குடியரசு தலைவர் தேர்தல்: பிபிஇ ஆடையில் ஓபிஎஸ், தனி விமானத்தில் வந்த உதயநிதி - முக்கிய ஹைலைட்ஸ்

இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு திங்கட்கிழமை (ஜூலை 18) மாலையில் நிறைவடைந்தது. இந்த தேர்தலையொட்டி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்ற வளாகங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான ஓட்டுகள் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு, ஜூலை 21ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும். அன்றே முடிவகள் அறிவிக்கப்பட்ட பிறகு, அடுத்த குடியரசு தலைவர் ஜூலை 25ஆம் தேதி பதவியேற்பார்.
இந்திய குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை முடிவடைந்தது, 99.12 சதவீத வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்குரிமையை பதிவு செய்தனர் என்று தேர்தல் நடத்தும் பொறுப்பு அதிகாரியும் மாநிலங்களவை செகரட்டரி ஜெனரலுமான பி.சி. மோதி தெரிவித்தார்.
இந்த தேர்தலில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் வாக்களித்தனர். நாடு முழுவதும் உள்ள மாநில சட்டமன்றங்களிலும் வாக்குப்பதிவு நடந்தது.
குடியரசு தலைவர் தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக திரெளபதி முர்மூவும் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், வாக்குப்பதிவு நடந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி பி.சி. மோதி, "இந்த தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட 771 எம்பிக்களில் 763 எம்.பிக்களும் 4,025 எம்எல்ஏக்களில் 3,991 எம்எல்ஏக்களும் வாக்குரிமை செலுத்தினர்," என்று கூறினார்.
முக்கிய ஹைலைட்ஸ்

- குடியரசு தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் சிவசேனை கட்சியில் இருந்து தலா இரண்டு எம்பிக்களும், காங்கிரஸ், சிவசேனை, சமாஜ்வாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகளில் இருந்து தலா ஒருவரும் வாக்களிக்கவில்லை.
- ஒடிஷாவை சேர்ந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரும் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநருமான முர்மூவுக்கு ஜார்கண்டில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஆதரவு மட்டுமின்றி ஒடிஷாவில் ஆளும் நவீன் பட்நாயக்கின் ஆதரவும் கிடைத்தது.
- இதேபோல, பிகாரில் ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனை கட்சியில் இரு துருவங்களாக பிரிந்து கிடக்கும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியும் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே அணியும் முர்மூவுக்கே தங்களுடைய ஆதரவு என்று அறிவித்திருந்தனர்.
- ஆரம்பத்தில் உத்தவ் தாக்கரே அணி, எதிர்கட்சிகளின் பொது வேட்பாளருக்கே தங்களுடைய ஆதரவு என்று கூறிய வேளையில், அக்கட்சியின் 16 எம்.பிக்கள் உத்தவ் தாக்கரேவை சந்தித்து முர்மூவை ஆதரிக்கப் போவதாக கூறியதால் தமது நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொண்டார்.

பட மூலாதாரம், Congress
- எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரை தேர்வு செய்ய, ஆரம்பம் முதல் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர் சரத் பவார். அவர் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை. இதேபோல ஃபரூக் அப்துல்லாவும் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை.
- நீதிமன்ற உத்தரவு காரணமாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8ஆவது பிரிவின்படி அனந்த் குமார் சிங், மஹேந்திர ஹரி தால்வி ஆகியோர் இந்த தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெறவில்லை.
- மாநிலங்களவையில் தற்போது ஐந்து உறுப்பினர்களுக்கான இடங்களும் மாநில சட்டமன்றங்களில் ஆறு இடங்களும் காலியாக உள்ளன. அதனால், வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக நாடு முழுவதும் 4,796 உறுப்பினர்கள் (எம்.பி, எம்எல்ஏக்கள்) தகுதி பெற்றிருந்தனர். அதில் 4,754 பேர் வாக்குரிமை செலுத்தினர். 44 எம்பிக்கள் அவர்கள் வசிக்கும் மாநிலத்தில் உள்ள சட்டமன்றத்திலேயே வாக்குரிமை செலுத்தினர். 9 எம்எல்ஏக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குரிமை செலுத்தினர். இரண்டு எம்எல்ஏக்கள் அவர்கள் வசிக்காத வேறு மாநில சட்டமன்றத்தில் வாக்குரிமை செலுத்தினர்.
- தமிழ்நாடு, சிக்கிம், புதுச்சேரி, மணிப்பூர், மத்திய பிரதேசம், கர்நாடகா, கேரளா, இமாச்சல பிரதேசம், குஜராத், கோவா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 100 சதவீத வாக்குகள் பதிவாயின.
- தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த எதிர்கட்சி துணைத் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மருத்தவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தில், சட்டமன்ற வளாகத்துக்கு வந்து இரண்டு நேரம் காத்திருந்து பிறகு வாக்குரிமையை செலுத்திச் சென்றார். அவர் வருவதையொட்டி சட்டமன்ற வளாகத்தில் வாக்குச்சாவடி அறையில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அனைவரும் பிபிசி கிட் எனப்படும் பாதுகாப்பு கவச ஆடையை அணிந்திருந்தனர். ஓபிஎஸ் வந்து சென்றதும் அந்த அறை மற்றும் இயந்திரங்கள் முற்றிலுமாக சுத்திகரிப்பான்கள் தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.

- இதேபோல, மூன்று தினங்களுக்கு முன்பு திமுக எம்எல்ஏவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தாய்லாந்துக்கு சென்றிருந்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்து வரும் 'மாமன்னன்' படத்தில் ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் நடப்பதையொட்டி அதில் கலந்து கொள்ள உதயநிதி ஸ்டாலின் சென்றிருந்தார்.
- இந்த நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் வாக்களிக்க வரமாட்டார் என்று காலையில் இருந்தே தகவல்கள் வெளியாயின. ஆனால், சென்னைக்கு தனி விமானத்தில் வந்த உதயநிதி, பிற்பகல் 3.30 மணிக்கு மேல் தலைமைச் செயலகத்துக்கு வந்து வாக்குரிமையை செலுத்தினார்.
புதுச்சேரியில் வாக்குச்சீட்டில் முத்திரை குத்தாத எம்எல்ஏ

- புதுச்சேரியில் அதன் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்குரிமை செலுத்திய நிலையில், உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ நேரு வாக்குரிமை செலுத்தி விட்டு வெளியே செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி, அனைவரையும் அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.
காரணம், வாக்குரிமை செலுத்தச் சென்ற அவர், வாக்குச்சீட்டில் எந்தவொரு வேட்பாளருக்கோ வாக்களிக்கும் வகையில் முத்திரையை குத்தாமல் வெறும் வாக்குச்சீட்டை வாக்குப்பெட்டியில் போட்டு விட்டதாகத் தெரிவித்தார்.
இது குறித்து காரணம் கேட்டதற்கு, "பாஜக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணிகளுக்கு வாக்களிக்க எனக்கு விருப்பமில்லை. அதனால் நடுநிலை ஆக இருக்கும் நான் எனது ஜனநாயக கடமையை ஆற்றும் விதமாக வாக்களிக்க வந்தேன். முத்திரை குத்தப்படாத எனது வாக்குச்சீட்டை வாக்குப் பெட்டிக்குள் போட்டேன்," என்று தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













