வீடுகளில் கணவர்கள், விவாகரத்து ஏதும் செய்யாமல் பெண்களை அப்படியே விட்டுச் சென்றுள்ளனர்,"என்றார் அவர்.

முஸ்லிம் பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட 'முஸ்லிம் பெண்கள் (திருமணப் பாதுகாப்பு) சட்டம்-2019' தான் நிலைமையை மிகவும் சிக்கலாக்கியுள்ளது என்று பெண் உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முஸ்லிம் பெண்கள்

பட மூலாதாரம், AFP

2017 ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்ற தீர்ப்பு முத்தலாக் நடைமுறையை ரத்து செய்ததை அடுத்து, அரசு இந்த சட்டத்தை இயற்றியது.

இந்த சட்டத்தின்படி, முத்தலாக் ஒரு குற்றமாக கருதப்பட்டது. முத்தலாக் கொடுக்கும் கணவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க இது வகை செய்தது. ஆனால் இந்த சிறை பயம், பெண்களை விவாகரத்து செய்யாமல் அப்படியே விட்டுவிட்டுச் செல்ல வழிவகுத்துவிட்டது. இதன் மூலம் ஆண்கள் தங்கள் பொறுப்புகளை தட்டிக்கழிக்கின்றனர். இது பெண்களுக்கு ஒரு வகையான சட்ட மற்றும் சமூக ரீதியிலான சவாலாக மாறிவிட்டது.

தொடக்கத்தில் விவாகரத்து இல்லாமல் தங்கள் மனைவிகளை விட்டுச்செல்லும் விவகாரங்கள் ஒன்றிரண்டே இருந்தன. ஆனால் 2019 ஆம் ஆண்டில் இந்த சட்டம் இயற்றப்பட்ட பிறகு, விட்டுச்செல்வோரின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது" என்று ஜமீலா கூறுகிறார்.

முஸ்லிம் ஆண்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

மனுதாரர் சொல்வது என்ன?

பெண்களின் உரிமைகளுக்காக செயல்படும் இந்திய முஸ்லிம் மகிளா அந்தோலன் அமைப்பின் இணை நிறுவனர் ஜகியா சோமன், முத்தலாக் வழக்கின் மனுதாரர்களில் ஒருவரும் ஆவார். இவர், "நீதிமன்றத்தின் தீர்ப்பும் அதைத் தொடர்ந்து வந்த சட்டமும் கலவையான முடிவுகளைத் தந்துள்ளதாக" கூறுகிறார்.

"இது முழுமையான பலனை அளிக்காத தீர்ப்பு. நீதிமன்றத்தில் போராடிய இந்த மனுதாரர்கள் யாரையும் அவர்களின் கணவர்கள் திரும்ப சேர்த்துக்கொள்ளவில்லை,"

"இந்த ஐந்து பெண்களில் குறைந்தது நான்கு பேரின் கணவர்கள் மறுமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுள்ளனர். ஆனால், இந்தப் பெண்கள் இன்னும் தனிமையில்தான் உள்ளனர்," என்று ஜகியா சோமன் கூறினார்.

முஸ்லிம் பெண்கள்

பட மூலாதாரம், AFP

விஷயங்கள் மாறுகின்றன

ஆனால், இந்த தீர்ப்பு மற்றும் சட்டம் காரணமாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் உடனடி முத்தலாக் விவகாரங்கள் குறைந்துள்ளன என்பதை பெண்ணுரிமை ஆர்வலர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

இதன் விளைவாக, பெண்கள் தங்கள் உரிமைகள் குறித்து அதிக விழிப்புணர்வை பெறுவதற்கான மாற்றங்களும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளரும், திருமண விவகாரங்கள் குறித்த புத்தகத்தை எழுதியவருமான ஜியாவுஸ்ஸலாம் கூறுகிறார்.

"இந்த தீர்ப்பிற்குப் பிறகு - குறிப்பாக ஷாஹீன் பாக் இயக்கத்திற்கு பிறகு - முஸ்லிம் பெண்களுக்கு குரல் கிடைத்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது முற்றிலும் பலனளிப்பதாக இல்லை,"என்று அவர் தெரிவித்தார்.

அஃப்ரீன் குறித்து பேசியபோது, "சொல்லப்போனால், அவள் முழுமையாக திருமணமானவளும் இல்லை, முழுமையாக விவாகரத்து பெற்றவளும் இல்லை. உச்ச நீதிமன்றத்தை முதலில் அணுகியபோது இருந்த இடத்திலேயே, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அவள் நிற்கிறாள்" என்கிறார் ஜியா.

முஸ்லிம் பெண்கள்

பட மூலாதாரம், EPA

உண்மை என்ன?

சில ஷரியா சட்டங்களின்படி, தலாக்-இ-அஹ்சன் மற்றும் தலாக்-இ-ஹசன் (இஸ்லாமிய விவாகரத்து முறைமைகள்) ஆகியவை உள்ளன. மேலும் அவை மூன்று மாத காலத்தில் வழங்கப்படுகிறது. ஆண் தரப்பிலிருந்து இது ஒருதலைப்பட்சமாக இருக்கும்.

அதேபோல, இஸ்லாத்தில் கணவன் மற்றும் மனைவியைப் பிரிப்பதற்கான பிற வடிவங்களில் குலா (இது பெண்ணின் உத்தரவின் பேரில் நடைபெறுகிறது) மற்றும் முபாரத் (இதற்கு பரஸ்பர ஒப்புதல் தேவை) ஆகியவையும் அடங்கும்.

பெண்கள் ஒருதலைப்பட்சமாக கணவருக்கு 'குலா' வழங்கலாம் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஷாருக் ஆலம் கூறுகிறார்.

"மனைவி தனக்கு குலா வேண்டும் என்று முடிவு செய்தால், உரையாடல் மூலம் பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்யுமாறு ஹாஜி (மதகுரு) நிச்சயமாக அவர்களிடம் கூறலாம். ஆனால் பெண்கள் மெஹர் மற்றும் பிற உரிமைகளை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டால், கணவன் 'குலா'வுக்கு இறுதியில் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்," என்று ஷாருக் ஆலம் கூறுகிறார்.

முஸ்லிம் பெண்கள்

ஆனால் நடைமுறையில் இது மிகவும் சிக்கலானது. சட்டப்பூர்வ நோட்டீஸ் வரும்போது, ​​கணவன் அதற்குப் பதிலளிப்பதில் தாமதம் செய்கிறார் அல்லது பதிலளிக்க மறுக்கிறார் என்று ஷாருக் ஆலம் குறிப்பிடுகிறார்.

இந்த விவகாரம் குறித்து பல பெண்களிடம் பேசிய ஜமீலாவும் அதே முடிவுக்கு வந்துள்ளார்.

சட்டத்துக்கு புறம்பான வழியில் விவாகரத்து செய்தால் அவர்கள் குற்றவாளி ஆகிவிடுவார்கள் என்று முத்தலாக் மீதான தடை மற்றும் அது தொடர்பான சட்டங்கள் கூறுகின்றன. ஆனால் தலாக் செய்யாமல் பெண்களை விட்டுவிட்டால், பெண்கள் கணவரின் நிபந்தனைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிடுவர்.

"தானாக குலா பெறும் அளவிற்கு பெண்ணை துன்புறுத்துவதே தற்போதைய அணுகுமுறையாக உள்ளது. அதனால்தான் இப்போது முத்தலாக்கை விட குலா விவகாரங்கள் அதிகமாக வருகின்றன. இதன் பொருள் மெஹர் மற்றும் நஃப்கா போன்ற பெண்ணின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. "

Banner

அர்ஷியாவின் கதை

23 வயதான ஆர்ஷியா பேகம் 2021 அக்டோபரில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரது மாமியார் வீட்டில் நடந்த துன்புறுத்தல், அவரை விவாகரத்து செய்ய கட்டாயப்படுத்தியது. இருப்பினும் கணவர் விவாகரத்து செய்ய மறுத்து குலா பெற்றுக்கொள்ளும்படி கூறினார்.

"தான் அதற்கு சம்மதிப்பதாகவும், ஆனால் ஒரு நிபந்தனையின் பேரில் தான் குலா பெறுவதாகவும் கணவனிடம் சொன்னேன். குலாவுக்குக் காரணம் தன் மீது இழைக்கப்பட்ட குடும்ப வன்முறை என்று ஒரு காகிதத்தில் எழுதி கையெழுத்துப்போட்டுக்கொடுக்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன்," என்று அர்ஷியா தெரிவித்தார்.

இதற்கு கணவர் சம்மதிக்கவில்லை. வன்முறையைப் பற்றி எழுதாமல் குலா பெறுமாறும், அது செயல்முறையை எளிதாக்கும் என்றும் அர்ஷியாவின் தாயார் சொன்னார்.

"ஆனால் நான் ஏன் இப்படி செய்ய வேண்டும்? என் கணவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் செய்ததற்கு நான் ஏன் பழியை ஏற்க வேண்டும்? வன்முறையில் ஈடுபட்டாலும் சமூகத்தில் அவர்கள் நல்லவர்கள். ஆனால் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்ட பிறகும் நான் ஏன் மோசமானவளாக இருக்கவேண்டும்," என்கிறார் அர்ஷியா.

அர்ஷியாவின் போராட்டம் தொடர்கிறது.

Banner

எல்லா முயற்சிகளுக்குப் பிறகும் தனது கணவருடனான பிரச்னை தீராததால் மீண்டும் திருமணம் செய்து கொள்ள அஃப்ரீன் முயற்சிக்கிறார். ஆனால் அதிர்ஷ்டம் அவருக்கு கைக்கொடுக்கவில்லை.

அஃப்ரீன் - வழக்கின் விளைவுகள்

பெண்ணுரிமைகள் ஆர்வலரான நசீம் அக்தர், "அஃப்ரீன் தனது வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல உதவினார். 'அஃப்ரீனின் வழக்கு மிகவும் பிரபலமாக ஆனது. மக்கள் அஃப்ரீனைப் பார்த்து பயப்படுகிறார்கள்" என்று கூறுகிறார்.

"முத்தலாக் மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான அன்று, அஃப்ரீனின் முகம் ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலிலும் இருந்தது. அவருடைய முதலாளி அவரைப் பார்த்து, உங்கள் கணவருக்கு எதிராக வழக்கு தொடுக்கும் அளவிற்கு நீங்கள் சாமர்த்தியசாலியாக உள்ளீர்கள் என்று கூறி வேலையில் இருந்து உடனடியாக நீக்கிவிட்டார்," என்று நசீம் அக்தர் கூறுகிறார்.

இதுபோன்ற விவகாரங்களில் சமூகத்தில் செல்வாக்கு என்பது எல்லா நேரத்திலும் உதவியாக இருக்கும் என்று சொல்லமுடியாது.

முஸ்லிம் பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

"உதாரணமாக, அஃப்ரீனின் வழக்கைப் பாருங்கள். அவரது கணவர் நன்றாகப் படித்தவர், ஒரு பெரிய நிறுவனத்தில் சட்டக் கல்வியைப் பெற்றார் மற்றும் அவரது தந்தை அரசு வேலையில் இருந்தார். அஃப்ரீனும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர் மற்றும் படித்தவர்தான்,"என்கிறார் நசீம்.

"நிச்சயமாக கீழ் அடுக்கு மக்களிடையே இந்த மனநிலை அதிகம். பெரும்பாலான வழக்குகள் குக்கிராமங்கள், குடிசைப்பகுதிகளில் இருந்து வருகின்றன. அங்கு கல்வி மற்றும் வளங்களின் கடுமையான பற்றாக்குறை உள்ளது,"என்று அவர் குறிப்பிட்டார்.

சட்டம் இருந்தும் பெண்களுக்கு ஏன் இவ்வளவு சிரமம்?

இதற்கான காரணமாக சமூகம் மற்றும் அரசியலை ஷாருக் ஆலம் சுட்டிக்காட்டுகிறார்.

குறிப்பாக முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையேயான விவாகரத்து விகிதங்களில் பெரிய வேறுபாடு இல்லாத நிலையில், அரசு தங்கள் தனிப்பட்ட விவகாரங்களில் ஊடுருவுவதாகவே பல முஸ்லிம்கள் கருதுகின்றனர்.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, திருமணமான ஒவ்வொரு 1000 இந்துக்களில் இருவர் விவாகரத்து பெற்றுள்ளனர் மற்றும் திருமணமான ஒவ்வொரு 1000 இஸ்லாமியர்களில் 3.7 பேர் விவாகரத்து பெற்றுள்ளனர்.

முஸ்லிம் பெண்கள்

பட மூலாதாரம், EPA

மேலும், "இந்தச் சட்டத்தை மிகவும் மேம்பட்டது என்று சொல்லமுடியாது. ஆனால் இதை இன்னும் சிறப்பாக்கி இருக்கலாம். இதில் சில நிபந்தனைகள் இருந்திருக்க வேண்டும். இதில் இரண்டு அல்லது மூன்று விவாகரத்து பிரிவுகள் வைக்கப்பட்டிருக்கலாம். பிரச்சனை வேரிலிருந்தே தீர்க்கப்படுவதை அது உறுதி செய்திருக்கும்,"என்று இந்த சட்டத்தின் தீவிர ஆதரவாளரான ஜகியா கூறுகிறார்.

மேலும், "விவாகரத்து செய்யும் போது பெண்களின் உரிமைகள் என்ன என்பதை சட்டம் சொல்லவில்லை என்பது இரண்டாவது பிரச்னை. சட்டத்தின் மூலம் எல்லாவற்றையும் சாதிக்க முடியாதுதான். ஆனால் அதில் ஒரு குறிப்பையாவது சேர்த்திருக்கலாம்" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

காணொளிக் குறிப்பு, முத்தலாக்: “குற்றவியலில் சேர்ப்பது திருமண முறிவுக்கு வழிவகுக்கும்”

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: