நீட் விலக்கு மசோதா: தமிழக எம்.பி.க்களை தவிர்க்கிறாரா அமித் ஷா?

டி.ஆர். பாலு
படக்குறிப்பு, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும் டி.ஆர். பாலு மற்றும் தமிழக எம்.பிக்கள்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாக நேரில் வலியுறுத்துவதற்காக டெல்லி வந்த தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் குழுவை சந்திக்காமல் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தவிர்த்து வருவதாக தெரிகிறது.

நீட் விலக்கு மசோதா தொடர்பான கோரிக்கை மனுவுடன் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு டெல்லிக்கு நேற்று முன்தினம் வந்தது.

நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு. வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் செல்வராஜ், ஐயுஎம்எல் உறுப்பினர் நவாஸ் கனி, காங்கிரஸ் உறுப்பினர் ஜெயக்குமார், அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க முற்பட்டபோது, கொரோனா வழிகாட்டுதல்கள் காரணமாக இரண்டுக்கும் மேற்பட்டோரை சந்திக்க குடியரசு தலைவர் விரும்பவில்லை என்று அவரது மாளிகையில் இருந்து கூறப்பட்டிருக்கிறது. இதனால், தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினர் தங்களுடைய மனுவை குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள அவரது செயலாளரிடம் அளித்து விட்டு திரும்பினர்.

அதே நாளில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் குழு முயன்றபோது, புதன்கிழமை நண்பகல் 12 மணிவாக்கில் வருமாறு கூறப்பட்டது. இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை டி.ஆர். பாலு தரப்பு மேற்கொண்டது.

இந்த நிலையில், புதன்கிழமை காலையில் ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேபதற்காக அமித் ஷா உத்தர பிரதேச மாநிலத்துக்கு சென்றிருந்ததால் அங்கிருந்து டெல்லி திரும்ப தாமதம் ஆவதாக அவரது சிறப்பு அலுவலர் சார்பில் டி.ஆர். பாலு தரப்பிடம் கூறப்பட்டிருக்கிறது.

இதனால் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவினர் டி.ஆர். பாலு இல்லத்தில் புதன்கிழமை காலை 10 மணியில் இருந்தே காத்திருந்தனர். ஆனால், நண்பகல் 12 மணிக்கு எதிர்பார்க்கப்பட்ட அமித் ஷாவின் அழைப்பு வராததால் அங்கேயே மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அமித் ஷா பிற்பகல் 2 மணியளவில் அவரது இல்லத்துக்கு வந்தபோதும், அவர் தமிழக எம்.பி.க்கள் தன்னை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை.

அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

அமித் ஷா செவ்வாய்க்கிழமை இரவும், புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கும் நேரம் ஒதுக்காததால் நேரடியாகவே டி.ஆர். பாலு, திருமாவளவன், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் உள்துறை அமைச்சரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். ஆனால், அவர்களை வாயில் தடுப்பிலேயே பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து அமித் ஷா வீட்டு வாயிலேயே அவரது உதவியாளரை கடுமையாக பேசி விட்டு மீண்டும் தமது வீட்டுக்கே எம்.பி.க்கள் குழுவினருடன் டி.ஆர். பாலு திரும்பியிருக்கிறார்.

இதனால், மாலை வரை காத்திருக்க தமிழக அனைத்துக்கட்சி எம்.பிக்கள் குழு முடிவு செய்தபோது, மாலை 4 மணியளவில் பிரதமர் நரேந்திர மோதி அழைப்பு விடுத்திருந்த அமைச்சர்கள் குழு கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்க சென்று விட்டதாக கூறப்பட்டது. அந்த கூட்டத்தில் பங்கேற்று விட்டு இரவு 8 மணிக்கு மேல் அமித் ஷா வீடு திரும்பினார்.

அதன் பிறகு அவரை தொடர்பு கொண்டு ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்குமாறு டி.ஆர். பாலு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனாலும், அமித் ஷாவின் இசைவு கிடைக்காததால் தமிழக எம்.பி.க்கள் இரவு 9 மணிவரை காத்திருந்த பிறகு ஏமாற்றத்துடன் அவரவரின் டெல்லி வீடுகளுக்கு திரும்பினர்.

இது குறித்து டி.ஆர். பாலுவிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அனைத்து கட்சி குழுவினரை பார்க்க தொடர்ந்து முயன்று வருகிறோம். ஆனால், நேரம் கிடைக்கவில்லை," என்று தெரிவித்தார்.

தமிழக எம்.பி.க்கள்
படக்குறிப்பு, தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவுடன் டி.ஆர். பாலு.

இதையடுத்து மீண்டும் வியாழக்கிழமை காலையில் டி.ஆர். பாலு வீட்டில் தமிழக எம்.பி.க்கள் குழுவினர் கூடியபோது, அங்கிருந்து முதல்வர் மு.க. ஸ்டாலினை தொடர்பு கொண்டு டி.ஆர். பாலு பேசியிருக்கிறார். அப்போது அமித் ஷா எம்.பி.க்களை சந்திக்காமல் தவிர்ப்பதாக தோன்றுவதாக கூறப்பட்டபோது, இந்த விவகாரத்தில் அமித் ஷாவை பார்த்த பிறகே திரும்புமாறு ஸ்டாலின் கேட்டுக் கொண்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக எம்.பி.க்கள் குழுவுக்கு அமித் ஷா தரப்பு நேரம் ஒதுக்காமல் இருப்பது ஏன் என்று அவரது அலுவலக உயரதிகாரியிடம் பிபிசி தமிழ் பேசியது. அப்போது, ஏற்கெனவே ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயங்களிலும் நிகழ்ச்சிகளிலும் அமித் ஷா பங்கேற்று வருவதாலேயே தமிழக எம்.பிக்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்று மட்டும் கூறினார்.

அதே சமயம், அமித் ஷா நேரம் ஒதுக்காதபோதும், அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் நீட் விலக்கல் மசோதாவுக்கு ஒப்புதல் கோரும் நடவடிக்கையில் ஒன்றாக இருப்பதாக எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்றுள்ள சு. வெங்கடேசன் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

உத்தர பிரதேசத்தில் அமித் ஷா பிரசாரம்

இந்த நிலையில், அமித் ஷா உத்தர பிரதேச மாநிலத்தின் மொரதாபாத், அலிகா், உன்னாவ் ஆகிய பகுதிகளில் நடந்த பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வியாழக்கிழமை காலையிலேய சென்று விட்டதாக தெரிய வந்துள்ளது.

மீண்டும் தமிழக எம்.பி.க்கள் எதிர்பார்த்தபடி அமித் ஷாவிடம் இருந்து அழைப்பு வரவில்லை.

இதையடுத்து, அமித் ஷாவுக்கு தமிழக எம்.பி.க்கள் கூட்டாக கடிதம் எழுதி அதில் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டிய அவசியத்தை விளக்கியிருந்தனர்.

இது குறித்து இன்று மாலையில் தமிழக எம்.பி.க்கள் குழு, டி.ஆர். பாலுவுடன் சேர்ந்து அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது, "குடியரசு தலைவர் மாளிகையில் மனு கொடுத்து விட்டு வந்த அதே நாள் இரவில் சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் பார்வைக்கு எங்களுடைய மனு மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்படும்," என்று கூறப்பட்டுள்ளது என டி.ஆர். பாலு தெரிவித்தார்.

இதையடுத்து அமித் ஷாவை தொடர்பு கொள்ள தாங்கள் மேற்கொண்ட முயற்சிகளை டி.ஆர். பாலு விளக்கினார். தமிழக எம்.பிக்கள் குழுவை அமித் ஷா பார்க்காமல் தவிர்க்கிறாரா என்று கேட்டபோது, அப்படியிருக்க வாய்ப்பில்லை. நானும் அமைச்சராக இருந்தவன். நாட்டின் உள்துறை அமைச்சராக இருப்பவர் அவர். அவர் ஒன்றும் சாதாரண நபர் அல்ல. நிமிடத்துக்கு நிமிடம் பல விஷயங்களில் மாற்றங்கள் நடக்கலாம். அவற்றை அவர் கவனித்தாக வேண்டும். எங்களுக்கு அவர் நேரம் தருவார் என நம்புகிறோம். அதற்கு முன்பாக எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்துவதற்காக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் நேரம் ஒதுக்கித் தருமாறு அமித் ஷாவுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறோம் என்று டி.ஆர். பாலு தெரிவித்தார்.

மத்திய அரசிடம் வலியுறுத்த ஏன் அவசரம்?

நீட் மசோதா
படக்குறிப்பு, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கடந்த நவம்பர் மாதம் நேரில் சந்தித்து வலியுறுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2022ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ளது. அப்போது நீட் விலக்கு மசோதா தொடர்பாக அரசு தமது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்பதால், அதற்கு முன்பாக இந்த விவகாரத்தில் தமது தரப்பு நடவடிக்கையை உறுதிப்படுத்தவே மத்திய அரசை வலியுறுத்தும் கோரிக்கை மனுவை அதன் பார்வைக்கு பதிவு செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் விரும்புவதாகத் தெரிகிறது.

நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் ஏற்கெனவே தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக டி.ஆர். பாலு குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், அந்த மசோதா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து கல்வியாளர் ப்ரின்ஸ் கஜேந்திர பாபு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ஆளுநர் மாளிகைக்கு விண்ணப்பத்திருந்ததற்கு, அது பரிசீலனையில் இருப்பதாக மட்டும் இம்மாதம் 17ஆம் தேதியிட்டு பதில் கடிதம் அனுப்பப்பட்டது.

இந்தப்பின்னணியில் நீட் விலக்கு மசோதா மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டபோதும், அது அடுத்த கட்டத்துக்கு முன்னேறாமல் இருப்பது ஒரு பின்னடைவாகவே இருப்பதாக தமிழக அரசு கருதுவதாக திமுகவினர் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: