மாப்பிள்ளை கன்னத்தில் அறைந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்

திருமணம் மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திருமணம் மாதிரிப் படம்

(இன்று 21.01.2022 வெள்ளிக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)

பண்ருட்டி அருகே திருமண வரவேற்பு விழாவில் மணமகன் கன்னத்தில் அறைந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். இதையடுத்து உறவுக்கார வாலிபர் திடீர் மாப்பிள்ளையாக தேர்வு செய்யப்பட்டு, மணமகளுக்கு திருமணம் நடைபெற்றது என தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளர், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், பண்ருட்டியை சேர்ந்த எம்.எஸ்சி பட்டதாரியான இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்தனர். அதன்படி இவர்களது திருமணம் நேற்று காலை காடாம்புலியூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற இருந்தது.

இதையொட்டி நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு விழா காடாம்புலியூர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமண வரவேற்பு விழாவில் பாட்டு கச்சேரி நிகழ்ச்சியும் நடந்தது. இதில் மணமக்கள் இருவரும் ஜோடியாக ஒரு பாடலுக்கு நடனம் ஆடினர். அந்த சமயத்தில் மணமகளின் சகோதரர் உறவுமுறை கொண்ட வாலிபர் ஒருவரும் அங்கு வந்து நடனம் ஆடினார். இது மணமகனுக்கு பிடிக்கவில்லை.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், திடீரென ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மணமகளின் கன்னத்தில் பளார் என ஓங்கி அறைந்தார். இதில் மணமகள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

அனைத்து சொந்தங்கள் முன்னிலையில் மேடையில் தன்னை அறைந்தவரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன அறிவித்தபடி மணமகள் கதறி அழுதார்.

இப்போதே இப்படி அடிக்கிறார் என்றால் திருமணத்துக்கு பிறகு எனது வாழ்க்கை எப்படி இருக்கும்? என்று ஆவேசமாக கூறி, திருமணத்தை நிறுத்தும்படி தனது பெற்றோரிடமும் உறவினர்களிடமும் கைகூப்பி கேட்டுக்கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

மணமகன் தான் செய்தது தவறு என்று கூறி மணமகள் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இருப்பினும் பெண்வீட்டார் சமாதானம் ஆகவில்லை. திருமணத்திற்கு கொண்டுவந்த சீர்வரிசை பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு, மணமகளை காரில் பண்ருட்டிக்கு அழைத்து சென்றுவிட்டனர்.

பண்ருட்டிக்கு சென்ற மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இரவோடு இரவாக கூடிப்பேசி செஞ்சி அருகில் உள்ள உறவினர் ஒருவரை மணமகனாக தேர்வு செய்தனர். இதையடுத்து உடனே அவர் பண்ருட்டிக்கு அழைத்து வரப்பட்டார்.

பின்னர் நேற்று காலை திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் வைத்து மணப்பெண்ணுக்கும் திடீர் மாப்பிள்ளைக்கும் திருமணம் நடைபெற்றதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

அண்ணாலை, தமிழக பாஜக தலைவர்
படக்குறிப்பு, அண்ணாலை, தமிழக பாஜக தலைவர்

கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளதாக இந்து தமிழ்திசையில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில்: "அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்ற ஏழை விவசாயி மகள், ஒரு பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரை அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மதம் மாறச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்

இதனால் மனமுடைந்த மாணவி, பள்ளியில் இருந்த விஷதிரவத்தை அருந்தியுள்ளார். அரசுமருத்துவமனையில் சிகிச்சைபலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார்" என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் அண்ணாமலை.

"மரணத்துக்கு முன்பு மாணவி பேசிய காணொளிப்பதிவு மனதை பதறவைக்கும். ஆனால், போலீஸாரின் முதல் தகவல் அறிக்கை, மரணத்துக்கு முன்பு மாணவி பேசிய காணொளி பதிவுக்கு சம்பந்தமில்லாமல் இருக்கிறது.

எனவே, நடுநிலையான விசாரணை நடக்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம்செய்தவர்கள் கைது செய்யப்பட்டு கண்டிப்பாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கொரோனா மூன்றாவது அலையில் உயிரிழப்புகள் குறைவு: மத்திய அரசு

கொரோனா வைரஸ் மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொரோனா வைரஸ் மாதிரிப் படம்

கொரோனா இரண்டாவது அலையுடன் ஒப்பிடுகையில் தற்போதைய மூன்றாவது அலையில் உயிரிழப்புகள் வெகுவாக குறைந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையிலும், அதனால் தீவிர உடல்நலக் குறைபாடோ, உயிரிழப்புகளோ ஏற்படாததற்கு அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டதே காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் வியாழக்கிழமை கூறியதாவது:

2021, ஏப்ரல் 30-ஆம் தேதி நிலவரப்படி புதிதாக 3,86,452 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 3,059 போ் உயிரிழந்தனா், 31,70,228 போ் சிகிச்சையில் இருந்தனா். அப்போது இரு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டோரின் விகிதம் இரண்டு சதவீதம் மட்டுமே.

2022, ஜனவரி 20-ஆம் தேதி நிலவரப்படி புதிதாக 3,17,532 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 380 போ் உயிரிழந்தனா். 19,24,051 போ் சிகிச்சையில் உள்ளனா். இப்போது இரு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டோரின் விகிதம் 72 சதவீதமாகும்.

இதன்மூலம் உயிரிழப்பும், சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் 2-ஆவது அலையுடன் ஒப்பிடுகையில் இப்போதைய 3-ஆவது அலையில் வெகுவாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அதேவேளையில், தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன்மூலம் தடுப்பூசி செலுத்திக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும் எனக் கூற விரும்புகிறோம். இரு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவா்களுக்கு நோய் பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்றாா்.

தடுப்பூசி அவசியம்: ஐசிஎம்ஆா் தலைவா் பல்ராம் பாா்கவா கூறுகையில், 'தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையிலும், அதனால் தீவிர உடல்நலக் குறைபாடோ, உயிரிழப்புகளோ ஏற்படாததற்கு அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டதே காரணம். இருப்பினும், இணைநோய் உள்ளவா்கள் தங்கள் உடல்நலத்தைக் கவனித்துக்கொண்டு சிக்கல்களைத் தவிா்க்க வேண்டும். தடுப்பூசிகள் இறப்பைத் தடுக்கின்றன என்பதால் அவை அவசியம் என்று கூறியுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: