இலங்கையில் சீன கப்பல் - இந்திய கடல் பகுதியில் தீவிரம் அடைந்த கண்காணிப்பு

இந்திய கடற்படை
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீனாவுக்கு சொந்தமான சர்ச்சைக்குரிய விண்வெளி ஆய்வுக் கப்பலான யுவான் வாங்-5 ஆகஸ்ட் 16ஆம் தேதி, இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த நிலையில், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் தாழ்வாக பறந்து கண்காணிப்பதுடன் கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் கடலில் இறங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

யுவான் வாங் - 5 கப்பலில் இருந்தவாறு 750 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இடங்களை கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது. அப்படியென்றால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்தபடியே, இந்தியாவின் மிக முக்கியமான கேந்திர நிலையங்களை இந்த கப்பல் உளவு பார்க்கும் என்பது இந்தியாவின் புகாராக உள்ளது.

எனவே இந்த கப்பலின் வருகையை தடுக்குமாறு இலங்கையிடம் இந்தியா கோரியது.

கடந்த 11ஆம் தேதி இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்து, அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து பின்னர் ஆகஸ்ட் 17ஆம் தேதி புறப்படும் என முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தியா இந்த கப்பலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

யுவான் வாங் 5 கப்பல் - சர்ச்சை என்ன?

பின் யுவான் வாங் 5 கப்பல் - ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை தள்ளிவைக்குமாறு, கொழும்பிலுள்ள சீன தூதரகத்திடம் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகஸ்ட் 5ஆம் தேதி எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தது.

இருப்பினும் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை, சீனாவை பகைத்து கொள்ள கூடாது என அந்நாட்டின் அரசியல் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5-ஐ, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை வெளியுறவுத்துறை கடந்த சனிக்கிழமையன்று அனுமதி வழங்கியது.

இருப்பினும் இந்த கப்பலை நிறுத்த அனுமதிக்கும் விவகாரத்தில் இந்தியா தீவிர அழுத்தம் கொடுத்ததாக சீனா குற்றம்சாட்டிய நிலையில், நிபந்தனைகளுக்கு உள்பட்டு சீன கப்பல் வருவதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியது.

யுவான் வாங் - 5

2007ஆம் ஆண்டில் இந்த யுவான் வாங் 5 கப்பல் சேவையை தொடங்கியபோது, அது ஒரு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் எடை 11 ஆயிரம் டன் எடையாகும். எரிபொருள் நிறுத்தவும், பராமரிப்புக்காகவும் அந்த கப்பல் இலங்கைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் 2017ஆம் ஆண்டு சீனாவுக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

சீனாவிற்கு சொந்தமான விண்வெளி ஆய்வு கப்பலான யுவான் வாங் - 5, இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள நடவடிக்கை, தற்போது சர்வதேச கவனத்தை பெற்று வருகிறது.இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில், இலங்கைக்குள் சீனா நுழைந்துள்ளதாகவும் அதன் அங்கமாகவே தனது கப்பலை அந்நாடு ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கண்காணிப்பை தீவிரப்படுத்திய இந்திய கடற்படை

இந்திய கடற்படை

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே இலங்கை - இந்திய சர்வதேச கடல் எல்லை உள்ளதால் கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் பருந்து மற்றும் மண்டபத்தில் இந்திய கடலோர காவல்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் சர்வதேச கடல் எல்லையில் அந்நிய ஊடுருவல், சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் மற்றும் இலங்கையில் இருந்து தமிழகம் வரும் அகதிகளின் நடமாட்டம் உள்ளிட்டவற்றை கண்காணிப்பது வழக்கமான நடைமுறையே.

ஆனால், இன்று காலை முதல் உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம், தனுஷ்கோடி அரிச்சல்முனை, அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட கடல் பகுதிகளில் தாழ்வாக பறந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதுடன் கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு கட்டி கடலில் இறங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய கடற்படையின் இந்த நடவடிக்கை குறித்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்டபோது, சர்வதேச கடல் எல்லைப்பகுதியில் அந்நிய ஊடுருவலை கண்காணிப்பதற்காகவே காலை முதல் ஹெலிகாப்டர்கள் கடலில் தொடர்ந்து தாழ்வாக பறந்து வருவதாகவும், இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீன தொழில்நுட்ப ஆய்வு கப்பல் ஒன்று இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளதால் இந்திய கடற்படை கண்காணிப்புப் பணிகளை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹோவர்கிராப்ட் கப்பல்கள் மற்றும் இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள் சர்வதேச கடல் எல்லையில் நிறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: