நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்தவர் மீது 'அரை நிர்வாணத் தாக்குதல்' : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வீடியோவால் சர்ச்சை

- எழுதியவர், ஆ விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது வாக்கு செலுத்த வந்த நபர் ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அ.தி.மு.கவினர், அரை நிர்வாணமாக்கிய காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ` ஒரு குற்றவாளியை கையாள்வதற்கு என சில வழிமுறைகள் உள்ளன. சாதாரண மக்கள் ஆயுதம் வைத்திருக்க மாட்டார்கள். ஆனால், இந்த நபர் அப்படிப்பட்டவர் அல்ல' என்கிறார் ஜெயக்குமார். என்ன நடந்தது?
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி 19 அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி வாக்குப் பதிவு நாளான சனிக்கிழமையன்று காலை முதலே தி.மு.க மற்றும் அ.தி.மு.கவின் முன்னணி நிர்வாகிகள் பலரும் வார்டு வாரியாக நிலவரத்தைக் கண்காணித்து வந்தனர். குறிப்பாக, `கள்ள வாக்குகளை யாரும் பதிவிட்டுவிடக் கூடாது' என்பதில் ஒவ்வொரு கட்சிக்காரர்களும் உன்னிப்பாக இருந்தனர். இந்நிலையில், ராயபுரத்தில் உள்ள 49 ஆவது வார்டில் பொதுமக்கள் வாக்கு செலுத்திக் கொண்டிருந்த நேரத்தில், சற்று உடல் பருமனாக இருந்த நபரை முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் சுற்றி வளைத்தனர்.
அந்த நபர் இதற்கு முன்னரே வாக்கு செலுத்திவிட்டதாகவும் தற்போது கள்ள ஓட்டு செலுத்த வந்துள்ளதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைக் கவனித்த ஜெயக்குமார், அந்த நபரின் சட்டையைக் கழற்றிவிட்டு, கைகளைக் கட்டி காவல்நிலையம் அழைத்துச் செல்லுமாறு கூறினார். தொடர்ந்து அங்கிருந்த அ.தி.மு.கவினர் அந்த நபரை அடித்துள்ளனர். அந்த நபரும் தன்னிலை விளக்கம் கொடுக்கிறார். இவை அனைத்தும் அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டன. இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலானதும், `ஒரு முன்னாள் அமைச்சரே சட்டத்தை மீறி இவ்வாறு நடக்கலாமா?' என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய மதுரையைச் சேர்ந்த எவிடென்ஸ் அமைப்பின் நிறுவனர் கதிர், ``தமிழ்நாடு அரசில் சட்ட அமைச்சராக ஜெயக்குமார் இருந்துள்ளார். அந்த நபரிடம், `சட்டையைக் கழட்டு' என அவர் கூறுவதை ஏற்க முடியாது. தொடர்ந்து அந்த நபர் அரை நிர்வாணமாக இழுத்துச் செல்லப்படுகிறார். அங்கிருந்தவர்களில் சிலர் வழக்கறிஞர்களாகவும் இருப்பதுதான் கொடுமை. இதை ஒரு கும்பல் வன்முறையாகப் பார்க்கிறோம். இது என்ன உத்தரபிரதேசமா? அரசியல் கும்பல் வன்முறையை அ.தி.மு.கவினர் தொடங்கிவைப்பதாகவே பார்க்கிறோம். இதற்கு முன்பு இப்படிப்பட்ட சம்பவங்கள் இங்கு நடந்தது கிடையாது'' என்கிறார்.
மேலும், `` வாக்குச் சாவடிக்குள் அந்த நபர் கள்ள ஓட்டு போட வந்தார் என்றால் அவரைக் காவல்துறையில் ஒப்படைத்திருக்க வேண்டும். அ.தி.மு.கவினர் எடுத்த வீடியோவிலேயே, சட்டையைக் கழட்டு என ஜெயக்குமார் கூறும் காட்சிகள் பதிவாகியுள்ளது. ஒரு வன்முறையை தானே பதிவு செய்து வெளியிடுவது சரியானதா? அந்த நபர் தவறு செய்திருந்தால் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து காவல்துறை கைது செய்யட்டும். இந்த விவகாரத்தில், உயர் நீதிமன்றமே இந்த வழக்கை தாமாக முன்வந்து பதிவு செய்ய வேண்டும். இதுபோன்று சட்டத்தைக் கையில் எடுப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது'' என்கிறார்.
வடசென்னையில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அரசு வழக்கறிஞரும் தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளருமான வீ.கண்ணதாசன், `` முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரால் அரை நிர்வாணப்படுத்தப்பட்ட அந்த நபர் தி.மு.கவை சேர்ந்தவர்தான். அவர் பெயர் நரேஷ். ஆனால் அவர் மேல் எந்த குற்ற வழக்குகளும் இல்லை. வாக்கு போட்ட பிறகு தன்னுடைய நண்பர்களுக்காக அவர் அங்கே காத்திருந்தார். அந்த நேரத்தில் இவர்கள் அவரைத் தாக்கியுள்ளனர்'' என்கிறார்.

பட மூலாதாரம், Vincent Raj/FB
`` முன்னாள் சபாநாயகராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் ஜெயக்குமார் இருந்துள்ளார். அரை நிர்வாண கோலத்தில் ஒருவரை அழைத்து வருவது போன்ற காட்சிகள் எல்லாம் வடநாட்டில்தான் நடக்கும். கைகளைக் கட்டச் சொல்வதற்கு எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? அவர் மீது வழக்குகள் உள்ளதா.. இல்லையா என்பதெல்லாம் வேறு விஷயம். இந்தச் சம்பவம் தொடர்பாக ஜெயக்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படலாம்'' என்கிறார்.
``அந்த நபரை அரை நிர்வாணப்படுத்தியது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதே?'' என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். `` ராயபுரத்தில் உள்ள 49 ஆவது வட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. அந்த நபர் ஒவ்வொரு தேர்தலிலும் கள்ள வாக்கு செலுத்துவதை வழக்கமாக வைத்திருப்பவர். அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கைகளைக் கட்டச் சொன்னதற்குக் காரணம், அவர் என்ன ஆயுதம் வைத்துள்ளார் என்று யாருக்கும் தெரியாது. அவர் கையில் உள்ள ஆயுதத்தால் தாக்கிவிட்டால் என்ன செய்வது? முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் அவ்வாறு செய்தோம்'' என்கிறார்.

பட மூலாதாரம், Jayakumar/FB
தொடர்ந்து பேசுகையில், ``எங்களிடம் பிடிபட்டவர் பொதுமக்களில் ஒருவர் அல்ல, குற்ற வழக்குகள் உள்ள ஒருவர். ஒரு குற்றவாளியை கையாள்வதற்கு எனச் சில வழிமுறைகள் உள்ளன. அப்படிப்பட்ட நபரைக் கைகளைக் கட்டிவிட்டுத்தான் காவல்துறையில் ஒப்படைக்க முடியும். அந்த நேரத்திலும், `அந்த நபரை யாரும் அடிக்கக் கூடாது. அவரை முறையாக காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும்' என்றேன். அவர் மீது ஓர் அடிகூட விழாத அளவுக்குப் பார்த்துக் கொண்டோம். கள்ள ஓட்டு போட வந்ததாக அந்த நபர் மீது புகாரும் பதிவாகியுள்ளது'' என்கிறார்.
மேலும், `` எங்களிடம் பிடிபட்ட நபர் முதலில் காமராஜர் பள்ளியில் வாக்கு செலுத்தினார். பின்னர், அப்பாசாமி பள்ளியிலும் வாக்கு செலுத்தினார். அதற்கான ஆதாரங்கள் உள்ளன'' என்கிறார்.

பிற செய்திகள்:
- யுக்ரேன் - ரஷ்யா பதற்றம்: ஒரே நாளில் 1,400 வெடிப்புச் சம்பவங்கள்
- நரேந்திர மோதியுடன் தேசிய அரசியலில் மோத நினைக்கும் சந்திரசேகர் ராவ்
- கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ நியூயார்க் நகரம் மீது கொண்ட ரகசிய காதல்
- உடலுறவில் இன்பமும் பாதுகாப்பும் - உலக சுகாதார நிறுவனம் அறிக்கை
- பாகிஸ்தானை ஒதுக்கிவிட்டு செளதி அரேபியா இந்தியாவை நெருங்கி வருவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













