மதமாற்ற விவகாரம்: பாஜக தமிழ்நாட்டில் கையாளும் ஆயுதமா? அரசியலா? என்ன நடக்கிறது?

- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் மதமாற்றம் செய்ததாகக் கூறி இரண்டு பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
`சம்பந்தப்பட்ட பெண்கள் மதமாற்றத்துக்காக செல்லவில்லை. இரவில் நடந்த சம்பவத்தில் அந்தப் பெண்களின் வாகனங்களைப் பறித்து அனுப்பியுள்ளனர்,' என்கிறார் புதுக்கோட்டை மாவட்ட டி.எஸ்.பி.
ஆனால், புதுக்கோட்டையுடன் இந்த விவகாரம் நிற்கவில்லை. மதுரையிலும் மதமாற்றம் செய்ததாக சிலர் மீது பாஜகவினர் குற்றம்சாட்டிய மற்றொரு சம்பவமும் சமீபத்தில் நடந்துள்ளது.
இது அந்த கட்சியினர் தமிழ்நாட்டில் வேரூன்ற கையாளும் ஆயுதமா அல்லது அரசியலா என்றும் பலர் பேசத் தொடங்கியுள்ளனர். என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்?
கைதான ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்
புதுக்கோட்டை மாவட்டம், இருந்திரப்பட்டி அருகே உள்ள திம்மம்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த பிரேமா என்பவரின் வீட்டுக்கு கடந்த 21 ஆம் தேதி ராணி, தேவசாந்தி ஆகிய இரு பெண்கள் சென்றுள்ளனர்.
இவர்கள் அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள சமாதானபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் மதமாற்றம் செய்ய வந்துள்ளதாகக் கூறி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளரும் இருந்திரப்பட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவருமான கணேஷ் பாபு என்பவர் வாக்குவாதம் செய்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் தாங்கள் வந்த வாகனம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு விரட்டிவிட்டதாகக் கூறி இலுப்பூர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு உள்பட நான்கு பிரிவுகளில் கணேஷ்பாபு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து கடந்த 29 ஆம் தேதி இரவில் கணேஷ் பாபு கைது செய்யப்பட்டார்.
இதனைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.கவினர் இலுப்பூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டும் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டமும் நடத்தினர். இதுதொடர்பாக 79 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பா.ஜ.கவினர் சொல்வது என்ன?

இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் பா.ஜ.க முன்னாள் தேசிய செயலர் ஹெச்.ராஜா பங்கேற்றுப் பேசுகையில், `திம்மம்பட்டியில் மதமாற்றம் செய்ய வந்த பெண்கள் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் பொய்யான புகாரின்பேரில் கணேஷ்பாபுவை சிறையில் அடைத்துள்ளனர். தமிழ்நாட்டில் மத கலவரத்தைத் தூண்டுவது தி.மு.க மற்றும் தி.கவினர்தான்' எனவும் ஹெச்.ராஜா பேசினார்.
இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க தலைவர் ராம சேதுபதி, ``அந்தப் பெண்கள் மதமாற்றம் செய்வதற்காகத்தான் சென்றுள்ளனர். அந்தப் பகுதியில் தொடர்ந்து மதமாற்றம் நடந்து வருகிறது. முதலில் பொதுமக்கள்தான் இதனைத் தட்டிக் கேட்டுள்ளனர். இதனை அறிந்து கணேஷ்பாபு அங்கு சென்றுள்ளார். அவர் முதலில் போலீஸில் கொடுத்த புகாரை இழுப்பூர் காவல்நிலையத்தில் இருந்தவர்கள் வாங்கவில்லை. ஆனால், அந்தப் பெண்களிடம் புகார் மனுவைப் பெற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்'' என்கிறார்.

மேலும், ``அந்தப் பகுதியில் வசதி படைத்த நபராக கணேஷ் பாபு இருக்கிறார். அவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்துள்ளார். இது தொடர்பாக, மாவட்ட எஸ்.பியை நேரில் சந்தித்துப் பேசினோம். அவர், எங்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். ஆனால், அன்று இரவில் வீட்டுக்குள் நுழைந்து கணேஷ் பாபுவை கைது செய்துவிட்டனர். அவரை எங்கே வைத்திருந்தார்கள் எனவும் சொல்லவில்லை. மறுநாள் அறந்தாங்கி கொண்டு சென்றனர்.
இதனை எதிர்த்து நாங்கள் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அந்தப் பகுதியில் மதமாற்றம் நடப்பதாக ஐந்து முறை புகார் கொடுத்துள்ளோம். அதன்பேரிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எந்த மதத்துக்கு யார் வேண்டுமானாலும் போகலாம். அது அவர்களின் சொந்த விருப்பம். இந்து மதக் கடவுள்களை விமர்சிப்பதுதான் சிக்கல்'' என்கிறார்.
மதமாற்றம் நடக்கவில்லை
``என்ன நடந்தது?'' என புதுக்கோட்டை டி.எஸ்.பி அருள்மொழி அரசுவிடம் பேசினோம்.
``கடந்த 21 ஆம் தேதியன்று இரண்டு கிறிஸ்துவ பெண்கள், அவர்களுக்குத் தெரிந்தவர்கள் அழைத்தார்கள் என்ற பேரில் அந்தப் பகுதிக்குச் சென்றுள்ளனர். ஆனால், மதமாற்றம் செய்ய வந்ததாகக் கூறி அவர்களின் இரு சக்கர வாகனம் மற்றும் செல்போனைப் பறித்துக் கொண்டு கணேஷ் பாபு தரப்பினர் திட்டி அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக அந்தப் பெண்கள் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளோம்,'' என்றோம்.

``கணேஷ் பாபு கொடுத்த புகார் பதிவு செய்யப்படவில்லை என்கிறார்களே?'' என்று கேட்டதற்கு, ``அதில் உண்மையில்லை. அவர் கொடுத்த புகார் உடனே பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இரவு நேரத்தில் நடந்த சம்பவம். அந்த இரண்டு பெண்களின் வாகனத்தையும் பறித்துவிட்டு அனுப்பியுள்ளனர். அங்கிருந்து அவர்கள் வீடு ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அவர்கள் நடந்தேதான் தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்,'' என்கிறார் அருள்மொழி அரசு.
``ஆனால், அந்த பெண்கள் மதமாற்றம் செய்ய வந்ததாக பா.ஜ.கவினர் சொல்கிறார்களே?'' என்று கூறியபோது, ``இல்லை. அதற்காக அவர்கள் வரவில்லை. தங்களுக்குத் தெரிந்தவர்கள் அழைத்ததால் வந்துள்ளனர். `எங்க ஊருக்குள் எப்படி வரலாம்?' எனக் கேட்டு அவர்கள் இருவரையும் கணேஷ்பாபு தரப்பினர் அசிங்கப்படுத்தியுள்ளனர். அவர்களது வாகனத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் மதப் பிரச்னை உருவாகும் சூழல் ஏற்பட்டது. அதனால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது'' என்கிறார் டிஎஸ்பி.
இதேவேளை, அரியலூர் மாணவி விவகாரத்தின் தொடர்ச்சியாக மதமாற்றம் என்ற விவகாரத்தை பா.ஜ.கவினர் கையில் எடுத்துள்ளதாக திராவிடர் கழகத்தினர் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்த விவகாரத்தில் கடந்த சில நாள்களில் பா.ஜ.க இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் செல்வம் உள்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் மற்றொரு சம்பவம்

மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள தேவாலயத்தில் மதமாற்றம் செய்ய சிலர் வந்ததாக கூறி பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ பகுதிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, அவர்களுடன் பாஜகவினர் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, பாஜக மாவட்ட துணை தலைவர் கண்ணன், மண்டல தலைவர் பாலமுருகன், இந்து முன்னணியை சேர்ந்த அரசு, சுரேஷ், செந்தில் நாதன், ஆதிசேஷன் ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் சுமார் 200 பேர் வில்லாபுரம் தேவாலயம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பதற்றம் அதிகரித்ததால் அப்பகுதியில் கடைகள் சில மணி நேரம் அடைக்கப்பட்டன. சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்ற காவல்துறையினர் சிலருடன் பாஜகவினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டநர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவல்துறையினர் கொண்டு சென்று வைத்திருந்து விட்டு சில மணி நேரம் கழித்து விடுவித்தனர்.
பா.ஜ.கவின் தேர்தல் அரசியலா?

பாஜகவினர் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் மதமாற்ற விவகாரத்தை கையில் எடுத்திருப்பது பற்றி பிபிசி தமிழிடம் பேசிய திராவிடர் கழக வழக்கறிஞர் குமாரதேவன், ``மதமாற்றம் என்பது அவரவரின் மனமாற்றத்தைப் பொருத்தது. அது கூடாது எனச் சொல்லும் இவர்கள் `ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' என்ற அமைப்பின் மூலம், `இந்து மதத்துக்கு வாருங்கள்' எனக் கூறுவது மதமாற்றம் இல்லாமல் வேறு என்ன? முகலாயர்கள் மதமாற்றம் நடத்தியிருந்தால் இந்தியா மாறியிருக்கும். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
இந்தியாவுக்கு கிறிஸ்துவ மிஷினிரிகள் தொண்டு செய்ய வந்தனர். அவர்கள் மதத்தைப் பரப்புவதை ஒரு வேலையாக வைத்திருந்தார்கள். ஆனால், இங்கு அதனைச் செய்வது அவ்வளவு எளிதாக இல்லை. காரணம், வறுமையும் கல்வியின்மையும் ஒரு காரணமாக இருந்தது. மதமாற்றம் என்பது தீண்டத்தகாத சமூகத்தில்தான் இருந்தது. தங்களின் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர்கள் மாறினர். ஆங்கிலேயர்கள் வந்த பிறகு அனைவருக்குமானதாக கல்வி மாறியது'' என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், ``மதமாற்றம் என்ற இல்லாத ஒன்றைக் காட்டிவிட்டு பா.ஜ.கவினர் போராட்டம் நடத்துகிறார்கள். அரியலூர் மாணவி மரணம் ஒரு 'தற்கொலைதான்'. அதற்கு 'மதமாற்றம்' காரணம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்துவதற்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். மதமாற்றம் என்று சொல்லிவிட்டு சட்டத்துக்குப் புறம்பாக மாணவியின் அடையாளத்தை அவர்கள் வெளிக்காட்டுகின்றனர்.
பா.ஜ.கவினர் அரசியல் செய்வதற்கு எதாவது ஒன்று தேவை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர்களின் வேல் அரசியல் எடுபடவில்லை. உள்ளாட்சி தேர்தலில் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மதமாற்றம் என்ற ஒன்றைக் கையில் எடுத்துள்ளனர்.
தொடர் கைது நடவடிக்கைகள் மூலம் தி.மு.க அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த விவகாரங்களில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துவிட்டு, தனியாக நீதிமன்றம் அமைத்து சட்டத்தின் முன் இவர்களை நிறுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை'' என்கிறார்.
தி.மு.க, மதவாத அரசா?
``தமிழ்நாட்டில் மதமாற்றம் என்பது பல காலமாக நடந்து வருகிறது. இதனை தமிழ்நாடு அரசு மறுத்தாலும், மதமாற்றம் நடக்கிறதா என பார்க்க வேண்டும். அது ஒன்றும் அடிப்படை உரிமை கிடையாது. ஒருவர் விருப்பப்பட்டு மதம் மாறுவதில் எந்தத் தடையும் இல்லை. பணம் கொடுக்கிறேன், கல்வி கொடுக்கிறேன் என ஆசை வார்த்தைகூறி மதமாற்றம் செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது'' என்கிறார், பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், ``அரியலூர் மாணவி விவகாரத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தைத் திருப்திப்படுத்தும் வகையில் பா.ஜ.க மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ் செல்வம், சவுதாமணி, புதுகோட்டையில் ஒருவர், மதுரையில் 7 பேர் என தி.மு.க அரசு கைது செய்துள்ளது. இவர்கள் மதமாற்றத்தை எதிர்த்தவர்கள். தி.மு.க அரசு மதவாத அரசாக நடந்து கொள்கிறது. ஒரு மதத்துக்கு ஆதரவாக நடந்து கொள்கிறது,'' என்கிறார்.
``மாணவியின் மரணத்துக்குப் பிறகு மதமாற்றம் என்ற பிரச்னையை பா.ஜ.க கூர்மைப்படுத்துவது போலத் தெரிகிறதே?'' என்றோம்.
``அப்படியில்லை. இது தவறான கருத்து. கட்டாய மதமாற்றத்தை எதிர்த்து பா.ஜ.க பல போராட்டங்களை நடத்தியுள்ளது. எங்கெல்லாம் கட்டாய மதமாற்றம் நடக்கிறதோ அங்கெல்லாம் தொடர்ந்து போராடி வருகிறோம். இதற்காக பா.ஜ.க உள்பட இந்து இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கையை தி.மு.க அரசு எடுத்து வருகிறது'' என்கிறார்.
பிற செய்திகள்:
- இந்திய பட்ஜெட் -2022 தேர்தல் பட்ஜெட்டாக இருக்குமா? யாருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும்?
- இந்தியாவில் கடந்த ஆண்டு ரூ.3.4 லட்சம் கோடிக்கு தங்கம் வாங்கிய மக்கள்: 81 சதவீதம் அதிகரிப்பு
- யேமன் உள்நாட்டுப் போர்: பல நூறு குழந்தை போராளிகள் மரணம்
- நரேந்திர மோதிக்கு தமிழ் கட்சிகள் எழுதிய கடிதத்தால் இலங்கையில் அரசியல் சர்ச்சை
- ஆஸ்திரேலிய ஓபன்: ரஃபேல் நடால் 21 கிராண்ட்ஸ்லாம் வென்று உலக சாதனை
- திப்பு சுல்தான் மதமாற்றம் செய்த கொடுங்கோலனா? விடுதலைக்கு போராடிய வீரனா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












