போலீஸ் கைது: இந்த விதிகளை பின்பற்றுவது கட்டாயம் தெரியுமா?

போலீஸ் கைது

பட மூலாதாரம், Getty Images

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் திருட்டு குற்றச்சாட்டில் காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்கள் நடத்தப்பட்டவிதம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. ஒருவர் கைது செய்யப்படும்போது எப்படி நடத்தப்பட வேண்டும்?

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் தில்லை நகரில் வசிக்கும் குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, அதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மூன்று பேரும் ஞாயிற்றுக்கிழமையன்றே சீருடை அணியாத காவல்துறையினரால் பிடித்துச் செல்லப்பட்டதாக, குடும்பத்தினர் கூறினாலும் செவ்வாய்க்கிழமைதான் அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறையின் பிடியில் இவர்கள் இருக்கும்போது அடையாளம் தெரியாத இடத்தில் வைத்து கடுமையாகத் தாக்கப்பட்டதாக காவல்துறையால் விடுவிக்கப்பட்ட ஒருவர் கூறியிருக்கிறார்.

கைது விதிகள் என்ன?

இந்தியாவில் காவல்துறை ஒருவரை கைது செய்யும்போது என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதை மீறும் வகையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் சட்டத்துக்கு எதிரானவை ஆக கருதப்படலாம்.

உண்மையில், ஒருவரை கைது செய்யும் போது காவல்துறை என்ன செய்ய வேண்டும்?

1980களில் இந்தியா முழுவதுமே காவல்துறை மரணங்கள் அதிகரித்து வந்த நிலையில், அந்த விவகாரத்தில் மீது உச்ச நீதிமன்றம் தலையிட்டது.

1986ல் டி.கே.பாசு என்ற கல்கத்தா (இப்போது கொல்கத்தா) உயர் நீதிமன்ற நீதிபதி காவல் நிலைய மரணங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதினார். அதையே மனுவாக ஏற்றுக்கொண்டு இந்த விவகாரத்தை விசாரிக்க ஆரம்பித்தது உச்ச நீதிமன்றம்.

இது தொடர்பாக எல்லா மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

போலீஸ் கைது

பட மூலாதாரம்,

காவல்நிலைய சித்ரவதைகளையும் மரணங்களையும் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்து முடிவெடுக்க இந்திய சட்ட ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், ஒருவர் கைது செய்யப்படும்போது பின்பற்றப்பட வேண்டிய 11 விதிமுறைகளை இந்தியா முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பும்படி உத்தரவிட்டது. அவற்றின் விவரம்:

1. ஒருவரை கைது செய்யும்போது அது தொடர்புடைய வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி தங்களது பெயர் பொறிக்கப்பட்ட பட்டையைத் தெளிவாகத் தெரியும் வகையில் சீருடை அணிந்திருக்க வேண்டும். யார் விசாரணை அதிகாரி என்பது காவல்துறை பதிவேட்டில் குறிப்பிடப்பட வேண்டும்.

2. கைது செய்யும்போது அது குறித்த மெமோவை தயார் செய்ய வேண்டும். அதில் கைது நடந்த நேரம், தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அதனை கைது செய்யப்பட்டவரின் குடும்ப உறுப்பினரோ, அல்லது அந்தப் பகுதியின் பெரிய மனிதர் ஒருவரோ ஏற்று ஒப்புதல் சாட்சியமளித்து கையெழுத்திட வேண்டும். கைது செய்யப்பட்டவரும் அதில் கையெழுத்திட வேண்டும்.

3. கைது செய்யப்பட்ட அல்லது பிடித்துச் செல்லப்பட்ட அல்லது விசாரிக்கப்படும் நபரின் உறவினர், நண்பர், நலம் விரும்பி ஆகிய யாராவது ஒருவருக்கு முடிந்த அளவு விரைவாகத் தகவல் சொல்ல வேண்டும். எந்த இடத்தில் கைது செய்து வைக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தைத் தெரிவிக்க வேண்டும். குடும்ப உறுப்பினரே சாட்சியமளித்து கையெழுத்திட்டால் இதைச் செய்யத் தேவையில்லை.

4. கைது செய்யப்பட்டவரின் உறவினரோ நண்பரோ மாவட்டத்திற்கு வெளியில் வசித்தால் கைது செய்யப்பட்ட இடம், நேரம் குறித்த தகவல்களை 8 முதல் 12 மணி நேரத்திற்குள் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மாவட்ட சட்ட உதவி ஆணையமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையமும் தந்தி மூலம் இதனைச் செய்ய வேண்டும்.

5. ஒரு நபர் கைது செய்யப்பட்டவுடன், அதனை யாருக்காவது தெரிவிக்கும் உரிமை கைது செய்யப்பட்ட நபருக்கு இருக்கிறது என்பதை அவருக்குச் சொல்ல வேண்டும்.

6. கைது செய்யப்பட்ட காவல் நிலைய நாட் குறிப்பில் கைது குறித்தும் யாருக்கு தெரிவிக்கப்பட்டது என்பது குறித்தும் எந்த காவல் அதிகாரியின் பிடியில் அந்த நபர் இருக்கிறார் என்பது குறித்தும் பதிவு செய்ய வேண்டும்.

போலீஸ் கைது

பட மூலாதாரம், Getty Images

7. கைது செய்யப்படும் நபர் தன்னை பரிசோதிக்க வேண்டுமென கோரலாம். ஏதேனும் காயங்கள் இருந்தால் அவை பதிவு செய்யப்பட வேண்டும். இந்த சோதனை ஆவணம் கைது செய்யப்பட்ட நபராலும் கைதுசெய்யும் காவல்துறை அதிகாரியாலும் கையெழுத்திடப்பட வேண்டும். இதன் பிரதி கைதுசெய்யப்பட்ட நபருக்கு வழங்கப்பட வேண்டும்.

8. கைது செய்யப்பட்ட நபருக்கு 48 மணி நேரத்திற்குள் தகுதி வாய்ந்த மருத்துவரால் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். அந்தந்த மாநிலத்தின் மருத்துவ சேவை இயக்குநரகத்தால் சான்றளிக்கப்பட்ட மருத்துவரே இந்த சோதனையைச் செய்ய வேண்டும்.

9. கைது ஆவணம் உட்பட அனைத்து ஆவணங்களும் அந்தப் பகுதியின் மாஜிஸ்ட்ரேட்டிற்கு அனுப்பப்பட வேண்டும்.

10. விசாரணையின்போது தனது வழக்கறிஞரைச் சந்திக்க கைது செய்யப்பட்டவருக்கு உரிமை உண்டு. ஆனால், முழு நேரமும் இருக்க வேண்டியதில்லை.

11. ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநில தலைமையகத்திலும் இதற்கென ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைக்க வேண்டும். இந்த கைது, அந்த நபர் வைக்கப்பட்டிருக்கும் இடம் குறித்த தகவல்களை அங்கே அனுப்ப வேண்டும். கைது நடந்து 12 மணி நேரத்திற்குள் இதைச் செய்ய வேண்டும்.

இந்த நெறிமுறைகள் நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு நேரடியாக அனுப்பப்பட்டன. மேலும், அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனிலும் இவை ஒளிபரப்புச் செய்யப்படி கூறப்பட்டது.

ஆனால், இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் காவல் நிலைய மரணங்களுக்கு இழப்பீடு கோரும் விதிமுறை ஏதும் இல்லை. நிலாபடி VS ஒரிசா மாநில அரசு என்ற வழக்கிற்குப் பிறகுதான் இழப்பீடு கேட்பதென்பது சட்ட ரீதியான உரிமையாக மாற்றப்பட்டது.

தவிர, இழப்பீடு என்பது உயிர் வாழும் உரிமை பறிக்கப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. வேறு அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டால் இழப்பீடு கோர முடியாது.

இவை தவிர, கைதிகளுக்கென ஏற்கனவே சில உரிமைகள் இருக்கின்றன. அவை:

1. கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.

2. கைதின் போதோ, விசாரணையின்போதோ மோசமாக நடத்தவோ, சித்ரவதை செய்யவோ கூடாது.

3. காவல் துறையின் பிடியில் இருக்கும்போது ஒருவர் அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தை, அவருக்கு எதிரான சாட்சியமாக பயன்படுத்த முடியாது.

4. 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களையோ பெண்களையோ கேள்விகேட்பதற்காக என காவல் நிலையத்திற்கு வரவழைக்க முடியாது.

5. இந்திய குற்ப்பிரிவு சட்டத்தின் 46 பிரிவு துணைப்பிரிவு (4)ன்படி, குற்றம் நிகழ்ந்த உள்ளூர் வரம்புக்குட்பட்ட மாஜிஸ்திரேட்டின் முன் அனுமதியின்றி, விதிவிலக்கான சூழ்நிலைகளில், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மற்றும் சூரிய உதயத்திற்கு முன், எந்தப் பெண்ணையும் கைது செய்யக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

விசாரணை கைதிகள் மற்றும் சிறை கைதிகளின் உரிமைகளைக் காக்கும்வகையில் இதுபோன்ற தெளிவான விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தாலும், பல தருணங்களில் அவை மீறப்பட்டே வந்திருக்கின்றன.

காணொளிக் குறிப்பு, என்னால் ஜெய்பீம் படத்தைப் பார்க்கவே முடியவில்லை - பார்வதி அம்மாள் பேட்டி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :