நீட் விலக்கு மசோதா: நேரம் ஒதுக்காத அமித் ஷா - ஆளுநர் பதவி விலக கோரும் டி.ஆர். பாலு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா சட்டம் ஆகாமல் இருக்க மாநில ஆளுநர் ஆர்.என். ரவியே காரணம் என்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு தெரிவித்துள்ளது.தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநருககு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக தமிழ்நாடு அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் கடந்த வாரமும் இந்த வாரமும் டெல்லியில் முகாமிட்டனர். இந்த குழுவில் மாநில எதிர்கட்சியான அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன், ஆளும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார், விசிக எம்.பி திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெங்கடேசன், ஐயுஎம்எல் எம்பி நவாஸ் கனி உள்ளிட்டோர் கடந்த 29ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமீத் ஷாவை சந்திக்க சென்றனர்.
ஆனால், முன்பே நேரம் ஒதுக்கப்படாததால் அவர்களை சந்திக்க உள்துறை அமைச்சரின் செயலாளர்கள் அனுமதிக்கவில்லை. மறுநாளும் நேரம் சந்திக்கவில்லை.
முன்னதாக இந்த குழு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க சென்றது. ஆனால், கொரோனா பரவல் வழிகாட்டுதல் காரணமாக அவர் எம்.பி.க்கள் குழுவை நேரில் சந்திக்காமல் தமது செயலாளர் மூலமாக மனுவை பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்தார்.
உள்துறை அமைச்சரின் நேரம் கிடைக்காததால் கடந்த வார இறுதியில் எம்.பிக்கள் குழு சென்னைக்கு திரும்பினர்.
இந்த நிலையில், உள்துறை அமைச்சரை மீண்டும் சந்திப்பதற்காக திங்கட்கிழமை காலையில் டி.ஆர். பாலு தலைமையில் அதே குழு டெல்லி வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் டி.ஆர். பாலுவை தொடர்பு கொண்டு அமித் ஷா பேசியதாகவும் அப்போது திங்கட்கிழமை அவர் எங்கே இருப்பார் என அமித் ஷா கேட்டதை வைத்து அன்றைய தினம் அவர் நேரம் தருவார் என்ற நம்பிக்கையுடன் எம்.பி.க்கள் குழு டெல்லி வந்ததாக அதில் இடம்பெற்றவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் எதிர்பார்த்தபடி அமித் ஷா அலுவலகத்தில் இருந்து அழைப்பு வரவில்லை. தமிழக எம்.பி.க்கள் குழுவுக்கு நேரம் பெற்றுத் தர அரசியல் ரீதியாக மட்டுமின்றி டெல்லியில் உள்ள கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றும் தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையர் மூலமாகவும் அமித் ஷா அலுவலகத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனாலும், அவரது அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் வரவில்லை.
இதற்கிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னையில் புதன்கிழமை காலையில் தொடங்கியது. அதில் நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு தேவையில்லை என்ற கருத்தும் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்தது. அதை ஆளுநர் ஆர்.என். ரவி வாசித்தார்.
இந்த நிலையில், திங்கட்கிழமை முதல் புதன்கிழமைவரை காத்திருந்தும் சாதகமான பதில் கிடைக்காததால் மீண்டும் சென்னைக்கு திரும்ப தமிழக எம்.பிக்கள் குழு முடிவு செய்தது. அதற்கு முன்னதாக, தங்கள்த தரப்பில் ஒரு மனுவை தயாரித்து அதை அமித் ஷாவின் அலுவலகத்துக்கு எம்.பி.க்கள் அனுப்பி வைத்தனர்.
ஆளுநர் மீது குற்றச்சாட்டு

பட மூலாதாரம், MKSTALIN FACEBOOK PAGE
இது தொடர்பாக தமது டெல்லி இல்லத்தில் டி.ஆர். பாலு செய்தியாளர்களை சந்தித்தபோது விரிவாக விளக்கினார். அப்போது அவர், அனைத்து கட்சி எம்.பிக்கள் குழுவால் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று மனு அளிக்க முடிகிறது. ஆனால், உள்துறை அமைச்சரை சந்திக்க முடியவில்லை என்று கூறினார்.
"நீட் தேர்வு விலக்கு கோரும் மசோதா குறித்து இந்திய உள்துறை அமைச்சரை சந்திக்க 3 முறை முயன்றும் முடியவில்லை. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை சட்டமாக்க ஆளுநரே அதை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். பிறகு அந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். ஆனால், தமிழ்நாடு ஆளுநர் வேண்டுமென்றே நீட் விலக்கு மசோதாவை மத்திய உள்துறைக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறார்," என்று டி.ஆர். பாலு குறிப்பிட்டார்.
"இதில் தாமதத்திற்கு முழு காரணம் ஆளுநர்தான். அரசியலமைப்பின் மீது பதவி ஏற்றுக் கொண்ட ஆளுநர், அதை குழி தோண்டி புதைத்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக அவர் செயல்படுகிறார். மசோதாவை மத்திய அரசுக்கு அவர் அனுப்பியிருக்க வேண்டும். இல்லையென்றால் ஆளுநர் பதவி விலக வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.
- தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் தலையிடுகிறாரா ஆளுநர் ஆர்.என். ரவி? - சர்ச்சையின் பின்னணி
- தமிழக அமைச்சர்களை எச்சரித்த அண்ணாமலை - கொதிக்கும் திமுக"ஆளுநருக்கு மத்திய உள்துறை அமைச்சரும் துணையாக இருக்கிறார். அரசியல் காரணங்களால் அனைத்துக் கட்சிக்குழுவை அமித் ஷா சந்திக்க மறுக்கிறார். இது கண்டிக்கத்தக்கது," என்றார் டி.ஆர். பாலு.இந்த பேட்டியின்போது அதிமுக நவநீதகிருஷ்ணன், காங்கிரஸ் ஜெயக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் எம்.பிக்கள் தொல். திருமாவளவன், ரவிக்குமர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நீட்: தொடரும் எதிர்ப்பு
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் என்ற நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று தமிழ்நாட்டில் மாணவர்கள், அரசியல் கட்சியினர் போராட்டங்களை நடத்தினர். அரியலூர் அனிதா தொடங்கி 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். முந்தைய அதிமுக ஆட்சியில் இந்த தேர்வு முறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நீட் விலக்கு சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும், இந்த விவகாரத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
இதற்கிடையே, இந்த ஆண்டும் மாணவர்கள் சிலர் நீட் தேர்வு குறித்த அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டதாக சில சம்பவங்கள் நடந்துள்ளன. இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி நீங்கலாக மற்ற அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
பிற செய்திகள்:
- ஆப்கன் - பாகிஸ்தான் எல்லையில் முள்வேலிகளை அகற்றும் தாலிபன்கள் - என்ன நடக்கிறது?
- இலங்கையில் பஷில் ராஜபக்ஷ அறிவித்த திடீர் சலுகைள்: பொருளியல் நிபுணர்கள் கருத்து என்ன?
- இந்தியா, பாகிஸ்தான் இடையே சமய சுற்றுலா - இதயங்களை வெல்லுமா இந்த முன்முயற்சி?
- சென்னை ரயில் நிலைய கொள்ளை: மனைவியோடு ரயில்வே ஊழியர் சிக்கியது எப்படி?
- ‘முஸ்லிம் ஹைக்கர்ஸ்’: விமர்சனங்களை கடந்து பயணத்தைத் தொடரும் இளைஞர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












