"இலங்கை போரில் காணாமல் போன பலர் பாலியல் தொழிலாளர்கள் ஆக்கப்பட்டுள்ளனர்" - உறவினர்கள் புகார்

இலங்கை

பட மூலாதாரம், KOGULAN

இலங்கையில் இடம்பெற்ற 30 வருட உள்நாட்டுப் போர் காரணமாக காணாமல் போனோரை கண்டறிந்து கொடுக்குமாறு வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் தொடர் போராட்டம் இன்று இரண்டாயிரமாவது நாளை எட்டியிருக்கிறது.

வவுனியா - ஏ9 வீதியில் இந்த தொடர் சுழற்சி முறையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியாவில் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி இந்த போராட்டம் தொடங்கப்பட்டது.

அதேபோன்று, கிளிநொச்சியில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதியும், முல்லைத்தீவில் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதியும் இந்த போராட்டம் தொடங்கப்பட்டது.

2000ஆம் நாள் போராட்டத்தை முன்னிட்டு, வடக்கில் பல பகுதிகளில் இன்று மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

வவுனியாவில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் கொடிகளை ஏந்தியவாறு, சர்வதேசத்திடம் நீதி கோரியிருந்தனர்.

அதேவேளை, காணாமல் போனோரின் உறவுகளது படங்களையும் ஏந்திய இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கிளிநொச்சியிலும் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

கிளிநொச்சியில் திரண்ட உறவினர்கள்

கிளிநொச்சி போராட்டம்

பட மூலாதாரம், KOGULAN

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இன்று (ஆக. 12) காலை 9.30 அளவில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும், காணாமல் போனோருக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பிலும் நீதியான விசாரணை வேண்டும் என வலியுறுத்தியும், ராஜபக்ச குடும்பத்தை கைது செய்து சட்டத்திற்கு முன்பாக நிறுத்த வேண்டும் எனவும் இதன்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜரொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி போராட்டம்

பட மூலாதாரம், kogulan

இந்த 2000 நாட்களில் தாம் பல்வேறு விடயங்களை கற்றுக்கொண்டதாகவும், இவ்வாறு கற்றுக்கொண்ட விடயங்களின் ஊடாக சில உறுதியான முடிவுகளை எடுத்ததாகவும் காணாமல் போனோர் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு எடுத்த முடிவுகளை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

1. தமிழர்களுக்கு வடகிழக்கில் தாயகம் வேண்டும்.

2. இந்த தாயகம் பாதுகாக்கப்பட்டதாக வேண்டும்.

3. பாலியல் வன்கொடுமை, கடத்தல், கொலைகள், இனவழிப்பு போன்றவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நமக்குச் சொந்த இறையாண்மை இருக்க வேண்டும்.

4. ஐக்கிய நாடுகளினால் கண்காணிக்கப்படும் வாக்கெடுப்பு மூலம் நமது பாதுகாப்பை அடைவதற்கான முறையான வழி.

இலங்கை

பட மூலாதாரம், KOGULAN

5. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நல்லெண்ணத்தால் மட்டுமே அனைத்தும் சாத்தியமாகும்.

6. நாம் இறையாண்மையைப் பெற்றால், நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்னையையும் தீர்க்க முடியும், குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிப்பது இலகுவாகும்.

7. எங்கள் குழந்தைகள் எங்கு என்று எங்களுக்குத் தெரியும். அவர்களில் சிலர் பாலியல் அடிமைகளாகவும், வேலைக்காரர்களாகவும், அவர்களில் சிலர் பிக்குகளாகவும், அவர்களில் சிலர் சிங்களவர்களாகவும் மாற்றப்பட்டனர்.

8. வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் தமிழர்களைப் பார்க்க பாவமாக இருப்பதாக கூறியிருந்தார் என்பதை நாம் இன்று சொல்ல விரும்புகிறோம். ஏனெனில் சிங்களவர்கள் தமிழுக்கு எதிராக வேலை செய்ய தமிழர்களை பணம் கொடுத்து உளவாளிகளாகவும், சம்பளம் வாங்கும் கொலைகாரர்களாகவும், பணம் கொடுத்து போதைப்பொருள் கடத்துபவர்களாகவும், பணம் கொடுத்து பாலியல் தொழிலாளர்களாகவும், தமிழ் கலாச்சாரங்களை அழிப்பதற்காகவும் பயன்படுத்துகிறார்கள்.

கிளிநொச்சி

பட மூலாதாரம், KOGULAN

இதேவேளை, இந்த 2000 நாட்கள் தொடர் போராட்டத்தில் கலந்துக்கொண்ட, சுமார் 120க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்புகளை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், இலங்கை அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

''நாங்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் மீது தொடர்ந்தும் நம்பிக்கை வைத்துள்ளோம். இந்தியா மீதான நம்பிக்கையை இழந்து விட்டோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆனால், பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா, இலங்கைக்கு அனைத்து ஆதரவையும் வழங்கியது. தமிழர்களுக்கும் அவர்களின் வாக்குறுதியளிக்கப்பட்ட அரசியல் தீர்மானத்திற்கும் எந்தவிதமான முயற்சியும் இந்தியா எடுக்கவில்லை என்பதை நாம் பார்த்தோம்," என அவர் குறிப்பிட்டார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: