கர்நாடகாவின் ஷிவமோகாவில் இந்து ஆர்வலர் படுகொலையால் வன்முறை, பதற்றம்

இந்து ஆர்வலர்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, படுகொலை செய்யப்பட்ட இந்து ஆர்வலர்
    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி ஹிந்தி

கர்நாடகாவின் ஷிவமோகா நகரில் இந்து ஆர்வலர் படுகொலையில் தொடர்புடையதான சந்தேகத்தின் பேரில் நேற்றிரவு 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது இறுதி ஊர்வலத்தின் போது கூட வன்முறையும், தீயிடலும் நிகழ்ந்துள்ளன.

நேற்று முன்தினம் இரவு 26 வயதான ஹர்ஷா சீகஹள்ளியில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியே சென்றபோது, சில நபர்களால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவுகளை விதித்தது. அவர் முன்பொருமுறை தாக்கப்பட்டார், ஆனால் அந்த நேரத்தில் அவர் சிறிய காயங்களுடன் தப்பினார்" என்று மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்தார்.

``எனக்கு கிடைத்த தகவலின்படி, இந்தக்கொலையில் 5 பேருக்குத் தொடர்பு உள்ளது" என்று ஞானேந்திரா செய்தியாளர்களிடம் கூறினார்.

`இது பழைய பகையா அல்லது அரசியல் கொலையா என்பது எங்களுக்குத் தெரியாது. இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள இந்த நேரத்தில், கூடுதல் விவரங்களை வெளியிடுவது விவேகமற்ற செயலாகும். நீங்கள் எங்களிடம் கேட்கும் அதே கேள்விகளை நாங்கள் அவர்களிடம் கேட்போம்,'' என்று பெயர் வெளியிட விரும்பாத மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

கர்நாடகா

ஷிவமோகாவில் ஹர்ஷா இறந்த செய்தி பரவியதையடுத்து, சில பகுதிகளில் கல் வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததாக செய்திகள் வந்தன. போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையால் நிலைமை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் நேற்று நண்பகலில் ஹர்ஷாவின் இறுதி ஊர்வலத்தின்போது மீண்டும் வன்முறை வெடித்தது.

இறுதி ஊர்வலத்த்தை மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ஆட்சி அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா முன்னின்று நடத்தினார். அவர் முன்னதாக ``எங்கள் தொண்டர் ஹர்ஷாவின் கொலைக்கு 'முஸ்லிம் குண்டர்கள்' தான் காரணம் " என்று குற்றம் சாட்டியிருந்தார். இதுபோன்ற ரெளடித்தனத்தை மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

இந்து ஆர்வலர்

பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இறுதி ஊர்வலம் நகருக்குள் சென்றபோது , சில பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் குடியிருப்புகள் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், சில வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது மாநிலத்தில் நிலவும் ஹிஜாப் சர்ச்சைக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்றும் உள்துறை அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இந்த கொலையால் ஈஸ்வரப்பாவுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே சொற்போர் நடக்கிறது. ஹர்ஷாவை கொலை செய்ய குண்டர்களை தூண்டியதாக சிவகுமார் மீது ஈஸ்வரப்பா குற்றம் சாட்டினார். ஈஸ்வரப்பா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சிவகுமார் கூறினார்.

செங்கோட்டையில் மூவர்ணக்கொடிக்கு பதிலாக 'காவிக்கொடி' பறக்கும் என்று கூறிய ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்யக் கோரி, கடந்த சில நாட்களாக சட்டசபையிலும், மேலவையிலும் காங்கிரஸ் தர்ணா நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஈஸ்வரப்பாவுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை ஆதரவாக உள்ளார்.

வெள்ளிக்கிழமை முதல் மாநில சட்டப்பேரவையின் இரு அவைகளின் வராந்தா தரைகளில் படுத்து உறங்கி காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: