இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் என்ன?

ராஷ்டிரபதி பவன்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க. சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவின் குடியரசுத் தலைவர் தான் நாட்டின் முதல் குடிமகன் மற்றும் நாட்டின் தலைவர். அரசியலமைப்பின்படி, இந்திய ஒன்றியத்தின் நிறைவேற்று அதிகாரங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதால், நாட்டின் நிர்வாகத்தில் அவருக்கு முக்கியப் பங்குண்டு.

இந்திய அரசியமலைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதே குடியரசுத் தலைவரின் அடிப்படைக் கடமை. இந்திய அரசியலமைப்பின் மூலம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை இங்குக் காண்போம்.

குடியரசுத் தலைவரின் நிர்வாகரீதியிலான அதிகாரங்கள்

குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராக இருப்பதால், அவருக்கு இந்திய அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்ட விரிவான நிர்வாக அதிகாரங்கள் உள்ளன. அரசின் அனைத்து முடிவுகளும் குடியரசுத் தலைவரின் பெயரில் எடுக்கப்படுகின்றன.

குடியரசுத் தலைவர் இந்திய பிரதமரையும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் மத்திய அமைச்சர்களையும் நியமிக்கிறார்.

மாநிலங்களின் ஆளுநர்கள், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நிதிமன்றங்களின் நீதிபதிகள், இந்திய தலைமை கணக்காயர், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர், தலைமை தேர்தல் ஆணையர் போன்ற அதிகாரிகளும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.

நாட்டின் தலைவராக, குடியரசுத் தலைவர் இருப்பதால், இந்தியாவுடைய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாகவும் அவர் இருக்கிறார். அதோடு, போரை அறிவிக்கவும் ஒப்பந்தத்தின் மூலம் முடித்து வைக்கவும் அவருக்கு உரிமையுண்டு. ராணுவ தலைமைத் தளபதி, கடற்படை தலைமைத் தளபதி, விமானப்படையின் தலைமைத் தளபதி ஆகியோரை குடியரசுத் தலைவரே நியமிக்கிறார். இருப்பினும், பாதுகாப்புத் துறையின் அதிகாரங்களை முறைப்படுத்துவதும் கட்டுப்படுத்துவதும் நாடாளுமன்றம் தான்.

குடியரசுத் தலைவரின் சட்டரீதியிலான அதிகாரங்கள்

குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் ஓர் அங்கமாக இருக்கிறார். நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவையைக் கொண்டுள்ளது. இதில் குடியரசுத் தலைவர் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக உள்ளார்.

குடியரசுத் தலைவர் இரண்டு அவைகளையுமோ அல்லது நாடாளுமன்ற அவைகளில் ஒன்றையோ ஒத்தி வைக்க முடியும். தேவைப்பட்டால், நாடாளுமன்றத்தின் மக்களவையைக் கலைக்கும் அதிகாரமும் அவருக்கு உண்டு. உதாரணமாக, 1999-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வாஜ்பாய் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கைத் தீர்மானம் தோல்வியடைந்த போது, குடியரசுத் தலைவர் மக்களவையைக் கலைத்தார்.

இருப்பினும், இந்த அதிகாரத்தைச் சில கட்டுப்பாடுகளுடன் மட்டுமே அவரால் செய்ய முடியும். கடைசியாக நடைபெற்ற அமர்விலிருந்து ஆறு மாதங்களுக்குள் மட்டுமே குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். தேவைப்பட்டால் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளையும் ஒருசேரக் கூட்டுவதற்கும் அவருக்கு அதிகாரம் உள்ளது.

குடியரசு தலைவர் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றலாம். அதோடு, தேவைகள் ஏற்பட்டால், ஒரு அவைக்கோ அல்லது இரண்டு அவைகளுக்குமோ குடியரசுத் தலைவர், உரையாற்றுவதைத் தவிர செய்திகளை அனுப்பலாம். பொதுவாக, அமைச்சர்களுடன் அவருக்குக் கடுமையான கருத்து வேறுபாடு இருந்தால் தவிர, அதைச் செய்ய மாட்டார்.

இரண்டு அவைகளிலும் குறிப்பிட்ட அளவு உறுப்பினர்களை குடியரசு தலைவர் நியமிக்கிறார். மக்களவையிலுள்ள மொத்த உறுப்பினர்களில் 530 மாநில உறுப்பினர்களும் 20 யூனியன் பிரதேச உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு உறுப்பினர்களும் அடங்குவர்.

மாநிலங்களவையிலுள்ள மொத்த உறுப்பினர்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உறுப்பினர்களான 238 பேரும் குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படும் 12 உறுப்பினர்களும் அடங்குவர். அனைத்துப் பிரிவினருக்கும் நாடாளுமன்றத்தில் போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கம்.

குடியரசு தலைவர் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

குடியரசுத் தலைவர் விரிவான சட்டமியற்றும் அதிகாரங்களைக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்படும் எந்தவொரு மசோதாவும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். புதிய மாநிலத்தை அங்கீகரிப்பது, மாநில எல்லைகளை மாற்றுவது தொடர்பான மசோதா அவரது பரிந்துரைக்குப் பிறகுதான் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் அறிமுகப்படுத்தப்படும். வர்த்தகம் மற்றும் வர்த்தக சுதந்திரத்தின் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் மாநில மசோதாக்களுக்கு அவருடைய பரிந்துரை தேவைப்படுகிறது.

ஆனால், ஒரு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்தால், நாடாளுமன்ற அவை, இரண்டாவது முறையாக அதைத் திருத்தத்துடனோ அல்லது திருத்தம் இல்லாமலோ மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பித்தால், குடியரசு தலைவர் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 111-இன் கீழ் ஒப்புதல் அளிக்காமல் தவிர்க்க முடியாது. அப்போது அவர் தனது ஒப்புதலை வழங்குவது அவருடைய கடமையாகிறது.

குடியரசு தலைவர் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

இவற்றோடு, குடியரசு தலைவருக்கும் சில நிதிசார்ந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நிதி மசோதா அவருடைய முன் பரிந்துரையுடன் தான் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதோடு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நிதி ஆணையத்தை அமைக்கும் அதிகாரம் அவருக்கு உள்ளது.

எமெர்ஜென்சி அதிகாரங்கள்

இந்தியா முழுவதுமோ, ஒரு மாநிலத்திலோ அல்லது நாட்டின் எந்தப் பகுதியிலும் அவசரநிலையை அறிவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது. அவர் மூன்று வகையான அவசர நிலைகளைப் பிரகடனம் செய்ய முடியும்.

பிரிவு 352-இன் கீழ், போர், அந்நிய ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சி போன்ற காரணங்களை முன்னிட்டு தேசிய அவசர நிலையை அறிவிக்க முடியும்.

356-வது பிரிவின் கீழ் மாநிலங்களில் அரசியலமைப்பு இயந்திரங்கள் தோல்வியடைவதன் காரணமாக மாநில அவசர நிலையை அறிவிக்க முடியும்.

சட்டப்பிரிவு 360-இன் கீழ், இந்தியாவில் நிதி நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதன் காரணமாக, நிதி அவசரசிலை அறிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றம்

பட மூலாதாரம், Getty Images

அவசரகாலத்தின் போது சட்டப்பிரிவு 20 மற்றும் 21-ஐ தவிர மற்ற அடிப்படை உரிமைகளை அமல்படுத்துவதற்காக நீதிமன்றங்களுக்குச் செல்லும் உரிமையை இடைநிறுத்தும் அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு உண்டு. அத்தகைய உரிமைகளை அமலாக்குவதற்காக எந்தவொரு நீதிமன்றத்திலும் நிலுவையிலுள்ள அனைத்து நடவடிக்கைகளும் அவசர காலத்தின்போது இடைநிறுத்தப்படும்.

ஒரு மாநிலத்தில் அவசர நிலை அமலில் இருக்கும்போது, அம்மாநில ஆளுநரின் அதிகாரங்களை குடியரசுத் தலைவர் கைக்கொள்ள முடியும்.

தண்டனைக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 72-ஆவது பிரிவு, குடியரசுத் தலைவருக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை வழங்குகிறது. இதன்படி, எந்தவொரு குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்ட எந்தவொரு நபரின் தண்டனைக்கும் மன்னிப்பு வழங்கவோ, விடுவிக்கவோ, தண்டனையைக் குறைக்கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.

குடியரசுத் தலைவரின் மன்னிப்பு வழங்குதல் மற்றும் பிற உரிமைகள் தொடர்பான முடிவுகள், பிரதமர் அல்லது மக்களவை பெரும்பான்மையினரின் கருத்தைப் பொருட்படுத்தாது. இருப்பினும், பெரும்பாலான சூழ்நிலைகளில், அவர் தனது நிறைவேற்று அதிகாரங்களை பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரிலேயே பயன்படுத்துகிறார்.

காணொளிக் குறிப்பு, பெட்ரோல், டீசல் கிடைக்காமல் சைக்கிளுக்கு மாறும் மக்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: