பிராமணர்களை தாக்கிப் பேச்சு: சத்தீஸ்கர் காவல்துறையால் முதல்வரின் தந்தை கைது

பட மூலாதாரம், NandKumarBaghe3 twitter handle
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
முதலமைச்சரின் தந்தையைக் கைது செய்து மாநில காவல்துறை
பிராமணர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரின் தந்தை நந்குமார் பாகெல், அந்த மாநில காவல்துறையால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லியில் கைது செய்யப்பட்ட அவர் மாநில தலைநகர் ராய்ப்பூர் அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்; அவர் பிணை கோரி மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை. தற்பொழுது நந்குமார் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
86 வயதாகும் நந்குமார் பாகெல் சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோ சென்றிருந்த பொழுது அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், "பிராமணர்களை ஊருக்குள் அனுமதிக்கக்கூடாது, அவர்களைப் புறக்கணிக்க வேண்டும்," என்று பேசியிருந்தார்.
அவர் பேசிய காணொளி சமூக ஊடங்களில் வைரலானது. அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.
தந்தை மீது புகார் அளிக்கப்பட்டது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கருத்து தெரிவித்திருந்த முதலமைச்சர் பூபேஷ் பாகெல் தமது தந்தை தெரிவித்திருந்த கருத்து ஒரு சாதியைச் சேர்ந்தவர்களில் மனதை புண்படுத்துவதுடன், சமூக அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் இருப்பது தமக்கு வருத்தம் அளிப்பதாகக் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Ani
"எனது தந்தையுடன் எனக்கு இருக்கும் கொள்கை ரீதியான முரண்பாடுகள் அனைவரும் அறிந்ததே," என்று கூறியிருந்தது முதலமைச்சர், அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
"ஒரு மகனாக நான் அவரை மதிக்கிறேன். ஆனால் ஒரு முதலமைச்சராக அவருடைய கருத்துகள் மற்றும் தவறுகளை என்னால் மன்னிக்க முடியாது; சட்டம் அனைவருக்கும் சமம்," என்று பூபேஷ் பாகெல் கூறியிருந்தார்.
சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை - நீதிமன்றம் புதிய உத்தரவு
சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை அளித்தது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை மீதான விசாரணை அறிக்கையை 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய ஊழல் தடுப்புப் படையினருக்கு கர்நாடக உயா் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவிட்டுள்ளது என்கிறது தினமணி செய்தி.

பட மூலாதாரம், Getty Images
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அடைக்கப்பட்டிருந்தப்போது அவருக்கு சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.
விசாரணையின்போது, சிறப்புச் சலுகை அளித்த குற்றச்சாட்டிற்கு உள்ளான அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புப் படை சார்பில் ஆஜரான வழக்குரைஞா் 'குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறைத்துறை முன்னாள் டிஜிபி சத்யநாராயணராவ், சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மீது வழக்குப்பதிவு செய்து வழக்கு விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அவா்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடா்பான அனுமதிக்காக காத்திருக்கிறோம்' என்று வாதிட்டார்.
குற்றச்சாட்டு எழுந்து பல ஆண்டுகளாகியும் இதுவரை அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி பெறாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், 30 நாட்கள் கால அவகாசம் தருவதாகவும் அதற்குள் உரிய அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
தமிழ்நாடு முழுவதும் 41,051 இடங்களில் தடுப்பூசி முகாம்

தமிழ்நாடு முழுவதும் 43 ஆயிரத்து 51 இடங்களில் தடுப்பூசி முகாம் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வழக்கமாக தடுப்பூசி செலுத்தப்படும் 40 ஆயிரத்து 399 இடங்களுடன், கூடுதலாக 2 ஆயிரத்து 652 இடங்கள் சேர்த்து மொத்தம் 43 ஆயிரத்து 51 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.
கூடுதலாக சேர்க்கப்படும் இடங்கள் இதுவரை தடுப்பூசி செலுத்தப்படாத இடங்களில் அமைக்கப்படுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












