ஏ.கே. கோபாலன்: திருத்தி எழுதப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர் வழக்கு தீர்ப்பின் வரலாறு

பட மூலாதாரம், PSFTISS
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்நாடு தொடர்பான பல வழக்குகள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த முக்கியமான வழக்குகள் குறித்த சிறிய தொடரை வாரந்தோறும் புதன்கிழமை வழங்குகிறது பிபிசி தமிழ். அதன் இரண்டாம் பாகம் இது.
கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான ஏ.கே. கோபாலனை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது சென்னை மாகாண அரசு. அதனை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு, இந்திய நீதித் துறை வரலாற்றில் மிக முக்கியமான வழக்காக மாறியது எப்படி?
குற்றம் ஏதும் செய்யாத ஒருவரை, குற்றம் செய்யக்கூடும் என்ற அனுமானத்தில் சிறையில் அடைப்பதற்கான தடுப்புக் காவல் சட்டம், இந்தியா சுதந்திரம் அடைந்த சில நாட்களிலேயே அமலுக்கு வந்துவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கே, இந்தியாவில் அடிப்படை உரிமைகள் குறித்து தொடரப்பட்ட முதல் வழக்காகும்.
இந்த வழக்கு இந்தியாவின் மிக முக்கியமான இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான ஏ.கே.கோபாலனைப் பற்றியது. கோபாலன் கேரளாவைச் சேர்ந்தவர். பிற்காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அதில் முக்கியப் பங்கு வகித்தவர்.
வழக்கின் பின்னணி
சுதந்திர போராட்ட காலத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடிய ஏ.கே. கோபாலன், இந்தியா சுதந்திரமடைந்தபோது சிறையில் இருந்தார். அதற்குப் பிறகு 1947 அக்டோபரில் சுதந்திர அரசு அவரை விடுதலை செய்தது. ஆனால், அவருடைய செயல்பாடுகளை கவனத்தில் கொண்டு, அதே ஆண்டு டிசம்பர் மாதம் அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.
அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. அதன் பிறகு, புதிதாக இயற்றப்பட்ட 1950ஆம் ஆண்டின் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஏ.கே. கோபாலன் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கான உத்தரவு அந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி அவரிடம் வழங்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து சுமார் ஒரு மாத காலத்தில் இந்த தடுப்புக் காவல் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அந்தச் சட்டத்தின்படி, தேசப் பாதுகாப்பிற்கு, வெளிநாட்டு உறவுகளுக்கு, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக்கூடியவர் என கருதப்படும் ஒருவரை அரசுகள் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க முடியும்.
தான் இப்படியான தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருப்பதை எதிர்த்து ஏ.கே. கோபாலன் வழக்குத் தொடர்ந்தார். அப்போதுதான் அமலுக்கு வந்திருந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 22வது பிரிவின் கீழ் அளிக்கப்பட்டிருந்த கைதுசெய்யப்படுபவருக்கான உரிமைகளுக்கு முரணாக தான் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக ஏ.கே. கோபாலன் தனது வழக்கை முன்வைத்தார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 22ன் கீழ், கைதுசெய்யப்பட்ட ஒருவர் 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். பிரிவு 22 - 4ன் படி, எந்த ஒரு நபரும் மூன்று மாத காலத்திற்கு மேல் தடுப்புக் காவலில் வைத்திருக்கப்பட முடியாது. அல்லது அவர்கள் பிரிவு 22 -7ன் படி இயற்றப்பட்ட சட்டத்தின்படி கைதுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.
தன்னைத் தடுப்புக் காவல் சட்டப்படி கைதுசெய்திருப்பதால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19 (1) (d)ன் கீழ், சுதந்திரமாக எல்லா இடங்களுக்கும் செல்லும் அடிப்படை உரிமையும் பிரிவு 21 வழங்கும் தனி நபர் சுதந்திரமும் பாதிக்கப்படுவதாக ஏ.கே. கோபாலன் தனது மனுவில் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
1947 முதல் பல தேதிகளில் கைதுசெய்யப்பட்டும் எந்த வழக்கிலும் தான் தண்டிக்கப்படவில்லையென்பதை அவர் சுட்டிக்காட்டினார். சென்னை மாகாண அரசு விதிக்கப்பட்ட ஒரு ஆணையின்படியே தான் சிறையில் இருப்பதாகவும் கூறினார்.
இந்த வழக்கில் ஏ.கே. கோபாலனுக்காக மூத்த வழக்கறிஞரான எம்.கே. நம்பியார் வாதிட்டார். கே. ராஜா அய்யர் சென்னை மாகாணத்திற்காக வாதாடினார். எம்.சி. செடல்வாட் மத்திய அரசுக்காக வாதாடினார். இந்த வழக்கை ஹிராலால் கனியா, சையித் ஃபஸல் அலி, எம். பதஞ்சலி சாஸ்திரி, மேஹ்ர் சந்த் மகாஜன், சுதிரஞ்சன் தாஸ், பி.கே. முகர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
ஒருவரைத் தடுப்புக் காவலில் வைப்பதன் மூலம் அவரது தனிமனித சுதந்திரமும் விரும்பிய இடத்திற்குச் செல்லும் உரிமையும் பாதிக்கப்படுகிறது. இது அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைக்கு எதிரானது வாதிடப்பட்டது. சட்டநடைமுறைகளின் படி மட்டுமே ஒருவர் சிறையிடப்பட வேண்டும் என்றும் கோபாலன் தரப்பு வாதிட்டது. தடுப்புக் காவல் சட்டம், சட்ட முறைப்படியானதல்ல ஆகவே, இதன் கீழ் சிறையில் அடைப்பது செல்லாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
1950 மே 19ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆறு பேரில், ஐந்து பேர் ஒரே மாதிரி தீர்ப்பளித்தனர். அதாவது, ஏ.கே. கோபாலன் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டது சரியே என தீர்ப்பளித்தனர். தடுப்புக் காவல் சட்டம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் உருவாக்கப்பட்ட சட்டம் என்பதால், அந்தக் கைது நடவடிக்கையானது, சட்டப்படியான நடைமுறைகளின் படி செய்யப்பட்ட கைது நடவடிக்கையாகவே கருதப்படும் என பெரும்பான்மை நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஆகவே, தடுப்புக் காவல் சட்டமானது, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21, 22ஐ மீறவில்லை என்று கூறி கோபாலனின் வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.
முரண்பட்ட நீதிபதியும் திருத்தப்பட்ட தீர்ப்பும்
நீதிபதி ஃபஸல் அலி மட்டும் இந்தத் தீர்ப்பில் இருந்து முரண்பட்டார். அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19ம் இந்தத் தடுப்புக் காவல் சட்டமும் முரண்படுவதாக அவர் கூறினார். எந்த மனிதனின் சுதந்திரத்தில் குறுக்கிடும் சட்டமும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 19, 21க்கு உட்பட்டதாக இருக்க வேண்டுமென அவர் கூறினார்.
இந்தத் தீர்ப்பு வெளியான சில காலங்களுக்குப் பிறகு சென்னை மாகாண அரசு ஏ.கே. கோபாலனை விடுவித்துவிட்டது. அவர் நாடாளுமன்ற உறுப்பினருமாகிவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், தடுப்புக் காவல் சட்டம் குறித்த இந்தத் தீர்ப்பு, நீண்ட காலத்திற்கு இந்திய நீதித் துறையில் ஒரு விவாதத்திற்குரிய தீர்ப்பாகவே விளங்கிவந்தது. இந்தத் தீர்ப்பை அடிப்படையாக வைத்தே, பலர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். முடிவில், 1977ல் மேனகா காந்தி VS இந்திய ஒன்றியம் என்ற வழக்கில், இந்தத் தீர்ப்பு மாற்றப்பட்டது. 27 ஆண்டுகளுக்கு முன்பாக நீதிபதி ஃபஸல் அலி அளித்த விளக்கமே ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருப்பதை நீக்க வேண்டுமெனக் கோரி மேனகா காந்தி வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த வழக்கு தொடர்பாக நேரடியாக தீர்ப்பளிக்கவில்லையென்றாலும், அடிப்படை உரிமை குறித்த உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை மாற்றி எழுதியது.
ஒருவரைக் கைதுசெய்வதற்கான சட்டநடைமுறை என்பது நியாயமானதாக, தான்தோன்றித்தனமானதாக இல்லாமல் இருக்கிறதா என்பதை நீதிமன்றம் ஆய்வுசெய்ய முடியுமென நீதிபதி பகவதி தீர்ப்பளித்தார். அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவில் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை என்பது மிகப் பரந்தது; தனி உரிமை என்று சொல்லக்கூடிய பல சுதந்திரங்களை உள்ளடக்கியது என்று தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம், சட்டம் தொடர்பான தனது விளக்கத்தையே மாற்றியதோடு, தனி நபருக்கு உள்ள சுதந்திரத்தின் பரப்பை இன்னும் விரிவாக்கியது. அந்த வகையில், ஏ.கே. கோபாலன் VS சென்னை மாகாண அரசு என்ற வழக்கு, இந்திய நீதித் துறை வரலாற்றில் மிக முக்கியமான வழக்காக விளங்குகிறது.
பிற செய்திகள்:
- பிராமணர்களை தாக்கிப் பேச்சு: சத்தீஸ்கர் காவல்துறையால் முதல்வரின் தந்தை கைது
- ஆப்கானிஸ்தான் இடைக்கால பிரதமர் அகுந்த் யார்? 5 முக்கிய தகவல்கள்
- பெரியார் சிலைக்கு ரூ. 100 கோடி செலவிடுகிறதா தமிழக அரசு? உண்மை என்ன? #FactCheck
- சீன பங்குச் சந்தைகளின் மந்த நிலை இந்தியாவிற்கு கைகொடுக்குமா?
- ஊழியர்களுக்கு இருக்கை - 'அங்காடி தெரு' இயக்குநர் எழுப்பும் கேள்விகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












