ரப்பர் ஆணுறுப்பு சர்ச்சை: மகாராஷ்டிராவில் குடும்பக் கட்டுப்பாடு தொகுப்பில் ரப்பராலான ஆணுறுப்பு இருப்பதற்கு எதிர்ப்பு

பட மூலாதாரம், BBC Marathi
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளூர் சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்தும் குடும்பக் கட்டுப்பாடு கிட்டுகளில் ரப்பர் ஆண்குறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகப்பேறு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக இந்த கிட்டுகளை பயன்படுத்தும் பெண் சுகாதாரப் பணியாளர்களுக்கு, இந்த ரப்பர் மாதிரிகள் சங்கடத்தை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
ஆனால் சில பணியாளர்கள், இதே போன்ற மாதிரிகளை எந்த பிரச்சனையும் இல்லாமல் முன்னர் பயன்படுத்தியுள்ளதாக கூறுகிறார்கள்.
கிட்டில் ஒரு ரப்பர் கருப்பையும் உள்ளது. ஆனால் இது எந்த எதிர்வினையையும் தூண்டவில்லை.
இந்தியாவின் ஆரம்ப மற்றும் சமூக சுகாதாரத் திட்டங்களில் முக்கியமான பகுதியாக இருக்கும், 'ஆஷா' என்று அழைக்கப்படும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்களுக்கு இந்த கிட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
அவர்கள் வீடு வீடாகச் சென்று மகப்பேறு ஆரோக்கியம் மற்றும் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவது குறித்து மக்களுக்கு எடுத்துரைப்பது உட்பட பலவிதமான கடமைகளைச் செய்கிறார்கள்.
பாலுறவு பற்றி வெளிப்படையாகப் பேசுவது என்பது இந்தியாவின் பல பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் உள்ள விஷயமாக இருப்பதால், இதற்கு பொதுவாக அதிக நாசூக்கு தேவைப்படுகிறது.
ஆணுறுப்பு மாதிரியை உள்ளடக்கிய சுமார் 25,000 கிட்டுகள் மாநிலம் முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஊரக சுகாதார மையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும் புல்தானா என்ற ஒரு மாவட்டத்தில் இருந்து மட்டுமே இது எதிர்மறையான கருத்துக்களைப் பெற்றுள்ளது என்றும் மகாராஷ்டிராவின் பொது சுகாதாரத் துறையின் இயக்குநர் டாக்டர் அர்ச்சனா பாட்டீல் பிபிசி மராத்தியிடம் கூறினார்.

பட மூலாதாரம், BBC Marathi
புல்தானாவைச் சேர்ந்த ஏழு ஆஷா பணியாளர்களிடம் ஆணுறுப்பு மற்றும் கருப்பையின் மாதிரிகளை எடுத்துச் செல்வதில் சங்கடம் இருக்கிறதா என்று பிபிசி மராத்தி கேட்டது. அவர்களில் இருவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். மக்கள் பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பேசத் தயங்கும் கிராமப்புறங்களில் இந்த மாடல்களைக் காட்டுவது கொஞ்சம் சங்கடமாக இருக்கும் என்று வேறு இரண்டு பேர் சொன்னார்கள். ஆனால் இது தங்களின் வேலையின் ஒரு பகுதி என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தேவைப்பட்டால் விளக்குவதற்கு மாதிரியைப் பயன்படுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று மீதமுள்ள மூவர் கூறினர்.அவர்களில் யாரும் தங்கள் பெயர்களை வெளியிட விரும்பவில்லை.
மாதிரிகளைப் பயன்படுத்த யாரும் கட்டாயப்படுத்தப்படவில்லை என்று டாக்டர் பாட்டீல் கூறினார்.
"இந்தப் பிரச்சனைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதில் சுகாதார ஊழியர்கள் சங்கடமாக உணர்ந்தால், வேலை எப்படி நடக்கும்?" என்று அவர் வினவினார்.
சில அரசியல்வாதிகள், முக்கியமாக மாநிலத்தில் எதிர்கட்சியாக உள்ள, இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, இந்தக்கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை.
அரசு இந்த கிட்டுகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் சுகாதார ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் புல்தானாவைச் சேர்ந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஆகாஷ் பூண்ட்கர் கோரியுள்ளார்.
மாநிலத்தில் உள்ள கட்சியின் துணைத் தலைவர் சித்ரா வாக், "அரசு, 'பாலியல் இன்பத்தை' ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டினார்.
மகாராஷ்டிராவின் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனை கட்சி, இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
குடும்பக் கட்டுப்பாடு அம்சங்களை விளக்க இது போன்ற மாதிரிகளை முன்பு பயன்படுத்தியுள்ளதாக, பெயர் குறிப்பிட விரும்பாத, புனேவைச் சேர்ந்த ஒரு ஆஷா பணியாளர் பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.
"நாங்கள் இந்த கிட்டை மக்களுக்கு வழங்குவதில்லை. குடும்பக் கட்டுப்பாடு பற்றி மக்களுக்கு ஆலோசனை வழங்க மட்டுமே இதைப் பயன்படுத்துகிறோம். எங்கள் பயிற்சியின் போது மாதிரிகள் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது," என்று அவர் மேலும் கூறினார்.
கல்வியறிவின்மை விகிதம் அதிகமாக இருக்கும் கிராமப்புறங்களில் இந்த மாதிரிகளைப் பயன்படுத்துவது முக்கியம் என்று பாலியல் வல்லுநர் டாக்டர் சாகர் முண்தாதா கூறினார்.
"இது தவறான கருத்துக்களை பரப்பும் என்று கூறுவது சரியல்ல. நாம் வெளிப்படையாக பேசினால், மக்கள் பிரச்சினைகளை நன்றாக புரிந்து கொள்ள முடியும். பாலியல் பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்படாவிட்டால், அது உண்மையில் தவறான எண்ணங்களுக்கு வழிவகுக்கும்," என்று அவர் கூறினார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












