செந்தில்பாலாஜி: ``எனக்கு எதிராக தி.மு.கவினரே போராட்டமா?'' - தொடரும் டாஸ்மாக் பார் டெண்டர் சர்ச்சை

- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
மதுபான கடை பார் தொடர்பான டெண்டரில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில், விதிமுறைகளின்படியே டெண்டர் கோரப்பட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டு முன்பாக மதுபானக் கடை பார் உரிமையாளர்கள் திங்கள்கிழமையன்று காலையில் போராட்டம் நடத்தினார்கள். கடந்த டிசம்பர் மாதம் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பார் டெண்டர் திறக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாகவும் செய்தியாளர்களிடம் அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அந்தப் போராட்டத்தில், அமைச்சருக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர்.
இதையடுத்து, போராட்டம் நடத்தியவர்களை அழைத்து அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்துப் பேசினார். அப்போது, கொரோனா காலத்தில் வருமானம் இல்லாமல் தாங்கள் சிரமப்படுவதாகவும் ஒரு சிலருக்கே ஒப்பந்தம் செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்படுவதாகவும் பார் உரிமையாளர்கள் தெரிவித்தனர். அவர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தங்களின் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக பார் உரிமையாளர்கள் அறிவித்ததாகத் தகவல் வெளியானது. முன்னதாக காலையில் நடந்த அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டத்தில் தி.மு.கவை சேர்ந்த பிரமுகர்களும் பங்கேற்றதாகக் கூறப்பட்டது.
செந்தில் பாலாஜி விளக்கம்
இந்நிலையில், சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, காலையில் தனக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் குறித்து விளக்கினார்.
``யார் வேண்டுமானாலும் பார் தொடர்பான டெண்டர் தாளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து பங்கேற்கலாம். நேரிலும் அவர்கள் கலந்து கொள்ளலாம். அந்த வகையில் இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 5,380 மதுபானக் கடைகள் உள்ளன. அதில் 2168 கடைகளுக்கு மட்டும்தான் கடந்த காலங்களில் பார் செயல்பட்டு வந்தன. மீதமுள்ள 1,551 கடைகளுக்கு பார் செயல்படுவதற்கான வசதிகள் இருந்தும் செயல்படவில்லை. அந்த நிலைகளை எல்லாம் மாற்றி தற்போது முழுவதுமாக கண்டறியப்பட்டு அந்த இடங்களை டெண்டர் மூலமாக விடுவதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன,'' என்றார்.
தொடர்ந்து கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பார் டெண்டர் தொடர்பாகப் பேசுகையில், `` 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற டெண்டரில் 5,387 கடைகளுக்கும் சேர்த்து பெறப்பட்ட விண்ணப்பம் என்பது 6,482 ஆகும். இந்த ஆண்டு வெளிப்படையான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டதன் அடிப்படையில் இந்த ஆண்டு 11,215 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. யாரெல்லாம் டெண்டரில் பங்கேற்க வேண்டும் என நினைத்தார்களோ அவர்கள் எல்லாம் பங்கேற்றுள்ளனர். நேரில் விண்ணப்பம் பெற்றவர்களும் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு கடைபிடிக்கப்பட்ட அதே விதிமுறைகள்தான் தற்போதும் பின்பற்றுள்ளன. கூடுதலாக 2 விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. கொரோனா வழிகாட்டும் நெறிமுறைகள், பார்கள் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என 2 விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் எந்தவிதமான ஒளிவுமறைக்கும் இடமில்லை'' என்றார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
மேலும், தனது வீடு அருகே ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் குறித்துப் பேசும்போது, ``ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் ஐந்து பேரை அழைத்துப் பேசினேன். அவர்களிடம், `என்னைச் சந்தித்து மனு கொடுத்தீர்களா', `டாஸ்மாக் எம்.டியிடம் மனு கொடுத்தீர்களா?' எனக் கேட்டேன். `இல்லை' என்றார்கள். சில இடங்களில் 2 பெட்டிகளை வைத்திருப்பதாகக் கூறினார்கள். `உங்கள் முன்னிலையில்தான் திறக்கப்பட்டு படித்துக் காட்டியுள்ளனர் ' என்றேன்.

பட மூலாதாரம், Getty Images
டெண்டர் புள்ளிகள் கோரப்பட்ட பிறகு இன்று ஆய்வு செய்யும் பணிகள் நடக்க உள்ளன. அதற்குள் என்ன முறைகேடுகளை இவர்கள் கண்டறிந்துவிட்டீர்கள் எனக் கேட்டபோது, அவர்களிடம் பதில் இல்லை. `யூகத்தின் அடிப்படையிலான கோரிக்கைளுக்குப் பதில் அளிக்க முடியாது. சந்தேகங்களை எழுதிக் கொடுங்கள்' எனக் கேட்டுள்ளேன். அதிக விலையை குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் பார் நடத்துவதற்கு நிர்வாகம் அனுமதி கொடுக்கும். என்னை நிர்பந்தக் கூடிய அளவுக்கு அவர்களின் எண்ணங்கள் இருந்தன. விதிமுறைகளை முழுமையாக அவர்கள் பின்பற்ற வேண்டும். `கடந்த காலங்களில் ஒப்பந்தங்களை எடுத்தவர்கள் எந்தவித நிலுவையும் வைத்திருக்கக் கூடாது. இதனை பூர்த்தி செய்யாதவர்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படாது' என போராட்டம் நடத்தியவர்களிடம் கூறினேன்'' என்றார்.
``சில சமூக வலைதளங்களில் நிறைய செய்திகளை எழுதுகிறார்கள். விண்ணப்பம் கொடுக்காமல் திருப்பி அனுப்பியதாக எதாவது புகார்கள் வந்ததா? எனக் கேளுங்கள். கட்டட உரிமையாளரின் ஒப்புதல் கடிதம் கொடுத்தால் அதனை சரிபார்ப்பது நிர்வாகத்தின் கடமை. யாருடைய விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிக்கப்படவில்லை. என் வீட்டுக்கு முன்பாக நின்று கொண்டு களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வந்தவர்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளேன்'' என்றார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
`` போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தி.மு.க கொடியுடன் வந்தார்கள், முதலமைச்சரின் படம் வைத்திருந்தார்கள். அரசியல் உள்நோக்கம் என்பது தி.மு.கவில் இருந்தே வருகிறதா?'' என செய்தியாளர்கள் கேட்டபோது, `` யார் தூண்டுதல் என்பது வேறு விஷயம். போராட்டம் நடத்தியவர்களிடம், டெண்டர் நிராகரிக்கப்பட்டதா எனக் கேட்க வேண்டும்.
2019-20 ஆம் ஆண்டில் பார் டெண்டர் மூலம் 312 கோடி ரூபாய் வந்தது. அடுத்த ஆண்டு 89 கோடி ரூபாய்தான் வந்தது. கோவிட் சூழல், பார்கள் மூடப்பட்டவை போன்றவை காரணமாக இருந்தன. கடந்த ஆட்சியில் சிலர் அனுமதியில்லாமல் பார் நடத்துவதற்கு அனுமதி கொடுத்தனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
என் வீட்டின் முன்பாக போராட்டம் நடத்தியவர்கள் அனைவருமே டெண்டரில் பங்கெடுத்தவர்களா? என என்னிடம் பேச வந்தவர்களிடம் கேள்வி கேட்டேன். அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு பேசியிருக்க வேண்டும். ஆவணங்களை சரிபார்ப்பதற்கு முன்னரே ஏன் சந்தேகம் வர வேண்டும்? 11,215 பேர் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் 5300 கடைகளை ஒதுக்க வேண்டும். விலைகளைக் குறைவாக போட்டிருந்தால் கிடைக்காது. இதில் அந்தக் கட்சி, இந்தக் கட்சி எனப் பார்க்கக் கூடாது. இந்த 2 நாள்களில் யாராவது விண்ணப்பம் பெறாமல் திரும்பி வந்தார்களா? யாரெல்லாம் ஆன்லைனில் விண்ணப்பித்தார்களோ, நேரில் கொடுத்தார்களோ அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன'' என்றார்.
``காஞ்சிபுரத்தில் டெண்டர் பெட்டியே வைக்கவில்லை எனக் கூறி அங்கே போராட்டம் நடந்ததே?'' எனக் கேட்டபோது, ``சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் டெண்டரை ஒத்திவைத்துள்ளனர். இன்னும் விண்ணப்பங்கள் வரவேண்டும் என்பதாலும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாலும்தான் அப்படி செய்தனர். என் வீட்டு முன்பு கோஷம் போட்டவர்கள் அப்போதே கூறியிருக்கலாம். தங்களுக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்களுக்கு சந்தேகம் இருந்தால் எங்களிடம் கேட்கலாம். நில உரிமையாளர்களின் சான்றுகளைக் கையில் வைத்துக் கொண்டு, எனக்கு மட்டும்தான் கொடுக்க வேண்டும் என கேட்கின்றனர். இதர விதிமுறைகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை. ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்கு ஒருவாரம் அவகாசம் கொடுக்கப்படும்,'' என்றார்.

பட மூலாதாரம், Getty Images
தொடர்ந்து, ``கோடைக்காலத்தில் மின்விநியோகம் எப்படியிருக்கும்?'' எனக் கேட்டபோது, `` கோடை காலத்தில் மின்பற்றாக்குறை இல்லாத அளவுக்கு தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த மழையில் பாதிப்படைந்த பகுதிகளில் 10, 12 நாள் கழித்து மின்விநியோகம் செய்யப்பட்டது. தற்போது நவம்பர் மாதம் பெய்த மழையில் 2 நாளில் விநியோகம் செய்யப்பட்டது. கோடைக்காலத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் மின்விபத்துகள் நடந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையோடு வாரியத்தின் பணிகள் நடந்து வருகின்றன. திட்டங்களை செயல்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். கடந்த காலங்களில் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வரவில்லை. நாங்கள் புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்த உள்ளோம்'' என்றார்.
விவசாய மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தப் போவதாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அறிக்கை வெளியிட்டிருந்தது குறித்து கேட்டபோது, ``கடந்த ஆட்சியில் 2016 முதல் விவசாயப் பணிகளுக்கு மீட்டர் பொருத்தப்பட்டு வருவது அவருக்குத் தெரியுமா அல்லது தெரிந்து மறைத்தாரா எனத் தெரியவில்லை. 2,66,000 விவசாயிகளுக்கு மார்ச் மாதம் வரையில் மீட்டர் பொருத்தக்கூடிய பணிகளை அவர்களே முடித்துவிட்டனர். அவையெல்லாம் அந்த அறிக்கையில் இல்லை. புதிதாக தொடங்கப் போவதைப் போலக் கூறியிருக்கிறார்.
மேலும், ஏதோ புதிதாக இதர கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப் போவதாகக் கூறியிருக்கிறார். இதற்கு எந்தவித எதிர்ப்புகளும் தெரிவிக்காமல் கடந்த ஆட்சியில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனர். புதிதாக ஜிஎஸ்டி வந்ததைப்போல கூறுகிறார். அவர் தெரிந்துகொண்டு அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும். புதிய உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை'' என்கிறார் செந்தில் பாலாஜி.
பிற செய்திகள்:
- "இலங்கையில் 5 பிள்ளைகளை பெற்றெடுக்கும் சட்டம் வேண்டும்" - முன்னாள் அமைச்சர் பி.ஹரிசன்
- ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் என்ன செய்கிறது?
- டெஸ்லா ஆட்டோ பைலட் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட தமிழ்நாட்டின் அசோக் எல்லுசுவாமி
- 3,000 லிட்டர் மதுபானத்தை கால்வாயில் கொட்டிய தாலிபன்கள் - ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












