மனோகர் தேவதாஸ்: பார்வை போனால் என்ன? ஓவியங்கள் மீதான காதல் குறையவில்லை

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
பிரபல கலைஞரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான மனோகர் தேவதாஸ் சென்னையில் புதன்கிழமையன்று காலையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 86. தனது 30 வயதில் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற பார்வைக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டவர்.
ஆனால் அவருடைய பார்வைக் குறைபாடு கலையின் மீதான அவருடைய ஆர்வத்தைத் தடுக்கவில்லை. அவர் தனது 83 வயதில் முற்றிலும் பார்வையற்றவராக இருந்தபோதும், அவரது பணியைத் தொடர்ந்தார்.
மதுரை குறித்த ஓவியங்களுக்காக கவனம்பெற்ற ஓவியரான மனோகர் தேவதாஸ், பார்வையை முழுமையாக இழந்த நிலையிலும் சென்னையின் பாரம்பரிய கட்டடங்களின் ஓவியங்கள் அடங்கிய அடுத்த புத்தகத்தை வெளியிட்டார்.
சென்னை சாந்தோம் நகரில் வசித்து வந்த மனோகர் தேவதாஸ், செப்டம்பர் 10, 1936 அன்று மதுரையில் பிறந்தார். பாரம்பரிய கட்டடங்களை வரைவதில் அவருக்கு இருந்த திறமையின் மூலம் அவர் மிகவும் பிரபலமானார். பிபிசி தமிழுடனான நேர்காணலின்போது அவர் பகிர்ந்துகொண்ட தகவல்கள், அவருடைய நினைவாக மறுபகிர்வு செய்யப்படுகிறது.
The Green Well years, Multiple Facets of My Madurai உள்ளிட்ட புத்தகங்களின் மூலமும் அவற்றிலிருந்த உயிர்ப்புமிக்க, அட்டகாசமான கோட்டுச் சித்திரங்களின் மூலமும் அறியப்பட்டவர் மனோகர் தேவதாஸ். இந்தப் புத்தகங்களில் மதுரை நகரில் தனது குழந்தைப் பருவ வாழ்க்கையையும் அந்த காலகட்டத்தில் அங்கிருந்த கட்டடங்கள், வீடுகளையும் எழுத்திலும் சித்திரங்களிலும் ஆவணப்படுத்தியிருந்தார் மனோகர்.
அவரது பார்வைத் திறன், ரெட்டினா பிக்மன்டோசா என்ற பிரச்சனையால் சிறுவயதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவந்த நிலையில், ஓராண்டிற்கு முன்பு முழுமையாகப் பார்வையிழந்தார் மனோகர் தேவதாஸ்.
இந்த நிலையில், Madras Inked: Impressions of an artist என்ற அவரது அடுத்த புத்தகம் விரைவில் வெளியாகவிருக்கிறது. சென்னையில் உள்ள பாரம்பரியமிக்க, கலைநயமிக்க கட்டங்களின் கோட்டுச் சித்திரங்கள், அந்தக் கட்டடங்கள் குறித்த வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய இந்தப் புத்தகத்தை கட்டடக்கலை நிபுணரான சுஜாதா சங்கருடன் சேர்ந்து உருவாக்கியிருக்கிறார் மனோகர் தேவதாஸ்.

"இந்தப் புத்தகத்தில் உள்ள படங்கள் இப்போது வரையப்பட்டவையல்ல. சுமார் ஐம்பது ஆண்டு கால இடைவெளியில் வரையப்பட்டவை. இதில் இருப்பதிலேயே மிகப் பழமையான படம் 1959ல் வரையப்பட்டது. சமீபத்திய சித்திரம் 2012 வாக்கில் வரையப்பட்டது. நானும் என் மனைவி மஹிமாவும் சேர்ந்து Heritage Monument cards for Charity என்ற பெயரில் வாழ்த்து அட்டைகளை வெளியிட்டு வந்தோம். படங்களை நான் வரைவேன். என் மனைவி அந்தப் படங்களில் உள்ள கட்டங்கள் பற்றிய குறிப்புகளை எழுதுவார். அந்த கார்டுகளை விற்று, அதில்வரும் பணத்தை தர்மகாரியங்களுக்குச் செலவழிப்போம். இந்தப் புத்தகத்தில் உள்ள பெரும்பாலான படங்கள் அந்த வாழ்த்து அட்டைகளில் உள்ள படங்கள்தான்" என்கிறார் மனோகர் தேவதாஸ்.
வாழ்த்து அட்டைகளுக்காக வரைந்த ஓவியங்களைத் தொகுத்து புத்தகத்தை உருவாக்க வேண்டுமென்ற எண்ணமே தனக்கு இல்லாத நிலையில், சுஜாதா சங்கர்தான் அந்த எண்ணத்தை ஏற்படுத்தினார் என்கிறார் மனோகர்.
"தீவிரமான ஆராய்ச்சிகளுக்குப் பிறகு புத்தகங்களுக்கான குறிப்புகளை சுஜாதா சங்கர் எழுதியிருக்கிறார். சென்னை குறித்த பல தெரியாத விஷயங்களை இந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். நானும் சில படங்களுக்கு குறிப்புகளை எழுதியிருக்கிறேன். ஆனால், அவை அந்தக் கட்டங்களைப் பற்றி இருக்காது. நான் அந்தக் கட்டடங்களை வரைந்த பின்னணி குறித்ததாக இருக்கும்" என்கிறார் அவர்.

83 வயதாகும் மனோகர் தேவதாசிற்கு இந்த ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது. "எந்தப் பிரிவில் வழங்கலாம் என தீவிரமாக யோசித்து, முடிவில் கலை என்ற பிரிவில் வழங்கியிருக்கிறார்கள்" என்று சிரிக்கிறார் மனோகர்.
மங்கிவரும் கண் பார்வை, ஒரு விபத்தால் கழுத்திற்குக் கீழ் செயலிழந்த மனைவியையும் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஆகியவற்றுக்கு மத்தியில்தான் நுணுக்கமான ஓவியங்களை தொடர்ந்து வரைந்துவந்தார் மனோகர் தேவதாஸ்.
"என் கண் பார்வை மங்கிக்கொண்டே வந்ததால், பல சமயங்களில் அந்தந்த கட்டடங்களுக்கு முன்பாகவே அமர்ந்து பென்சில் ஸ்கெட்ச்கூட போடாமல் அப்படியே பேனாவால் வரைவேன். கண் பார்வை மறைய ஆரம்பித்தவுடன் க்ராஃப் ஷீட்டில் வரைய ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் தொழில்நுட்பம் உதவ ஆரம்பித்தது. அரவிந்த் கண் மருத்துவமனை, சங்கர நேத்ராலயா ஆகிய மருத்துவமனைகளில் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். போட்டோக்கள் எடுப்பேன். ஆனால், அது அவுட்லைனுக்கு மட்டும்தான் பயன்படும். போட்டோக்களில் நுணுக்கங்கள் தெரியாது. அதனால், கட்டட நுணுக்கங்களைத் தனித்தனியாகப் பார்த்து, தனித்தனியாக ஸ்கெட்ச் வரைந்து, வீட்டிற்கு வந்து எல்லாவற்றையும் ஒன்றாக இணைப்பேன்" என தான் படம் வரையும் முறையை விவரித்தார் மனோகர் தேவதாஸ்.

ஒரு கட்டத்தில் கண்பார்வை ரொம்பவும் மோசமாக, சங்கர நேத்ராலயாவில் மிகவும் தேடி, + 27 பவர் உடைய கண்ணாடி அணிவித்தார்கள். அதைப் பயன்படுத்தி சிறிதுகாலம் வரைந்தார் மனோகர்.
மனோகர் தேவதாஸின் ஓவியங்கள் அனைத்திலும் மனிதர்களைவிட கட்டடங்களே பெரும் ஆதிக்கம் செலுத்தும். கட்டடங்களை அவற்றின் பரிமாணங்களோடு துல்லியமாக வரைந்திருப்பார் மனோகர் தேவதாஸ்.
"நான் சேதுபதி மேல் நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே 'பெர்ஸ்பெக்டிவ் ஆர்ட்'டில் ஒரு ஈடுபாடு உண்டு. கடினமான கலையான கோட்டுச் சித்திரங்களை வரைவதென்பது எனக்கு எளிதாக வந்தது. அதுவே எனக்கு ஒரு தனிச் சிறப்பாகத் தோன்றியது. தவிர, கண் பார்வை குறையக் குறைய வண்ணப் படங்களை வரைவதைவிட கோட்டுச் சித்திரங்களை வரைவது எளிதாக இருந்தது" என்கிறார் மனோகர்.

மனோகர் தேவதாஸின் ஓவியங்களில் கட்டடங்களுக்கு அடுத்தபடியாக கோபுரங்கள் பிரதானமான இடங்களை வகிக்கின்றன. "கோவில் கோபுரங்களை வரைய எனக்குப் பிடிக்கும். அவை மிகச் சிக்கலானவை. பெரும் உழைப்பைக் கோருபவை. மேலும் நான் மதுரையில் பிறந்து வளர்ந்தவன். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள் உலகப் புகழ் பெற்றவை. அந்த ஊரில் வளர்ந்ததால், கோபுரங்கள், விமானங்கள் குறித்த கவனம் அதிகம் இருந்தது" என அதற்கான காரணத்தைச் சொல்கிறார் மனோகர் தேவதாஸ்.
மறைந்த அவரது மனைவி மஹிமாவும் அவரும் 1966ல் பக்கிங்கம் கால்வாயில் ஒரு படகு செல்வது போன்ற ஆயில் பெயின்டிங்கை வைத்து ஒரு வாழ்த்து அட்டையைத் தயாரித்தனர். பல நண்பர்கள் அதுபோல தொடர்ந்து செய்ய வேண்டுமெனக் கோரவே, மிகுந்த உற்சாகத்துடன் மஹிமாவும் மனோகரும் வருடா வருடம் மனோகரின் ஓவியங்களுடன் கூடிய வாழ்த்து அட்டைகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். 1972ல் மஹிமா விபத்தில் சிக்கிய பிறகும், அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மனோகரின் பார்வைத்திறன் வெகுவாக மங்க ஆரம்பித்த பின்பும் இந்தப் பணி தொடர்ந்து நடந்தது.
மனோகரின் வயது, பார்வை இழப்பு ஆகியவை அவரை முடக்கிவிடவில்லை. மெட்ராஸ் இங்க்ட் புத்தகத்திற்குப் பிறகு Challenges, Resilience & Triumph என்ற தலைப்பில் தன் மனைவி மஹிமாவைப் பற்றி அவர் எழுதிய புத்தகமும் விரைவில் வெளியாகவிருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













