ஓவியர் என்.எஸ்.மனோகரன்: 'தமிழ்நாட்டின் கிராமப்புற ஓவியங்களில் எப்போதும் உயிர்ப்புள்ளது; அவற்றை மீள் உருவாக்கம் செய்து, ஆவணப்படுத்துகிறேன்'

ஓவியம் என்.எஸ்.மனோகர்
படக்குறிப்பு, என்.எஸ்.மனோகர் ஓவியம்
    • எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
    • பதவி, பிபிசி தமிழ்

எவ்வளவோ மாற்றங்கள் வந்தாலும் கிராமப்புறங்கள், அவைசார்ந்த ஓவியங்களில் எப்போதும் உயிர்ப்புள்ளது. ஆகையால் அவற்றின் மீது எனக்கு தனி ஆர்வம் தொடர்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிப்பவர்கள் கிராமப்புறம் சார்ந்த ஓவியங்களை உணர்வோடு பார்க்கிறார்கள். விரும்பி வாங்குகிறார்கள் என்கிறார் என்.எஸ்.மனோகரன்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மேலக்காவேரி பாலக்கரை சகாஜி நாயக்கன் தோப்பு பகுதியைச் சேர்ந்த ஓவியர் என்.எஸ்.மனோகர். கும்பகோணம் கவின் கலைக்கல்லூரியில் முதல்வராக பணியாற்றி கடந்த 2015ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றவர். பணி ஓய்வு பெற்றாலும் இப்போதும் ஓவியங்களை வரைந்து, தொடர்ந்து மாணவர்களுக்கு வழிகாட்டி வருகிறார். ஓவிய ஆசியரியராக மட்டுமல்ல, தன் மாணவர்களுக்கு இப்போதும் முன்னத்தி ஏராக, தனித்துவமான ஓவிராகவும் தொடர்கிறார்.

ஓவியர் என்.எஸ்.மனோகரன்
படக்குறிப்பு, ஓவியக் கூடத்தில் என்.எஸ்.மனோகரன்

இவரது நீர்வண்ண ஓவியங்கள்(வாட்டர் பெயிண்ட்) அதிகம் கவனம் பெற்றவை. குறிப்பாக, கிராமிய வாழ்வியலை தனது தூரிகையின் வழியே நுட்பமான காட்சிகளாக படைத்து வருகிறார். நுட்பமும் எளிமையும் இவரது ஓவியங்களில் கூடுதல் சிறப்பு. வண்ணங்களைப் பயன்படுத்தும் விதம் புதிய ஓவிய மொழியாக வெளிப்படுகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளுக்குச் சென்று ஓவியங்களை காட்சிப்படுத்தியும், அங்குள்ள மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்தும் வருகிறார். நவீன ஓவியங்களை வரைந்தாலும், குறிப்பாக, கிராமப்புறம் சார்ந்த வாழ்வியலை தன் தூரிகையால் பெருமளவு காட்சிப் படுத்தி வருகிறார். இந்த காட்சிகள் கலைப்படைப்பாக மட்டுமல்ல, அவற்றை மீள் உருவாக்கம் செய்து, வருங்கால தலைமுறைக்கு ஆவணப்படுத்தி வருகிறேன் என்கிறார் என்.எஸ்.மனோகர்.

ஓவியர் என்.எஸ்.மனோகரன்

பட மூலாதாரம், N.S.Manoharan

படக்குறிப்பு, என்.எஸ்.மனோகரன் ஓவியம்

எவ்வளவோ மாற்றங்கள் வந்தாலும் கிராமப்புறங்கள், அவைசார்ந்த ஓவியங்களில் எப்போதும் உயிர்ப்புள்ளது. ஆகையால் அவற்றின் மீது எனக்கு தனி ஆர்வம் தொடர்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிப்பவர்கள் கிராமப்புறம் சார்ந்த ஓவியங்களை உணர்வோடு பார்க்கிறார்கள். விரும்பி வாங்குகிறார்கள் என்கிறார். உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஓவியக் கூடத்திற்கு வருகை தந்திருந்த அவர், தனது கலைப்பயணம் குறித்து பிபிசி தமிழுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் பல்வேறு சுவையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

விவசாயக் குடும்பத்தில் இருந்து ஓவியராக...

ஓவியர் என்.எஸ்.மனோகரன்
படக்குறிப்பு, ஓவியர் என்.எஸ்.மனோகரன்

ஓவியர் என்.எஸ்.மனோகர் தொடர்ந்து கூறுகையில், ''தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்து, விவசாய குடும்பத்தில் பிறந்த எனக்கு, ஓவியத்தின் மீதான ஆர்வத்தில், கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியில் சேர்ந்தேன். சிற்பி ஜெயராமன்தான் கல்லூரியில் சேர்த்து விட்டார். ஆர்வத்தோடு மட்டுமே இருந்த என்னை உருவாக்கியவர்கள் ஆசிரியர்களே. குறிப்பாக நீர்ம ஓவியங்கள் குறித்து ஓவியர் சுரேந்திரநாத் கற்றுக் கொடுத்தார். கவின் கலைக்கல்லூரி முதல்வராக இருந்த ஆர்.பி.பாஸ்கரன் பல்வேறு நுட்பங்களைக் கற்றுக் கொடுத்து, மெருகேற்றினார். மாணவனாக படித்த அதே கல்லூரியிலும் சென்னை கவின் கலைக்கல்லூரியிலும் பேராசிரியராகவும் பணியாற்றினேன்.

பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், படைப்பு தொடர்கிறது. கல்கி, ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் வரைந்துள்ளேன். முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி கதை தொடங்கி கவிஞர் நா.முத்துக்குமாரின் தொடர் வரை வரைந்துள்ளேன். நடிகர் கமல்ஹாசனின் அன்பே சிவம் திரைப்படத்தில் ஓவியராகவும் ஒரு காட்சியில் நடித்துள்ளேன்'' என்கிறார்.

ஆடுகள் மீதான ஆர்வம்

ஓவியர் என்.எஸ்.மனோகரன்

பட மூலாதாரம், N.S.Manoharan

படக்குறிப்பு, என்.எஸ்.மனோகரன் வரைந்த ஆடு ஓவியம்

ஆனால், ''தமிழ்நாட்டின் கிராமங்கள், குறிப்பாக தஞ்சாவூரின் கிராமங்கள் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டன. ஆலமரம், ஆடு, அய்யனார்கோயில், குளக்கரை, விவசாயம் என கிராமப்புறத்தின் காட்சிகளை வரையும் போது, எனக்குள் தனி உற்சாகமும் பிறக்கிறது. வரைந்து முடிக்கையில் மனநிறைவும் கிடைக்கிறது. அதிலும் ஆடுகளை வரைவதில் அலாதி இன்பம் உண்டு. ஆடுகளை நிறைய வரைந்திருக்கிறேன். எங்கிருந்தாலும் தன் குட்டிக்கு பால் ஊட்ட வேண்டும் என்கிற தவிப்பை தாய் ஆட்டின் கண்களில் பார்க்க முடியும். எங்கிருந்தாலும், தன் குட்டிகளை நோக்கியே கவனத்தை வைத்திருக்கும். அந்த அன்பு என்னை ஆட்கொண்டு, ஆடுகளை வரைவது தனி அனுபவமாக இருக்கிறது. அவற்றை காணபதும் வரைவதும் நெகிழ்வான தருணங்கள்.'' என்று சிலாகிக்கிறார்.

மக்களுக்கு புரியும் படைப்புகள் வேண்டும்

ஓவியர் என்.எஸ்.மனோகரன்

பட மூலாதாரம், N.S.Manoharan

படக்குறிப்பு, என்.எஸ்.மனோகரன் வரைந்த ஆடு ஓவியம்

தொடர்ந்து அவர் கூறுகையில், ''இன்றைய நகரமய சூழலில் கிராமப்புற விளையாட்டுகள், வாழ்வியலில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், கிராமப்புறங்களில் மட்டுமல்ல அவைசார்ந்த ஓவியங்களில் இப்போதும் உயிர்ப்புள்ளது. சிதிலமடைந்த மாளிகைகள், கோயில்கள் உள்ளிட்டவற்றை பார்க்கும் போது, வாழ்ந்துகெட்ட ஆளுமைகளாக நெஞ்சை பிசைகின்றன. இவற்றைக் காட்சிப்படுத்தி, ஆவணமாக்க வேண்டும் என்கிற முனைப்பு ஏற்படுகிறது. ஆகையால், மீள் உருவாக்கம் செய்யும் வகையில், அவற்றை அதிகம் வரைகிறேன். அமெரிக்கா, ரஷ்யா, சிங்கப்பூர், மலேசியா என எந்த நாட்டிற்கு சென்றாலும், இந்த ஓவியங்கள் பலரின் நினைவுகளை கிளறுகிறது. அந்த நினைவுகள் அவர்களோடு இருக்க வேண்டும் என்பதற்காக விரும்பி வாங்கியும் செல்கின்றனர். இப்போது கிராமப்புறங்களின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் பெரிய, வேலைப்பாடுடைய கதவுகளை ஓவியங்களாக வரைந்து வருகிறேன். என்னுடைய மாணவர்கள் என்று சொல்வதை விட தம்பிகள் பலரும் கிராமப்புறம் சார்ந்த ஓவியங்களை அற்புதமாக காட்சிப்படுத்தி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. நவீனம், நுட்பம் கலந்து எளிமையாக மக்களுக்கு புரியும் வகையில் படைக்க வேண்டும் என்று எப்போதும் விரும்புகிறேன். மக்களுக்கு புரியாத படைப்பால் பலன் என்ன?. இதைத்தான் என் தம்பிகளுக்கும் (மாணவர்கள்) சொல்லித் தருகிறேன்.

ஓவியர்களுக்கு எப்போதும் வாய்ப்பு

ஓவியர் என்.எஸ்.மனோகரன்

பட மூலாதாரம், N.S.Manoharan

படக்குறிப்பு, ஆடு ஓவியம்

நவீன தொழில்நுட்பம், வாழ்வியல் சூழல் மாறியிருந்தாலும் படைப்பாற்றல் உள்ள ஓவியர்களுக்கு எப்போதும் வாய்ப்பிருக்கிறது. இதைத்தான் செய்வேன் என்று அடம்பிடிக்காமல், காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் தொடர்ந்தால், தூரிகைகளுக்கு ஓய்வு கிடையாது. ஓவியர்களுக்கு எப்போது வாய்ப்புள்ளது.'' என்று நம்பிக்கையோடு நேர்காணலை முடித்து விட்டு, மனதிற்கு விருப்பமான கிராமப்புற ஓவியத்தை தொடர்கிறார் என்.எஸ்.மனோகர்.

கும்பகோணம் கவின் கலைக்கல்லூரியில் படித்த, வீரசந்தானம், விஸ்வம், ஜெயராமன், உள்ளிட்ட பலர் இவருக்கு நெருக்கமானவர்கள். ஓவியர்கள் இளையராஜா, சிவபாலன், ராஜ்குமார் ஸ்தபி உள்ளிட்ட பலர் இவரது மாணவர்கள். ஆசிரியரான இவரை அண்ணா என்றே இப்போதும் அழைக்கின்றனர். அமெரிக்காவின் கான்கார்டியா பல்கலைக்கழகத்தின் சிறப்பு அழைப்பாளராக சென்றுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: