குடியரசு தலைவர் தேர்தல்: சொகுசு இருக்கையில் டெல்லிக்கு வரும் ‘மிஸ்டர் பேலட் பாக்ஸ்’ வாக்குப் பெட்டிகள்

பட மூலாதாரம், ECI
இந்திய குடியரசு தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு ஜூலை 18ஆம் தேதி முடிவடைந்துள்ளது. இந்த வாக்குகள் ஜூலை 21ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகளை அறிவிப்பதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
இந்த முறை குடியரசு தலைவர் தேர்தல் களத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக பழங்குடியினத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மூவும் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகள், உள்ளிட்ட கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலில் வாக்களிக்க மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள். அந்த வகையில் நடந்து முடிந்த தேர்தலில் 99.12 சதவீத வாக்காளர்கள் வாக்குரிமையை பதிவு செய்துள்ளதாக தேர்தல் நடத்தும் பொறுப்பு அதிகாரியும் மாநிலங்களவை செகரட்டரி ஜெனரலுமான பி.சி. மோதி தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளை டெல்லிக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருக்கிறது. ஆனால், அதை வித்தியாசமாக செய்துள்ளது. அதன் சுவாரஸ்ய தகவல்களை இங்கே வழங்குகிறோம்.
- தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தின் வாக்கு எண்ணும் மையத்திலேயே எண்ணப்படும். இதற்காக அனைத்து மாநிலங்களில் இருந்தும் வாக்குப்பெட்டிகளை விமானத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- இது வழக்கமான நடவடிக்கைதான் என்றாலும் இந்த வாக்குப்பெட்டியை சரக்கு பொருளாக விமானத்தில் கொண்டு வராமல் 'சக பயணி' போல கருதி விமானத்தில் மாநிலத்தில் தேர்தல் நடத்தும் பொறுப்பு அதிகாரியே தமது நேரடி மேற்பார்வையில் டெல்லிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

- இந்திய குடியரசு தலைவர் தேர்தல் எப்படி நடக்கிறது? அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்
- பிபிஇ ஆடையில் ஓபிஎஸ், தனி விமானத்தில் வந்த உதயநிதி - முக்கிய ஹைலைட்ஸ்
- பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மூ அரசியலில் சாதித்தது என்ன?
- குடியரசு தலைவர் தேர்தல்: யஷ்வந்த் சின்ஹா எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் - யார் இவர்?

- நாட்டின் உயர்ந்த மற்றும் முதலாவது அரசியலமைப்பு பதவி குடியரசு தலைவர் என்பதால், அந்த பதவிக்குரியவரை தேர்வு செய்யும் வாக்குகளை இந்த பெட்டிகள் கொண்டிருப்பதால் அதற்கு சிறப்பு கவனிப்பும் இருந்திருக்கிறது.
- வாக்குப்பதிவு முழுமையாக நிறைவடைந்ததும் வாக்குகள் அடங்கிய பெட்டிக்கு அந்தந்த மாநில தேர்தல் அதிகாரி மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் அலுவலர் சீல் வைத்தார். பிறகு அந்த பெட்டி அரசு வாகனத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த மாநில தலைநகர் விமான நிலையங்களுக்கும் கொண்டு வரப்பட்டன.

பட மூலாதாரம், ECI


- விமான நிலையத்தில் அந்த பெட்டியை வழக்கமான சோதனைக்கு உள்படுத்திய பிறகு, அதை தனி வாகனத்தில் தேர்தல் அதிகாரியே விமானத்துக்குள் ஊழியர்கள் உதவியுடன் கொண்டு வந்தார். அந்த விமானத்தில், தேர்தல் அதிகாரி எக்ஸிக்யூட்டிவ் கிளாஸ் விமானத்தில் பயணம் செய்ய பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்பட்டது. அவருக்கு அருகிலேயே தேவைக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டன. இந்த இருக்கைகள், மிஸ்டர் பேலட்பாக்ஸ் என்ற பெயரில் முன்பதிவு செய்யப்பட்டன.

பட மூலாதாரம், ECI
தனி இருக்கையில் வாக்குப்பெட்டி
இப்படியொரு பெயரில் வாக்குப்பெட்டி டெல்லிக்கு கொண்டு வரப்படுவது இதுவே முதல் முறை. அனைத்து மாநில தலைநகரங்களில் இருந்தும் இதே பெயரில்தான் வாக்குப்பெட்டிகள், அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட குறியீட்டு எண்ணுடன் விமானத்தில் கொண்டு வரப்பட்டன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இந்த பெட்டியின் ஒவ்வொரு நடமாட்டமும் புகைப்படமாகவும் காணொளியாகவும் பதிவு செய்யப்பட்டது. அதை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
முதலாவது வாக்குப்பெட்டி டெல்லியில் இருந்து 252 கி.மீ தூரத்தில் உள்ள சண்டீகரில் இருந்து தலைநகருக்கு மாலை 5.30 மணியளவில் வந்தது. அதைத்தொடர்ந்து, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், அசாம், ராஜஸ்தான் ஆகியவற்றில் இருந்து நள்ளிரவில் வாக்குப்பெட்டிகள் விமானத்தில் வந்தன.
தமிழ்நாடு தலைநகர் சென்னையில் இருந்து பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டி, ஏர் இந்தியா விமானம் ஏஐ-538 விமானத்தில் இரவு 11 மணியளவில் டெல்லிக்கு வந்தது. அதை தேர்தல் அலுவலர் ஸ்ரீநிவாசன், சட்டமன்ற துணை செயலாளர் கே. ரமேஷ் ஆகிய அலுவலர்கள் கொண்டு வந்தனர்.

பட மூலாதாரம், ECI
மற்ற மாநிலங்களில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் தலைநகருக்கு கொண்டு வரப்பட்டன.


பட மூலாதாரம், ECI
வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மட்டும் பயண தூரம் மற்றும் விமான புறப்பாடு நேரத்துக்கு ஏற்ப வாக்குப்பெட்டிகளை கொண்டு வர தாமதமாயின. அவை செவ்வாய்க்கிழமை காலையில் பலத்த பாதுகாப்புடன் டெல்லி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.


53 வருட வழக்கம்
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குடியரசு தலைவர் தேர்தலையொட்டி பதிவாகும் வாக்குகள், இதுபோன்ற பயண ஏற்பாடுகளுடன் டெல்லிக்கு வருவது இது முதல் முறை இல்லை. இதற்கு முன்பு அதாவது 1969இல் முதல் முறையாக மிஸ்டர் நெவர் அல்லது மிஸ் நெவர் என்ற பெயரில் வாக்குப்பெட்டிகள் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அப்போதெல்லாம் அவை தேர்தல் அலுவலருடன் கொண்டு வரப்படும் 'உடைமை' ஆகவே கருதப்பட்டன.
ஆனால், இம்முறைதான் வாக்குப்பெட்டிக்காக பிரத்யேக இருக்கை வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் இந்த வாக்குப்பெட்டிகள் பயணிகள் விமான இருக்கைகளில் முதலாவது வரிசையில் அதிக லெக்ஸ்பேஸ் எனப்படும் கால் வைக்க அதிக இடமுள்ள இருக்கையாக பார்த்து முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த இருக்கைக்கு பின்னாலோ பக்கவாட்டிலோ, வேறு பொது பயணிகள் அமர்ந்திருக்காதவாறு அந்த இருக்கைகளும் முன்பதிவு செய்யப்படும். குடியரசு தலைவர் தேர்தலுக்காக வாக்குச்சாவடியில் பயன்படுத்துவதற்காக டெல்லியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட பேனா மை, வாக்களித்ததை உறுதிப்படுத்தும் வகையில் வாக்காளருக்கு போடப்படும் மை உள்ளிட்ட பிற பொருட்களும் இதே விமானத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த வசதிகளை வழங்குவதற்காக இந்திய விமான போக்குவரத்துத்துறையுடன் தேர்தல் ஆணையம் சிறப்பு புரிந்துணர்வை செய்து கொண்டுள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு மிக முக்கிய பிரமுகர் ஒரு மாநிலத்தில் இருந்து தலைநகருக்கு வரும்போது அவருக்கு எத்தகைய பாதுகாப்பு தரப்படுமோ அதே பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாக உள்ளது.

பட மூலாதாரம், ECI
டெல்லி விமான நிலையத்தில் இந்த வாக்குப்பெட்டி தரையிறங்கியதும் அதை மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் வெளியே கொண்டு வரவும் அங்கிருந்து மத்திய ரிசர்வ் காவல் படையினர் பாதுகாப்புடன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வாக்குப்பெட்டிகள் பாதுகாக்கப்படும் அறைக்கு அவற்றை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மிஸ்டர் பேலட் பாக்ஸ் அந்தந்த மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு கொண்டு வரப்படும் நடவடிக்கையை மேற்பார்வையிடவும் ஒருங்கிணைக்கவும் 31 அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













