திரௌபதி முர்மூ: பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் அரசியலில் சாதித்தது என்ன?

திரௌபதி முர்மு

பட மூலாதாரம், Droupadi Murmu Family

    • எழுதியவர், ரவி பிரகாஷ்
    • பதவி, பிபிசி ஹிந்தி

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 29ஆம் தேதி நடைபெறும். ஜூலை 18ஆம் தேதி வாக்குப்பதிவும், ஜூலை 21ஆம் தேதி முடிவும் அறிவிக்கப்படும். ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் குடியரசுத் தலைவர் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலின்போது பிகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்தை தனது வேட்பாளராக பாஜக நிறுத்தியது. இம்முறை ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக இருந்த திரௌபதி முர்மூ தேர்தலில் களம் இறக்கப்பட்டுள்ளார்.

திரௌபதி முர்மு, ஜார்கண்டின் முதல் பெண் மற்றும் பழங்குடி ஆளுநராக இருந்தார். பின்னர் அவர் தனது சொந்த மாநிலமான ஒடிஷாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ராய்ரங்பூரில் வசிக்கிறார். இது அவரது சொந்த கிராமமான பைதாபோசியின் வட்டார தலைமையகம் ஆகும். ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக அவர் நீண்ட காலம் (ஆறு ஆண்டுகளுக்கு சற்று அதிகமாக) பதவி வகித்தார்.

திரௌபதி முர்மு இந்தியாவின் முதல் பழங்குடியின மற்றும் இரண்டாவது பெண் குடியரசுத்தலைவராக ஆகும் நிலையில் இருக்கிறார். அவர் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் என்பதால், வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

இந்தப் பதவிக்கு எதிர்க்கட்சிகள் யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்தியுள்ளன.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான யஷ்வந்த் சின்ஹா, ஜார்கண்டில் உள்ள ஹசாரிபாக் தொகுதியில் இருந்து பாஜக மக்களவை எம்.பி.யாகவும், இந்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். அவர் நீண்ட காலமாக பாஜகவின் முக்கிய தலைவராக இருந்தார். ஆனால் சமீப ஆண்டுகளில் அவர் பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக அதிக அளவில் குரல் கொடுத்துவந்தார். இறுதியில் அவர் பாஜகவை விட்டு வெளியேறினார்.

பின்னர் அவர் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார். அவரது மகனும் ஹசாரிபாக் மக்களவை எம்பியுமான ஜெயந்த் சின்ஹா இப்போதும் பாஜகவில் உள்ளார். தந்தைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமா அல்லது கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமா என்ற குழப்பம் ஜெயந்த் சின்ஹாவுக்கு இருக்கும்.

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் இரு முக்கிய வேட்பாளர்களும் ஜார்க்கண்டுடன் தொடர்புடையவர்களாக இருப்பது இதுவே முதல் முறை. இதன் காரணமாக, இந்த சிறிய மாநிலம் திடீரென தலைப்புச்செய்திகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

திரௌபதி முர்மூ பற்றிய முக்கிய தகவல்கள்

பாஜக தலைவர் ஜகத் பிரகாஷ் நத்தா ஜூன் 21 மாலை குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வேட்பாளராக திரௌபதி முர்மூவின் பெயரை அறிவித்தபோது முர்மூ, புதுதில்லியில் இருந்து 1600 கிமீ தொலைவில் உள்ள ராய்ரங்பூரில் (ஒடிஷா) தனது வீட்டில் இருந்தார்.

இதற்கு ஒரு நாள் முன்னதாக, ஜூன் 20ஆம் தேதி அவர் தனது 64வது பிறந்தநாளை மிகவும் எளிமையாகக் கொண்டாடினார். 24 மணி நேரத்திற்குப் பிறகு நாட்டின் மிகப்பெரிய பதவிக்கு ஆளும் கட்சியிலிருந்து தான் வேட்பாளராக நிறுத்தப்படப் போகிறோம் என்பதை அவர் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார் என்றே தோன்றுகிறது. ஆனால் அது நடந்ததால், இப்போது எல்லா ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

திரௌபதி முர்மு

பட மூலாதாரம், Droupadi Murmu Family

"நான் குடியரசுத்தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டதில் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகிறேன். தொலைக்காட்சி மூலம் இதை நான் தெரிந்துகொண்டேன். குடியரசுத்தலைவர் பதவி, அரசியல் சாசன பதவி. நான் இந்தப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டு மக்களுக்காக பாடுபடுவேன். இந்த பதவிக்கான அரசியலமைப்பு விதிகள் மற்றும் உரிமைகளின்படி பணியாற்ற விரும்புகிறேன். இதற்கு மேல் என்னால் தற்போது எதுவும் கூற முடியாது," என்று தனது பெயர் அறிவிக்கப்பட்டபிறகு, உள்ளூர் ஊடகங்களிடம் அவர் கூறினார்.

இருப்பினும் அவரது பெயர் குறித்த விவாதங்கள் ஏற்கனவே அரசியல் தளங்களிலும் ஊடகங்களிலும் இருந்தன. 2017-ம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலின்போதும் அவரது பெயர் அதிகமாக அடிபட்டது. ஆனால் கடைசி நேரத்தில் பிகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக நிறுத்தியது. அவர் தேர்தலில் வெற்றி பெற்றார். அவரது பதவிக்காலம் ஜூலை 24ம் தேதி முடிவடைகிறது.

எழுத்தராக இருந்த திரௌபதி முர்மூ

திரௌபதி முர்மூ, புவனேஷ்வரில் உள்ள ரமாதேவி மகளிர் கல்லூரியில் 1979 இல் பி.ஏ. தேர்ச்சி பெற்றார். ஒடிஷா அரசில் எழுத்தராக (clerk) தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். அப்போது நீர்ப்பாசனம் மற்றும் எரிசக்தி துறையின் இளநிலை உதவியாளராக இருந்தார். பிற்காலத்தில் அவர் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

ராய்ரங்பூரில் உள்ள ஸ்ரீ அரவிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கௌரவ ஆசிரியராக அவர் இருந்தார். அவர் பார்த்த நாட்களில், ஒரு கடின உழைப்பாளியாக அவர் அங்கீகரிக்கப்பட்டார்.

திரௌபதி முர்மு

பட மூலாதாரம், IPRD

திரௌபதி முர்மூவின் அரசியல் வாழ்க்கை

திரௌபதி முர்மு 1997ஆம் ஆண்டு ராய்ரங்பூர் நகர் பஞ்சாயத்து தேர்தலில் வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் நகர பஞ்சாயத்தின் துணைத் தலைவராக ஆக்கப்பட்டார்.

அதன்பிறகு அவர் அரசியலில் தொடர்ந்து முன்னேறினார். மேலும் இரண்டு முறை (2000 மற்றும் 2009 ஆண்டுகள்) ராய்ரங்பூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து பாஜக டிக்கெட்டில் எம்எல்ஏ ஆனார். முதல் முறையாக எம்.எல்.ஏ ஆன பிறகு, 2000 முதல் 2004 வரை நவீன் பட்நாயக் அமைச்சரவையில், சுயேச்சைப் பொறுப்புடன் மாநில அமைச்சராக இருந்தார்.

அவர் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக சுமார் இரண்டாண்டுகளும், மீன்வளத் துறை மற்றும் கால்நடை வளத் துறை அமைச்சராக சுமார் இரண்டு ஆண்டுகளும் பதவி வகித்தார். அப்போது ஒடிஷாவில், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.

திரௌபதி முர்மு

பட மூலாதாரம், IPRD

2009-ம் ஆண்டு இரண்டாவது முறையாக எம்எல்ஏ ஆனபோது அவரிடம் வாகனம் எதுவும் இல்லை. அவரது மொத்த இருப்பு 9 லட்சம் ரூபாய் மட்டுமே. மேலும் அவருக்கு நான்கு லட்சம் ரூபாய் கடனும் இருந்தது.

தேர்தலின்போது அவர் அளித்த சொத்து வாக்குமூலத்தின்படி, அவரது கணவர் ஷியாம் சரண் முர்முவின் பெயரில் பஜாஜ் சேடக் ஸ்கூட்டர் மற்றும் ஸ்கார்பியோ வாகனம் இருந்தது. ஒடிஷாவில் சிறந்த எம்எல்ஏக்களுக்கான நீலகண்டன் விருதையும் அவர் பெற்றுள்ளார்.

2015ஆம் ஆண்டு அவர் ஆளுநராக பதவியேற்பதற்கு முன்புவரை மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பாஜக தலைவராக இருந்தார். 2006 முதல் 2009 வரை பாஜகவின் எஸ்டி (பட்டியலிடப்பட்ட சாதி) மோர்ச்சாவின் ஒடிஷா மாநிலத் தலைவராக இருந்துள்ளார்.

பாஜக எஸ்டி மோர்ச்சாவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இரண்டு முறை இருந்துள்ளார். 2002 முதல் 2009 வரையிலும், 2013 முதல் ஏப்ரல் 2015 வரையிலும், இந்த மோர்ச்சாவின் தேசிய செயற்குழு உறுப்பினராக அவர் இருந்தார். அதன் பிறகு அவர் ஜார்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் பாஜகவின் தீவிர அரசியலில் இருந்து விலகினார்.

ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர்

2015 மே 18 ஆம் தேதி அவர் ஜார்கண்டின் முதல் பெண் மற்றும் பழங்குடி ஆளுநராக பதவியேற்றார். அவர் ஆறு ஆண்டுகள், ஒரு மாதம் மற்றும் 18 நாட்கள் இந்த பதவியை வகித்தார். ஐந்தாண்டு பதவிக் காலம் முடிந்த பிறகும் பதவியில் இருந்து நீக்கப்படாத ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் ஆளுநர் இவர்.

அவர் இங்கு பிரபலமான ஆளுநராக இருந்தார். ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் ஆகிய இரு தரப்பிலுமே அவருக்கு நற்பெயர் இருந்தது.

திரௌபதி முர்மு

பட மூலாதாரம், IPRD

அவர் தனது பதவிக்காலத்தில் பல முக்கிய முடிவுகளை எடுத்தார். சமீப ஆண்டுகளில், சில ஆளுநர்கள் அரசியல் ஏஜெண்டுகள் போல் செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், ஆளுநராக இருந்த திரௌபதி முர்மு இது போன்ற சர்ச்சைகளில் சிக்காமல் விலகியிருந்தார்.

அவரது பதவிக்காலத்தின்போது, பாஜக கூட்டணியின் முந்தைய ரகுபர் தாஸ் அரசிடமும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியின் தற்போதைய ஹேமந்த் சோரேன் அரசிடமும், தங்கள் சில முடிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு அவர் அறிவுறுத்தினார். அத்தகைய சில மசோதாக்களை அவர் தாமதமின்றி திருப்பி அனுப்பினார்.

திருப்பி அனுப்பப்பட்ட சட்டத் திருத்த மசோதா

2017 இன் ஆரம்ப மாதங்கள். ஜார்க்கண்டில் பாஜக தலைமையிலான ரகுபர் தாஸ் அரசு இருந்தது. பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவுடன் ரகுபர் தாஸின் உறவு மிகவும் வலுவானதாகக் கருதப்பட்டது.

பழங்குடியினரின் நிலங்களைப் பாதுகாக்க ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டம் (சிஎன்டி சட்டம்) மற்றும் சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம் (எஸ்பிடி சட்டம்) ஆகியவற்றின் சில விதிகளைத் திருத்த அந்த அரசு முன்மொழிந்தது.

எதிர்க்கட்சிகளின் கூச்சல் மற்றும் வெளிநடப்புக்கு மத்தியில், ரகுபர் தாஸ் அரசு அந்த திருத்த மசோதாவை ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்கு இது அனுப்பப்பட்டது. அப்போது ஆளுநராக இருந்த திரௌபதி முர்மு, இந்த மசோதாவை 2017 மே மாதம் கையெழுத்திடாமல் அரசுக்கு திருப்பி அனுப்பினார். பழங்குடியினருக்கு இதனால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அரசால் பதில் சொல்ல முடியவில்லை, எனவே இந்த மசோதா, சட்ட வடிவம் பெற முடியவில்லை.

திரௌபதி முர்மு

பட மூலாதாரம், IPRD

அப்போது பாஜக தலைவரும், மக்களவையின் முன்னாள் துணை சபாநாயகருமான கரிய முண்டாவும், முன்னாள் முதல்வர் (தற்போதைய மத்திய அமைச்சர்) அர்ஜுன் முண்டாவும், இந்த மசோதாவை எதிர்த்து ஆளுநருக்கு கடிதம் எழுதினர். அந்த நேரத்தில், ஜாம்ஷெட்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய திரௌபதி முர்மு, இந்தத் திருத்த மசோதாவுக்கு எதிராக ஆளுநர் அலுவலகத்திற்கு சுமார் 200 ஆட்சேபங்கள் வந்திருப்பதாகக்கூறினார்.

இந்த நிலையில் அதில் அவர் கையெழுத்திடும் கேள்வியே எழவில்லை. "சில விஷயங்களை தெளிவுபடுத்துமாறு அரசிடம் நான் கேட்டுள்ளேன்,"என்று அப்போது அவர் தெரிவித்தார்.

இந்த நேரத்தில் அவர் டெல்லி சென்று அங்கு பிரதமர் உள்ளிட்ட சில முக்கிய அமைச்சர்களை சந்தித்து பேசினார். முன்னதாக, அப்போதைய தலைமைச் செயலர் ராஜ்பாலா வர்மா ஜூன் 3-ஆம் தேதி ஆளுநரையும், ஜூன் 20-ஆம் தேதி முதலமைச்சர் ரகுபர் தாஸையும் சந்தித்துப் பேசியபோதும், திரௌபதி முர்மு மீது அது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கை

ராய்ரங்பூரிலிருந்து (ஒடிஷா) ரைசினா ஹில்ஸை (குடியரசுத்தலைவர் மாளிகை) அடைவதற்கான போட்டியில் உள்ள திரௌபதி முர்மூவின் ஆரம்பகால வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தது.

இந்தியா சுதந்திரம் அடைந்து சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு, மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பைதாபோசி கிராமத்தில் 20 ஜூன் 1958 ஜூன் 20 ஆம் தேதி, பிரஞ்சி நாராயண் டுடுவின் மகளாக அவர் பிறந்தார். அவர் சந்தால் பழங்குடியினத்தை சேர்ந்தவர். அவரது தந்தை பஞ்சாயத்து தலைவராக இருந்துள்ளார். திரெளபதி முர்மூ குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த முதல் குடியரசுத்தலைவராக அவர் இருப்பார்.

அவரது சொந்த வாழ்க்கை பற்றிய பல விஷயங்கள் பொதுவெளியில் இல்லை. அவர் ஷ்யாம் சரண் முர்முவை மணந்தார். ஆனால் அவர் இளம் வயதிலேயே இறந்துவிட்டார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். ஆனால் அதில் இரண்டு மகன்களும் அகால மரணமடைந்தனர்.

திரௌபதி முர்மு

பட மூலாதாரம், Droupadi Murmu Family

ராஞ்சியில் வசிக்கும் அவரது மகள் இதிஸ்ரீ முர்மூ மட்டுமே எஞ்சியிருக்கும் அவரது ஒரே குழந்தை. அவர் கணேஷ் சந்திர ஹெம்ப்ரம் என்பவரை மணந்தார். ராய்ரங்பூரில் வசிக்கும் இவருக்கு ஆத்யஸ்ரீ என்ற மகள் உள்ளார். ஆளுநராக இருந்தபோது, திரௌபதி முர்மு தனது மகள்,மருமகன் மற்றும் பேத்தியுடன் சில குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவர் பெரும்பாலும் கோவில்களுக்குச் செல்வார். அது தொடர்பான படங்கள் அப்போது ஊடகங்களில் வெளிவந்தன. இது தவிர, அவரது குடும்பத்தினர் குறித்த அதிக தகவல்கள் கிடைப்பதற்கு இல்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: