இந்திரா சாஹ்னி vs இந்திய அரசு வழக்கு: கல்வி, வேலைவாய்ப்புக்கு வித்திட்ட முக்கிய தீர்ப்பு

நீதித் துறை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்நாடு தொடர்பான பல வழக்குகள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த முக்கியமான வழக்குகள் குறித்த சிறிய தொடரை வாரந்தோறும் புதன்கிழமை வழங்குகிறது பிபிசி தமிழ். அதன் ஆறாம் பாகம் இது.

இந்தியாவின் இட ஒதுக்கீட்டு வரலாற்றில் இந்தியா முழுவதும் தற்போது பின்பற்றப்படும் பல்வேறு அளவுகோல்களை வகுத்தது மண்டல் வழக்கு என்று அறியப்படும் Indra Sawhney VS Union of India வழக்கு. இந்த வழக்கின் தீர்ப்பு கோடிக்கணக்கான இந்தியர்கள் மீது தாக்கம் செலுத்துகிறது. அந்த வழக்கின் விவரம் என்ன?

தற்போது மத்திய அரசுப் பணிகளில் இந்தியா முழுதும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கு பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

1. மொத்த இட ஒதுக்கீடு 50 சதவீதத்தைத் தாண்டக் கூடாது.

2. சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பின்தங்கியிருப்பதை உறுதிசெய்ய ஜாதியே அடிப்படையாகக் கொள்ளப்படும், பொருளாதார ரீதியில் பின்தங்கியிருப்பது இட ஒதுக்கீட்டிற்கு ஏற்கப்படாது

3. இட ஒதுக்கீடு அளிக்கும்போது பிற்படுத்தப்பட்டவர்களில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு அளிக்கக்கூடாது போன்ற முக்கியமான விதிமுறைகள் இந்த 'இந்திரா சஹானி VS யூனியன் ஆஃப் இந்தியா' வழக்கில்தான் விதிக்கப்பட்டன.

இந்த வழக்கைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், மண்டல் கமிஷன் குறித்தும் அதன் பரிந்துரைகள் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

பிற்படுத்தப்பட்டோர் நிலை குறித்த மண்டல் கமிஷன்

சட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சட்டம்

இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் நிலை குறித்து அறிவதற்காக அமைக்கப்பட்ட முதலாவது ஆணையமான காலேல்கர் ஆணையத்தின் பரிந்துரைகள் வெளியாகி சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், 1979ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தது.

இந்த ஆணையத்தின் தலைவராக பீஹார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.பி. மண்டல் நியமிக்கப்பட்டார். இந்த ஆணையம் மூன்று விஷயங்களைப் பற்றி தன் பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும்.

1. சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பின்தங்கியிருப்பவர்கள் என்பதை வரையறுப்பதற்கான விதியை வகுக்க வேண்டும்

2. இம்மாதிரி சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பின்தங்கியிருப்பவர்களை மேம்படுத்த என்ன செய்ய வேண்டுமென்பதைப் பரிந்துரைக்க வேண்டும்

3. இம்மாதிரி பின்தங்கிய வகுப்பினருக்கு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்க வேண்டும்.

1980ஆம் ஆண்டு மண்டல் ஆணையம் தனது பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்தது. பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான 11 குறியீடுகளை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

அவை, சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்டோர், கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டோர். இந்த வகையில் இந்தியாவில் மொத்தமாக 3,743 ஜாதியினர் பிற்படுத்தப்பட்ட ஜாதியினராக இருப்பதாக இந்த ஆணையம் கண்டறிந்தது.

1931ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 1971ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை வைத்து, இந்தியாவில் 52 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் என வரையறுத்தது.

ஏற்கனவே பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கு 22.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுவரும் நிலையில், ஓபிசிக்களின் எண்ணிக்கை அளவுக்கு அதாவது 52 சதவீத இட ஒதுக்கீடு அளித்தால், அது 50 சதவீதம் என்ற எல்லையைத் தாண்டிவிடும் என்பதால், வெறும் 27 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்க ஆணையம் முடிவுசெய்தது.

குடிமை பணி நியமனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், அரசின் உதவியைப் பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றில் இந்த இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் நிதியால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டு விதி பொருந்தும் என்றது ஆணையம்.

கல்வியில் இட ஒதுக்கீடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கல்வியில் இட ஒதுக்கீடு

இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் வெளியான உடனேயே, ஓபிசிக்களின் மக்கள் தொகை 52 சதவீதம் இருக்காது என பலரும் விமர்சித்தனர். மேலும், கலேல்கர் ஆணையத்தின் பரிந்துரைகள் எப்படி ஓரங்கட்டப்பட்டனவோ, அப்படித்தான் இந்தப் பரிந்துரைகளும் ஓரங்கட்டப்படும் எனக் கருதப்பட்டது.

ஆனால், இந்தப் பரிந்துரைகள் அரசிடம் அளிக்கப்பட்டு பத்தாண்டுகளுக்குப் பிறகு, 1990ல் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது, அந்த அரசு இந்தப் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவியது. முடிவில், வி.பி. சிங் அரசு கவிழ்ந்தது.

இந்த மண்டல் கமிஷன் அறிக்கை தொடர்பாக இரண்டு அரசு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஒன்று வி.பி. சிங் பிரதமராக இருக்கும்போது மற்றொன்று நரசிம்மராவ் பிரதமராக இருக்கும்போதும் வெளியிடப்பட்டன.

அதன்படி ஓபிசிகளுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும். அதில் ஏழ்மையான பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் நரசிம்மராவ் அறிவித்தார். இதன் மூலம் மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 59.5ஆக உயர்ந்தது.

இந்த அறிவிப்புகள், வேலை வாய்ப்பில் எல்லோருக்கும் சமவாய்ப்பு அளிக்க வேண்டுமென்ற அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 16க்கு முரண்பாடானவை எனக் கூறி இந்திரா சஹானி என்ற பத்திரிகையாளர் பொது நல வழக்கு ஒன்றைத் தொடுத்தார். மேலும் பலரும் இதுபோன்ற வழக்குகளைத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றமும் எழுப்பி, அதற்கு பதில் காண முயன்றது. எம். கனியா, எம். வெங்கடாசலய்யா, எஸ். ரத்னவேல் பாண்டியன், டி. அகமதி, கே. சிங், பி. சாவந்த், ஆர். சஹாய், பி.ஜே. ரெட்டி உள்ளிட்ட ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாஸன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

இந்திய உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய உச்ச நீதிமன்றம்

மனுதாரர்களின் சார்பில் என்.ஏ. பல்கிவாலா, கே.கே. வேணுகோபால் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராயினர். இட ஒதுக்கீடு அளிப்பதால், திறமையானவர்கள் ஒதுக்கப்படுவார்கள்; திறமையற்றவர்கள் பதவிகளுக்கு வருவார்கள் என்பது போன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதால், இந்தியாவில் ஜாதி அமைப்பு மேலும் வலுப்படும் என்றார்கள்.

தவிர, இந்த ஆணையமானது 1931ஆம் ஆண்டின் ஜாதிவாரி கணக்கெடுப்பை வைத்து ஓபிசி சதவீதத்தை மதிப்பிட்டிருக்கிறது. அதனை ஏற்க முடியாது. மறுபடியும் புதிதாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. இந்த அறிக்கையானது அரசியல் சாஸனத்தையே திருத்தி எழுதுகிறது என்றும் குறிப்பிட்டார்கள். இந்த வாதங்களுக்கு அரசுத் தரப்பில் எதிர் வாதங்கள் வைக்கப்பட்டன.

27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தீர்ப்பு

இந்த வழக்கில் 16 நவம்பர் 1992ல் தீர்ப்பளிக்கப்பட்ட போது நான்கு நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கினார்கள். மீதமுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் வேறுபட்டார்கள். ஆனால், 6:3 என்ற விகிதத்தில் பெரும்பாலான கேள்விகளுக்கு விடையளிக்கப்பட்டன.

இந்திய சமூகத்தை அரித்துக்கொண்டிருக்கும் புற்றுநோயாக ஜாதியை குறிப்பிட்ட இந்தத் தீர்ப்பு, இந்திய சமூகத்தில் ஒருவர் பின்தங்கியவரா என்பதை அடையாளம் காண ஜாதியே அளவுகோல் எனக் குறிப்பிட்டது. இந்து அல்லாதவர்களை, அவர்களது கல்வி மற்றும் பொருளாதார நிலையை வைத்து அடையாளம் காணவேண்டும் என்றது.

இந்தத் தீர்ப்பினால், ஜாதிய உணர்வுகள் மீண்டும் கிளர்ந்தெழுவதை விரும்பவில்லையெனக் கூறிய நீதிமன்றம், சமூக நிதர்சனங்களுக்கும் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தைச் சுட்டிக்காட்டியது.

ஆனால், இந்த இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த வசதியானவர்கள் பறித்துக்கொள்வதை அனுமதிக்க முடியாது என்றது. ஆகவே, வசதியானவர்கள், பதவிகளை அனுபவித்தவர்கள் இடஒதுக்கீட்டை பெறுவதிலிருந்து தடுக்கப்படவேண்டும் என நீதிமன்றம் குறிப்பிட்டது. ஆனால், யார் வசதியானவர்கள் என்பதை அரசு தீர்மானிக்கலாம் என்றது.

"பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு அரசியல் சாஸன விரோதம்"

இளைஞர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இளைஞர்கள்

மேலும், பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது அரசியல் சாஸன விரோதம் என நீதிமன்றம் குறிப்பிட்டது. அரசியல் சாஸனம் அதை அனுமதிக்கவில்லையென்பதோடு, இட ஒதுக்கீடு என்பது வரலாற்று ரீதியில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களை மேம்படுத்துவதற்கான ஒரு வழியே தவிர, வறுமையை போக்குவதற்கான திட்டமல்ல என்றும் குறிப்பிட்டது. மேலும், இட ஒதுக்கீட்டிற்கு உச்சபட்ச அளவாக 50 சதவீதம் என்பதை இந்த வழக்கு உறுதி செய்ததது.

ஆனால், பதவி உயர்வுகளுக்கும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென்ற மண்டல் கமிஷன் பரிந்துரையை நீதிமன்றம் ஏற்கவில்லை. நியமனங்களுக்கு மட்டுமே அது செல்லுமெனக் கூறியது. பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை அடையாளம் காண தேசிய மட்டத்திலும் மாநில மட்டத்திலும் ஆணையங்களை உருவாக்க வேண்டுமென்றும் பரிந்துரைத்தது.

இந்தத் தீர்ப்பை முன்னெறிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்தனர். வி.பி. சிங் அரசு மண்டல் கமிஷன் அறிக்கையை ஏற்கப்போவதாக சொன்னபோது ஏற்பட்ட வன்முறை அளவுக்கு இல்லாவிட்டாலும், பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. தமிழ்நாட்டில் பொதுவாக இந்தத் தீர்ப்புக்கு ஆதரவான சூழலே நிலவியது.

தீர்ப்பு வெளியாகி மூன்றாண்டுகளுக்குப் பிறகு அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 16ல் 4A என்கிற புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. இதன் மூலம் பட்டியலினத்தவருக்கும் பழங்குடியினருக்கும் பதவி உயர்வுகளிலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

2006ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் மத்தியக் கல்வி நிலையங்கள் (சேர்க்கையில் இட ஒதுக்கீடு) சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அரசின் நிதி உதவி பெறும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஓபிசிகளுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட ரிட் மனுக்களை, உச்ச நீதிமன்றம் இரு ஆண்டுகளுக்குப் பிறகு தள்ளுபடி செய்தது.

2012ஆம் ஆண்டில் ஆரம்பக் கல்வி நிலையங்களிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது சரியென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் மூலம் தனியார் பள்ளி உட்பட அனைத்து பள்ளிக்கூடங்களிலும் 25 சதவீதம் சமூக - பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு வழங்குவதை நீதிமன்றம் உறுதி செய்தது.

2019ஆம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டத்தின் 103வது திருத்தத்தின்படி, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க நரேந்திர மோதி தலைமையிலான அரசு முடிவுசெய்தது. சட்டம் நிறைவேற்றப்பட்டு 2019 ஜனவரி 12ஆம் தேதி அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து 20க்கும் மேற்பட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. இந்த வழக்கை 2020 ஆகஸ்ட் ஐந்தாம் தேதி ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வுக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் முடிவு எப்படியானதாக இருந்தாலும் இந்திரா சஹானி VS யூனியன் ஆஃப் இந்தியா என்ற வழக்கின் தீர்ப்பு நீண்ட காலத்திற்கு இந்தியர்களின் கல்வி, பணி வாய்ப்புகளிலும் வாழ்விலும் பெரும் தாக்கத்தை செலுத்தும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :