சென்னை ரயில் நிலைய கொள்ளை: மனைவியோடு ரயில்வே ஊழியர் சிக்கியது எப்படி?

தமிழக காவல்துறை

பட மூலாதாரம், RAILWAY POLICE-TN

சென்னை ரயில் நிலைய கொள்ளை வழக்கில் மனைவியோடு சேர்ந்து நாடகமாடியதாக ரயில்வே ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபரை பணி இடைநீக்கம் செய்துள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

`ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏராளமான கடன்கள் ஏற்பட்டதால் அதனை அடைப்பதற்காகவே இப்படியொரு கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்,' என்று தமிழக காவல்துறையின் ரயில்வே பிரிவு துணைத் தலைவர் (டிஐஜி) ஜெயகெளரி. என்ன நடந்தது?

சென்னை திருவான்மியூரில் உள்ள பறக்கும் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமையன்று காலையில் டிக்கெட் எடுப்பதற்காக பயணிகள் சிலர் வந்துள்ளனர்.

நேரம் செல்லச் செல்ல டிக்கெட் கொடுப்பதற்கு யாரும் வரவில்லை. அப்போது சிலர் டிக்கெட் கவுன்டரின் அறை வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததை கவனித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த பயணிகள் சிலர் ரயில்வே காவலர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, டிக்கெட் கவுன்டர் அறையைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, ரயில்வே ஊழியர் டீக்காராம் என்பவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உட்கார்ந்திருப்பதைக் கண்டனர். அவர் வாயில் துணி ஒன்றும் திணிக்கப்பட்டிருந்தது.

அவரது கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கட்டுகளை அவிழ்த்துவிட்டு என்ன நடந்தது என காவல்துறையினர் கேட்டபோது, வழக்கம்போல டிக்கெட் கவுன்ட்டரைத் திறக்க வந்தபோது மூன்று பேர் துப்பாக்கிமுனையில் தன்னை மிரட்டிவிட்டு சுமார் 1.25 லட்ச ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுச் சென்றதாக கூறினார்.

தமிழக காவல்துறை

பட மூலாதாரம்,

மேலும், கொள்ளையர்கள் தனது கை, கால்களைக் கட்டிப் போட்டதால் உயிர் பயத்தில் இருந்ததாகவும் டீக்காராம் தெரிவித்தார்.

இது தொடர்பாக, ரயில்வே காவல்துறையில் டீக்காராம் புகார் மனு ஒன்றையும் காவல்துறையிடம் அளித்திருந்தார். அதன்பேரில் ஐந்து தனிப்படைகளை அமைத்த ரயில்வே காவல்துறையினர், சம்பவம் நடந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து டீக்காராமிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, அவர் தெரிவித்த தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கொள்ளைச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால், அருகில் உள்ள கட்டடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அதிகாலையில் டீக்காராம் பணிக்கு வந்த சில நிமிடங்களில் ஒரு பெண்மணியும் உள்ளே வந்துள்ளார். அவர் கூறுவது போன்ற மர்ம நபர்களின் காட்சிகள் எதுவும் பதிவாகாததால் டீக்காராமிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

தமிழக காவல்துறை

பட மூலாதாரம்,

அதில், டீக்காராம் தனது மனைவியுடன் சேர்ந்து கொள்ளை நாடகம் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் டீக்காராம், அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்ட முழுப் பணமும் மீட்கப்பட்டு விட்டதாக செய்தியாளர் சந்திப்பில் தெற்கு ரயில்வே டிஐஜி ஜெயகெளரி தெரிவித்தார்.

``டீக்காராம் கைது செய்யப்பட்டது எப்படி?'' என விளக்கம் அளித்த தெற்கு ரயில்வே டிஐஜி ஜெயகெளரி, `` ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் அடையாளம் தெரியாத 3 நபர்கள் துப்பாக்கி முனையில் தனது கை, கால்களை கட்டிப் போட்டுக் கொள்ளையடித்ததாக டீக்காராம் கூறியிருந்தார். ஆனால், விசாரணை நடத்தியபோது அவர் கூறிய தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. இதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம்.

இதுதொடர்பாக, புகார் வந்தவுடன் 24 மணிநேரத்தில் குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் என உயர் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதற்கேற்ப, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் ஆதாரப்பூர்வமாக சிலவற்றைக் கண்டறிந்தோம். இந்த வழக்கில் டீக்காராம் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து பணம் கொள்ளை போனதாக நாடகமாடியது கண்டறியப்பட்டது. இதில், முழு பணத்தையும் மீட்டு விட்டோம்,'' என்றார்.

``எதற்காக அவர் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டார்?'' என கேட்டபோது, ``ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில் அவர் ஈடுபட்டிருந்ததால் பணத் தேவை இருந்துள்ளது. இதற்காக நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரிடமும் அதிகளவில் கடன் வாங்கியுள்ளார். ஆன்லைன் ரம்மியால் தான் அதிக பணத்தை இழந்ததாகவும் கூறினார். இதனை அடைக்கும் வகையில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். தனது மனைவியின் ஒத்துழைப்புடன் இதைச் செய்துள்ளார். அதனை உறுதிப்படுத்தும் வகையிலான சிசிடிவி காட்சிகளும் கிடைத்துள்ளன,'' என்றார்.

மேலும், ``ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா பொருத்துவது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்துக்குக் கூறியுள்ளோம்'' என்றார் ஜெயகெளரி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: