பழமையான ராட்சத பவளப்பாறை: ஒளி மங்கிய ஆழக்கடலில் கண்டுபிடிக்கப்பட்டதில் என்ன சிறப்பு?

பட மூலாதாரம், ALEXIS ROSENFELD
- எழுதியவர், விக்டோரியா கில்
- பதவி, அறிவியல் நிருபர், பிபிசி நியூஸ்
பிரெஞ்சு பொலினீசியாவின் தஹிதி கடற்கரையில் 100 அடி ஆழத்தில் 3 கிலோ மீட்டர் பரப்பில் "பழமையான" பவளப்பாறையை கடல்சார் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இத்தகைய ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பவளப்பாறைகளில் இது ஒன்று என்று இந்த பணியை வழிநடத்திய ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு கூறுகிறது.
இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளில் இதுபோன்று இன்னும் பல இருக்கலாம் என்றும், நமக்கு அதுகுறித்து தெரியவில்லை எனவும் யுனெஸ்கோவைச் சேர்ந்த டாக்டர் ஜூலியன் பார்பியர் கூறியுள்ளார்.
"நாங்கள் அவற்றை வரைபடமாக்குவதற்கும் , அவற்றைப் பாதுகாப்பதற்கும் பணியாற்ற வேண்டும்," என்று அவர் கூறினார்.
ஒளிமங்கிய மண்டலம்
கடலுக்கு அடியில் என்ன இருக்கிறது என்பது பற்றிய நமது அறிவை இந்த குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு விரிவுபடுத்தியுள்ளது என்று யுனெஸ்கோவின் இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அசோலே கூறுகிறார்.

பட மூலாதாரம், ALEXIS ROSENFELD
நவம்பரில், கடலின் "ஒளிமங்கிய மண்டலம்" என்று அழைக்கப்படும் ஆழத்திற்கு, டைவிங் பயணம் மேற்கொண்டப்போது இந்த பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய கடற்பரப்பு-வரைபடம் அமைக்கும் பணியின் ஒரு பகுதியாகும்.
"கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீண்டு கிடக்கும் அழகான, ராட்சத பவளப்பாறைகளைக் காண்பது அற்புதமாக இருந்தது" என்று நீருக்கடியில் புகைப்படம் எடுக்கும் பிரெஞ்சு கலைஞர் அலெக்சிஸ் ரோசன்ஃபீல்ட் கூறுகிறார்.
"அது ஒரு கலை வேலைப்பாடு போல இருந்தது," என்று அவர் மேலும் கூறினார்.
பவளப்பாறைகள் கடலில் மிகவும் பாதிப்படையக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும். மாசு, உயரும் கடல் வெப்பநிலை மற்றும் நீரில் கரையும் கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வுகளால் ஏற்படும் வேதியியல் மாற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடியவை இவை.
கடலைப் பற்றி நாம் இன்னும் எவ்வளவு கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இந்த கண்டுபிடிப்பு காட்டுகிறது என்று எடின்பரோ பல்கலைக்கழகத்தின் முன்னணி கடல்சார் விஞ்ஞானியான பேராசிரியர் முர்ரே ராபர்ட்ஸ் கூறுகிறார்.
"நாம் இன்னும் ஆழமற்ற வெப்பமண்டல கடல்களுடன் பவளப்பாறைகளை தொடர்புபடுத்துகிறோம். ஆனால், இங்கு முன்னர் அறியப்படாத ஒரு பெரிய பவளப்பாறை அமைப்பைக் காண்கிறோம்.", என்கிறார்.
"ஆழமான நீரை விட ஆழமற்ற நீர் வேகமாக வெப்பமடைவதால், இந்த ஆழமான கடல் நீரடிப்பாறை அமைப்புகள் எதிர்காலத்தில் பவளப்பாறைகளுக்கு அடைக்கலமாக இருப்பதைக் காணலாம். இந்த சிறப்பு இடங்களை வரைபடமாக்குவதற்கும், அவற்றின் சுற்றுச்சூழல் பங்கைப் புரிந்துகொள்வதற்கும், எதிர்காலத்திற்காக அவற்றைப் பாதுகாப்பதற்கும் நாம் பணியாற்ற வேண்டும்", என்று அவர் விவரிக்கிறார்.
இந்த அழுத்தங்களால் இந்த கடல் நீரடிப் பாறை சேதமடைந்ததற்கு தற்போது "எந்த ஆதாரமும் இல்லை" என்று டாக்டர் பார்பியர் கூறினார். இது "மிக நல்ல நிலையில்" இருக்க, அதன் அசாதாரண ஆழம் ஒரு காரணம் என்கிறார்.
"பொதுவாக நாம் அவற்றை ஆழமற்ற சூழலில் காண்கிறோம். ஏனெனில், பவளப்பாறைகளின் உடலுக்குள் வாழும் பாசிகளுக்கு ஒளி தேவைப்படுகிறது." என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறுகிறார்.
"ஆனால், இங்கே நாங்கள் கடலின் ஒரு பகுதியில் இருக்கிறோம், அது நிலத்திலிருந்து தொலைவில் உள்ளது. எனவே இங்கு கடலில் முடிவடையும் படிவு குறைவாக உள்ளது."
"இந்த கண்டுபிடிப்பு கடல் பல்லுயிர் பற்றிய முக்கியமான நுண்ணறிவை வழங்கியுள்ளது", என்று டாக்டர் பார்பியர் கூறினார்.
"சுமார் 25% கடல் உயிரினங்கள் பவளப்பாறைகளில் காணப்படுகின்றன என்பதை நாங்கள் அறிவோம்," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், ALEXIS ROSENFELD
"எனவே, இந்த வகை கடல் நீரடிப் பாறைகளைச் சுற்றி என்ன உயிரினங்கள் வாழ்கின்றன என்பதைக் கண்டுபிடிப்பது அடுத்த கட்டமாகும்."
வரும் மாதங்களில் மேலும் ஆய்வு நடத்தப்படும்
"இது போன்ற கடல் நீரடிப்பாறைகள் இப்படி வளர சுமார் 25 ஆண்டுகள் ஆகும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்." , என்று பிரான்சு நாட்டின் தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த சிறப்பு டைவர்களில் மற்றொருவரான டாக்டர் லெட்டிஷியா ஹெடூயின் கூறுகிறார்.
"ஆழமான கடல் நீரடிப்பாறைகள் புவி வெப்பமடைதலில் இருந்து சிறப்பாக பாதுகாக்கப்படும் என்று நாங்கள் நினைக்கிறோம்."
"எனவே, இத்தகைய பழமையான நிலையில் இந்த கடல் நீரடிப்பாறை கண்டுபிடிக்கப்பட்டது ஒரு நல்ல செய்தி. இது எதிர்கால கடல்சார் பாதுகாப்பை இது ஊக்குவிக்கும்."
பிற செய்திகள்:
- உ.பி தேர்தலில் களமிறங்கும் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட உன்னாவ் பெண்ணின் தாய்
- இந்திய ராணுவத்தினருக்கு டிஜிட்டல் பிரின்டிங் சீருடை அறிமுகம் - 10 முக்கிய தகவல்கள்
- நடுவானில் விமானத்தில் பிறந்த குழந்தை: நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் பிரசவம்
- ஜெனரல் பிபின் ராவத் பலியான ஹெலிகாப்டர் சம்பவத்துக்கு எது காரணம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












