நீட்: ஓபிசி 27% ஒதுக்கீடு சரியே, ஆனால் EWS ஒதுக்கீடு மீது விரிவாக விசாரணை - உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம்

நீட் உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் அகில இந்திய ஒதுக்கீட்டு (AIQ) இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) அரசியலமைப்பு அதிகாரத்தின்படி வழங்கப்பட்ட 27% இடஒதுக்கீடு செல்லும் என முன்பு வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்திருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு, தகுதிக்கு முரணானது அல்ல, ஆனால் அது பரவலான தாக்கத்தை அதிகரிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, 'போட்டித் தேர்வுகள்' சில வகுப்பினருக்குக் கிடைக்கும் பொருளாதார சமூக நன்மையைப் பிரதிபலிக்காது என்று கூறியது.இந்த வழக்கில் தங்களுடைய முடிவை தெளிவுபடுத்திய நீதிபதிகள், "அரசியலமைப்பின் 15(4), 15(5) ஆகிய பிரிவுகள் கணிசமான சமத்துவத்தின் முக்கிய அம்சங்களாகும். 'போட்டித் தேர்வுகள்' சில வகுப்பினருக்குக் கிடைக்கும் பொருளாதார சமூக நன்மையைப் பிரதிபலிக்காது. 'தகுதி' என்பது சமூகச் சூழலுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். 'இடஒதுக்கீடு' தகுதிக்கு முரணானது அல்ல, ஆனால் அது பரவலான தாக்கத்தை மேலும் அதிகரிக்கிறது," என்று குறிப்பிட்டனர். மாநில அரசு நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான (EWS) இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான விசாரணையின் முடிவிலேயே இந்த தீர்ப்பு வெளிவந்திருக்கிறது.

இந்த விவகாரத்தில் கடந்த ஜனவரி 7ஆம் தேதியே உத்தரவின் சில அம்சத்தை மட்டும் உச்ச நீதிமன்றம் வெளியிட்டிருந்தது. அப்போதே, அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்வதாக நீதிபதிகள் கூறினர். ஆனால், அதற்கான விரிவான காரணங்களை அப்போது நீதிபதிகள் குறிப்பிடவில்லை.

தற்போதைய உத்தரவின் மூலம் அது தெளிவாகியிருக்கிறது. இன்றைய உத்தரவில் அகில இந்திய ஒதுக்கீடு முறை என்பதே அரசு நடத்தும் மருத்துவ நிறுவனங்களில் அமல்படுத்தவே வகுக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

நீட் உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

EWS ஒதுக்கீடு மீது விரிவாக விசாரணை

"எனவே, அகில இந்திய ஒதுக்கீட்டு முறையில் இடங்களில் வழங்குவதற்கு முன் இந்த நீதிமன்றத்தின் அனுமதியை மத்திய அரசு பெற வேண்டிய அவசியமில்லை. இந்த விஷயத்தில் எங்களின் முந்தைய முடிவு சரியானது. இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறை என்பது அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும்," என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.அதேசமயம், பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகத்தினருக்கான ஒதுக்கீட்டை நிர்ணயிப்பதற்கான அளவுகோல்களின் செல்லுபடி தன்மையை இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நீதிமன்றம் விரிவாக விசாரிக்க விரும்புகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

சில வகுப்பினருக்கு கிடைத்த சமூக, பொருளாதார மற்றும் கலாசார நன்மைகள் அவர்களின் வெற்றிக்கு எவ்வாறு பங்களித்தன என்பதை 'நுழைவுத் தேர்வுகள்' பிரதிபலிக்கவில்லை என்று நீதிபதிகள் கூறினர்."தேர்வுகள் 'தகுதிக்கான' மறைமுக வழி அல்ல. தகுதியானது சமூக ரீதியாகவும், மறு கருத்தாக்கமாகவும் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு தகுதிக்கு முரணானது அல்ல, ஆனால் அதன் பரவலான தாக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது," என்று நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டார்.சமூக ரீதியாக பின்தங்கிய குழு அல்லது 'கிரீமி லேயர்' என்ற குறிப்பிட்ட தனிப்பட்ட உறுப்பினர்கள் சிலரது செல்வ வளம், இடஒதுக்கீட்டின் பலன்களை ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் மறுப்பதற்கு பயன்படுத்த முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.முன்னதாக, இந்த வழக்கின் விசாரணையின்போது ஆஜரான நீட் ஆதரவு மனுதாரர்கள், பிற மனுதாரர்கள், இந்திரா சாஹ்னி தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீட்டை 50% என்ற வரம்பாக மட்டுப்படுத்தியிருப்பதால், இடஒதுக்கீட்டைக் கணக்கிடுவதற்கு முன்பு அரசாங்கம் முதலில் நீதிமன்றத்திலேயே விண்ணப்பித்திருக்க வேண்டும் என்று வாதிட்டனர்."அகில இந்திய இடஒதுக்கீடு வழங்குவது என்பது ஒரு கொள்கை முடிவு, இது நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டது அல்ல" என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. நீட் நுழைவுத் தேர்வுக்கு நடுவில், "விதிகளை" மத்திய அரசு மாற்றிவிட்டதாக மனுதாரர்கள் முன்வைத்த வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

"அரசு நடவடிக்கை சரியே" - நீதிபதிகள்

நீட் உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

"கவுன்சிலிங்கிற்கு முன்பே அரசாங்கம் OBC/EWS ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. இதனால், தேர்வுக்கு மத்தியில் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது. கவுன்சிலிங் செயல்முறை தொடங்கும் முன்பே அந்த விவரம் அரசிதழில் வெளியிடப்பட்டது. எனவே, நீட் முதுகலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு சீட் மேட்ரிக்ஸ் விநியோகம் குறித்த எந்த தகவலும் வழங்கப்படவில்லை. கவுன்சிலிங் அமர்வு தொடங்கிய பின்னரே இதுபோன்ற தகவல்கள் கவுன்சிலிங் அமைப்பால் வழங்கப்படுகின்றன, "என்று நீதிமன்றம் தெரிவித்தது. பிற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 27% மற்றும் 10% இடஒதுக்கீட்டை முறையே அமல்படுத்தி சுகாதார அமைச்சகத்தின் பொது சுகாதார இயக்குநரகம் கடந்த ஆண்டு ஜூலை 29ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராக அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மருத்துவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதே இந்த விரிவான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அறிவிக்கையின்படி, முறையே, 15% இளங்கலை இடங்கள் மற்றும் 50% முதுகலை படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நீட் தேர்வு நடத்தி நிரப்பப்படுகிறது.

இதில் ஓபிசி இடஒதுக்கீடு அமல்படுத்தும் நடைமுறையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கான 10% ஒதுக்கீட்டின் செல்லுபடி தன்மை குறித்த விசாரணை மார்ச் மூன்றாவது வாரத்தில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில், ஜனவரி 7ஆம் தேதி, ஆகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான 2021-22 கல்வியாண்டின் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங்கை ஜூலை 29, 2021 தேதியிட்ட அறிவிக்கையின்படி தொடர நீதிமன்றம் அனுமதித்தது.

2019ஆம் ஆண்டு ஜனவரியில் அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ குறிப்பானை மூலம் முதலில் அறிவிக்கப்பட்டு, 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நிதித்துறை செயலர் அஜய் பூஷண் பாண்டே தலைமையிலான நிபுணர் குழு பரிந்துரைப்படி, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களை அடையாளம் காண்பதற்கான வருமான வரம்பு ₹8 லட்சம் என்ற அளவுகோலை நிர்ணயித்து 2021-2022 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை செயல்படுத்தப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: