சட்ட வரலாறு: லாக்அப் சாவுக்கு அரசு இழப்பீடு தர காரணமாக இருந்த வழக்கு பற்றி தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்நாடு தொடர்பான பல வழக்குகள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த முக்கியமான வழக்குகள் குறித்த சிறிய தொடரை வாரந்தோறும் புதன்கிழமை வழங்குகிறது பிபிசி தமிழ். அதன் எட்டாம் பாகம் இது.
ஒரிசாவில் ஒரு சிறு திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர், அடுத்த நாள் ரயில் தண்டவாளம் அருகில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அந்த இளைஞரின் தாயார் உச்ச நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதம், காவலர்கள் கைதிகளை நடத்தும் விதத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அந்த வழக்கு எது என தெரியுமா?
வழக்கின் பின்னணி
1987 டிசம்பர் 1ஆம் தேதி. ஒரிசாவின் சுந்தர்கெர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது சுமன் பெஹரா ஒரு திருட்டு வேலையில் ஈடுபட்டதாகக் கூறி ஜராய்கெலா காவல்துறை அவுட்போஸ்ட்டைச் சேர்ந்த துணை ஆய்வாளர் சரத் சந்திர பாரிக் என்பவர் அழைத்துச் சென்றார். அன்று மாலையில் குடும்பத்தினர் சென்று சுமனுக்கு உணவு வழங்கிவிட்டு வந்தனர்.
ஆனால், டிசம்பர் இரண்டாம் தேதியன்று சுமனின் உடல் ஜராய்கெலா ரயில் நிலையத்திற்கு சிறிது தூரத்தில், ரயில்வே தண்டவாளம் ஒன்றில் கிடந்தது. அவரது உடலில் ஏகப்பட்ட காயங்கள் இருந்தன. தன் மகனை அடித்து, அவன் உயிரிழந்த பிறகு ரயில்வே தண்டவாளத்தில் தூக்கி வீசியிருப்பதாக நிலாபடி பெஹரா குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக 1988 செப்டம்பர் 14ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்திற்குக் கடிதம் எழுதினார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 32ன் படி அந்தக் கடிதத்தையே நீதிப் பேராணை மனுவாக எடுத்து விசாரித்தது உச்ச நீதிமன்றம். காவலில் இருந்தபோது தனது மகன் அடித்துக் கொல்லப்பட்டு, ரயில்வே தண்டவாளத்தில் தூக்கி வீசப்பட்டதாக நிலாபடி அந்தக் கடிதத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.
அரசியல் சாஸனத்தின் பிரிவு 21ன் கீழ் உயிர் வாழும் உரிமை பறிக்கப்பட்டிருப்பதால், தனது மகனின் மரணத்திற்கு இழப்பீடு கோரினார் நிலாபடி. இந்த வழக்கே Nilabati Behera Alias Lalita VS State of Orissa என்று குறிப்பிடப்படுகிறது.
வழக்கின் விசாரணையில் நடந்தது என்ன?
வழக்கின் விசாரணை நடந்தபோது, சுமன் பெஹரா காவல்துறையின் காவலில் இருந்து டிசம்பர் 2ஆம் தேதி அதிகாலையில் தப்பிச் செல்ல முயன்றதாகவும் அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், ரயில்வே தண்டவாளம் அருகில் பலத்த காயங்களுடன் அவரது உடல் கிடைத்ததாகவும் காவல்துறை தெரிவித்தது. அவர் ரயில் மோதியே இறந்தார் என்றும் கூறியது காவல்துறை.
இதையடுத்து இந்த விவகாரத்தை விசாரித்து அறிக்கை அளிக்கும்படி மாவட்ட நீதிபதிக்கு 1991 மார்ச் 4ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மாவட்ட நீதிபதி தனது விசாரணை அறிக்கையை செப்டம்பர் 4ஆம் தேதி தாக்கல்செய்தார். காவல்துறையினரின் காவலில் இருந்தபோது ஏற்பட்ட காயத்தினாலேயே சுமன் மரணமடைந்ததாக அந்த நீதிபதியின் அறிக்கை தெரிவித்தது.
ஆனாலும், சுமன் தப்பிச் செல்லும்போதே ரயிலில் அடிபட்டு இறந்தார் என்றும் அதனால், இழப்பீடு வழங்க முடியாது என்றும் கூறியது மாநில அரசு.
சுமன் தப்பித்ததற்கோ, காவல்துறை அவரைத் தேடியதற்கோ எந்தவிதமான உறுதியான ஆதாரமும் கிடைக்கவில்லையென்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மாறாக, சுமனின் உடல் சில ரயில்வே பணியாளர்களால் காலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டும் மதியம்தான் காவல்துறை அந்த இடத்திற்கே வந்தது என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

பட மூலாதாரம், Getty Images
சுமனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையும் மரணம், அடித்ததால் ஏற்பட்டதே தவிர, ரயில் விபத்தால் ஏற்பட்டதாகத் தெரியவில்லையெனக் கூறியது. ஆகவே, இந்த வழக்கு இழப்பீடு கேட்கத் தகுதியான வழக்கு என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. துணை ஆய்வாளர் சரத் சந்திர பாரிக், காவலர் ஜபில் குஜுர் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காகவும் ஒரிசா அரசுக்காகவும் மாநில அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அல்டாஃப் அகமது, ஏ.கே. பந்தா, நரேஷ் குமார் சர்மா ஆகியோர் வாதிட்டனர்.
இந்த வழக்கில் முக்கியமாக இரண்டு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. முதலாவதாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவு வாழ்வதற்கான உரிமையை உறுதிசெய்கிறதா, இல்லையா என்பது. இரண்டாவதாக, அப்படி இருக்கக்கூடிய உரிமை மீறப்பட்டால், அரசு இழப்பீடு தரவேண்டுமென உச்ச நீதிமன்றமோ, உயர்நீதிமன்றமோ உத்தரவிட முடியுமா என்பது.
வழக்கின் தீர்ப்பு

பட மூலாதாரம், Getty Images
இந்த வழக்கை ஜே.எஸ். வர்மா, ஏ.எஸ். ஆனந்த், என். வெங்கடாச்சலய்யா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. 1993 மார் 24ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
போலீஸ் காவலில்தான் சுமன் பெஹரா இறந்தார் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. நிலாபடி பெஹராவுக்கு ஒன்றரை லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்கவும் உச்ச நீதிமன்றத்தின் சட்ட உதவி மையத்திற்கு பத்தாயிரம் ரூபாயை வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சுமன் பெஹராவைக் கொன்றவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் ஒரிசா அரசுக்கு உத்தரவிட்டது.
அரசியல் சாஸன ரீதியாக வேறு சில விஷயங்களை இந்த வழக்கு சுட்டிக்காட்டியது. அதாவது, அரசு தன் அரச கடமையைச் செய்யம்போது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால், அதற்கு அரசைப் பொறுப்பாக்கக்கூடாது என்ற விஷயம் இந்த வழக்கில் பொருந்தாது. இதற்கு அரசுதான் பொறுப்பு என்றது தீர்ப்பு.
தனியார் உடமைகளை அரசு கையகப்படுத்தும்போது இழப்பீடு வழங்கும் பிரிவுகள் ஏற்கனவே சட்டத்தில் இருக்கின்றன. ஆனால், அரசு தன் கடமையைச் செய்யம்போது அடிப்படை உரிமைகளை மீறினால் இழப்பு வழங்குவதை இந்த தீர்ப்பு உறுதிசெய்தது.
இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன்பாக, இம்மாதிரி பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வப்போது இழப்பீடுகள் வழங்கப்பட்டன என்றாலும், அவை எவ்வித அடிப்படையும் இல்லாமல்தான் வழங்கப்பட்டுவந்தன. 1993ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பு, காவல்துறை விசாரணையில் இறப்பவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை சட்ட ரீதியாக்கியது.
1980களில் இந்தியா முழுவதுமே காவல்துறை மரணங்கள் அதிகரித்துவந்த நிலையில், இந்த விவகாரத்தின் மீது உச்ச நீதிமன்றம் கவனத்தைத் திருப்பியது. 1986ல் டி.கே.பாசு என்ற கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி காவல் நிலைய மரணங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதினார். இதனையே மனுவாக ஏற்றுக்கொண்டு இந்த விவகாரத்தை விசாரிக்க ஆரம்பித்தது உச்ச நீதிமன்றம். இது தொடர்பாக எல்லா மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. காவல்நிலைய சித்ரவதைகளையும் மரணங்களையும் குறைக்க என்ன செய்ய வேண்டுமென்பதை ஆலோசித்து முடிவெடுக்க இந்திய சட்ட ஆணையத்திற்கும் உத்தரவிட்டது.

பட மூலாதாரம், Getty Images
இம்மாதிரி காவல் நிலைய மரணங்கள் நடக்கும்போது குற்றமிழைத்தவர்களை தண்டிப்பது மட்டும் போதுமானதல்ல; இழப்பீடும் வழங்குவதுதான் சரியானதாக இருக்குமென உச்ச நீதிமன்றம் முடிவுக்கு வந்தது.
மேலும், ஒருவர் கைதுசெய்யப்படும்போது பின்பற்றப்பட வேண்டிய 11 விதிமுறை இந்தியா முழுவதுமுள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பும்படி உத்தரவிட்டது. அதில், கைதியை மருத்துவ சோதனைக்கு உள்ளாக்குதல், கைது செய்யும்போது உறவினருக்கோ நண்பருக்கோ தெரிவித்தல் போன்ற வழிமுறைகள் இதில் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்த நெறிமுறைகளை காவல் நிலையங்களுக்கு நேரடியாக அனுப்புவதோடு மட்டுமல்லாமல், அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனிலும் இவை ஒளிபரப்புச் செய்யப்பட்டன.
ஆனால், இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் காவல் நிலைய மரணங்களுக்கு இழப்பீடு கோரும் விதிமுறை ஏதும் இல்லை. இந்த நிலாபடி வழக்கிற்குப் பிறகுதான் இழப்பீடு கேட்பதென்பது சட்ட ரீதியான உரிமையாக மாற்றப்பட்டது.
தவிர, இழப்பீடு என்பது உயிர் வாழும் உரிமை பறிக்கப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. வேறு அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டால் இழப்பீடு கோர முடியாது.
பிற செய்திகள்:
- மோப்பம் பிடிக்கும் டூத் பிரஷ் உங்கள் புற்றுநோயைக் கண்டுபிடிக்கலாம்
- ஆப்கானிஸ்தானில் போலியோ முகாம் நடத்தும் ஐ.நா: ஒப்புக்கொண்ட தாலிபன்
- குர்மீத் ராம் ரஹீம் சிங்: இன்னொரு கொலை வழக்கிலும் சாமியாருக்கு ஆயுள் தண்டனை - யார் இவர்?
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: முழு அட்டவணை
- கேரளாவை உலுக்கும் கன மழை, வெள்ளம்: அடுத்த 5 நாட்களுக்கான முக்கிய தகவல்கள்
- சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - முழு பின்னணி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












