இந்திய குடியரசுத்துணை தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

பட மூலாதாரம், Getty Images
இந்திய குடியரசுத்துணை தலைவர் தேர்தல் 2022 ஆகஸ்டில் நடைபெற வாய்ப்புள்ளது. குடியரசுத்துணை தலைவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். தற்போதைய குடியரசுத்துணை தலைவர் எம். வெங்கையா நாயுடு 2017, ஆகஸ்ட் 11 ஆம் தேதி பதவியேற்றார்.
இந்தியாவில் குடியரசுத் துணைத்தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை இந்தக் கட்டுரையில் விளக்குகிறோம்.
குடியரசுத்துணைத்தலைவரின் பொறுப்புகள் என்ன?
குடியரசுத் துணைத் தலைவரே மாநிலங்களவையின் தலைவராகவும் இருப்பதால் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியலமைப்பில் குடியரசுத் துணைத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்பு இதுவாகும்.
இது தவிர, குடியரசுத் துணைத் தலைவர் நிறைவேற்ற வேண்டிய சில பொறுப்புகள் உள்ளன. ஏதேனும் காரணத்தால் குடியரசுத் தலைவர் பதவி காலியானால், இந்தப் பொறுப்பை குடியரசுத் துணைத் தலைவர் நிறைவேற்ற வேண்டும். ஏனென்றால் நாட்டின் முதல்குடிமகனான குடியரசுத்தலைவரின் பதவியை காலியாக வைத்திருக்க முடியாது.
படிநிலை அடிப்படையில், குடியரசுத் துணைத்தலைவர் பதவி குடியரசுத் தலைவருக்குக் கீழே மற்றும் பிரதமருக்கு மேலே உள்ளது. பிற நாடுகளுடன் ராஜீய உறவுகளை வலுப்படுத்த குடியரசுத்துணைத்தலைவர் வெளிநாட்டு பயணங்களையும் மேற்கொள்கிறார்.
குடியரசுத்துணைத்தலைவர் தேர்தல் நடைமுறை என்ன?
குடியரசுத்துணைத்தலைவர் தேர்தல் நேரடியானது அல்ல. குடியரசுத் தலைவர் தேர்தலில் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களுடன் கூடவே. தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களும் வாக்களிக்கின்றனர். ஆனால் குடியரசுத்துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.

பட மூலாதாரம், AFP
இரு அவைகளின் நியமன எம்.பி.க்கள் குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியாது. ஆனால் குடியரசுத்துணைத்தலைவர் தேர்தலில் இவர்களும் வாக்களிக்க முடியும்.. இப்படிப் பார்க்கும்போது,குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மொத்தம் 790 வாக்காளர்கள் பங்கேற்பார்கள்.
மாநிலங்களவை
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்: 233, நியமன உறுப்பினர்கள்: 12
மக்களவை
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்: 543, நியமன உறுப்பினர்கள்: 2
மொத்த வாக்காளர்கள்: 790
குடியரசுத் துணைத் தலைவரின் பதவிக்காலம் முடிந்து 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இரு அவைகள் ஒன்றின் பொதுச் செயலாளரை, தேர்தல் அதிகாரியாக தேர்தல் ஆணையம் நியமிக்கும்.
தேர்தல் தொடர்பான பொதுக் குறிப்பை வெளியிட்டு வேட்பாளர்களிடமிருந்து வேட்புமனுக்களை அவர் கோருவார். துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட, ஒரு வேட்பாளருக்கு 20 முன்மொழிபவர்களும் , குறைந்தது 20 வழி மொழிபவர்களும் இருக்க வேண்டும்.
முன்மொழிபவர்களும், வழிமொழிபவர்களும், மாநிலங்களவை அல்லது மக்களவை உறுப்பினர்களாக மட்டுமே இருக்க முடியும். வேட்பாளர் 15000 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதன் பிறகு, தேர்தல் நடத்தும் அதிகாரி வேட்புமனுக்களை பரிசீலிப்பார். தகுதியான வேட்பாளர்களின் பெயர்கள் வாக்குச்சீட்டில் சேர்க்கப்படும்.
இந்தியாவின் குடியரசுத்துணைத்தலைவராக வருவதற்கு என்ன தகுதிகள் தேவை?
சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே இந்தியாவின் குடியரசுத்துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒருவர் தகுதி பெறுவார். அவர் இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும், 35 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும். மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
ஒருவர் இந்திய அரசின் கீழ் அல்லது ஏதேனும் ஒரு மாநில அரசின் கீழ் லாபம் ஈட்டும் பதவியை வகித்தால், அவர் குடியரசுத்துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படத் தகுதியற்றவர். நாடாளுமன்ற அல்லது மாநில சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் குடியரசுத்துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் அந்தப்பதவியை ஏற்றுக்கொண்டவுடன் தனது முந்தைய பதவியை காலி செய்ததாகக் கருதப்படும்.
குடியரசுத்துணைத் தலைவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
குடியரசுத்துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் நடத்தப்படுகிறது. இதில் சிங்கிள் டிரான்ஸ்ஃபரபிள் வோட் சிஸ்டம் எனப்படும் சிறப்பு முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதில் வாக்காளர் ஒரு வாக்கு மட்டுமே அளிக்க வேண்டும் .ஆனால் அவர் விருப்பத்தின் அடிப்படையில் முன்னுரிமையை முடிவு செய்யலாம்.
வாக்குச் சீட்டில் இருக்கும் வேட்பாளர்களில் அவர் தனது முதல் தேர்வு, இரண்டாவது தேர்வு என்று முன்னுரிமை அடிப்படையில் குறியிட்டு வாக்களிப்பார்.
குடியரசுத்துணைத்தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன?
முதலாவதாக, எல்லா வேட்பாளர்களும் முதல் முன்னுரிமையுடன் எவ்வளவு வாக்குகளைப் பெற்றுள்ளனர் என்பது பார்க்கப்படுகிறது. பின்னர் அனைவரும் பெற்ற முதல் முன்னுரிமை வாக்குகள் சேர்க்கப்படும். மொத்த எண்ணை 2 ஆல் வகுத்து, வரும் தொகையில் ஒன்று சேர்க்கப்படும். இப்போது வரும் எண், ஒதுக்கீடு என்று கருதப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையில் ஒரு வேட்பாளர் தொடர்ந்து இருக்க குறைந்தபட்சம் இந்த வாக்குகளை அவர் பெற்றிருக்கவேண்டியது அவசியம்.
முதல் வாக்கு எண்ணிக்கையிலேயே ஒரு வேட்பாளர், வெற்றிக்குத் தேவையான ஒதுக்கீட்டிற்கு சமமான அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றால், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். இது சாத்தியமில்லை என்றால், செயல்முறை முன்னோக்கி கொண்டு செல்லப்படுகிறது. முதல் நடவடிக்கையாக, முதல் வாக்கு எண்ணிக்கையில் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் அவருக்கு முதல் முன்னுரிமை, அளித்த வாக்குச்சீட்டுகள் மற்றும் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் அவருக்குக்கிடைத்த வாக்குசீட்டுகள் மீண்டும் பரிசீலிக்கப்படுகிறது. அவருக்கு அடுத்தபடியாக யாருக்கு இரண்டாவது முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று ஆராயப்படும். பின்னர் இந்த முன்னுரிமை, சம்மந்தப்பட்ட வேட்பாளருக்கு மாற்றப்படும். இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. இந்த வாக்குகளின் கலவையின் காரணமாக, ஒரு வேட்பாளரின் வாக்குகள் கோட்டா எண்ணுக்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ வரும்போது அவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
இரண்டாவது சுற்றின் முடிவில் கூட வேட்பாளர் தேர்வு செய்யப்படவில்லை என்றால், செயல்முறை தொடர்கிறது. குறைந்த வாக்குகள் பெற்ற வேட்பாளர் நீக்கப்படுவார். அவருக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளும், இரண்டாவது வாக்கு எண்ணிக்கையின்போது அவருக்குக் கிடைத்த வாக்குச் சீட்டுகளும் மறு ஆய்வு செய்யப்பட்டு, அதில் யாருக்கு அடுத்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பது பார்க்கப்படும்.
பின்னர் அந்த விருப்பம் அந்தந்த வேட்பாளர்களுக்கு மாற்றப்படும். இந்த செயல்முறை தொடர்கிறது. ஏதாவது ஒரு வேட்பாளரின் வாக்குகள் எண்ணிக்கை ஒதுக்கீட்டிற்கு சமமாக ஆகும் வரை குறைந்த வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள் விலக்கப்படுவார்கள்.
தேர்தல் முடிந்ததும், வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் நடத்தும் அதிகாரி, முடிவை அறிவிப்பார். இதன் பின்னர் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்துக்கும் தேர்தல் முடிவு அனுப்பப்படுகிறது. இதற்குப் பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் பெயரை மத்திய அரசு தனது அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடுகிறது.
குடியரசுத் தலைவர் அல்லது குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் நபர் முன்னிலையில் குடியரசுத்துணைத்தலைவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும். குடியரசுத்துணைத்தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்பினால், அவர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப வேண்டும். குடியரசுத் தலைவரால் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே அது நடைமுறைக்கு வரும்.
எம்.வெங்கைய நாயுடு பற்றிய தகவல்கள்
எம். வெங்கைய நாயுடு 2017, ஆகஸ்ட் 11 ஆம் தேதி குடியரசுத்துணைத்தலைவராக பதவியேற்றார்.
1949 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சாவத்தபாலத்தில் பிறந்தார்.
மாணவப் பருவத்திலேயே அரசியலுக்கு வந்தார்.
குடியரசுத்துணை தலைவர் ஆவதற்கு முன்பு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகவும், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராகவும் இருந்தார்.
மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.

பட மூலாதாரம், Caption-. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
இந்தியாவில் இதுவரை இருந்த குடியரசுத்துணைத்தலைவர்கள்:
வெங்கையா நாயுடுவுக்கு முன் இருந்த 12 குடியரசுத் துணைத்தலைவர்கள்
• டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (மே 13, 1952 முதல் மே 12, 1962 வரை)
• டாக்டர். ஜாகிர் உசேன் (மே 13, 1962 முதல் மே 12, 1967 வரை)
• வி வி கிரி (மே 13, 1967 முதல் மே 3, 1969)
• கோபால் ஸ்வரூப் பதக் (ஆகஸ்ட் 31, 1969 முதல் ஆகஸ்ட் 30, 1974 வரை)
• பி டி ஜாட்டி (ஆகஸ்ட் 31, 1974 முதல் ஆகஸ்ட் 30, 1979 வரை)
• எம் ஹிதாயத்துல்லா (ஆகஸ்ட் 31, 1979 முதல் ஆகஸ்ட் 30, 1984 வரை)
• ஆர் வெங்கடராமன் (ஆகஸ்ட் 31, 1984 முதல் ஜூலை 24, 1987)
• டாக்டர் ஷங்கர் தயாள் சர்மா (செப்டம்பர் 3, 1987 முதல் ஜூலை 24, 1992 வரை)
• கே.ஆர் நாராயணன் (ஆகஸ்ட் 21, 1992 முதல் ஜூலை 24, 1997)
• கிருஷ்ணகாந்த் (ஆகஸ்ட் 21, 1997 முதல் ஜூலை 27, 2002 வரை)
• பைரோன் சிங் ஷெகாவத் (ஆகஸ்ட் 19, 2002 முதல் ஜூலை 21, 2007 வரை)
• மொஹமத் ஹமீத் அன்சாரி (ஆகஸ்ட் 11, 2007 முதல் ஆகஸ்ட் 10, 2017 வரை)
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












