வானிலை அறிவிப்பு: தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம்; பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

மழை

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதுமுள்ள நீர்நிலைகள் நிரம்பிவருகின்றன.

கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியை அடையக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாலும் தெற்கு ஆந்திரா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது.

இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி தினத்தன்று செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், காஞ்சிபுரம், சேலம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை நேற்று முதல் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

மழை

பட மூலாதாரம், Getty Images

சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக நகரில் ஆங்காங்கே மரங்கள் பெயர்ந்து விழுந்தன. பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. சென்னையின் உள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் வாகன நிறுத்துமிடம் அருகே உள்ள மரம் ஒன்று இன்று காலையில் விழுந்ததில், மரத்தின் கீழே நின்று கொண்டிருந்த காவலர் கவிதா என்பவர் உடல் நசுங்கி பலியானார். அவரது குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு பத்து லட்ச ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு மாநிலத்திலேயே அதிக அளவாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 20 செ.மீ. மழையும் கடலூரில் 13 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இந்த மழையின் காரணமாக மரக்காணத்தில் பல வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது. தரைப்பாலம் மூழ்கியதால், ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் தங்கள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 47 அடி உயரம் கொண்ட வீராணம் ஏரி தற்போது 44 அடியை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் தற்போது உபரி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்துவரும் மழையின் காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை அருவியில் நீர் கொட்டுகிறது. இதனால், இப்பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன.

இன்று குமரிக்கடல் பகுதிகளிலும் கேரள கடலோரப் பகுதிகளிலும் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :